Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

கனவு வாரியம்

கனவு வாரியம்,kanavuvariyam
  • கனவு வாரியம்
  • நடிகர்: அருண் சிதம்பரம்
புதியவர் அருண் சிதம்பரத்தின் எழுத்து, இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகியுள்ள படம் இது.
28 பிப், 2017 - 12:16 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கனவு வாரியம்

இரண்டு சர்வதேச "ரெமி" விருதுகளை வென்ற முதல் இந்திய திரைப்படம் எனும் பெருமையுடன் கூடிய எண்ணற்ற விருது பெருமைகளுடன் புதியவர் அருண் சிதம்பரத்தின் எழுத்து, இயக்கம் மற்றும் நடிப்பில் திரைக்கு வந்திருக்கும் சாதனை திரைப்படம் தான் "கனவு வாரியம்".

டி.சி.கே.பி சினிமாஸ் பேனரில் ஆணழகன் டாக்டர் அ.சிதம்பரம் & கார்த்திக் சிதம்பரம் தயாரிக்க வார்னர் பிரோஸ் பிக்சர்ஸ் வெளியீட்டில் வந்திக்கும் இப்படத்தின் கதைப்படி, ஒரு நாளைக்கு 18 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதை கண்டு கோபப்படும் கிராமத்து இளைஞர் அருண் சிதம்பரம், தனது ஊரிலேயே மின்சாரம் தயாரிக்க முயற்சிக்கிறார். அதில், அவரது உற்றார் உறவினர் மற்றும் ஊர்காரர்களின் கிறுக்கன் எனும் நக்கல், நையாண்டிகளையும் தாண்டி வெற்றி பெற்றாரா..? இல்லையா..? எனும் கதையுடன் அறிமுக நாயகி ஜியா சங்கர்வுடனான அருணின் காதல் காதல், உயிர் நண்பன் பிளாக் பாண்டியின் கலகல காமெடி, பெற்ற தந்தை இளவரசுவின் பிள்ளை மீதான நம்பிக்கையுடன் கூடிய பாசம், ஜியாவின் சாப்ட்வேர் அண்ணன் யோக் ஜேப்பியின் இயற்கை விவசாயம், கிராமத்தினரிடையே வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த படாத பாடுபடும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தத்தின் விடா முயற்சி உள்ளிட்ட இன்னும் பல சுவாரஸ்யங்களை கலந்து கட்டி அழகான கிராமிய சூழலில் அம்சமாக காட்சிபடுத்தப்படுத்தப்பட்டிருக்கிறது "கனவு வாரியம்" படத்தின் கதையும், களமும்!

புதுமுக நாயகராக இப்பட இயக்குனர் அருண் சிதம்பரம், குழந்தை பருவத்தில் இருந்தே எதைப் பார்த்தாலும் ஏன்?, எதற்கு?, எப்படி? எனக் கேட்டு எதிராளியை திணறடிக்கும் சாதுர்ய சாலியாக ஆராய்ச்சி மனோபாவமுடைய பாத்திரத்தில் பக்காவாக பொருந்தி நடித்திருக்கிறார். சிறு வயதில், பள்ளிப் பாடம் படிக்க பிடிக்காது ஆராய்ச்சியாளராக அவர் அவதாரம் எடுத்து, புதுப்புது விஞ்ஞான வினோதங்களை அவ்வப்போது ரசிகனுக்கு காட்டி இறுதியில் நம் கிராமத்திற்கு தேவையான மின்சாரத்தை நாமே தயாரிக்கலாம்... என அவர் களம் இறங்குவது இயல்பாகவும் நம்பும்படியாகவும் படமாக்கப்பட்டிருப்பது இப்படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.

கதாநாயகி ஜியா சங்கர், நார்த் இண்டியன் லுக்கில் இருந்தாலும் ஹீரோவுக்கும், அவரது ஆராய்ச்சிக்கும் உதவும் நம்மூர் கதாநாயகியாக பிய்த்து பெடலெடுத்திருக்கிறார்.

