அருவி,Aruvi

அருவி - பட காட்சிகள் ↓

அருவி - சினி விழா ↓

Advertisement
4

விமர்சனம்

Advertisement

நடிப்பு - அதிதி பாலன், அஞ்சலி வரதன், லட்சுமி கோபால்சுவாமி, கவிதாபாரதி
இயக்கம் - அருண் பிரபு புருஷோத்தமன்
இசை - பிந்து மாலினி, வேதாந்த் பரத்வாஜ்
தயாரிப்பு - டிரீம் வாரியர் பிக்சர்ஸ்

2017ம் ஆண்டு தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் வியாபார ரீதியாக கொஞ்சம் மோசமான வருடமாக இருந்தாலும், தர ரீதியில் கொஞ்சம் சிறந்த வருடமாகவே அமைந்துள்ளது. அறம் படத்திற்குப் பிறகு நாளை வரப் போகும் அருவி படமும் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெறும்.

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாகவே மாற்று சினிமா என்பது பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒன்று. வர்த்தக ரீதியிலான மசாலாப் படங்கள் தான் இங்கு அதிகம் வருகின்றன. மலையாளப் படங்கள் போல பெங்காலிப் படங்கள் போல மக்களின் பிரச்சனைகளை, வாழ்வியலை சொல்லும் படங்கள் வருவதேயில்லை என்று குறை சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்.

அந்தக் குறையை சமீபத்தில் தீர்த்து வைத்த படம் அறம். அடுத்து தீர்த்து வைக்கப் போகும் படம் அருவி. இந்தப் படம் சமூகத்தின் பார்வையையும், நன்றாக வாழ நினைக்கும் ஒரு பெண்ணின் போராட்டத்தையும் நம் உள்ளுணர்வுகளுக்குள் ஓங்கி அடிக்க வைக்கும் படமாக இருக்கிறது.

தென் கோடி தமிழ்நாட்டிலிருந்து அப்பாவின் பணிமாற்றம் காரணமாக சிறு வயதிலேயே சென்னைக்கு குடும்பத்தாருடன் வந்து செட்டில் ஆகிறார் அதிதி பாலன். எந்தக் கவலையும் இல்லாமல், மகிழ்ச்சியாகப் போய்க் கொண்டிருக்கும் அவரது இளமைப் பருவத்தில் திடீரென ஒரு புயல் வீசுகிறது. உடலால் அவர் கெட்டுவிட்டார் என அவரது குடும்பமே அவரை வீட்டை விட்டு வெளியேற வைக்கிறது. வெளியில் வந்து திருநங்கை அஞ்சலி வரதன் ஆதரவுடன் போராட்டமான வாழ்க்கையை ஆரம்பிக்கிறார். தன்னை மூன்று பேர் கற்பழித்து விட்டார்கள் என நீதி கேட்டு சொல்வதெல்லாம் சத்தியம் என்ற டிவி நிகழ்ச்சிக்குச் சென்று நியாயம் கேட்கிறார். திடீரென அதிரடியாக அந்த நிகழ்ச்சிப் படக்குழுவினர் அனைவரையும் துப்பாக்கி முனையில் நிறுத்தி பரபரப்பை உண்டாக்குகிறார். அதன் பின் நடக்கும் சம்பவங்களும், நமக்குத் தெரிய வரும் உண்மைகளையும் பார்த்து கண்கலங்காமல் இருக்க முடியாது.

வாழ நினைக்கும் ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கைப் போராட்டத்தைப் பற்றி தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் இதுவரை வந்திருக்கவே முடியாது என ஆணித்தரமாகச் சொல்லலாம். படத்தை இயக்கியுள்ள அருண் பிரபு புருஷோத்தமன் போன்ற இளம் அறிமுக இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமாவது தமிழ்ப் படங்களை வேறு தளத்திற்குக் கொண்டு செல்லும் என்ற நம்பிக்கையை அருவியாய் கொட்ட வைக்கிறது.

