3

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ஜி.வி. பிரகாஷ்குமார், அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினித் மற்றும் பலர்
இயக்கம் - ராஜீவ் மேனன்
இசை - ஏஆர்.ரஹ்மான்
தயாரிப்பு - மைன்ட் ஸ்கிரீன் சினிமாஸ்
வெளியான தேதி - 1 பிப்ரவரி 2019
நேரம் - 2 மணி நேரம் 11 நிமிடம்
ரேட்டிங் - 3/5

தமிழ்த் திரையுலகில் இவ்வளவு இடைவெளிக்குப் பிறகு ஒரு இயக்குனர் அவருடைய அடுத்த படத்தை இயக்கியிருப்பாரா என்பது சந்தேகம்தான். மின்சார கனவு, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் இயக்கத்தில், 18 வருடம், 8 மாதங்களுக்குப் பிறகு வந்திருக்கும் படம் தான் சர்வம் தாள மயம்.

இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று எண்ணியவர் ஒரு வித்தியாசமான கதையை எடுத்துக் கொண்டிருக்கலாம். இதற்கு முன், வெளிவந்த சில படங்களின் மற்றொரு வடிவமாகத்தான் இந்தப் படமும் இருக்கிறதே தவிர புதுமையான கதையம்சம் என்று சொல்ல முடியாது.

ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டு, மிருதங்க வித்வானாக மாற வேண்டும் என்று ஆசைப்படுவதுதான் இந்தப் படத்தின் ஒரு வரிக் கதை. இதையே, இதற்கு முன் நடனக் கலைஞர், பாடகர், விளையாட்டு வீரர், வீராங்கனை என பல கதைகளாக தமிழ் சினிமாவில் காட்டிவிட்டார்கள்.

இத்தனை வருடங்களுக்குப் பிறகு ராஜீவ் மேனன் படம் இயக்கியிருக்கிறார் என்றதும், மின்சார கனவு, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படங்களைப் போன்ற வேறு ஒரு டச்சுடன் கூடிய படமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. ஆனால், இடைவேளைக்குப் பிறகு டிவி நிகழ்ச்சி, போட்டி, அதில் உள்ள சாதாரண அரசியல் என சராசரிக்கும் கீழான காட்சிகளை வைத்து அதிர்ச்சி கொடுக்கிறார் ராஜீவ் மேனன்.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஜி.வி.பிரகாஷ்குமார். சிறு வயதிலிருந்தே இசையின் மீது ஆர்வம். அவருடைய அப்பா குமரவேல் மிருதங்கம் செய்யும் வேலையைப் பார்ப்பவர். பிரபல மிருதங்க வித்வான் நெடுமுடி வேணுவிடம் பல போராட்டங்களுக்குப் பிறகு மிருதங்கம் கற்கச் செல்கிறார் ஜிவி பிரகாஷ். ஆனால், நண்பனைப் போல நடித்த ஒருவனின் அரசியலால் அவரை விரட்டுகிறார் வேணு. ஊர் ஊராகச் சுற்றி ஜி.வி.பிரகாஷ் பல இசை வடிவங்களைக் கற்கிறார். அவரை மீண்டும் தன்னிடம் சேர்த்துக் கொள்கிறார் வேணு. டிவி இசை நிகழ்ச்சியைக் கண்டாலே வெறுக்கும் வேணு, சந்தர்ப்ப சூழ்நிலையால் தன் சிஷ்யன் ஜிவி-யை டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கிறார். அதில் ஜிவி வெற்றி பெற்றாரா, இல்லையா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

ஜி.வி.பிரகாஷ் இதுவரை நடித்து வெளிவந்த படங்கள், கதாபாத்திரங்களைக் காட்டிலும், இந்தப் படமும், கதாபாத்திரமும் அவருடைய நடிப்பை கொஞ்சம் கூடுதலாக வரவைத்துள்ளன. இசைக் கலைஞர் கதாபாத்திரம் என்பதால் அவருடைய இயல்பான நடிப்பு வெளிப்பட்டுள்ளது என்று கூட சொல்லலாம். தன்னை எதற்காக இப்படி ஒதுக்கிறார்கள் என்றுத் தெரிந்தும் எப்படியாவது நெடுமுடி வேணுவிடம் மிருதங்கம் கற்றுக் கொள்ள அவர் போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெறுகிறார். அவரைப் பிரிந்த பின்னும் இசை மீதான ஆர்வம் வெறியாகவும், தேடலாகவும் மாறுகிறது. இப்படிப் பொருத்தமான கதாபாத்திரங்களில் தேடி நடிப்பது ஜி.வி. பிரகாஷுக்கு நல்லது.

