காலா,Kaala

காலா - பட காட்சிகள் ↓

காலா - சினி விழா ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

நடிகர்கள் - ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி மற்றும் பலர்
இயக்கம் - பா.ரஞ்சித்
இசை - சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பு - உண்டர்பார் ஸ்டுடியோஸ்

தமிழ்த் திரையுலகில் ரஜினிகாந்த், பா. ரஞ்சித் கூட்டணி முதன் முறையாக கபாலி படத்தில் இணைந்தது எதிர்பாராத ஒன்று. தயாரிப்பாளரின் அபரிமிதமான விளம்பரத்தால் கபாலி படத்தை நெருப்புடா என பற்ற வைத்தார்கள். அதே கூட்டணி மீண்டும் காலா படத்தில் இணைந்த போது வேறு ஏதோ புதிதாக சொல்வார்கள் என்று எதிர்பார்த்தால் கபாலியில் தொட்ட அதே விஷயத்தைத்தான் மறுபடியும் தொட்டிருக்கிறார் இயக்குனர் பா. ரஞ்சித்.

மலேசியத் தமிழர்களுக்காகப் போராடியவர் கபாலி, மும்பை, தாராவி தமிழர்களுக்காகப் போராடுபவர் காலா.

நிலம் எங்கள் உரிமை என்பது ஏழைகளின் குரலாக இந்தப் படத்தில் ஒலிக்கிறது. ஆம், நிலம் அனைவரின் உரிமைதான், ஆனால், அந்த நிலத்தைத் தூய்மையாக மாற்ற அரசு முயற்சி செய்தால், அதை சில பண முதலைகள், ரவுடிகள் அவர்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த முயற்சி செய்தால், அதை முறியடிக்க இந்த சமூக வலைத்தள யுகத்தில் பல வழிகள் உள்ளன.

புத்தியின் கூர்மையால் எதையும் வீழ்த்தி சாதிக்க முடிகிற இந்த உலகத்தில் காலாவில் போராட்டத்தின் வலிமையைக் கூட சிறப்பாக எடுத்துக் காட்டத் தவறியிருக்கிறார் இயக்குனர் பா. ரஞ்சித். அவருடைய எண்ணங்களை ரஜினிகாந்த் என்ற நட்சத்திரத்தின் மூலம் வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்.

வெள்ளை உடையில் இருப்பவர்கள் கேவலமானவர்கள், கருப்பு உடை அணிந்திருப்பவர்களே சிறந்தவர்கள் என பல குறியீடுகளை வசனங்களிலும், பின்னணிகளிலும் காட்டி தன்னுடைய அரசியல் ஆதங்கத்தைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார் பா.ரஞ்சித்.

படத்தின் நாயகனாக ரஜினிகாந்த் இரு வண்ணங்களில் மட்டுமே படத்தில் உடை அணிந்திருக்கிறார். ஒன்று கருப்பு, மற்றொன்று நீலம். காட்சிகளின் பின்னணியில் அம்பேத்கார், புத்தர் அதிகமாக இடம் பிடித்திருக்கிறார்கள். பெயருக்கு பெரியார் உள்ளிட்ட சில தலைவர்களை போகிற போக்கில் காட்டியிருக்கிறார். படத்தை முடிக்கும் போது கூட கருப்பு வண்ணத்தைத் தெளித்து, பின் அதை சிவப்பு வண்ணமாக்கி, கடைசியில் நீலத்தில் கொண்டு வந்து முடிக்கிறார்.

