Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள (மலையாளம்)

ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள (மலையாளம்),Njandukalude nattil oridavela
  • ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள (மலையாளம்)
  • நிவின் பாலி
  • இயக்குனர்: அல்தாப் சலீம்
05 செப், 2017 - 16:47 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள (மலையாளம்)

நடிகர்கள் : நிவின்பாலி, லால், சாந்தி கிருஷ்ணா, சிருந்தா ஆசப், அஹானா கிருஷ்ணா, ஐஸ்வர்யா லட்சுமி, ஷராபுதீன், கிருஷ்ண சங்கர், சிஜூ வில்சன், ஷைஜு குறூப்
ஒளிப்பதிவு : முகேஷ் முரளிதரன்
இசை : ஜஸ்டின் வர்கீஸ்
இயக்கம் : அல்தாப் சலீம்

நிவின்பாலி நடிப்பில், அவரது சொந்த தயாரிப்பில், அவரது நண்பர் அல்தாப் சலீம் இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் தான் இந்த 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள'..

குடும்பத்தலைவர் லால், மனைவி சாந்தி கிருஷ்ணா, மகன் நிவின்பாலி, மகள்கள் சிருந்தா ஆசப், அஹானா கிருஷ்ணா, மருமகன் சிஜூ வில்சன் மற்றும் என்பது வயது தாத்தா என வசதியான அதேசமயம் மகிழ்ச்சியான குடும்பம் தான் நிவின்பாலியின் குடும்பம்.. திடீரென ஒருநாள், தனக்கு மார்பக புற்றுநோய் வந்திருக்கிறதோ என சந்தேகப்படும் சாந்தி கிருஷ்ணா, கேன்சரின் ஆரம்ப நிலையில் தான் இருப்பதை மருத்துவர் மூலம் உறுதி செய்கிறார்.

இந்த விஷயத்தை எப்படியோ ஒருவழியாக தட்டுதடுமாறி குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்துகிறார். அப்போதிருந்து குடும்ப உறுப்பினர்களிடம் ஒரு இறுக்கம் சூழ்கிறது.. சிரிப்பு மறைகிறது. ஆனால் இதை சாந்தி கிருஷ்ணா விரும்பவில்லை.. ஒருகட்டத்தில் இதை உணரும் வீட்டினர், அவருக்காகவாவது தாங்கள் சந்தோஷமாக இருக்க முயற்சிக்கின்றனர்..

அதன் ஒரு பகுதியாக இளையமகள் திருமணத்தை நடத்தி சாந்தி கிருஷ்ணாவை சந்தோஷப்படுத்துகின்றனர்.. இறுதியில் சாந்தி கிருஷ்ணாவின் உயிர் தப்புமா இல்லையா என்கிற ரிப்போர்ட் விபரத்தை டாக்டர் சொல்கிறார். குடும்பத்தில் மீண்டும் மகிழ்ச்சி குடிபுகுந்ததா என்பது க்ளைமாக்ஸ்..

எண்பதுகளில் தமிழ்சினிமாவின் பல படங்களில் திருப்புமுனை கதாபாத்திரமாக இருந்தது தான் கேன்சர் நோய். கேன்சர் வந்தவர்கள் ரத்த வாந்தி எடுப்பதாகத்தான் நமக்கு பல படங்களில் காட்டப்பட்டு இருக்கின்றன. ஆனால் கேன்சரை குணப்படுத்த முடியும் அல்லது முடியாது என்பதை தாண்டி, கேன்சரால் ஒரு குடும்பத்தலைவி பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை ஒரு குடும்பத்தினர் எப்படி எதிர்கொள்கின்றனர், நோயால் பாதிக்கப்பட்டவரின் மன உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதையே ஒரு படமாக இல்லையில்லை பாடமாக எடுத்துள்ளார்கள்.

இந்தப்படத்தின் கதாநாயகன் நிவின்பாலி தான் என்றாலும் கூட மருந்துக்கு கூட ஹீரோயிச காட்சிகள் என எதுவும் இல்லை.. குடும்ப உறுப்ப்பினர்களில் மற்றவர்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதோ அதே அளவுதான் பத்தோடு பதினொன்றாக நிவின்பாலிக்கும் தரப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் நிவின்பாmh கதையின் தன்மை உணர்ந்து அண்டர்பிளே செய்து நடித்திருக்கிறார். கொஞ்சம் சீரியசான கதை என்பதால் நிவின்பாலியின் ட்ரேட் மார்க் காமெடிகளும் இதில் குறைவே..