படத்தின் இரண்டாவது கதாநாயகன் என்று கூட நெடுமுடி வேணுவைச் சொல்லலாம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடித்திருக்கிறார். மிருதங்க வித்வான் பாலக்காடு வேம்பு ஐயர் ஆகத்தான் நம் கண்முன் தெரிகிறார். அந்த வயதுக்கே உரிய தோற்றம், மிடுக்கு, கர்வம், ஆணவம் என தன்னை ஒரு இசை மேதையாக நினைப்பவர் இப்படியெல்லாம்தான் இருப்பார் என்று நமக்கு உணர்த்துகிறார். அவருடைய சொந்தக் குரலில் மலையாள வாடை சிறிதும் இல்லை.

ஜி.வி.பிரகாஷ் காதலியாக அபர்ணா பாலமுரளி. நர்ஸ் வேலை செய்பவரைப் பார்த்ததுமே காதல் கொள்கிறார் ஜி.வி. இருவரும் சீக்கிரமே காதலில் விழுந்தாலும், காதலுக்குப் பின்னர் அவர்களின் நெருக்கம் எல்லை மீறியும் போகிறது. எதற்கு அப்படிப்பட்ட காட்சிகள் என்று தெரியவில்லை. ஒரு கதாநாயகி போலத் தெரியாமல் அந்தக் கதாபாத்திரத்தில் யதார்த்தமான தோற்றத்தில் மிகையில்லாமல், யதார்த்தமாக நடித்திருக்கிறார் அபர்ணா.

நெடுமுடி வேணுவிடம் உதவியாளராக இருந்து விரட்டப்படும் சிஷ்யனாக வினீத். எவ்வளவு வருடங்கள் ஆயிற்று அவரையும் தமிழ் சினிமாவில் பார்த்து. அப்பாவித்தனமான முகத்துடன் இருந்தாலும் அவர் காட்டும் திமிரும், ஏளனமும் அவரை வில்லனாகவே காட்டுகின்றன.

தொகுப்பாளர் திவ்யதர்ஷினியும் படத்தில் வில்லியாகத்தான் நடித்திருக்கிறார். பிரபல தொகுப்பாளியான அவரை வைத்தே, அவர் சார்ந்த டிவியின் இசை நிகழ்ச்சிகளையும் கிண்டலடித்திருக்கிறார் இயக்குனர். டிவி இசை நிகழ்ச்சிளில் கலந்து கொள்ளத் துடிப்பவர்களுக்கு இதெல்லாம் ஒரு பாடம் தான்.

ஜிவியின் அப்பாவாக குமரவேல், ஒரு அழுக்கு லுங்கி, சட்டை, அன்பான பேச்சு என ஒரு யதார்த்தமான அப்பாவாக அப்படியே வாழ்ந்திருக்கிறார். இவரைப் போன்ற நடிகர்களை தமிழ் சினிமா எப்போதோ ஒரு முறைதான் பயன்படுத்திக் கொள்கிறது என்பது வருத்தமே.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சில இடைவெளிக்குப் பிறகு கர்நாடக இசையைக் கேட்க முடிகிறது. பாடல்கள் தியேட்டரில் பார்க்கும் போது கேட்க இனிமையாக இருந்தாலும் வெளியில் வந்தால் பாடலின் வரிகள் ஞாபகத்திற்கு வராமல் போகிறது.

இடைவேளை வரை இயல்பாக நகரும் படம், பின்னர் எங்கெங்கோ சுற்றிச் சென்று, டிவி இசை நிகழ்ச்சிப் போட்டி என வந்ததும் என்ன இப்படி கதையைக் கொண்டு வந்துவிட்டாரே என ஏமாற்றமடைய வைக்கிறது.

ஒரு டிவி நிகழ்ச்சியின் நடுவராக இருப்பவரின் சிஷ்யரே அந்த டிவி போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால், இந்தப் படத்தில் வினீத்தின் சிஷ்யரே கலந்து கொண்டு இறுதிப்போட்டி வரை வருகிறார்.

கிறிஸ்துவ இளைஞன், மிருதங்கம் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டு அதில் சாதிக்கப் போராடுவது மட்டும்தான் கதையின் சிறு வித்தியாசம்.

சர்வம் தாள மயம் - இசைக்கில்லை எல்லை

 

பட குழுவினர்

சர்வம் தாள மையம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

ஜி.வி.பிரகாஷ் குமார்

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் தான் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். 1987ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி, சென்னையில் பிறந்த ஜி.வி.பிரகாஷ், ஆரம்பத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை குரூப்பில் பணி செய்தார். ஏ.ஆர்.ரஹ்மான் தவிர்த்து ஹாரிஸ் ஜெயராஜிடமும் பணியாற்றியிருக்கிறார். பின்னர் வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ், முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். தொடர்ந்து தமிழில் பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். குறுகிய காலத்தில் 50 படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளரும் இவர் தான். இசையமைப்பாளராக மட்டுமல்லாது, ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளார் ஜி.வி. தனது படங்களில் ஏராளமான பாடல்களை பாடிய பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் விமர்சனம் ↓