4.5

விமர்சனம்

Advertisement

2 மணி நேரம் 48 நிமிட பெரும் படமாக, பிரமாண்டமாக, திரையரங்கில் ஆரவாரமாக "பாகுபலி" படத்தின் தொடர்ச்சியாக மிரட்டலாக ஆரம்பமாகிறது "பாகுபலி-2"

பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், சுப்பராஜு, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ரோகிணி... உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்க ராஜமெளலியின் இயக்கத்தில், படுபிரமாண்டமாக வந்திருக்கும் "பாகுபலி - 2", படத்தின் கதைப்படி, மகிழ்மதி தேசத்தின் ராஜமாதா ரம்யா கிருஷ்ணன் பெற்ற மகன் பல்வாள் தேவன் - ராணாவுக்கும், வளர்ப்பு மகன் அமரேந்திர பாகுபலி - பிரபாஸுக்கும் இடையில் நடக்கும் அரியணை போட்டியில், அப்பா அமரேந்திர பாகுபலி - பிரபாஸ், தனது அண்ணன் பல்வாள் தேவன் - ராணா டகுபதியின் நயவஞ்சகத்தால் கொல்லப்பட, அவரிடம் இழந்த அரியணையையும், ராஜ்ஜியத்தையும், மகன் மஹேந்திர பாகுபலி, மீட்டெடுத்து தன் தாய் குந்தளதேசத்து யுவராணி தேவசேனா அனுஷ்காவை மகிழ்மதி தேசத்தின், ராஜ மாதாவாக்கி, தான் மகிழ்மதி தேசத்தின் ராஜவாக மகுடம் சூடிடுவது தான் பாகுபலி - 2 படத்தின் கரு, கதை, களம், ரசிகனை வசியப்படுத்தும் மிகமிக பிரமாண்ட காட்சிப்படுத்தல் எல்லாம். இதில், மகிழ்மதி தேசத்தின் பரம்பரை அடிமை கட்டப்பா - சத்யராஜின் பங்கு என்ன?, ராஜகுரு பிங்கலநாதன் - நாசரின் பங்கு என்னென்ன..?, மகன் பிரபாஸுக்கு அவந்திகா - தமன்னாவும், அப்பா பிரபாஸுக்கு தேவசேனா - அனுஷ்காவும் எப்படி, எப்படி? எல்லாம் உதவுகிறார்கள்..? என்பதும் இக்கதையில் இடம்பெறும் மேலும் சுவாரஸ்யமான காட்சிப்படுத்தல்கள் எனலாம்.

அப்பா அமரேந்திர பாகுபலியாகவும், மகன் மஹேந்திர பாகுபலியாகவும் பிரபாஸ், படம் முழுக்க கம்பீரமான ராஜ தோரணையில் பிய்த்து பெடலெடுத்திருக்கிறார். "காலம் ஒவ்வொரு கோழைக்கும் வீரனாக ஒரு கணத்தை தரும். அந்த கணம் இதுதான்..." என மாறவர்மனுக்கு வீரம் போதிக்கும் இடத்திலாகட்டும், "பெண்களின் மீது கை வைத்த காரணத்தால் வெட்ட வேண்டியது, அவன் விரல்களை அல்ல... தலையை" என சேதுபதியின் தலையை அரசவையில், பாகுபலி வீரதீரத்துடன் கொய்தெறியும் காட்சியிலாகட்டும், அனுஷ்கா மீது மையல் கொண்டு குந்தளதேசத்தில் கோழை மாதிரி வீரத்தை மறைத்துக் கொண்டு திரிவதிலாகட்டும், போர் காட்சிகளில் உடம்பிலும், முகத்திலும் மனதில் உள்ள வீரத்தை கொண்டு வந்து நிறுத்தி போர் புரிவதிலாகட்டும், ராஜ மாதா ரம்யா மீது பாசம் காட்டுவதிலாகட்டும், அமரேந்திர பாகுபலியாக, நய வஞ்சகத்திற்கு பலியாகிப் போய்., மகன் மஹேந்திர பாகுபலியாக திரும்பி வரும் பிரபாஸ், மக்களைப் பார்த்து "நம் கைதான் நமது ஆயுதம் நாம் ஒவ்வொருவரும் ஒரு பெரும் சேனை..." என வீர உரை ஆற்றும் இடத்திலாகட்டும் சகலத்திலும் சக்கை போடு போட்டிருக்கிறார் பிரபாஸ். சபாஷ்!

