Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

டேக் ஆப் (மலையாளம்)

டேக் ஆப் (மலையாளம்),Take Off
  • டேக் ஆப் (மலையாளம்)
  • குஞ்சாக்கோ போபன்
  • பஹத் பாசில்
  • பார்வதி
  • இயக்குனர்: மகேஷ் நாராயணன்
27 மார், 2017 - 17:14 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » டேக் ஆப் (மலையாளம்)

நடிகர்கள் ; குஞ்சாக்கோ போபன், பஹத் பாசில், பார்வதி, ஆசிப் அலி, அலான்சியர் லே

இசை ; கோபி சுந்தர் & ஷான் ரகுமான்

ஒளிப்பதிவு ; ஷானு ஜான் வர்கீஸ்

டைரக்சன் ; மகேஷ் நாராயண்

வறுமையின் காரணமாக வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்க செல்லும் கேரள நர்சுகள் அங்கே எதிர்பாராமல் ஏற்படும் உள்நாட்டு கலவரத்தால் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மனதை கரையவைக்கும் விதமாக சொல்லியிருக்கும் படம் தான் இந்த 'டேக் ஆப்'..

கடன் பிரச்சனைகள் அதிகம் உள்ள வீட்டை சேர்ந்த இஸ்லாமிய பெண் பார்வதி. எட்டு வயது சிறுவனுக்கு தாயான நிலையில், வயிற்றில் இரண்டு மாத கரு ஒன்றும் உள்ள நிலையில் முதல் கணவன் ஆசிப் அலியுடன் விவாகரத்து பெற்று, உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் நர்ஸாக வேலைபார்த்து குடும்ப கடனை அடைக்க போராடிக்கொண்டிருக்கிறார்.

இவரது சங்கடங்கள் எல்லாம் அறிந்த, அதே மருத்துவமனையில் சக நர்ஸாக வேலைபார்க்கும் குஞ்சாக்கோ போபன் அவரை திருமணம் செய்துகொள்ள முன்வந்தாலும், அவரிடம் பிடி கொடுக்காமல் கோபமுகமே காட்டுகிறார் பார்வதி. இந்தநிலையில் ஈராக்கிற்கு நர்ஸ் வேலைக்கு செல்லும் வாய்ப்பு பார்வதி, குஞ்சாக்கோ உட்பட அந்த மருத்துவமனையில் உள்ள ஏழு பேருக்கு கிடைக்கிறது. பார்வதியை இரண்டாம் திருமணம் செய்ய உள்ள மணமகனுக்கு அவர் வெளிநாட்டு போவது பிடிக்காததால் அந்த திருமண சம்பந்தமும் முறிகிறது. அதிரடி முடிவெடுக்கும் பார்வதி, குஞ்சாக்கோவை திருமணம் செய்துகொண்டு கணவன் மனைவியாக ஈராக் கிளம்புகிறார்..

ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் போகப்போக ஈராக்கின் சட்டதிட்டங்களும் நடைமுறைகளும் இருவருக்கும் பழகிவிடுகின்றன.. இந்தநிலையில் பார்வதியின் மகனை ஈராக்கில் சம்மர் லீவிற்காக கொண்டுவந்துவிடும் அவரது முதல் கணவர் ஆசிப் அலி, இனி அவன் முழுவதும் பார்வதியுடனேயே இருக்கட்டும் என ஒரு அதிர்ச்சி செய்தியை அளித்துவிட்டு ஊருக்கு கிளம்பி விடுகிறார்.

பார்வதியின் மகன் குஞ்சாக்கோவுடன் ஒட்ட மறுக்கிறான். இந்த நேரத்தில் ஈராக்கில் உள்நாட்டு கலவரம் உருவாகிறது. கலவரத்தில் சிக்கியவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க செல்லும் வழியில் கலவரக்கார்களால் சிறைபிடிக்கப்படுகிறார் குஞ்சாக்கோ. கணவனை மீட்டுத்தருமாறு அங்குள்ள இந்திய தூதரக அதிகாரி பஹத் பாசிலிடம் முறையிடுகிறார் பார்வதி.

எதிர்பாராத விதமாக பார்வதி உட்பட சுமார் 20க்கும் மேற்பட்ட நர்ஸ்களும் கலவர கும்பலால் சிறைபிடிக்கப்படுகின்றனர். இந்தநிலையில் இந்திய மற்றும் ஈராக் அரசாங்கங்கள் கூட உதவி செய்ய கைவிரித்துவிட்ட நிலையிலும் கூட ரிஸ்க் எடுத்து அத்தனை நர்ஸ்களையும் காப்பாற்றி இந்தியா திருப்பி அனுப்ப கடும் முயற்சி எடுக்கிறார் இந்திய தூதரக அதிகாரி பஹத் பாசில். அவரது முயற்சிக்கு வெற்றி கிட்டியதா..? கலவரக்காரர்களிடம் சிக்கிய குஞ்சாக்கோவின் கதி என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ்.

