2.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - கௌதம் கார்த்திக், கார்த்திக், ரெஜினா கஸான்ட்ரா, வரலட்சுமி, சதீஷ், மைம் கோபி மற்றும் பலர்.
இயக்கம் - திரு
இசை - சாம் சிஎஸ்
தயாரிப்பு - போப்டா மீடியா, கிரியேட்டிவ் என்டர்டெயின்மென்ட்

தமிழ் சினிமாவில் சில படங்களையும், சில பெயர்களையும் எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாது. அப்படி மறக்க முடியாத படமாக 1986-ம் ஆண்டு கார்த்திக், மோகன், ரேவதி நடித்து வெளிவந்த 'மௌனராகம்' படத்தில், கார்த்திக் அழைத்த 'மிஸ்டர் சந்திரமௌலி' என்பது மிகவும் பிரபலமான ஒன்று. அந்தப் பெயரையே படத்தின் தலைப்பாக வைத்து சந்திரமௌலி ஆக கார்த்திக்கையும் நடிக்க வைத்திருக்கிறார்கள்.

மேலோட்டமாகப் பார்த்தால் அப்பாவைக் கொன்றவர்களைப் பழி வாங்கும் கதைதான். அதை இந்தக் காலத்து 'கால் டாக்சி, கார்ப்பரேட் போட்டி' என புதிய முலாம் பூசியிருக்கிறார் இயக்குனர் திரு.

பாக்சர் ஆன கௌதம் கார்த்திக் அம்மா இல்லாமல் அப்பா கார்த்திக்கால் வளர்க்கப்பட்டவர். அப்பா, மகன் இருவரும் மிகவும் பாசக்காரர்கள். ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் பயணிக்கும் கார் விபத்தில் சிக்கி கார்த்திக் இறந்து போகிறார். விபத்தால், கௌதமுக்கு இரண்டு அடி தூரத்திற்கு மேல் பார்வை சரியாகத் தெரியாமல் போகிறது. வீட்டில் ஓய்வெடுக்கும் கௌதமுக்கு அப்பா விபத்தில் சாகவில்லை யாரோ அவரைக் கொன்றுள்ளார்கள் என்ற உண்மை தெரிய வருகிறது. அப்பாவைக் கொன்றவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க காதலி ரெஜினா, நண்பன் சதீஷ் ஆகியோருடன் களத்தில் இறங்குகிறார். அப்பாவைக் கொன்றவர்களை அவர் கண்டுபிடித்தாரா, அவர்கள் ஏன் கார்த்திக்கைக் கொன்றார்கள் என்பது தான் படத்தின் மீதிக் கதை.

அப்பா கார்த்திக்குடன், மகன் கௌதம் கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடித்திருக்கிறார். இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் என்பதால் படத்தில் அவர்களுக்கு இடையிலான காட்சிகளை உணர்வு ரீதியாக அழுத்தமாக வைத்திருக்கலாம். ஆனால், இந்தப் படத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத அளவில் மட்டுமே வைத்திருக்கிறார் இயக்குனர் திரு. அப்பாவை நினைத்து ஒரு கட்டத்தில் கௌதம் கார்த்திக் அழும் காட்சி மட்டுமே மனதுக்குள் என்னவோ செய்கிறது.

திரு இதற்கு முன் இயக்கிய 'நான் சிகப்பு மனிதன்' படத்தில் நாயகன் விஷால் திடீர் திடீரென தூங்கி விடுவார் என மருத்துவ ரீதியாக ஒரு விஷயத்தை கதாபாத்திரத்தின் தன்மையாக வைத்திருந்தார். இந்தப் படத்தில் நாயகன் கௌதம் கார்த்திக்குக்கு ஒரு விபத்திற்குப் பிறகு இரண்டு அடி தூரத்திற்கு மேல் பார்வை சரியாகத் தெரியாது என்று கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார்.