பல்வாள் தேவனாக நயவஞ்சகமாக முடிசூட்டிக் கொள்ளும் அரசனாக ராணா டகுபதியும், அப்பா - மகன் இரண்டு பிரபாஸுக்கும் ஈடு கொடுத்து வில்லானிக் ஹீரோவாக மிரட்டியிருக்கிறார் மிரட்டி. அதிலும், "தேவை இன்றி ஐயம் கொண்டேன் கட்டப்பா... நீ என் நாய்தான்" என அப்பா பாகுபலியை கொல்ல கட்டப்பாவை அனுப்பி விட்டு அவர் பின்னாலேயே வந்து, உளவு பார்ப்பதில் தொடங்கி, "அவள் ,ராஜ மாதாவா ?... பைத்தியமாதா, நீ, என்னை கொல்ல முயன்றதாக நம்ப வைத்து அவள் கைகளால் உன் மரண சாசனத்தை எழுத வைத்தேனடா..." என்பது வரை, பல்வாள் தேவன் ராணா டகுபதி பண்ணும் அலப்பறைகள் அசத்தல்.

காட்டிக் கொடுத்த எட்டப்பனுக்கு சற்றும் சளைத்தவர்... அல்லாத கட்டப்பாவாக, மகிழ்மதி தேசத்தின் ராஜவிசுவாச அடிமையாக, அப்பா - பாகுபலி - பிரபாஸைக் கொன்ற சத்யராஜ், குந்தளதேசத்தில் பிரபாஸின் காதலுக்கு உதவுகிறேன் பேர்வழி... என ஓவர் ஆக்டிங்கில் சற்றே போரடித்தாலும், அதன் பின் வரும் வீரதீர காட்சிகளில் விஸ்வரூபம் எடுத்து மிரள வைத்திருக்கிறார். பேஷ் பேஷ்!

ராஜகுரு பிங்கலநாதனக, ராணா டகுபதியை, தொடர்ந்து நயவஞ்சக வழியில் இட்டுச் செல்லும் சகுனியாக ஒரு கை வீழ்ந்த நாசரின் கெட்-அப்பும், செட் அப்பும்.... படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது என்றால் மிகையல்ல.

மாற வர்மனாக அனுஷ்காவின் மாமனாக வரும் சுப்புராஜும், அவர் பங்கிற்கு கோழையாகவும், வீரனாகவும் அம்சமாக நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக குந்தளதேசத்து வீர யுவராணி தேவசேனாவாக அனுஷ்கா, கச்சிதம். இளமை, முதுமை.... என இரு வேறு கெட்-அப்புகளில் வரும் அனுஷ்கா, "மதியற்றவர்கள் வாழும் இந்த தேசத்திற்கு மகிழ்மதி என்று பெயர் வேறு..." என பொங்கும் இடம் உள்பட, தான், இடம் பெறும் எல்லா இடத்திலும், வீரதீர நாயகியாக புகுந்து விளையாடி இருக்கிறார்.

மகன் பிரபாஸுக்கு ஜோடியாக அவந்திகாவாக கிட்டத்தட்ட க்ளைமாக்ஸில் வரும் தமன்னாவுக்கு இதில் பாகுபலி முதல் பாகத்தில் இருந்த அளவிற்குக் கூட வேண்டாம், அவர் வரும் இரண்டொரு சீன்களில் கூட பெரிதாக வாய்ப்பு வழங்கப்படாதது தமன்னாவுக்கு மட்டுமல்ல, ரசிகனுக்கும் வருத்தம் தரும் ஏமாற்றம்.

"பாகுபலியின் பெருமையை புரிந்து கொண்ட நீ அந்த வானளவு உயர்ந்து விட்டாய்... நான் மடிந்த அவன் பாதங்களை கழுவி, என் பாவத்தை துடைத்துக் கொள்கிறேன்..." என தன் தவறால் இழந்த மகனை நினைத்து புலம்புவதிலும், சரி, ராஜ மாதாவாக "இதுவே என் கட்டளை அதுவே சாசனம்" என அரசவையில் கம்பீரம் காட்டுவதிலும் சரி ரம்யா கிருஷ்ணன், "படையப்பா " நீலாம்பரியையும் பக்காவாக ஒவர்டேக் செய்திருக்கிறார் பலே , பலே .

இவர்களை மாதிரியே படத்தில் வரும் ஆயிரமாயிரம் போர் வீரர்கள் உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அவ்வளவு ஏன்? படத்தின் போர் காட்சிகளில் வரும் நூற்றுக்கணக்கான குதிரைகள், யானைகள், பிரமாண்ட அரண்மணை செட்டுகள்... உள்ளிட்ட ஒவ்வொன்றும் பக்காவாக பளிச்சிட்டுள்ளன. வாவ்!

