Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

6 அத்தியாயம்

6 அத்தியாயம்,6 Athiyayam
  • 6 அத்தியாயம்
  • இயக்குனர்:
23 பிப், 2018 - 13:33 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » 6 அத்தியாயம்

தயாரிப்பு - எஎஸ்சிஐஐ மீடியா லிட்.
வெளியான தேதி - 23 பிப்ரவரி 2018
நேரம் - 1 மணி நேரம் 58 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

ஒரே படத்தில் 6 குறும் படங்கள். ஒவ்வொன்றையும் வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கியிருக்கிறார்கள், வெவ்வேறு நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஆனால், 6 கதைகளுமே அமானுஷ்ய சக்தியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதைகள்.

அத்தியாயம் 1


சூப்பர் ஹீரோ

இயக்கம் - கேபிள் சங்கர்
நடிப்பு - தமன்குமார், எஸ்.எஸ். ஸ்டான்லி

உலகத்தை சில அழிவுகளிலிருந்து தான்தான் காப்பாற்றியதாகச் சொல்பவர் தமன். ஒரு பெரிய ரயில் விபத்தைக் காப்பாற்றியதாகவும், சென்னையில் வெடிக்க இருந்த குண்டை எடுத்து கடலில் வீசியதாகவும் சொல்கிறார். அவருக்கு சைக்கியாட்ரிஸ்ட் ஆன எஸ்.எஸ். ஸ்டான்லி சிகிச்சை செய்கிறார். தமனை சோதித்துப் பார்க்க அவர் ஒரு விபரீத முயற்சியை எடுக்கிறார். அது என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்.

தமன், ஸ்டான்லி என இரு கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து எடுக்கப்பட்ட கதை. அதற்குள் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி எதிர்பாராத முடிவில்லாத முடிவைக் கொடுத்திருக்கிறார்கள். தமன், ஸ்டான்லி இருவருமே இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

-------------------------------------

அத்தியாம் 2


இனி தொடரும்

இயக்கம் - சங்கர் வி தியாகராஜன்
நடிப்பு - பாப் சுரேஷ், பேபி சாதன்யா, திவ்யா

வீட்டில் தனியாகத் தங்கியிருக்கும் இளைஞர் பாப் சுரேஷ். அவரது கண்ணுக்கு ஒரு சிறுமி அடிக்கடி தென்படுகிறாள். அவரைப் பார்த்தாலே அந்த சிறுமியும் ஓடி ஒளிகிறார். இது ஒரு பெண்ணுக்குத் தெரிகிறது. அவர் ஏன் இப்படி ஒளிகிறாய் என அந்த சிறுமியிடம் கேட்க, அந்த சிறுமி அதிர்ச்சியான சம்பவம் ஒன்றைக் கூறுகிறார். அது என்ன என்பதுதான் படத்தின் கதை.

பாப் சுரேஷ், பேபி சாதன்யா, திவ்யா மூவருமே அவரவர் கதாபாத்திரங்களில் சிறப்பு. அதற்காக பேயாக நடிக்கும் போது சிறு குழந்தைகள் போல கைகளைத் தூக்கிக் கொண்டு பயமுறுத்துவது காமெடியாக உள்ளது.

------------------------------------------------------

அத்தியாயம் 3


மிசை

இயக்கம் - அஜயன் பாலா
நடிப்பு - பசங்க கிஷோர், மதுஸ்ரீ, பிரசன்னா, கதிர், ராண்டில்யா

கிஷோர், மதுஸ்ரீ மீது காதல் கொள்கிறார். ஆனால், அந்தக் காதலை மதுஸ்ரீ ஏற்கவில்லை. இதனால் மனமுடைகிறார் கிஷோர். அதன் பின் அவர் எடுக்கும் முடிவு என்ன என்பது தான் 'மிசை'. சாதாரண கதைதான், கடைசியில் மட்டுமே டுவிஸ்ட் வைத்திருக்கிறார்கள். அது போல பல படங்களில் பார்த்த ஞாபகம்.

----------------------------------------------

அத்தியாயம் 4


அனாமிகா

இயக்கம் - இஎவி சுரேஷ்
நடிப்பு - சஞ்சீவ், காயத்ரி, கேபிள் சங்கர்

கதை எழுதுவதற்காக மாமா கேபிள் சங்கர் வீட்டுக்குச் செல்கிறார் சஞ்சீவ். அந்த வீட்டில் தனியாகப் படுக்க பயந்து கொண்டு, பக்கத்து வீட்டில் உள்ள பெரியவரிடம் உதவிக்குச் செல்கிறார். அந்த வீட்டில் ஒரு அழகான பெண்ணைப் பார்க்கிறார். ஆனால், திரும்ப அந்த வீட்டுக்குச் செல்லும் போது அந்தப் பெண் இருப்பதற்கான தடயமே இல்லை. வரும் வழியில் பேயைப் பார்த்தும் பயப்படுகிறார். வீட்டிற்குள் வந்த பின்னும் அந்த பேய் பயமுறுத்துகிறது. அதன் பின் என்ன என்பதுதான் மீதிக் கதை.

