3.25

விமர்சனம்

Advertisement

நடிப்பு - சிவகார்த்திகேயன், பகத் பாசில், நயன்தாரா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர்
இயக்கம் - மோகன்ராஜா
இசை - அனிருத்
தயாரிப்பு - 24 எஎம் ஸ்டுடியோஸ்
வெளியான தேதி - 22 டிசம்பர் 2017
நேரம் - 2 மணி நேரம் 39 நிமிடம்
ரேட்டிங் - 3.25/5

மக்களின் பிரச்சனைகளை மையப்படுத்திய படங்கள் தமிழ் சினிமாவில் அதிகம் வருவதில்லை. முன்னணி ஹீரோக்களே அப்படிப்பட்ட படங்களில் தயங்கும் போது வளர்ந்து கொண்டிருக்கும் ஹீரோவான சிவகார்த்திகேயன் தயங்காமல் நடித்திருப்பது ஆச்சரியம்தான்.

இந்திய நாடு ஒரு மிகப் பெரிய வியாபார சந்தையைக் கொண்ட நாடு. இங்கு வியாபாரத்தில் காலூன்றி பல கோடிகளை சம்பாதிக்க நினைக்க பல கம்பெனிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. மக்களின் நலன்களில் விளையாடி, விளம்பரம் என்ற மாயை மூலம் அவர்கள் மக்களை ஏமாற்றி எப்படி பணம் சம்பாதித்து, நம்மையும் கஷ்டத்தில் தள்ளுகிறார்கள் என்பதை எந்த ஒரு 'காம்ப்ரமைஸ்'-ம் இல்லாமல் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மோகன் ராஜா.

கொலைகார குப்பம் ஆகிப் போன கூலிக்கார குப்பம் பகுதியைச் சேர்ந்த சிவகார்த்திகேயன், அவர் குப்பத்து மக்கள் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பவர். அந்தப் பகுதி ரவுடியான பிரகாஷ்ராஜிடம் குப்பத்து இளைஞர்கள் அடியாட்களாக சேராமல், நல்ல வேலைகளில் அவர்களைச் சேர்க்க முயற்சிப்பவர். ஒரு கம்பெனியில் விற்பனைப் பிரதிநிதியாக வேலைக்குச் சேர்கிறார் சிவகார்த்திகேயன். கொஞ்சம் கொஞ்சமாக வேலையைக் கற்றுக் கொள்பவருக்கு அந்த கம்பெனி எப்படி மக்களை ஏமாற்றி, சுரண்டி பணம் சம்பாதிக்கிறது என்பது தெரிய வருகிறது. அப்படிப்பட்ட கம்பெனியையும், வேறு சில கம்பெனிகளையும் எதிர்த்து ஒரு போராட்டத்தை ஆரம்பிக்கிறார். அதில் அவர் வெற்றி பெறுகிறாரா, இல்லையா என்பது தான் படத்தின் மீதிக் கதை.

சிவகார்த்திகேயனை ஒரு நகைச்சுவை கலந்த கதாநாயகனாகவே பார்த்துப் பழகிப் போன ரசிகர்களுக்கு இந்த 'வேலைக்காரன் - அறிவு' கதாபாத்திரம் அவரை வேறு ஒரு கோணத்தில் இனி பார்க்க வைக்கும். கீழ்மட்ட நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற அடையாளம் அவருக்கு பொருத்தமான அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது. தன் குப்பத்து மக்கள் முன்னேறி வாழ வேண்டும் என நினைத்து அதற்காக பாடுபடுகிறார். வியாபாரம், மார்க்கெட்டிங் என ஒரு கம்பெனி எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றுகிறது என்பதைக் கண்டு பொங்கி எழுகிறார். முதலாளித்துவ வர்க்கத்திற்கே வராத யோசனையுடன் செயல்பட்டு அவர்களை எதிர்த்து வேலை செய்கிறார். முதலாளிக்கு விசுவாசமாக இருப்பதை விட செய்யும் வேலைக்கு விசுவாசமாக இரு என ஒரு 'வேலைக்காரன்' எப்படி இருக்க வேண்டும் என அழுத்தமாக புரிய வைக்கிறார்.

