2.25

விமர்சனம்

Advertisement

நடிப்பு - உதயநிதி ஸ்டாலின், பார்வதி நாயர், நமீதா பிரமோத்
இயக்கம் - பிரியதர்ஷன்
இசை - தர்புகா சிவா, அஜ்னிஷ் லோக்நாத்
தயாரிப்பு - மூன்ஷாட் என்டர்டெயின்மென்ட்ஸ்

மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என மற்ற மொழிகளிலிருந்து தமிழில் ரீமேக் ஆகும் பல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், சமீப காலங்களில் மலையாளத்தில் மிகப் பெரும் வரவேற்பையோ, வெற்றியையோ பெற்ற படங்கள் தமிழில் ரீமேக் ஆகும் போது பெரிய வரவேற்பைப் பெறுவதில்லை. அது ரசனை மாற்றத்தால் வந்ததா அல்லது சமீப கால மலையாளப் படங்கள் மாறிவிட்டதா என்று யோசிக்க வைக்கிறது.

மலையாளத்தில் பெரிய வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற படம் மகேஷின்டே பிரதிகாரம் படம்தான் தமிழில் நிமிர் ஆக வெளிவந்துள்ளது. தமிழ் சினிமாவில் எத்தனையோ பழி வாங்கும் கதைகளைப் பார்த்திருக்கிறோம். இந்த மலையாளப் படத்தில் உள்ள பழி வாங்குவது மிக மிகச் சாதாரண ஒன்று. மலையாள திரையுலகத்திற்கு அது வித்தியாசமாக இருக்கலாம். ஆனால், தமிழில் அது எப்படி மாறுபட்டு ரசிகர்களைக் கவரும் என ரீமேக் செய்வதற்கு முன்பு கொஞ்சம் யோசித்திருக்கலாம்.

இயக்குனர் பிரியதர்ஷன் தமிழில் இயக்கிய படங்கள் பெரிய அளவில் கமர்ஷியல் ரீதியாக வெற்றியைப் பெற்றதில்லை. ஆனால், கொஞ்சம் ரசனையான படங்களாக இருக்கும்.

ஊரில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வரும் மகேந்திரனின் மகன் உதயநிதி ஸ்டாலினும் போட்டோகிராபர் ஆக இருக்கிறார். அவருக்கும், பார்வதி நாயருக்கும் சிறு வயதிலிருந்தே காதல். பெற்றோர் கட்டாயத்தால் பார்வதி வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்கிறார். ஒரு சமயத்தில் கடைத் தெருவில் சமுத்திரக்கனியிடம் பலமாக அடி வாங்குகிறார் உதயநிதி. பதிலுக்கு சமுத்திரக்கனியை அடித்து விட்டுத்தான் காலில் செருப்பு அணிவேன் என சபதம் செய்கிறார். அதே சமயம், சமுத்திரக்கனியின் தங்கை நமீதா பிரமோத்தும், உதயநிதியும் காதலர்கள் ஆகிறார்கள். வேலை செய்ய வெளிநாடு சென்ற சமுத்திரக்கனி திரும்பி வருகிறார். உதயநிதி அவருடைய சபதத்தில் வெற்றி பெற்றாரா, அவரது காதல் நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

உதயநிதி ஸ்டாலின் இதுவரை நடித்த படங்களிலேயே மிகவும் யதார்த்தமாக நடித்துள்ள படம் இதுதான். இதற்கு முன் இவர் நடித்த படங்கள் அனைத்திலும் நடிக்கிறார் என்பது நன்றாகவே தெரியும். இந்தப் படத்தில் எந்த ஒரு காட்சியிலும் அப்படித் தெரியவில்லை. இப்படி நான்கைந்து படங்களில் நடித்துவிட்டார் என்றால் அவருடைய நடிப்பைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை.

இடைவேளை வரை படத்தின் நாயகியாக பார்வதி நாயர். சிறு வயதிலிருந்தே காதலித்தவனை பெற்றோர் சொன்னார்கள் என்பதற்காக உடனேயே மறந்துவிடச் சம்மதிப்பதெல்லாம் நம்பும்படி இல்லை. உதயநிதி மீது காதலில் இருக்கும் வரை சாவு வீட்டில் கூட சிரித்துக் கொண்டேயிருக்கிறார்.

உதயநிதியின் காதலியாக பாதிப் படத்தில் வருகிறார் நமீதா பிரமோத். அவர் நடிப்பதற்கு முன்பே அவரது கண்கள் பேசிவிடுகின்றன. அந்த அளவிற்கு காந்தக் கண்ணழகியாக இருக்கிறார். நடிக்கத் தெரிந்த நடிகைகளைத் தேடும் இயக்குனர்கள் இனி, இந்த நமீதாவைத் தேடலாம்.

சமுத்திரக் கனி திடீரென வந்து உதயநிதியை அடித்துவிட்டு கதையின் திருப்பத்துக்குக் காரணமாக அமைகிறார். உதயநிதியின் அப்பாவாக இயக்குனர் மகேந்திரன், இப்படி ஒரு யதார்த்தமான அப்பாவை சினிமாவில் மட்டுமே பார்க்க முடியும் என வியக்க வைக்கிறார். பக்கத்து கடைக்காரராக எம்.எஸ்.பாஸ்கர், அவரது உதவியாளராக கருணாகரன், ஆரம்பத்தில் சில காட்சிகளில் வரும் அருள்தாஸ், என மலையாளப் படங்களுக்கே உரிய சில கதாபாத்திர அமைப்புகள்.

தர்புகா சிவா, அஜ்னிஷ் லோகத் என இருவர் இசையமைத்திருக்கிறார்கள். நெஞ்சில் மாமழை... பாடல் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும். என்.கே.ஏகாம்பரம் அவருடைய ஒளிப்பதிவில் நெல்லைச் சீமையை அழகுறக் காட்டியிருக்கிறார்.

நிமிர் என கம்பீரமாகச் சொல்ல வேண்டாம், நிமிர் என சாதாரணமாகச் சொன்னால் போதும் என்ற அளவில், உணர்வுபூர்வமாய், உருக்கமாய் இல்லாமல் சாதாரணமாய் கடந்து போகிறது படம்.

நிமிர் - அழுத்தமில்லாமல்...!

 

பட குழுவினர்

நிமிர்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

உதயநிதி ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் எனும் அடையாளத்தோடு ஒரு தயாரிப்பாளராக சினிமாவில் அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். குருவி, ஆதவன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த உதயநிதி, ராஜேஷ்.எம் இயக்கிய, ''ஒரு கல் ஒரு கண்ணாடி'' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அப்படம் வெற்றி பெறவே தொடர்ந்து இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா படங்களில் நடித்தார். தயாரிப்பாளர், நடிகர், விநியோகஸ்தர் எனும் மூன்று அடையாளங்களோடு தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

மேலும் விமர்சனம் ↓