ரமா ராஜமெளலி - பிரஷாந்தி டிரிப்பிமணியின் ராஜா காலத்து ரசனையான உடை அலங்காரம் படத்திற்கு பெரும் பலம் .

வி.விஜயேந்திர பிரசாத்தின் கதையும், கார்கியின் வசனம் மற்றும் பாடல் வரிகளும் "நச் - டச்" என்பது படத்திற்கு கூடுதல் ப்ளஸ்.

கோத்தகிரி வெங்கடேஷ்ராவின் படத்தொகுப்பில் "பாகுபலி-2" இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிட படமென்றாலும் கொஞ்சம் கூட, போரடிக்காதது பெரும் ஆறுதல்.

சிஜி., ஸ்பெஷல் எபெக்ட்ஸ் உபயத்தில் கே.கே செந்தில்குமாரின் ஒளிப்பதிவு பெரும் பிரமாண்ட, பிரமாத ஒவியப்பதிவு மட்டுமல்ல.... காவியப் பதிவும் கூட.

மரகதமணியின் இசையில், "ஹேசா ருத்ரசா...", "பலே பலே பாகு பலி....", உள்ளிட்ட பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு மேலும் பிரமாண்டம் சேர்த்திருக்கிறது.

ராஜமெளலியின் திரைக்கதை, இயக்கத்தில் மகிழ்மதி ராஜ்ஜியத்தின் ஆரம்ப கோயில் திருவிழா காட்சியின் பிரமாண்ட செட்டுகள், பசுமை நிறைந்த குந்தளதேசத்து காடு மலைகளின் இடையேயான யுவராணி தேவசேனையார் அனுஷ்காவின் பிரமாண்ட அரண்மனையின் அபார அழகு, அனுஷ்காவுடன் பிரபாஸ், சாரட் குதிரை வண்டிகளில் போகும் காட்டுப்பன்றி வேட்டை பிரமாண்டம், அந்த அரண்மனையில் நடக்கும் கண்ணன் பூஜை பாடல் பிரமாண்டம், தளபதி பல்வாள் தேவன் - ராணா, ரம்யாவிடம் காண்பிக்கும் தேவசேனையின் பிரமாண்ட ஒவியம் மற்றும் குந்தளதேசத்து இரவு நேரத்து எதிர்பாரா போரில், மாட்டுக் கொம்பிலெல்லாம் தீ வைத்து எதிரிகளை விரட்டி அடித்துக் குந்தளதேசத்தை காக்க போராடும் பிரபாஸின் அனுஷ்காவுடன் இணைந்த அந்த பிரமாண்ட போர் காட்சியின் நேர்த்தி, அனுஷ்காவை மகிழ்மதி தேசத்திற்கு பிரபாஸ் அழைத்து செல்லும் அந்த பறக்கும் அன்ன பறவை பாய்மர படகு செட்டின் பிரமாண்டம்..... எல்லாம் சிஜி, கிராபிக்ஸ் ஒர்க்குகள்தான்... என்றாலும், அது மாதிரி உணர்வு துளியும் ஏற்படாது அவற்றின் பிரமாண்டமும், பேரழகும் படம் பார்க்கும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கின்றன.

அதே மாதிரி, மகிழ்மதி தேசத்தின் அரசனாக ராணா பதவி ஏற்க வரும் பிரமாண்ட அரண்மனை செட்டின் அழகிய நேர்த்தியும், க்ளைமாக்ஸில் பனை மரங்களின் உபயத்தில் கோட்டை மதில் சுவர் தாண்டி பிரபாஸின், வீரர்கள் குதித்து நடத்தும் இறுதிபோர் காட்சியில், நூற்றுக்கணக்கான குதிரைகள், யானைகள் புடை சூழ ஆயிரமாயிரம் போர் வீரர்களுடன் பிரமாண்டமோ, பிரமாண்டம்.... என படம் முழுக்க மிரட்டல் காட்சிகள் ஏராளம், ஏராளமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது சிறப்போ சிறப்பு.

இது மாதிரி, சிறப்புகளுக்காகவும், பிரமாண்டங்களுக்காகவும் "பாகுபலி-2 படத்தை பார்க்கலாம், ரசிக்கலாம்... ஒரு முறை, இரண்டு முறை அல்ல... பலமுறை!"



மொத்தத்தில், "பாகுபலி-2 - மிரட்டும் பிரமாண்டம்!"

 

பாகுபலி-2 தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

பாகுபலி-2

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