விழித்திரு,Vizhithiru

விழித்திரு - சினி விழா ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

நடிகர்கள் - கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, ராகுல் பாஸ்கரன், சாய் தன்ஷிகா, அபிநயா, எரிக்கா பெர்னாண்டஸ், தம்பி ராமையா
இயக்கம் - மீரா கதிரவன்
இசை - சத்யன் மகாலிங்கம்
தயாரிப்பு - ஹய மரியம் பிலிம் ஹவுஸ்

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த ஒரு திரைப்படம். பல வெளியீட்டுத் தேதிகளை அறிவிக்கப்பட்டு கடைசியில் நேற்று வெளியாகிவிட்டது.

அவள் பெயர் தமிழரசி படத்தை இயக்கிய மீரா கதிரவன் இயக்கியுள்ள படம். இந்த விழித்திரு படத்தை ஒரு இரவில் நடக்கும் நான்கு கதைகளாகக் கொடுத்து கடைசியில் கிளைமாக்சில் நான்கு கதைகளையும் இணைத்திருக்கிறார்.

ஊருக்கு செல்வதற்காகக் கிளம்பும் கிருஷ்ணா, அவருடைய பர்ஸை யாரோ பிக்பாக்கெட் அடித்ததால் பணத்திற்காக நண்பன் தயவால் ஒரு டிரிப் அடிக்க டிரைவராகப் போகிறார். அவருடைய காரில் ஏறும் பயணியான சரண் சிலரால் கொலை செய்யப்படுகிறார். அதனால், அவரைக் கொலை செய்தவர்களால் துரத்தப்படுகிறார்.

பார்வையற்ற வெங்கட் பிரபு, அவருடைய மகள் பேபி சாரா இருவரும் காணாமல் போன அவர்கள் வீட்டு நாயைத் தேடிக் கொண்டு போகிறார்கள். அப்போது சாராவும் காணாமல் போய்விடுகிறார்.

பாண்டிச்சேரியில் பார்த்த எரிக்கா பெர்ணான்டஸ் அழகில் மயங்கிய பணக்கார இளைஞரான ராகுல் பாஸ்கரன், எரிக்காவை தன் வலையில் வீழ்த்தப் பார்க்கிறார். சென்னைக்குச் செல்லும் தன்னுடன் ராகுலை அழைக்கிறார் எரிக்கா. அதற்குள் முடிந்தால் இம்ப்ரஸ் செய்து பார் என சவால் விடுகிறார். இருவரும் காரில் சென்னைக்குப் பயணிக்கிறார்கள்.

தம்பி ராமையா வீட்டில் பணத்தையும், நகையையும் கொள்ளையடிக்க தனித் தனியாகச் சென்ற சாய் தன்ஷிகா, விதார்த் இருவரும் ஒன்றாக அங்கிருந்து தப்பிக்கிறார்கள். போலீசிடம் சிக்காமல் இருக்க கணவன் மனைவியாக நடிக்கிறார்கள். ஒருவரை மற்றவர் ஏமாற்ற நினைத்து சென்னையில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலே சொன்ன நான்கு கதைகளும் கிளைமாக்சில் ஒன்றாக இணைகிறது. அது எப்படி என்பது தான் விழித்திரு படத்தின் கதை.

நான்கு விதமான கதைகள் தனித் தனியே நகர்ந்தாலும் ஒன்றுக்கொன்று குழப்பமில்லாத திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர். ஒவ்வொரு கதைக்கான கதாபாத்திரங்களுக்கும் சரியான முக்கியத்துவம் படத்தில் உள்ளது.

படத்தில் வரும் அனைத்துக் கதாபாத்திரங்களுமே ஒவ்வொரு பயணத்தில் இருக்கிறார்கள். அதுவே கதாபாத்திரங்களின் நடிப்பை ஒரு யதார்த்தமான வட்டத்திற்குள் தள்ளி விடுகிறது. இருப்பினும் மற்றவர்களைக் காட்டிலும் விதார்த், சாய் தன்ஷிகா கதாபாத்திரங்களும், அவர்களது நடிப்பும் மிகவும் யதார்த்தமாக அமைந்துள்ளது.

படம் முழுவதும் ஓர் இரவில் நடக்கும் கதை என்பதால் மொத்தமாக இரவுக் காட்சிகளே உள்ளன. இரவிலும் ஒளிப்பதிவாளர்களின் லைட்டிங் கதாபாத்திரங்களைத் தெளிவாகக் காட்டியிருக்கிறது.

கதையாகப் பார்க்கும் போது வித்தியாசமான படமாகவே இருக்கிறது. இருந்தாலும் முன்னணி நட்சத்திரங்கள் ஒரு சிலராவது நடித்திருந்தால் இப்படிப்பட்ட படங்களின் ரிசல்ட் நிச்சயம் வேறு மாதிரி இருக்கும் என்பது மறுப்பதற்கில்லை.

விழித்திரு - விடியும் வரை த்ரில்லிங் பயணம்

 

பட குழுவினர்

விழித்திரு

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