அறிமுக இயக்குநர் ஆர்எஸ் பிரசன்னா இயக்கத்தில், பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடிப்பில் தமிழில் வெளியான "கல்யாண சமையல் சாதம்" படம், ஹிந்தியில் அதே பிரசன்னா இயக்கத்தில், ஆயுஸ்மான் குரானா, பூமி பத்னேகர் நடிப்பில் ரீ-மேக்காகி வெளியாகியுள்ள படம் தான் "சுப மங்கல் சாவ்தன்". இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா... இல்லையா... என்று இனி பார்ப்போம்...!
கதைப்படி, டில்லியில் வசிக்கும் முதித் சர்மா எனும் ஆயுஸ்மான் குரானா, சுகந்தா ஜோஷி எனும் பூமி பத்னேகர் மீது காதல் கொள்கிறார். ஆனால் அந்தக்காதலை சொல்ல அவருக்கு தைரியமில்லை. ஒருநாள் தனக்குள் தைரியத்தை வரவைத்து கொண்டு இணையதளம் மூலமாக தன் காதலை வெளிப்படுத்துகிறார். ஆயுஸ்மானின் காதலை பூமியும் ஏற்றுக்கொள்ள, இருவீட்டாரது சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. ஆயுஸ்மானுக்கு செக்ஸ் தொடர்பான பிரச்னை இருப்பதை அறிந்து கொள்கிறார் பூமி. ஆயுஸ்மானும் இதை உணர்ந்து அதை சரி செய்ய மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்குகிறார். திருமண நாளும் நெருங்குகிறது. ஆயுஸ்மான் தெளிவடைந்தாரா? திட்டமிட்டபடி திருமணம் நடந்ததா? என்பது "சுப மங்கல் சாவ்தன்" படத்தின் காமெடியான மீதிக்கதை!
கல்யாணமாகப்போகும் ஆண்களுக்கே இருக்கும் செக்ஸ் தொடர்பான பயம் கேரக்டரில் சிறப்பாக நடித்திருக்கிறார் ஆயுஸ்மான் குரானா.
டாய்லெட் படத்தில் அக்ஷ்ய்யின் மனைவியாக நடித்த பூமி பத்னேகர், தான் இப்படத்திலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார். நடிப்பில் ஒரே மாதிரியான முகபாவனைகளை காண்பிப்பது பலவீனம். சீமா, பிஜேந்திர காலா ஆகியோரின் நடிப்பு சிறப்பு.
இயக்கம் என்று பார்த்தால் ஆர்எஸ் பிரசன்னா சிறப்பாக செய்திருக்கிறார். கதையை விட திரைக்கதையை அவர் கொண்டு சென்றுள்ள விதம் மிக நேர்த்தியாக இருக்கிறது. முதல்பாகம் நகைச்சுவையாக கலகலப்பாக செல்கிறது, ஆனால் பின்பாதி அந்தளவுக்கு கலகலப்பாக இல்லாதது பலவீனம். வசனம், இசை, ஒளிப்பதிவு உள்ளிட்டவைகளும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளன.
ஆண்களின் செக்ஸ் தொடர்பான பிரச்னையை மிக நேர்த்தியாக, ஆபாசம் இல்லாமல் அழகாகவும், காமெடியாகவும், அதேசமயம் கொஞ்சம் மெஸேஜ் உடன் கூடி வெளிவந்திருக்கும் "சுப மங்கல் சாவ்தன்" படத்தை ஒரு முறை பார்க்கலாம், ரசிக்கலாம்!