பிற படங்களில் கடித்தது மாதிரி கடிக்காமல் சற்று இடைவெளிக்குப் பின் இப்படத்தில் பிளாக் பாண்டி சரியான காமெடிகள் செய்திருப்பது பெரும் ஆறுதல். குறிப்பாக, "பொண்ணுங்களுக்கு நாம பிடித்தவனா இருக்கணும்னா, ஆம்பளையா இருக்கணும் பொம்பளையா வாழணும்.." பிளாக் பாண்டியின் தத்துவம், "ஏம்மா என் கனவகலைச்ச..." என ஹீரோ தன் அம்மாவைப் பார்த்து கேட்கும் போது, பிளாக் பாண்டி "நியாயப்படி கருவுலயே கலைச்சிருக்கணும்..." என டைமிங் ஜோக் அடிப்பது உள்ளிட்டவை சுவாரஸ்யம்.

கதாநாயகியின் அண்ணனாகவும் இயற்கை விவசாய ஆர்வலராகவும் 2 லட்சம் சம்பளத்தை விட்டு வந்து வயலும் வாழ்வும் வாழ்க்கை நடத்தும் யோக் ஜேப்பியின் பாத்திரமும், அவரது இயற்கை விவசாயம் குறித்த போதனைகளும் அவ்வளவாக விவசாயம் செய்யத் தெரியாத இத்தலைமுறையினரைக் கூட விவசாயத்திற்கு இழுக்கும் வசீகரம்.

"முயல் - ஆமை கதையில், ஆமையிடம் முயல் தோற்றதுக்கு காரணம் "முயலாமை" என புது அர்த்தம் தரும் அப்பாவாக மகனின் மீது அதீத பாசமும் பெரிய நம்பிக்கையும் கொண்ட கிராமத்து தகப்பனாக இளவரசு, "அம்மா, தோசை கருகி இருக்கு..." எனும் சிறுவயது கதாநாயகனிடம் "அப்ப, அப்பா தட்டுல வச்சிடு...." எனும் வெள்ளாந்தி தாயாக வரும் நடிகை மீனாள் சகோதரி, மற்றும்., கிராமத்தினரிடம் வாசிக்கும் ஆர்வம் வளர்க்க, புத்தகத்துடன் இனிப்பு - படிப்பு சேர்த்து வைக்கும் நூலகராக வரும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், யானை பாகர் மயில்சாமி பழைய இரும்பு சாமான்கடை முதலாளியாக வரும் அம்பானி சங்கர், வங்கி அதிகாரியாக வரும் டி.பி.கஜேந்திரன், அவரை தவித்து தண்ணீர் குடிக்க விடும் பிளாக் பாண்டியின் அப்பா கிரேன் மனோகர் உள்ளிட்ட அனைவரும் வெகு சில காட்சிகளிலேயே வந்தாலும் வெகு ஜோராக நடித்திருக்கின்றன்.

கெளஜினின் படத்தொகுப்பில் பின்பாதியைக் காட்டிலும் முன்பாதி ஹாஸ்யம். எஸ்.செல்வகுமாரின் ஒளிப்பதிவில் அழகிய கிராமிய பின்னணி அசத்தலாக படம் பிடிக்கப்பட்டுள்ளது ஆறுதல்.

ஷியாம் பெஞ்சமினின் இசையில் "நீ பாதி... நான் பாதி என்று யார் சொன்னது..." உள்ளிட்ட பாடல்கள் தாளம் போட வைக்கும் ராகம்.

அருண் சிதம்பரத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் மற்றும் இயக்கத்தில் அவரது நடிப்பு மாதிரியே வசனங்களும் பெரிதாக வசீகரிப்பது படத்திற்கு பெரிய பலம்.

ஒரு சில குறைகள் ஆங்காங்கே இருந்தாலும், தெரிந்தாலும் "அந்தந்த ஊர் தேவைகளை அங்கேயே கிடைக்கும் வசதிகளை வைத்து பெற்றுக் கொள்ள முயல வேண்டும்.... எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தையே எதிர்பார்த்தல் கூடாது" எனும் தத்துவங்களை போதித்திருப்பதற்காகவும், சாமான்யன் மின்சாரம் தயாரிக்கும் ஆராய்ச்சி கதையம்சமுடைய படத்தை டாக்குமெண்டரி ஸ்டைலில் எடுத்து ரசிகனை கொள்ளாது காதல், கமெடி என கமர்ஷியலாக படம் பிடித்து மனதை கொள்ளையடித்திருப்பதில் ஜெயித்து விடுகிறது "கனவு வாரியம்" படம் மொத்தமும்.

ஆகவே "கனவு வாரியம் - நிச்சயம், பெருவாரியான ரசிகர்களின் நெஞ்சை களவாட போவது நிஜம்!".



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in