மும்பை தாராவி குடிசைப் பகுதியை தூய்மை மும்பை திட்டத்தின் கீழ் மாற்ற முடிவெடுக்கிறது அரசு. அதற்காக தன்னுடைய கம்பெனி பயனடைய சில ஆட்களை அமர்த்தி அந்த டெண்டரைப் பிடிக்க முயல்கிறார் முன்னாள் தாதாவான நானா படேகர். ஆனால், தாராவியே ரஜினிகாந்த் சொல்லுக்குக் கட்டுப்பட்டு இருக்கிறது. நானா படேகருக்கு அந்த டெண்டர் கிடைக்காமல் இருக்க பல தடைகளை ஏற்படுத்துகிறார் ரஜினி. என் மக்களை வாழ வைக்க எனக்குத் தெரியும் என ரஜினிகாந்த் முரண்டு பிடிக்கிறார். அவரை வீழ்த்த மீண்டும் பழைய தாதாவாக களமிறங்குகிறார் நானா படேகர். இருவரது மோதலில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

கருப்பு சட்டை, வேட்டி ஆகியவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் காலாவாக தெரிவதை விட கபாலி ஆகத்தான் தெரிகிறார். அதற்காகத்தான் அடிக்கடி ஹுமா குரேஷியை விட்டு கரிகாலன், கரிகாலன் என கூப்பிட வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை.

படத்தில் சம்பத்தைக் கொல்லும் காட்சியின் போது கூடவே கடலில் வினாயகர் சிலைகளைக் கரைப்பது, பின்னர் ஒரு காட்சியில் வில்லன் வீட்டைக் காட்டும் போது கிருஷ்ணர் சிலையைக் காட்டுவது, கிளைமாக்சில் நானா படேகர் வீட்டில் ராமர் பெருமைகளைச் சொல்லி பூஜை நடத்தும் போது ரஜினிகாந்தைக் கொல்ல நானா ஆட்கள் முயல்வது என கடவுள் எதிர்ப்புக் கொள்கைகளை ஒரு குறியீடாக வைத்திருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். படத்தில் நாயகன் ரஜினிகாந்த்தை எதிர்ப்பவர்களை, மும்பையில் உள்ள பிரபலமான இந்து மதக் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களாகக் காட்டுவது போல சித்தரிக்கிறார்கள்.

ரஜினியின் வழக்கமான அதிரடி இந்தப் படத்திலும் உண்டு. ஆரம்பத்தில் அவர் அதிகம் ஆக்ஷனில் இறங்கவில்லையே என யோசிக்கும் அவரது ரசிகர்களுக்கு அந்த மழை சண்டைக் காட்சி ஒன்று போதும். இருப்பினும் ரஜினிக்கென இருக்கும் தனி பன்ச் வசனங்களில் வேங்கையன் மகன் ஒத்தையில நிக்கேன், வாங்கலே என்ற ஒன்றுதான் இருக்கிறது. மற்றபடி மந்திரி சாயாஷி ஷிண்டேவை யார் இவரு, யார் இவரு என்று கேட்டு கிண்டலடிக்கும் காட்சியில் ரஜினிகாந்த் தனியாகத் தெரிகிறார். எவ்வளவு இருந்தாலும் இன்னும் பாட்ஷாவை மிஞ்ச வேறு எந்த இயக்குனராலும் முடியாது.

படத்தின் நாயகி என ஈஸ்வரி ராவை தாராளமாகச் சொல்லலாம். அதிகமாகப் பேசும் குணம் கொண்டவராக இருந்தாலும், ரஜினிகாந்த்துக்கும், அவருக்கும் இருக்கும் அந்த முதிர்ந்த காதல் சுவாரசியமாக இருக்கிறது. முன்னாள் காதலி ஹுமா குரேஷியைப் பார்த்ததும் ரஜினியின் முகம் மாறுவதைக் கண்டு, ஈஸ்வரியின் முகம் மாறுவதும், அதன்பின் சில சந்தர்ப்பங்களில் ஹுமா மீது ரஜினிக்கு இருக்கும் காதலை சரியாகப் புரிந்து கொண்டு பேசுவதும் யதார்த்தம்.

ஹுமா குரேஷி, தாராவியை மாற்ற முயற்சி எடுக்கும் என்ஜிஓ-வாக நடித்திருக்கிறார். அவருக்கும் ரஜினிக்கும் இருக்கும் காதலை பாடலிலேயே சொல்லி முடித்து விடுகிறார்கள். முதலில் ரஜினியைப் புரிந்து கொள்ளாமல் இருப்பவர், நானா படேகரைச் சந்தித்ததும் நன்றாகப் புரிந்து கொள்கிறார்.

