2.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - விமல், ஆனந்தி, பிரபு, சரண்யா, கார்த்திக்குமார், சாந்தினி, ரோபோ சங்கர்
இயக்கம் - பூபதிபாண்டியன்
இசை - ஜேக்ஸ் பிஜாய்
தயாரிப்பு - எ3வி சினிமாஸ்

ஒரு படத்தை யாருக்காக எடுக்கிறோம் என்பதுதான் மிக முக்கியமானது. நடிக்கும் நடிகர், நடிகைகளைப் பொறுத்து, அவர்களது படங்கள் யாரால் அதிகம் ரசிக்கப்படும் என்பதைப் பொறுத்த அவர்களுக்கான கதைகளில் அவர்கள் நடித்தால் அவர்களும் வெற்றி பெறுவார்கள், அந்தப் படமும் வெற்றி பெறும். ஒரு படம் கிளாஸ் ஆக இருந்தால் மட்டும் போதாது கொஞ்சம் 'மாஸ்' ரசிக்கும்படியாகவும் இருக்க வேண்டும்.

'மன்னர் வகையறா' கிளாஸ் படமல்ல அதிகம் படம் பார்க்கும் 'மாஸ்' ரசிகர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்ட படம். நிறைய நட்சத்திரங்கள், குடும்பங்களைச் சுற்றி அமைக்கப்பட்ட கதை, ரசிக்க வைக்கும் சில காட்சிகள் என இயக்குனர் இந்த மன்னர் வகையறாவை இயக்குனர் வகைப்படுத்தியிருக்கிறார்.

தேங்காய் மண்டி வைத்திருக்கும் பிரபுவின் மகன் விமல். வக்கீலுக்குப் படித்து முடித்த விமலுக்கும் கல்லூரியில் படிக்கும் ஆனந்திக்கும் காதல். விமலின் அண்ணன் கார்த்திக்குமார் காதலித்த சாந்தினிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் ஆகிறது. கார்த்திக் மருந்து குடித்து தற்கொலைக்கு முயல, அண்ணனைக் காப்பாற்றுகிறார் தம்பி விமல். அதோடு, சாந்தினிக்குத் திருமணம் நடக்க இருக்கும் சமயம், மண்டபம் புகுந்து சாந்தினியைத் தூக்கி வந்து அண்ணன் கார்த்திக்குத் திருமணம் செய்து வைக்கிறார். அப்போதுதான் சாந்தினி, தன்னுடைய காதலி ஆனந்தியின் அக்கா என்பது அவருக்குத் தெரிய வருகிறது. இந்த விவகாரத்தால், விமல் குடும்பத்திற்கும், ஆனந்தி குடும்பத்திற்கும் பகை உண்டாகிறது. பின்னர், விமல், ஆனந்தி காதல் கல்யாணத்தில் முடிந்ததா, பிரிவில் முடிந்ததா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

விமல் எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும் நடிப்பைப் பற்றிக் கவலைப்படவே மாட்டார். ஆம்...ஓ...என்னங்க...அப்பா...அம்மா...என இழுத்துப் பேசியே ஏதோ நடித்துவிடுவார். இந்தப் படத்தில் அவரே தயாரிப்பாளர் என்பதால் ஆக்ஷ்ன் ஹீரோவாகவும் ஆசைப்பட்டிருக்கிறார். சும்மா சொல்லக் கூடாது, சண்டைப் பயிற்சியாளர் கடுமையாக உழைத்திருக்கிறார்.

ஆனந்தியை இதுவரை அழுமூஞ்சியாகவே காட்டியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் அதிகப்படியான வாலாகக் காட்டியிருக்கிறார்கள். பரவாயில்லை, துறுதுறுப்பான கதாபாத்திரத்தில் துள்ளல் ஆக நடித்திருக்கிறார் ஆனந்தி.

விமலின் அப்பா பிரபு, ஆனந்தியின் அப்பா ஜெயப்பிரகாஷ் வழக்கம் போல வரும் சினிமா அப்பாக்கள். இரண்டு வில்லன்களில் வம்சி கிருஷ்ணாக்குதான் காட்சிகள் அதிகம். சரண்யா வழக்கமான அதே கலகலப்பான அம்மா. ஆனந்தியின் அக்காவாக சாந்தினி அதிக வேலையில்லை. விமலின் அண்ணனாக கார்த்திக்குமார். அவர் நடிக்கும் கடைசி கமர்ஷியல் படம் என அவரே சொல்லிவிட்டார்.

ரோபோ சங்கர் நகைச்சுவை என்ற பெயரில் பொறுமையை சோதிக்கிறார். பல காட்சிகளில் வடிவேலுவின் வசன உச்சரிப்பு வேறு. இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கினால் படத்தின் கதை எந்த விதத்திலும் மாறிவிடாது. படத்தின் நீளத்தைக் குறைத்தது போலவும் இருக்கும். சிரிக்க வைப்பதற்கு ரூம் போட்டு யோசியுங்கள் ரோபோ.

ஜேக்ஸ் பிஜாய் இசையில் ஓரிரு பாடலாவது ஹிட் ஆக இருந்திருந்தால் படத்திற்குப் பலமாக இருந்திருக்கும். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு பளிச்சென, முத்தாக இருக்கிறது.

பழைய பார்முலா கதைதான். இருந்தாலும் இரண்டு குடும்பங்கள், அண்ணன், தங்கை பாசம், அண்ணன், தம்பி பாசம் என சென்டிமென்ட் ஏரியாவை நன்றாக நிரப்பியிருக்கிறார் இயக்குனர். விமல் வக்கீல் படிப்பு முடித்ததும் வைக்கப்படும் போர்டில் இனிஷியல் 'ஆர்' என இருக்கிறது, ஆனால் படத்தில் அவர் அப்பா பெயர் கோவிந்தராஜ்.

இந்தப் படத்துடன் வெளிவந்த மற்ற இரண்டு படங்கள் ஏ சென்டர்கள் ரசிகர்களுக்கான படங்கள் என்றால் இந்தப் படம் பி, சி சென்டர் ரசிகர்களைக் கொஞ்சம் ரசிக்க வைக்கலாம்.

மன்னர் வகையறா - சாமானியர்களுக்கான படம்

 

மன்னர் வகையறா தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

மன்னர் வகையறா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