அதன் பின் ஸ்டன்ட் சில்வாவைத் துரத்தும் காட்சியில் பைக் கண்ணாடியை வைத்து தேடுவதிலும், இரண்டு அடி பார்வைக் குறையை கௌதம், ஸ்பை-கேம் வைத்து சமாளிப்பதிலும் இயக்குனர் நன்றாகவே யோசித்திருக்கிறார். இதை படத்தின் இடைவேளை வரை இன்னும் யோசித்திருந்தால் 'மிஸ்டர் சந்திரமௌலி' இன்னும் ஸ்ட்ராங்காக இருந்திருக்கும்.

கௌதம் கார்த்திக் தான் படத்தின் நாயகன். ஆனாலும், கதை அவருடைய அப்பா கார்த்திக்கைச் சுற்றித்தான் நடக்கிறது. வழக்கம் போல துறுதுறு நடிப்பில் கார்த்திக். வயதானாலும் மனிதரிடம் அந்த உத்வேகம், சுறுசுறுப்பு அப்படியே இருக்கிறது. சில காட்சிகளில் அப்பா முன் கௌதமின் இளமையான நடிப்பு கூட தோற்றுப் போய்விடுகிறது. படத்திற்குப் படம் கௌதமின் நடிப்பிலும், ஆக்ஷ்னிலும், ரொமான்சிலும் முன்னேற்றம் தெரிகிறது.

ரெஜினாவைப் பார்த்ததுமே ஐ லவ் யூ சொல்லி விடுகிறார் கௌதம். அடுத்த காட்சியிலேயே கௌதம் வீட்டைத் தேடி வருகிறார் ரெஜினா. அதனால், இவர்கள் காதலில் எந்த போராட்டமும் இல்லை. கிளாமரில் ரெஜினா எல்லை தாண்டி நடித்திருக்கிறார். அதிலும், 'ஏதேதோ... ஆனேனே...' பாடல் சென்சாரிலும் தப்பி வந்திருக்கிறது.

இடைவேளைக்குப் பின் வரலட்சுமி சரத்குமார். ரயில் சினேகம் எப்படியிருக்கும் என்பது ரயிலில் தினமும் பயணித்தவர்கள் மட்டுமே உணர முடியும். இந்தப் படத்தில் ரயிலில் பயணிக்காமலேயே ரசிகர்கள் உணரும்படி கார்த்திக்கும், வரலட்சுமியும் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் முக்கிய வில்லன் மைம் கோபி. கார்ப்பரேட் அடியாள் என்று கூட அவரைச் சொல்லலாம். கார்ப்பரேட்டில் விசுவாசம் என்றால் என்ன என்று கேட்பார்கள். அதற்கு மைம் கோபி கதாபாத்திரம் சரியான உதாரணம். மகேந்திரன் தான் மெயின் வில்லன் என்று நினைத்திருந்தால் அதில் எதிர்பாராத டுவிஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குனர்.

சதீஷ் இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகராக நடிக்கவில்லை, நாயகனின் நண்பராகத்தான் நடித்திருக்கிறார். அவர் அடிக்கும் சில மொக்கை ஜோக்குகள் கூட சிரிப்பை வரவழைக்கவில்லை. சந்தானம், வடிவேலு இடத்தை யார்தான் வந்து நிரப்புவார்களோ ?.

சாம் சிஎஸ் இசையில் 'ஏதேதோ...ஆனேனே...' பாடல் ஹிட் வரிசையில் சேர்ந்துவிடும். ரிச்சர்ட் எம் நாதனின் காமிரா இந்தப் பாடலில் புகுந்து விளையாடியிருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த கால் டாக்சி குற்றங்களை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் திரு. இடைவேளையில் இருந்துதான் படமே ஆரம்பமாவதைப் போன்று இருக்கிறது. இடைவேளைக்குப் பின் கொஞ்சம் கலகலப்பு, கொஞ்சம் காதல், கொஞ்சம் பாசம், கொஞ்சம் நகைச்சுவை என சரிக்கு சமமாக வைத்திருந்தால் இந்த சந்திரமௌலி முழு சந்திரனாக பிரகாசித்திருப்பார்.

மிஸ்டர் சந்திரமௌலி - முதல் பாதி மௌனம், இரண்டாம் பாதி சாகசம்!

 

பட குழுவினர்

மிஸ்டர் சந்திரமெளலி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