2.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - தினேஷ், நந்திதா, சரத் லோகித்சவா, திலீப் சுப்பராயன், பாலசரவணன்
இயக்கம் - கார்த்திக் ராஜு
இசை - ஜஸ்டின் பிரபாகரன்
தயாரிப்பு - பிகே பிலிம் பேக்டரி

தமிழ் சினிமாவில் வரும் எத்தனையோ படங்களின் கதைகளில் பழிக்குப் பழி வாங்கும் கதைகள் காலம் காலமாக இருந்து வருகிறது. அப்பாவைக் கொன்றவன், அம்மாவைக் கொன்றவன், உடன் பிறந்தவர்களைக் கொன்றவன், காதலியைக் கொன்றவன் ஆகியோரை நாயகன் பழி தீர்த்துக் கொலை செய்யும் பல கதைகளைக் கொண்ட படங்களைப் பார்த்திருக்கிறோம். பழி வாங்குவதுதான் மையம் என்றாலும் அதை எப்படிச் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் படத்தின் வரவேற்பு அமையும்.

'உள்குத்து' படமும் ஒரு பழி வாங்கல் கதைதான். கடற்கரையில் அமைந்துள்ள மீனவ ஊரான 'முட்டம்' பகுதிக்கு வேலை தேடி வருகிறார் தினேஷ். பாலசரவணன் தயவில் அவரிடமே வேலைக்குச் சேர்கிறார் தினேஷ். பாலசரவணன் தங்கையான நந்திதா, தினேஷைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். அந்தப் பகுதி தாதாவான சரத் லோகித்சவா மகனான திலீப் சுப்பராயனை, தினேஷ் கொலை செய்து விடுகிறார். அடுத்து சிலரையும் கொலை செய்ய முயற்சிக்கிறார். தினேஷின் கொலை முயற்சிகளைப் பார்த்த நந்திதா அதிர்ச்சியடைந்து தினேஷிடம் கேட்கிறார். தினேஷ் எதற்காக அந்த ஊருக்கு வந்தார், ஏன் கொலைகளைச் செய்ய ஆரம்பிக்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு பழி வாங்கல் கதையை மீனவ கிராமத்துப் பின்னணியில் சொல்லியிருப்பதைத் தவிர படத்தில் புதிதாக வேறு எந்த விஷயமும் இல்லை. வழக்கமான, பார்த்துப் பழகிப் போன காட்சிகள் அதிகம் இருப்பது படத்தையும் குத்தி விடுகிறது.

தினேஷ், ஏன் எப்போதும் ஒரு இறுக்கத்துடனேயே இருக்கிறார் என்பது தெரியவில்லை. இந்தக் கதாபாத்திரத்திற்கு அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. உள்ளுக்குள் வைத்திருக்கும் கோபத்தைக் காட்டிக் கொள்வதற்காக அப்படி விறைப்பாக இருக்கிறார் என்பதும் அந்தக் கதாபாத்திரத்திற்குத் தேவை இல்லாதது. படத்தில் அவருடன் சண்டை போடுபவர்கள் எல்லாம் அவரை விட உயரமானவர்களாக இருக்கிறார்கள். கஷ்டப்பட்டு எகிறி எகிறி அடிக்கிறார். பிளாஷ் பேக் காட்சிகளில் மட்டும் இயல்பாக இருக்கிறார்.

நந்திதாவிற்கு படத்தில் அதிக வேலையில்லை. தினேஷைப் பார்த்து சிரிக்கிறார், கிண்டல் செய்கிறார், அப்புறம் காதலில் விழுகிறார், அப்புறம் கேள்வி கேட்கிறார். இப்படி நான்கே நான்கு காட்சிகள் தான்.

வில்லனாக சரத் லோகித்சவா. அவருடைய உருவத்திற்குப் பொருத்தமான அந்த டப்பிங் குரல்தான் படத்திற்குப் படம் அவரை மிரட்ட வைக்கிறது. அவர் மகனாக நடித்திருக்கும் திலீப் சுப்பராயன் பக்கா ரவுடியாக மிரட்டுகிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் ஜான் விஜய், சாயா சிங் நிறைவாக நடித்திருக்கிறார்கள். பாலசரவணன் அவர் செய்வதையெல்லாம் நகைச்சுவை என இன்னும் எத்தனை காலத்திற்கு நினைத்துக் கொண்டிருப்பாரோ...?.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் 'குறு குறு கண்ணால...' பாடல் மட்டும் ஈர்க்கிறது. கடலையும், கடற்கரையையும் கண்ணுக்குள் பதிய வைக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.கே.வர்மா.

எதிராளியின் இடத்துக்குள்ளேயே நுழைந்து, நட்பாகப் பழகி பின் அவர்களைத் துவம்சம் செய்யும் எத்தனையோ கதைகளை தமிழ் சினிமாவில் பார்த்தாயிற்று. 'திருடன் போலீஸ்' படத்தில் ஒரு சராசரி போலீஸ்காரரின் வாழ்க்கையைச் சொல்லி ரசிக்க வைத்த இயக்குனர் கார்த்திக் ராஜு, இந்த 'உள்குத்து'வில் இன்னும் உழைத்திருக்கலாம்.

'உள்குத்து' - உள்காயம்

 

பட குழுவினர்

உள்குத்து

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