4

விமர்சனம்

Advertisement

நடிகர்கள் - நயன்தாரா, ராம்ஸ், சுனுலட்சுமி, காக்கா முட்டை ரமேஷ், பேபி தன்ஷிகா, வேலராமமூர்த்தி
இயக்கம் - கோபி நயினார்
இசை - ஜிப்ரான்
தயாரிப்பு - கேஜேஆர் ஸ்டுடியோஸ்

கோடை காலத்திலும் தண்ணீர் பஞ்சமே வராத பூமி, எப்போதுமே பச்சைப் பசேல் எனக் காணப்படும் வயல் வெளிகள், தென்னந் தோப்புகள் என கடவுளின் சொந்த பூமி என வர்ணிக்கப்படும் கேரளாவைச் சேர்ந்த ஒரு மலையாள நடிகையான நயன்தாரா இப்படி ஒரு படத்தைத் தேர்வு செய்து நடித்திருக்கிறார் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

தமிழ்நாட்டில் உள்ள தண்ணீர் பஞ்சம், வறட்சி, மக்களின் மனநிலை இதைப் பற்றியெல்லாம் கொஞ்சமாவது தெரிந்து வைத்திருந்தால் மட்டுமே அறம் போன்ற கதைகளைத் தேர்வு செய்து நடிக்க முடியும்.

அப்பாவைக் கொன்றவர்களைப் பழி வாங்குவது, நாட்டை அழிக்க நினைப்பவர்களைக் கொல்வது, காதலியைக் கடத்தியவர்களைப் பழி வாங்குவது என மசாலாத்தனமான, இந்த மண்ணைப் பற்றி சிறிதும் எடுத்துரைக்காத கமர்ஷியல் படங்களில் மட்டும் நடித்து 100 கோடி வசூல் ஆகிவிட்டது என ரசிகர்களை டுவிட்டரில் கூவச் சொல்லும் சில ஹீரோக்கள் அறம் போன்ற படங்களில் எப்போது நடிப்பார்கள்.

ஒரு பக்கம் ராக்கெட் ஏவுவதற்காக 800 கோடி ரூபாய் செலவு செய்யும் அரசாங்கம், ஆழ்துளை குழாய் துளைக்குள் விழுந்த குழந்தைகளைக் காப்பாற்ற சில லட்சங்களைக் கூடச் செலவு செய்து இதுவரை எந்த ஒரு கருவியையும் கண்டுபிடிக்கவில்லை என்ற உண்மையை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார் இயக்குனர் கோபி நயினார்.

இதற்கு முன் சில பிரபல இயக்குனர்கள் இயக்கிய படங்களின் கதை கோபி நயினாரிடமிருந்து பெறப்பட்டு அவருக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்தன. அவை சர்ச்சைகள் அல்ல அந்தக் கதைகளுக்கு கோபி நயினார் கூட சொந்தமாக இருக்கலாம் என்பதை அறம் அழுத்தமாக நிரூபித்திருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் ஒரு கவுன்சிலர் நிலத்தில் போடப்பட்ட ஆழ்துளைக் குழாய் குழி, தண்ணீர் கிடைக்காத காரணத்தால் மூடப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. அந்த ஆழமான குழியில் கூலி வேலை செய்யும் ராம்ஸ், சுனுலட்சுமி தம்பதியினரின் பெண் குழந்தை விழுந்து விடுகிறது. அந்தக் குழந்தையைக் காப்பாற்ற மாவட்ட கலெக்டரான நயன்தாரா மீட்புக் குழு ஒன்றை அமைத்து தீவிர நடவடிக்கையில் இறங்குகிறார். அந்தக் குழந்தையைக் காப்பாற்றுவதில் கூட அரசியல் தலையீடு, மற்றும் பல சிக்கல்கள் வருகிறது. அவற்றையும் மீறி அந்தப் பெண் குழந்தையை நயன்தாரா காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

நயன்தாரா படம் என்றதுமே வேறு எந்த ஒரு கனவிலும் ரசிகர்கள் தியேட்டருக்குச் செல்ல வேண்டாம். படத்தில் அவர் இரண்டு காட்டன் புடவைகளைத் தவிர வேறு எந்த ஆடையையும் பயன்படுத்தவில்லை. நயன்தாரா இதற்கு முன் நடித்த நாயகிக்கு முக்கியத்துவம் தந்த படங்களிலிருந்து இந்தப் படம் மாறுபட்ட படம். ஒரு நேர்மையான கலெக்டர் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நயன்தாராவின் மதிவதனி கதாபாத்திரம் சிறந்த உதாரணம்.

