Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

கோதா (மலையாளம்)

கோதா (மலையாளம்),Godha
  • கோதா (மலையாளம்)
பஷில் ஜோசப் இயக்கத்தில் வெளிவந்துள்ள தங்கல் மாதிரியான படம் தான் இந்த கோதா.
29 மே, 2017 - 11:55 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கோதா (மலையாளம்)

நடிகர்கள் : டொவினோ தாமஸ், வாமிகா, பாலசரவணன், ரெஞ்சி பணிக்கர், அஜூ வர்கீஸ் மற்றும் பலர்

டைரக்சன் : பஷில் ஜோசப்

கடந்த சில மாதங்களுக்கு முன் ஆமீர்கான் நடிப்பில் வெளியாகி நம்மை ஆச்சர்யப்படுத்திய 'தங்கல்' படத்தின் இன்னொரு வெர்ஷன் தான் இந்த 'கோதா' திரைப்படம்.

கேரள கிராமம் ஒன்றில் குஸ்தி பயில்வானாக, மல்யுத்தமே உயிராக வாழ்பவர் ரெஞ்சி பணிக்கர். அவரது மகன் டொவினோ தாமசோ நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் ஆடி பொழுதை போக்க, இங்கிருந்தால் உருப்படமாட்டான் என டொவினோவை பஞ்சாபில் உள்ள கல்லூரியில் சேர்த்துவிடுகிறார். கல்லூரியில் மல்யுத்த வீராங்கனையாக இருக்கும் வாமிகா அறிமுகமாகிறார். அவரை பார்த்து காதல் வசப்படுகிறார் டொவினோ தாமஸ். இந்தநிலையில் வாமிகாவின் போலீஸ்கார அண்ணன் தங்கையின் படிப்பையும், மல்யுத்த விளையாட்டையும் பாதியிலேயே நிறுத்தி, அவருக்கு கல்யாணம் செய்து வைக்க முயற்சிக்கிறார். வாமிகாவுக்கு ஆதரவாக அவரது அண்ணனை டொவினோ தாமஸ் தாக்க, அதனால் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டு ஊர் திரும்புகிறார்.

அவர் வந்த இரண்டு நாட்களிலேயே பின்னாடியே வாமிகாவும், டொவினோவின் கிராமத்துக்கு தப்பி வந்துவிடுகிறார். அவருக்குள் இருக்கும் மல்யுத்த திறமையை கண்டுகொண்ட ரெஞ்சி பணிக்கருக்கு தனக்கொரு வாரிசு கிடைத்த சந்தோசம் ஏற்பட வாமிகாவுக்கு பயிற்சி அளிக்க ஆரம்பிக்கிறார். இதன் விளைவாக உள்ளூர் போட்டிகளில் கலந்துகொண்ட வாமிகா கோப்பைகளை வெல்கிறார்.

அத்துடன் தான் ஒரு பஞ்சாபி என்றாலும் கூட, தேசிய அளவில் நடக்கும் மல்யுத்த போட்டியில் கேரளாவின் சார்பில் கலந்துகொள்ள தனது பெயரை கொடுத்து ஊர்மக்கள் அனைவரையும் நெகிழ வைக்கிறார். ஆனால் போட்டியில் கலந்துகொள்ள போகும் நேரத்தில் அவர் கேரளா சார்பில் விளையாட முடியாது என தடை விதிக்கப்படுகிறது.

அந்த போட்டியில் வென்று பதக்கம் வாங்கிய பெண் வாமிகாவை ஏளனமாக பேச, கோபமாகும் ரெஞ்சி பணிக்கர் தைரியமிருந்தால் தனியாக ஒரு போட்டி நடத்தி அதில் வாமிகாவை வென்று காட்டு பார்க்கலாம் என சவால் விடுகிறார்.. சொந்த ஊரில் மல்யுத்த களமும் அமைத்து தருகிறார்.. போட்டிக்கு வாமிகா தயாரகும் வேளையில் பஞ்சாபில் இருந்து அவரது அண்ணன் கோபத்துடன் வாமிகாவை தேடி கேரளா வருகிறார். அவர் வாமிகாவை போட்டியில் கலந்துகொள்ள அனுமதித்தாரா, இல்லை பஞ்சாப்புக்கு அழைத்து சென்றாரா, அப்படியே போட்டியில் கலந்துகொண்டாலும் வாமிகாவால் எதிரியை தோற்கடிக்க முடிந்ததா, டொவினோவின் காதல் என்ன ஆனது என்பதற்கு கடைசி இருபது நிமிடம் பரபரப்பாக விடை தருகிறது.

இதுவரை கிரிக்கெட், கபடி, வாலிபால் ஆகிய விளையாட்டுக்களின் பின்னணியில் படங்களை உருவாக்கி வந்த மலையாள சினிமாவுக்கு மல்யுத்தம் சம்பந்தமான இந்த 'கோதா' நிச்சயம் புது வரவுதான்.