இடைவேளைக்குப் பிறகு படத்தில் பல காட்சிகளில் ரஜினியையும் ஓவர் டேக் செய்பவர் நானா படேகர். அதிலும், அவரும், ரஜினியும் சந்தித்துக் கொள்ளும் காட்சியில் பார்வையாலும், உடல் மொழியாலும், தன்னுடைய கர்வத்தை அப்படி காட்டியிருக்கிறார். நானா இல்லையென்றால், ரஜினியின் ஹீரோயிசமும் இந்தப் படத்தில் மிளிர்ந்திருக்காது.

இவர்களுக்குப் பிறகு படத்தில் உள்ள பல நடிகர்கள், நடிகைகளில் வத்திக்குச்சி திலீபன், சமுத்திரக்கனி தனியாகத் தெரிகிறார்கள்.

சந்தோஷ் நாராயணன் இசையில் ரஜினிக்காக ஒரு தீம் மியூசிக்கைப் பிடித்துவிட்டார். ராப் பாடல்கள் படத்தின் தன்மைக்கு அந்நியமாக ஒலிக்கின்றன. தாராவி குடியிருப்புப் பகுதியை செட்டாக உருவாக்கியுள்ள கலை இயக்குனர் ராமலிங்கத்திற்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள். எது செட், எது ஒரிஜனல் என கண்டு பிடிக்க முடியவில்லை.

போராட்டங்களைப் பற்றி ரஜினிகாந்த் பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் கைத்தட்டல் ஒலிக்கிறது.

எல்லாம் முடிந்து படத்தின் கடைசியில் தூய்மை சென்னை என்ற ஒரு விளம்பர போர்டு வைத்து அதில் H.ஜாரா என்ற பெயரை வைத்திருப்பதில் இயக்குனரின் எண்ணம் எளிதில் புரிகிறது.

மும்பை, தாராவி, மக்கள் பிரச்சினை என 2018ல் இந்த காலா நம்மை புதிதாகப் பார்க்க வைக்க முயற்சித்தாலும் 1987ல் வெளிவந்த நாயகன் படத்தின் காட்சிகள் நம் கண்முன் வந்து போகின்றன.

காலா - கபாலி 2

 

காலா தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

காலா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

ரஜினிகாந்த்

1950-வது வருடம் டிசம்பர் 12-ந்தேதி பிறந்தவர் ரஜினி. பெங்களூரில் பஸ் கண்டக்டராக இருந்த ரஜினி நடிப்பு தாகத்துடன் சென்னை வந்து சினிமா வாய்ப்புக்காக அலைந்தபோது, 1975ம் ஆண்டு தான் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினியை வில்லனாக அறிமுகம் செய்தார் கே.பாலசந்தர். அதோடு ஏற்கனவே சிவாஜி என்ற பெயரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருந்ததால் சிவாஜிராவ் என்ற பெயர் அவருக்கு சரிவராது என்று ரஜினிகாந்த் என்றும் மாற்றி வைத்தார் பாலசந்தர்.


அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிகாந்தாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான அவர், முதல் படத்திலேயே ரசிகர்களை ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்ததால், அவரது நடிப்புக்கு வரவேற்பு ஏற்பட்டது. பின்னர் சில படங்களில் வில்லனாக நடித்த ரஜினி, அதையடுத்து ஹீரோவாக அவதரித்தார். சில படங்களிலேயே அவருக்கென்று ஒரு தனி பாணி உருவாகியதால் சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் பெற்றார். அப்படி சினிமாவில் நடிக்க வந்த ரஜினி இன்றுவரை முடிசூடா மன்னராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த மன்னனுக்கு இன்று(டிச., 12ம் தேதி) 69வது பிறந்தநாள். இந்த பிறந்தநாளோடு அவரது லிங்கா படமும் வெளிவர இருக்கிறது. அதனால் இந்தாண்டு ரஜினி ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம் தான்.

மேலும் விமர்சனம் ↓