சச்சின் ஏ பில்லியன் டிரீம்ஸ்,Sachin a billion dreams
Advertisement
3

விமர்சனம்

Advertisement

இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று போற்றப்பட்டு, உலகமே கொண்டாடிய சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை சினிமாவாக, அதில் அவரது ரோலில் அவரே நடித்து வெளிவந்திருக்கும் படம் தான் "சச்சின் ஏ பில்லியன் டிரீம்ஸ்". சச்சினின் பல கோடி கனவுகளை உள்ளடக்கியதாலோ என்னவோ படத்திற்கு இப்படி ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள்.

சச்சினின் சின்ன வயது முதல் அவர் வாழ்க்கை மொத்தத்தையும், பல கோடி கனவுகளையும் உள்ளடக்கியதே "சச்சின் ஏ பில்லியன் டிரீம்ஸ்"-ன் ஒரு வரிக்கதை. 1983-ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றிய போது, கிரிக்கெட் மீது சச்சினுக்கு அதிக ஆர்வம் வர, அதன் பின் அவர் எப்படி தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கி, இந்திய அணியில் இடம்பிடித்து, உலகம் முழுக்க பிரபலமான கிரிக்கெட் வீரராக மாறினார், இந்திய அணி மீண்டும் உலக கோப்பை வெல்ல வேண்டும் என்ற அவரது கனவு நனவானது, உள்ளிட்ட கனவுகளுடன், சச்சினின் காதல், திருமணம், குழந்தைகள், அவர் சந்தித்த பிரச்னைகள், சோதனைகள், நண்பர்களுடனான கொண்டாட்டம் என... அவரது வாழ்க்கை பயணத்தையும் கலந்து, சுவாரஸ்யமாக வெளிவந்திருக்கிறது இந்த சச்சின் ஏ பில்லியன் டிரீம்ஸ்.

சச்சின் என்றால் அமைதியானவர் என்று தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் இவ்வளவு சுட்டித்தனம் செய்பவரா...? என்று படம் பார்க்கும் போது ஆச்சர்யம் ஏற்படுகிறது. சின்ன வயதில் சச்சின் அவ்வளவு குறும்புத்தனங்கள் மற்றும் கலாட்டாக்கள் செய்திருக்கிறார். மேலும் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் அவர் நேரம் செலவிடுவது, தன் குழந்தைகளுடன் சச்சின் விளையாடுவது, மகன் அர்ஜுனிடம் அடிவாங்குவது, நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் கலாட்டா செய்வது... என சச்சின் பற்றிய பல சுவாரஸ்ய விஷயங்கள் படத்தில் இடம்பெற்று இருக்கிறது. கூடவே சச்சின் விளையாடிய முக்கியமான போட்டிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளன. அதேப்போல் தனக்கு கேப்டன் பதவி எவ்வளவு சுமையாக இருந்தது, கிரேக் சாப்பல் பயிற்சியாளராக இருந்தபோது என்னென்ன பிரச்னைகள் எல்லாம் எழுந்தது. அது கிரிக்கெட் வீரர்களுக்குள் எப்படி புகைச்சலை ஏற்படுத்தியது போன்ற விஷயங்களையும் சொல்லியிருக்கிறார்கள்.

சச்சினின் வாழ்க்கை படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியுள்ளார். வெறும் 138 நிமிடத்தில் சச்சினின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை எவ்வளவுக்கு எவ்வளவு சொல்ல முடியுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு அழகாகவும், ரசிக்கும்படியும் சொல்லியிருக்கிறார் இயக்குநர். சச்சின் என்றால் கிரிக்கெட் என்பதையும் தாண்டி, அவரின் நிஜ வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்தது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. அந்தவகையில் இயக்குநருக்கு பாராட்டுகள்.

இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று புகழப்படும் சச்சினின் வாழ்க்கை படத்தை ஒரு முழுநீள படம் போன்று எடுக்காமல், ஆவணப்படம் போன்று எடுத்திருப்பது படத்திற்கு சற்றே பலவீனம். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்றாலும், அது பெரிதாக தெரியவில்லை.

மொத்தத்தில், "சச்சின் ஏ பில்லியன் டிரீம்ஸ் - மாஸ்டர் பிளாஸ்டர்!"

 

பட குழுவினர்

சச்சின் ஏ பில்லியன் டிரீம்ஸ்

  • நடிகர்
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