படத்தின் கதாநாயகி, அதவாது கதையின் நாயகி என்றால் அது நிவின்பாலியின் அம்மாவாக, குடும்பத்தலைவியாக நடித்துள்ள சாந்தி கிருஷ்ணா தான். கேன்சர் நோய் தனக்கு வந்துள்ளதாக தெரியவந்ததும் அதிலிருந்து அவர் நடவடிக்கைகளில் ஏற்படும் மெல்லிய மாற்றங்களும், நோயை எதிர்கொள்வதற்கு மருத்துவத்தை விட தனது குடும்பத்தாரின் பக்கபலமான ஆதரவை தேடுவதுமாக கேன்சரால் பாதிக்கப்பட்ட ஒரு யதார்த்த பெண்மணியை கண்முன் நிறுத்துகிறார் சாந்தி கிருஷ்ணா.. அதிலும் மொட்டைத்தலையுடன் நடித்திருக்கும் அவரது துணிச்சல் சூப்பர்ப்..

மனைவியின் அவஸ்தைகள் கண்டு பரிதவிக்கும் கணவனாக நடிகர் லால் நிறைவான நடிப்பு.

மூத்தமகளாக வரும் சிருந்தா ஆஷப் மற்றும் அவரது கணவராக வரும் (பிரேமம்) சிஜூ வில்சன் எபிசோட் காமெடி ட்ராக் பற்றாக்குறையை கொஞ்சம் ஈடுகட்டுகிறது.. கதாநாயகி என்றாலும் இடைவேளைக்குப்பின்னர் என்ட்ரி கொடுக்கும் ஐஸ்வர்யா லட்சுமி நிவின்பாலியுடன் நட்பு கொண்டு, அதை காதலாக மாற்றுவது அழகான ஹைக்கூ.

வீட்டில் என்பது வயது முதியவரான கே.எ.ஆண்டனியின் நகைசுவை கலந்த நடிப்பு பிரமாதம் என்றால், அவரை கவனித்துக்கொள்ளும் ஆண் நர்ஸாக வரும் (பிரேமம்) ஷராபுதீனின் அல்டாப்புகள் காமெடி சரவெடி. நிவின்பாலியின் நண்பராக சூப்பர் மார்க்கெட் நடத்தும் (பிரேமம்) கிருஷ்ண சங்கரும் ஓரளவு ஜமாய்க்கிறார்.

டாக்டராக நடித்துள்ள ஷைஜு குறூப், நிவின்பாலியின் குடும்பத்தினர் மாறி மாறி பண்ணும் போன் கால்களால் அவஸ்தைக்கு ஆளாகும் காட்சியில் சிரிக்க வைக்கிறார். ஜஸ்டின் வர்கீஸின் இசையும் முகேஷ் முரளிதரனின் ஒளிப்பதிவும் காட்சிகளில் இணைந்து பயணிக்கின்றன. நிவின்பாலி தாத்தாவின் மரணத்தை கூட இயல்பான காமெடியாக்கி இருப்பது ரசிக்க வைக்கிறது.

படத்தை இயக்கியுள்ள அல்தாப் சலீம் தனது முதல் படத்திலேயே கொஞ்சம் விழிப்புணர்வு ஊட்டக்கூடிய கதையை கையாண்டிருப்பதற்காக அவரை பாராட்டலாம். ஆனாலும் படம் முழுக்க மருத்துவ நெடி அடிப்பதை அவரால் தவிர்க்க முடியவில்லை என்பது மைனஸ்.

இன்றைய தேதியில் நிவின்பாலி முன்னணி கதாநாயகன் என்பதால், அவருக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை அமைத்திருந்தால் ரசிகர்களுக்கும் கொஞ்சம் திருப்தி ஏற்பட்டிருக்கும்.

இருந்தாலும் கேன்சர் நோயை எதிர்கொள்பவர்களுக்கும் அவர்களது சுற்றத்தினருக்கும் இந்தப்படத்தில் இருந்து சில படிப்பினைகள் கிடைக்கும் என உறுதியாக சொல்லலாம்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in