அருவி கதாபாத்திரத்தில் அதிதி பாலன், அறிமுக நடிகையாம், நம்பவே முடியவில்லை. நடிப்பு அவரிடம் அருவியாய் எந்தத் தடையும் இல்லாமல் வெளிவருகிறது. அதிக மேக்கப் கிடையாது, ஆடம்பரை உடைகள் கிடையாது. முதல் படத்திலேயே யாரும் ஏற்கத் துணியாத ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது சவாலான விஷயம். அனுபவம் வாய்ந்த நடிகைகள் கூட இப்படி நடித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். துணிச்சலான ஒரு கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்து பல இடங்களில் கைத்தட்டல் வாங்குகிறார் அதிதி. அதிலும் கிளைமாக்ஸ் மற்றும் அதற்கு முன்பான காட்சிகளைப் பார்ப்பதற்கு தனி தைரியம் வேண்டும். இப்படிப்பட்ட படங்களை தமிழ்த் திரையுலகின் சில முன்னணி நடிகைகள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்.

திருநங்கை ஒருவருக்கு மிக முக்கியமான கதாபாத்திரத்தைக் கொடுத்து அவர்களையும் பெருமைப்பட வைத்திருக்கிறார் இயக்குனர். திருநங்கையாக வரும் அஞ்சலி வரதன், நாயகி அதிதிக்காக உண்மையான நட்புடன் இருக்கிறார். குடும்பத்தினரே ஒதுக்கி வைக்கும் அஞ்சலிக்காக எல்லாவற்றையும் செய்யும் நடிப்பில் அஞ்சலி நடிப்பிலும் அசத்தல்.

சொல்வதெல்லாம் சத்தியம் டிவி நிகழ்ச்சி படக்குழுவில் நிகழ்ச்சியின் இயக்குனர் கவிதா பாரதி, தொகுப்பாளர் லட்சுமி கோபால்சுவாமி, உதவி இயக்குனராக நடித்திருப்பவர், வேலை செய்யும் சிறுவன், ரோலிங்....சா....ர் என ஸ்டைலாகச் சொல்லு கேமரா மேன், அந்த செக்யூரிட்டி என பலரின் நடிப்பிலும் அவ்வளவு யதார்த்தம். படத்தின் முக்கியமான கதைக்களமாக இந்த டிவி நிகழ்ச்சி காட்சிகள் நீளமாக இருந்தாலும் சுவாரசியமாக அமைந்துள்ளன. இடைவேளைக்குப் பின் வரும் சோகத்தை நாம் தாங்கிக் கொள்வதற்கு இந்த ரிலாக்ஸ் அவசியமாகிறது.

பிந்து மாலினி, வேதாந்த் பரத்வாஜ் இருவரது இசையும், ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவும், ரேமான்ட் டெர்ரிக் கிராஸ்டா படத் தொகுப்பும் அருவிக்கு மேலும் அசத்தலைச் சேர்த்துள்ளன.

படத்தின் முதல் 20 நிமிடங்கள் மான்டேஜ் ஆகவே நகர்கிறது. அதன் பின் நீளமான டிவி நிகழ்ச்சிகளும் முதல் பாதியை கொஞ்சம் போரடிக்க வைக்கிறது. இடைவேளைக்குப் பின் கிளைமாக்ஸ் வரை கண்கள் திரையை விட்டு அலக மறுக்கிறது.

அதிதி பாலனை அவரது பெற்றோர் ஏன் வீட்டை விட்டு அனுப்புகிறார்கள் என்ற சஸ்பென்ஸ் பின்னர்தான் தெரிய வருகிறது. அதை அவர் வீட்டை விட்டு வெளியேறும் போதே வெளிப்படுத்தியிருந்தால் அதிதி மீதான நெகிழ்வு இன்னும் அதிகமாகியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

கிளைமாக்சில் அதிதி பாலன் மொபைல் போனில் எடுக்கப்பட்ட வீடியோவைப் பார்க்கும் போது மனம் என்னவோ செய்கிறது. அதுவே படத்திற்கான வெற்றி. 1999ல் வெளிவந்த சேது படத்திற்குப் பிறகு படம் பார்க்கும் அனைவரையும் கலங்க வைக்கும் கிளைமாக்ஸ் அருவி கிளைமாக்ஸ்தான்.

அருவி - அருமை, மிக அருமை

 

அருவி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

அருவி

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