3

விமர்சனம்

Advertisement

மைனா விதார்த், ரவீணா ஜோடியுடன் ஜார்ஜ், ஜெயராஜ், ஆறுமுகம், சித்தன் மோகன், ஹலோ கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி... உள்ளிட்டோர் நடிக்க, "ஈராஸ்இன்டர்நேஷனல்" தயாரிப்பில், சுரேஷ் சங்கய்யா எழுத்து, இயக்கத்தில் வந்திருக்கும் படமே "ஒரு கிடாயின் கருணை மனு".

காலாகாலத்தில் கல்யாணம் நடக்காது வாழ்க்கை வெறுத்து போயிருக்கும் விதார்த்துக்கு ஒரு வழியாக முப்பதைந்து வயதில் திருமணம் நடக்கிறது. அவரது பாட்டி, தன் பேரனின் திருமணத்திற்கு வேண்டிக் கொண்டு, ஆட்டுக்கிடா ஒன்றை தங்கள் குலசாமிக்கு நேர்ந்துவிட்டிருக்கிறார். அதை குலசாமிக்கு பலியிட்டு கிடா விருந்து வைப்பதற்காக உறவு மொத்தத்தையும் ஒரு வாடகை லாரி பிடித்து திரட்டிக் கொண்டு, ஒரு வனாந்திர ஏரியா தாண்டி கொஞ்ச தூரத்தில் இருக்கும் குலசாமி கோயிலுக்கு பெரும் கும்பலாக திரட்டி செல்கின்றார். வழியில் அடர்ந்த காட்டில் எதிர்பாராது ஒருத்தன் வந்து அந்த லாரியில் விழுந்து அடிபட்டு சாகிறான்.

அதனால் குலசாமி கோயில் வழிபாடும் கிடா வெட்டும், விருந்தும் தடைபடும் நிலையில், லாரியை ஓட்டியது அதன் டிரைவர் அல்ல... புது மனைவியின் பேச்சைக் கேட்டு டிரைவரை ஓரமாக உட்கார வைத்து விட்டு, ஸ்டியரிங்கைப் பிடித்து ஆர்வ கோளாறில், ஒட்டியது மாப்பிள்ளை விதார்த் எனத் தெரிந்ததும் மாப்பிள்ளையை காப்பாற்ற ஊரே ஒன்று திரண்டு அந்தப் பிணத்தை அக்காட்டிலேயே யாருக்கும் தெரியாமல் புதைத்து விட்டுக் கிளம்ப முடிவெடுக்கிறது. ஆனால், அதிலும் சில தடங்கல்கள் அதன்பின் என்ன நடக்கிறது..? விதார்த், ஓட்டிய லாரி ஏறி தான் அந்த மொபெட் வாலிபர் பலியானாரா? அந்த விவகாரத்தில் இருந்து விதார்த் தப்பித்தாரா? இல்லையா..? என்பது தான் "ஒரு கிடாயின் கருணை மனு" படத்தின் கதையும், களமும்.

ஆர்வ கோளாறில், ஒருத்தன் மீது லாரியை ஏற்றி கொன்று விட்டோமே எனும் குற்ற உணர்ச்சியில் வாழ்நாள் முழுக்க தவிக்கும் பாத்திரத்தில் விதார்த், அமைதியான நடிப்பில், அசத்தலான வித்தியாசம் காட்டியிருக்கிறார். விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார் சபாஷ்!

புதுமுக கதாநாயகி ரவீணா கிராமிய வாசம் மணம் மாறாத புதுமணப் பெண்ணாக சண்டை மூளப் போகிறது என்றதும், தன் கணவரை இழுத்தபடி ஓடும் பாத்திரத்தில் விதார்த்தின் மனம் மட்டுமல்லாது பெருவாரியான ரசிகர்களின் மனமும் கவர்ந்திழுக்கிறார். .