அரபு நாடுகளுக்கு சென்று காதல் படமோ, ஆக்சன் படமோ எடுப்பது என்பது சுலபமான ஒன்றுதான். ஆனால் 2014ல் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து அரபு நாடுகளிலேயே கலவர காட்சிகள் உள்ளிட்டவற்றை படமாக்குவதற்கு ஒரு தனி 'தில்' வேண்டும். 'டேக் ஆப்' படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயண் அதை அசத்தலாக டேக் ஆப் செய்திருக்கிறார்.

குஞ்சாக்கோவிற்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த ஆண் நர்ஸ் பணியும், ஏற்கனவே விவாகரத்தான பெண்ணை விரும்பி திருமணம் செய்வதும் என அல்வா சாப்பிடுவது போன்ற கேரக்டர். அதில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். விவாகரத்தான பெண்கள் மறுமணம் செய்வதற்கான ரோல்மாடலாக இவரின் கேரக்டர் மிகவும் கண்ணியமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. கலவரக்காரர்களிடம் இவர் சிக்கிய பின் வரும் காட்சிகள் திக் திக் ரகம்.

பகட்டான உடை, பவுடர் பூச்சு அலங்காரம் என எந்த அரிதாரமும் பூசாமல் இயல்பான அழகையே குறைத்துக்கொள்ளும் விதமான டல் மேக்கப்புடன், கர்ப்பமான மேடிட்ட வயிற்றுடன், சாதாரண ஒரு இஸ்லாமிய பெண்ணாக பார்வதியின் நடிப்பும் அர்ப்பணிப்பு உணர்வும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். குடும்ப கஷ்டம், குஞ்சாக்கோவின் இரண்டாம் திருமண கோரிக்கை, முதல் மகனின் ஆசாபாசங்கள், கலவரத்துக்குப்பின் ஈராக்கில் அவர் சந்திக்கும் சோதனைகள், இரண்டாம் கணவனை காப்பாற்ற அவர் எடுக்கும் முயற்சிகள் என படம் முழுவதுக்குமான மொத்த கனத்தில் பாதிக்கு மேல் பார்வதியே சுமந்திருக்கிறார்.

ஜென்டில்மேன் என்று சொல்வார்களே அதையும் மீறிய ஒரு வார்த்தை இருந்தால் அதுதான் இந்தப்படத்தில் பஹத் பாசில் ஏற்று நடித்திருக்கும் தூதரக அதிகாரி கேரக்டருக்கு பொருந்தும். கலவரக்காரர்களிடம் சிக்கிய நர்ஸ்களை மீட்டு எப்படியாவது ஊருக்கு பத்திரமாக அனுப்பிவிட வேண்டும் என்கிற துடிப்பை காட்சிக்கு காட்சி தனது முகத்தில் பூசிக்கொண்டிருக்கிறார் மனிதர். கலவரக்கார்களுக்கு தெரியாமல் இவர் பார்வதி அன் கோவை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளும் இறுதியில் யாரிடம் சொன்னால் இதற்கு தீர்வு கிடைக்குமென குறி பார்த்து காய் நகர்த்தி சம்பந்தப்பட்டவர்களின் மனதை கரைப்பதும் என ஒவ்வொரு பிரேமிலும் மெனக்கெட்டிருக்கும் பஹத் பாசிலுக்கு இது தக்க மரியாதை செய்துள்ள படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..

ஷானு ஜான் வர்கீஸ் கலவர காட்சிகளை அப்படியே கண்முன்னே தத்ரூபமாக கொண்டு வந்துள்ளார் என்று சொல்வதை காட்டிலும் அந்த கலவர பூமியிலேயே நம்மை கொண்டுபோய் சிக்க வைத்துவிட்ட உணர்வையே தந்திருக்கிறார்.. கோபி சுந்தரின் பின்னணி இசைக்கு இடைவேளைக்குப்பின் டபுள் டூட்டி.. எதிர்பாராத காட்சிகளில் அதிரவைக்கிறார்.

இங்கிருப்பவர்களுக்கு, வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் வாங்கும் சம்பளமும், அதன்மூலம் இங்கிருக்கும் அவர்களது குடும்பத்தினர் வாங்கி குவித்தும் சொத்துக்களும் அவர்களின் ஆடம்பர வாழ்க்கையும் மட்டுமே கண்ணுக்கு தெரிகின்றன.. ஆனால் அங்கே சென்று வேலைபார்ப்போர் ஒவ்வொருவரின் மனதிலும் ஒவ்வொரு வலி நிறைந்த கதை இருக்கிறது என்பதை பொட்டில் அடித்தாற்போல சொல்லியிருக்கிறார்கள்.

உழைப்புக்கு தகுந்த ஊதியம் இங்கேயே கொடுக்கப்பட்டால் எதற்காக உயிரை பணயம் வைத்து வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்க்கவேண்டும் என சில சமூக நோக்கிலான கேள்விகளை எழுப்பி நல்லதொரு படம் பார்த்த மனநிறைவுடன் நம்மை அனுப்பி வைக்கிறார் இயக்குனர் மகேஷ் நாராயண்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in