மிகச் சாதாரணமாக படமாக்கியிருக்கிறார்கள். முழு படமும் இருட்டில் வேறு நடக்கிறது. நாயகியாக ஒரே ஒரு காட்சியில் வரும் காயத்ரி, பாந்தமான அழகுடன் இருக்கிறார். அவருக்கு பேயாகவாவது சில காட்சிகளை வைத்திருக்கலாம்.

--------------------------------------------------

அத்தியாயம் 5


சூப் பாய் சுப்ரமணி

இயக்கம் - லோகேஷ்
நடிப்பு - விஷ்ணு, பிரான்சிஸ்

விஷ்ணுவுக்கு ஏதாவது ஒரு பெண்ணைக் காதலிக்க வேண்டும் என ஆசை. ஆனால், அவர் எந்தப் பெண்ணுடன் பழகினாலும், ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி வந்து அவரது காதலுக்கு இடைஞ்சல் செய்கிறது. அது எதற்காக எனத் தெரிந்து கொள்ள ஒரு சாமியாரிடம் வருகிறார். அந்த சாமியார் அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கிறார். அது என்ன என்பதுதான் சஸ்பென்ஸ் ?.

6 அத்தியாயங்களிலேயே ரசிகர்கள் சிரித்து ரசிப்பது இந்த ஒரு குறும்படத்தை மட்டும்தான். அப்பாவி கதாபாத்திரத்திற்கு விஷ்ணு அவ்வளவு பொருத்தமாக இருக்கிறார். இந்தக் கதையை டெவலப் செய்தால் ஒரு நகைச்சுவைப் படமாகவே எடுத்து முடித்துவிடலாம்.

--------------------------------------------------

அத்தியாம் 6


சித்திரம் கொல்லுதடி

இயக்கம் - ஸ்ரீதர் வெங்கடேசன்
நடிப்பு - வினோத் கிஷன் அரவிந்த் ராஜகோபால், சோமு சுந்தர்

அமானுஷ்ய சக்தியை வைத்து படமாக்கப்பட்ட இந்த 6 குறும் படங்களில் ஒரு படத்தைப் போன்ற உணர்வைக் கொடுத்தது இந்த ஒரு படம் மட்டும்தான். அந்த அளவிற்கு ஒரு திரைப்படம் எடுப்பதைப் போல எடுத்திருக்கிறார்கள்.

ஓவியரான வினோத் கிஷனுக்கு கலாச்சார அழகுடன் கூடிய ஒரு பெண் ஓவியம் வரைவதற்கான ஆர்டர் வருகிறது. அதற்காக 'கோகிலா' என்ற பழைய நாவல் ஒன்றிலிருந்து 'ரெபரன்ஸ்' எடுத்து ஒரு பெண்ணின் ஓவியம் தீட்டுகிறார். ஆனால், அந்த ஓவியத்தை வரைவதற்குள் அவர் பல தடங்கல்களைச் சந்திக்கிறார். அது என்ன என்பதுதான் 'கோகிலா'விற்குள் இருக்கும் மர்மம்.

வினோத் கிஷன் ஓவியராக இயல்பாக நடித்திருக்கிறார். குறும் படத்தின் இடையே சொல்லப்படும் 'கோகிலா' கதை மிகவும் சுவாரசியமாக சித்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படமும் ஒரு முழு திரைப்படமாக உருவாகலாம்.

தமிழ் சினிமாவில் இப்படி ஆறு குறும்படங்களை ஒன்றிணைத்து ஒரு படமாக உருவாக்குவது நல்ல முயற்சிதான். ஆனால், ஒவ்வொரு குறும் படத்தையும் கிளைமாக்சுக்கு முன்பாக முடித்துவிட்டு, பின்னர் மொத்தமாக ஆறு குறும் படங்களின் கிளைமாக்சையும் திரையிடுவது ஒவ்வொரு குறும்படத்தின் தனித் தன்மையை பாதித்து விடுகிறது.

இருந்தாலும் புதிய முயற்சிக்கு ரசிகர்கள் அவர்களது ஆதரவைக் கொடுக்கலாம்.வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in