படத்தின் நாயகியாக நயன்தாரா. 'அறம்' படத்தில் ஒரு முதன்மைக கதாபாத்திரத்தில் பார்த்த நயன்தாராவை இந்தப் படத்தில் முக்கியமில்லாத கதாபாத்திரத்தில்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. இவருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையிலான காதல் கூட ஒரு இடைவெளியுடன் தான் இருக்கிறது.

படத்தின் எதிர்மறை கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் பகத் பாசில். எந்த இடத்தில் அவர் நடித்தார் என்று கண்டுபிடிக்கவே முடியாத யதார்த்தமான நடிப்பு. இப்படிப்பட்ட நடிப்பாளர்கள் தமிழ் சினிமாவுக்கு வந்தால் தமிழ் சினிமாவும் இன்னும் அதிகமான யதார்த்தத்திற்கு மாறும். பிரகாஷ் ராஜ், குப்பத்து ரவுடியாக நடித்திருக்கிறார். சில காட்சிகளில் மிரட்டுவதுடன் அவர் வேலை முடிந்துவிடுகிறது.

ரோபோ சங்கர், ஆர்.ஜே. பாலாஜி, சதீஷ் என இன்றைய முன்னணி நகைச்சுவை நடிகர்கள் படத்தில் இருந்தாலும் அவர்களுக்கு காட்சிகளும் குறைவு, நகைச்சுவையும் குறைவு. சிவகார்த்திகேயன் அப்பாவாக சார்லி, அம்மாவாக ரோகிணி. இந்தக் குடும்பத்தினர் நிஜமான குடும்பத்தினராகவே தெரிகிறார்கள்.

சினேகாவை மையப்படுத்தித்தான் படத்தின் கதை. இவரது கதாபாத்திரத்தை இன்றைய இளம் தாய்மார்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். விளம்பரங்கள் மூலம் தேவையற்ற உணவுப் பொருட்களை வாங்கி குழந்தைகளுக்குக் கொடுப்பவதை அவர்கள் தவிர்த்தால், அது சினேகாவின் நடிப்புக்குக் கிடைத்த வெற்றியாக அமையும்.

அனிருத் இசையில் 'கருத்தவன்லாம்...' பாடல் மட்டுமே ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்களில் ஈர்க்கவில்லை. ஒளிப்பதிவாளரும், அரங்க அமைப்பாளரும் வேலைக்காரனுக்கு இன்னும் வலு சேர்த்திருக்கிறார்கள். படத் தொகுப்பாளர் இன்னும் விறுவிறுப்பு சேர்த்திருக்கலாம்.

படத்தில் பல இடங்களில் வசனங்கள் கைத்தட்டல் பெறுகிறது. இடைவேளைக்குப் பின் படம் அதிகமான வசனக் காட்சிகளால்தான் நகர்கிறது. சிவகார்த்திகேயன், பகத் இடையே ஏட்டிக்குப் போட்டியான மோதலாக நகரும் என்று எதிர்பார்த்தால் அதில் பெரிதாக சுவாரசியம் இல்லாதது குறையாக உள்ளது.

எடுத்துக் கொண்ட கதையை சொல்ல வந்த விஷயத்தை அழுத்தமாக சொல்ல முற்பட்டிருக்கும் இயக்குனர் மோகன்ராஜா, அதை இன்னும் விறுவிறுப்பான திரைக்கதையில் சுவாரசியப்படுத்தி சொல்லியிருந்தால் இந்த 'வேலைக்காரன்' இன்னும் வேற மாதிரி வந்திருப்பான்.

'வேலைக்காரன்' - செயல்காரன், இன்னும் செய்திருக்கலாம்

 

வேலைக்காரன் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

வேலைக்காரன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