அந்த கும்பலில் அரும்பாடு படும் ஹலோ கந்தசாமி, லாரி டிரைவர் வீரசமர் எதற்கெடுத்தாலும் எக்குத்தப்பாய் பேசும் கொண்டி எனும் ஆறுமுகம், ரவீணாவின் தந்தை ஜெயராஜ், எப்பொழுதும் அலுத்துக் கொள்ளும் சமையல் கலைஞர் சித்தன் மோகன், லாரி உரிமையாளர் செல்வமுருகன், வைரவன் - கிருஷ்ணமூர்த்தி ஆகிய கிராமத்து ஆசாமிகள், பேசுகிற வெள்ளாந்தியான, விவகாரமான வசனங்கள் தியேட்டரில் ரசிகர்களை சீட்டோடு கட்டிப்போடுகிறது! சபாஷ்!

சமயங்களில் கிராமத்து பாஷையில் டபுள், டிரிபிள் மீனிங்கில் இவர்களைய மிஞ்சுகின்றனர் படத்தில் வரும் சில கிராமத்து தாய்குலங்கள். இவர்கள் எல்லோரையும் காட்டிலும் ஒரு வக்கீல், எப்படியெல்லாம் தன் பணத்தாசையால் ஒரு எதிர்பாராத பிரச்சனையை எவ்வளவு பெரிதாக்குகிறார்? என்பதை அவ்வளவு யதார்த்தமாக வெளிப்படுத்துகிறார் நடிகர் ஜார்ஜ். வாவ்!

ஒரு சாதாரண கதைக்கு வி.குருநாதன், சுரேஷ் சங்கைய்யாவின் சுவாரஸ்யமான வசனங்கள். பெரும் பலம்.

ஆனால் படம் ஒரு காட்டை விட்டு பெரிதாக வெளியே நகரவேயில்லை. இந்த சிக்கலான சுச்சுவேஷனிலும், நம்மை படத்தை விட்டு நகர விடாத திரைக்கதைக்கு, முழு பலமாக இருக்கிறது இப்படத்தின் பலே படத்தொகுப்பு.

பாடலாசிரியர்கள் வேல்முருகன், குருநாதனின் "தனியாக கிடந்தேன் இதுவரை நானாக...." உள்ளிட்ட பாடல் வரிகளும், இசைஞர் ரகுராமின் பின்னணி இசையும், கதையோடு ரசிகனை ஒன்றவைக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவில் கதைக்கேற்ற இப்படக் காட்சிகளில் செயற்கை தன்மை துளியும் இல்லாது, கிராமிய மணம் கமழுகிறது. அதிலும், அந்த ஆட்டின் கண் வழியே பார்த்தால் காட்சிகள் எப்படியிருக்கும்? என்ற அந்த ஆரம்ப காட்சியே, ஒளிப்பதிவாளரின் பெரும் திறமைக்கு ஒரு பருக்கைச் சான்று !

இயக்குனர் சுரேஷ் சங்கய்யாவின் எழுத்து, இயக்கத்தில், "ஒரு கிடாவின் கண் கொண்டு அந்த கிராமத்து மானிடர்களை பார்க்கும் முதல் காட்சி தொடங்கி, தன், தவறால் ஒரு வாலிபனின் உயிர் போனதாக கருதும் விதார்த்., அந்த வாலிபனின் தாய்க்கு மகனாகி விடும் கடைசி காட்சி வரை...." இப்படத்தின் ஒவ்வொரு பாத்திரத்தின் வாயிலாகவும், அனைத்து காட்சிகளின் வாயிலாகவும் , ஏகப்பட்ட செய்திகளை செல்லியிருக்கும் இயக்குனர் சுரேஷ் சங்கய்யா, ஒரு திரைப்படம் இப்படிதான் இருக்க வேண்டும் என்கிற இலக்கணத்தையெல்லாம் அடித்து நொறுக்கி அசத்தலாக, அம்சமாக சாதித்திருக்கிறார் என்றால் மிகையல்ல!

ஆக மொத்தத்தில், "மாடுகளை வதைக்காதீர்... பசுக்களை கொல்லாதீர்.... என்னும் மத்திய அரசின் சட்ட திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப, மனித உயிர்களைப் பற்றி மட்டுமின்றி, மற்ற உயிரை பற்றியும் பேசியிருக்கின்ற ஒரு கிடாயின் கருணை மனு - நிச்சயம், நல்ல சினிமா விரும்பும் ரசிகர்களின் மனம் கவருமுன்னு... நம்பலாம்!"

 

ஒரு கிடாயின் கருணை மனு தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ஒரு கிடாயின் கருணை மனு

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