கதாநாயகனாக டொவினோ தாமஸ், சீறவேண்டிய இடத்தில் சீறுவதும், அடிவாங்க வேண்டிய இடத்தில் அடிவாங்குவதுமாக மீட்டரை தாண்டாமல் நடித்திருக்கிறார். மேலும் இது ஹீரோயினுக்கான படம் என்பதை அறிந்து கொண்டு, அதற்குள் தன்னால் என்ன தரமுயுமோ அதை சிறப்பாக செய்திருக்கிறார்.. நாளுக்கு நாள் அவர் முன்னணி கலைஞர் இடத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறார் என்பதற்கு இந்த கோதாவும் சாட்சி..

தமிழில் 'மாலை நேரத்து மயக்கம்' படத்தில் உம்மணா மூஞ்சியாக நாம் பார்த்த பெண்ணா இது என படம் முழுக்க ஆச்சர்யப்பட வைக்கிறார் கதாநாயகியான வாமிகா. அவர் அறிமுகமாகமும் காட்சியில் இருந்து, கேரளாவிற்கு அதிரடி விசிட் அடித்து, மல்யுத்த பயிற்சி எடுத்து, போட்டிகளில் பங்கெடுப்பது வரை ஒவ்வொரு காட்சியிலும் பிரமிக்க வைக்கிறார். குறிப்பாக மல்யுத்த போட்டிகளிலும் அதற்கான பயிற்சிகளிலும் வாமிகாவின் உழைப்பை பார்க்கும்போது தமிழில் அவரை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லையோ என்கிற எண்ணம் ஏற்படவே செய்கிறது. ஒவ்வொரு முறை அவரை பார்க்கும்போதும் புதிய உணர்வை கதாநாயகனுக்கு மட்டுமல்ல, படம் பார்க்கும் நமக்கும் கடத்துகிறார்.. அதிலும் அந்த திருவிழாவில் சேலை அணிந்து வரும் காட்சியில் அவ்வளவு அழகு.

மல்யுத்தத்திற்காகவே தன்னை அர்ப்பணித்த 'கேப்டன்' கேரக்டரில் ரெஞ்சி பணிக்கர், இதுநாள் வரை சாதாரணமாக குணச்சித்திர ரோல்களில் நடித்து வந்தாலும் இந்தப்படத்திற்காக உடம்பை முறுக்கேற்றி, மல்யுத்த சண்டை போடுவது முதற்கொண்டு ரெஞ்சி பணிக்கரின் உழைப்பு பத்து மடங்கு அதிகம் என்றே சொல்லலாம்.

பஞ்சாப் கல்லூரியில் டொவினோ தாமஸின் நண்பனாக சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுக்கிறார் நம்ம பாலசரவணன். இது மலையாள படமாக இருந்தாலும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் நடக்குமிடம் பஞ்சாப்பாக இருந்தாலும் பாலசரவணன் நம்மூர் தமிழை தெனாவெட்டாக பேசுகிறார். அதிலும் சிங்குகளையும், சேட்டன்களையும் கலாய்க்கும் அளவுக்கு அவருக்கு நடிப்பில் சுதந்திரம் கொடுத்த இயக்குனரை தாராளமாக பாராட்டலாம்.

கிராமத்து நண்பர்கள் கூட்டணியில் அஜூ வர்கீஸ், ஹரீஷ் பெருமன்னா, பிஜுகுட்டன், தர்மஜன் போல்காட்டி என ஒரு பட்டாளமே இருந்தாலும், கேரளா வந்த வாமிகாவை இந்தி பேசி கரெக்ட் பண்ண முயற்சிக்கும் அஜூ வர்கீஸ் நன்றாகவே ஸ்கோர் செய்கிறார். டொவினோ தாமஸின் அம்மாவாக வருபவர் படு யதாரத்தமாக நடித்துள்ளார்.. ரெஞ்சி பணிக்கரின் நண்பராக மல்யுத்த ஆதரவு வீரராக படம் முழுதும் வரும் ஹரீஷ் பெராடியும் (ஆண்டவன் கட்டளையில் விசாரணை அதிகாரி) பாந்தமான நடிப்பால் வசீகரிக்கிறார்.

கடந்த 2015ல் 'குஞ்சிராமாயணம்' என்கிற முழுநீள காமெடிப் படத்தை இயக்கிய பஷில் ஜோசப், இந்தமுறை மல்யுத்த பின்னணியில் படத்தை இயக்கியது ஒருபக்கம் ஆச்சர்யம் என்றால், ஹீரோவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்பிருந்தும் கூட, அப்படி செய்யாமல் இதை பெண்களுக்கு உத்வேகமும் ஊக்கமும் தன்னம்பிக்கையும் கொடுக்கும் விதமான படமாக மாற்றியதில் ரொம்பவே உயர்ந்து நிற்கிறார். அதேசமயம் வழக்கமான தனது கலகல பாணியில் இருந்தும் அவர் விலகாமல் கமர்ஷியலான படமாகவே இயக்கியுள்ளார்.

விளையாட்டில் சாதிக்க துடிக்கும் பெண்களுக்கும், அவர்களுக்கு துணை நிற்கும் பெற்றோருக்கும் இந்தப்படம் இன்னும் அதிக உற்சாகத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in