பேசும் வசனங்களிலிருந்து உடல் மொழி என ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து செய்திருக்கிறார் நயன்தாரா. அவர் இதுவரை நடித்த படங்கள், கதாபாத்திரங்களில் இதுதான் சிறந்தது என்று சொல்ல வைக்கிறார். நயன்தாராவிற்கு டப்பிங் பேசியுள்ள தீபா வெங்கட்டின் குரல் அதிகாரத்துடன் ஒலிக்க வேண்டிய இடத்தில் அதிகாரமாகவும், அன்பாக ஒலிக்க வேண்டிய இடத்தில் அன்பாகவும் ஒலிக்கிறது. நயன்தாராவே சொந்தக் குரலில் பேசியிருந்தால் கூட இந்த அளவிற்குப் பொருத்தமாக இருந்திருக்குமா என்பது தெரியாது. ஆனால், அவரே பேசியிருந்தால் இந்த ஆண்டிற்கான தேசிய விருதை போட்டியின்றி பெற்றிருக்கலாம்.

பரட்டைத் தலையுடன், நயவஞ்சகமான பார்வையுடன், எண்ணெய் வடியும் முகத்துடன், எப்போதும் வாயில் பீடியுடன் பல படங்களில் அடியாளாகவே பார்த்துப் பழக்கப்பட்டவர் ராம்ஸ். இந்தப் படத்தில் பொறுப்பான, பாசமான அப்பாவாக கண்ணீர் வரவழைக்கும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவரது மனைவியாக “செங்காத்து பூமியிலே, டூரிங் டாக்கீஸ்” படங்களில் நடித்த சுனுலட்சுமி. கிராமத்து அம்மாவாக அவ்வளவு பொருத்தமாக நடித்திருக்கிறார்.

எம்எல்ஏவாக இரண்டே காட்சிகளில் வந்தாலும் வேலராமமூர்த்தி, ஒரு எம்எல்ஏவின் பவர் பாலிடிக்ஸ் என்ன என்பதைக் காட்டுகிறார். குடித்திருந்தாலும் நாட்டு அரசியலை வசனங்களால் வெளிப்படுத்துகிறார் பழனி பட்டாளம். அரசாங்கம் என்ன சொல்கிறதோ அதை மட்டுமே கேட்கும் விசாரணை அதிகாரியாக கிட்டி. குழிக்குள் விழுந்து குழந்தையாக தன்ஷிகா. இந்த சிறு வயதில் எப்படி புரிந்து கொண்டு நடித்திருப்பார் என்பது ஆச்சரியம்தான். காக்கா முட்டை படத்தின் சின்ன காக்கா முட்டை ரமேஷ்தான் இந்தப் படத்தில் ஹீரோயிசத்தை வெளிப்படுத்தும் கதாபாத்திரம்.

சமூகப் பிரச்சனையுள்ள ஒரு படத்தில் சாட்டையடி வசனங்களைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. ஒரு அடிமைகிட்ட இன்னொரு அடிமை வேலை பார்க்க முடியாது, நிலாவுக்கு போய்விட்டு வந்தவரை விட ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தவரை காப்பாற்றப் போகிறவர் முக்கியமானவர், 800 கோடி ரூபாய் செலவு செய்து ராக்கெட் விடற நாட்டுல, ஆழ்துளைக் குழாயில விழுந்தவங்களைக் காப்பாற்ற ஒரு கருவியும் இல்லை,” என்பது போன்ற வசனங்கள் தியேட்டர்களில் கைதட்டல்களைப் பெறுகின்றன.

ஜிப்ரான் இசையில் தோரணம் ஆயிரம் பாடலில் வைக்கம் விஜயலட்சுமியின் குரல் உருக்கி எடுக்கிறது. பின்னணி இசையில் அறத்திற்கு இன்னும் அழுத்தம் கொடுத்திருக்கிறார் ஜிப்ரான். ஆழ்துளைக் குழாய் துளைக்குள் ஒவ்வொரு முறை கேமரா நுழையும் போதும், நாமே உள்ளே இறங்குவது போல ஒரு உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ். கதைக்களமாக இருக்கும் அந்த பொட்டல் வெளியும் படத்திற்கக் கூடுதல் பலம்.

ஒரு பரபரப்பான வேகத்தில் படம் போய்க் கொண்டிருக்கும் போது ஒரே ஒரு டிவியில் மட்டும் இது பற்றிய விவாதத்தை படத்தின் குறுக்கே காட்டுவது படத்திற்கு வேகத் தடை. டிவிக்களில் வரும் செய்திகள், ரிப்போர்ட்டிங் ஆகியவற்றில் டெக்னிக்கலாக குறைகள், பட்ஜெட் பிரச்சனையா எனத் தெரியவில்லை. ஒரு நல்ல படத்தில் இது போன்ற குறைகளைத் தவிர்த்திருக்க வேண்டும்.

தமிழ் சினிமாவில் சாமானிய மக்களின் பிரச்சனைகளை வெளிப்படுத்தும் படங்களைக் கொடுக்கும் இயக்குனர்கள் குறைந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் அறம் மாதிரியான படங்களைக் கொடுக்கும் கோபி நயினார் போன்ற இயக்குனர்களும் புதிதாக வருகிறார்கள் என்பது தமிழ் சினிமாவுக்கு ஒரு நம்பிக்கையைத் தரும்.

அறம் - நல்ல படங்களுக்குக் கரம் கொடுப்போம்!

 

அறம் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

அறம்

  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