1

விமர்சனம்

Advertisement

எம்.ஜி.ஆர் ஆவதற்காக எஸ்.டி.ஆர்., ஆன சிம்பு (அப்படித்தான் இந்தப் படத்துல ஒரு பாடல் வரியில வருது... என்ன தைரியம்.?!) மொத்தம், மூன்று கெட் - அப்களில் இரண்டு வேடங்களில் நடிக்க, அவருடன் ஸ்ரேயா, தமன்னா ஜோடி போட, யுவன் சங்கர் ராஜா இசையில், "த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா" எனும் ஆபாசப்பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில், குளோபல் இன்போடெயின்மென்ட் எஸ்.மைக்கேல் ராயப்பன் தயாரித்து வழங்க, வந்திருக்கும் படம் தான், "அன்பானவன் அசராதவன் அடங்காதவன்".

துபாயில் டான் ஆன மதுரை தாதாவின் கையாள், தன் வாலிப வயது காலத்தில், தன் காதலை காதலியின் நன்மைக்காக விட்டுத் தந்தார். அதேநேரம், முப்பது ஆண்டுகள் கழித்து, காலம் போன காலத்தில் தனக்கு, ஒரு இளம் பெண் ஒருவரால் வந்த மற்றொரு காதலை விட்டுத் தர மறுத்து, அவளது காதலனை போட்டுத் தள்ள துடிப்பதே.. இப்படக்கரு! அட ராமா!

சில, பல ஆண்டுகளுக்கு முன பல சம்பவங்கள் செய்து மதுரையை ஆட்டிப்படைத்த கைப்புள்ள ஒருவர், தன் காதலியின் பேச்சைக் கேட்டு, துபாய் போய் திருந்தி வாழ கிளம்புகிறார். போகிறப்போ, தன் காதலியையும் அவர் நன்மைக்காக விடுத்து (உறவினர் உடன் இல்லை என்றாலும் ஊரார் முன் தொட்டு தாலி கட்டிய பின்...), கிளம்பும் மதுர கைப்புள்ள, என்ன மாயமோ? மந்திரமோ...? தெரியவில்லை துபாயில் இண்டர்நேஷனல் போலீஸேத் தேடும் அளவிற்கு பெரும் டான் ஆகிவிடுகிறார்.

முப்பது ஆண்டுகள் கழித்து சென்னைத் திரும்பி, தாத்தா ஆன தாதா, அங்கு இண்டர்நேஷனல் போலீஸ் இவரைத் தேட, இங்கு இவர், தனக்கேற்ற இளம் பெண் இணையை ஆபாச ஆபாசமாய் தேடுகிறார். அப்புறம் அதிகப்படியாய் தன்னிடம் அன்பு காட்டும் ஒரு அழகிய இளம் பெண், தன்னை காதலிப்பதாக கருதும் தாத்தா - தாதா, தன் சாயலிலேயே இருக்கும் அவளது அமெரிக்க காதலன், ரிட்டர்ன் ஆனதும் அவனை போட்டுத் தள்ள, தூக்கி வந்து துன்புறுத்துகிறார்.

அய்யய்யோ, அப்புறம் ? அப்புறமென்ன..? பாகம் - 2ல் இருவருக்குமிடையேயான மோதலை பாருங்கள்.... என வணக்கம் போட்டு வெட்கமே இல்லாமல் நம்மை வழியனுப்பி வைக்கின்றது... மொத்தப் படமும், அதன் கதையும்!

முதல் பாகத்திலேயே முடியலை.... என முகத்தில் அடித்துக் கொண்டு புலம்பும் ரசிகர்கள், இதில் இரண்டாம் பாகம் வேறயா...? என அலறியடித்து ஒடுகிறான். பாவம்.

ஒரு எஸ்.டி.ஆருக்கே தாங்காது, இதில் 3 - எஸ் .டி ஆரா? எனும் யோசனையுடன் படத்திற்குப் போனால், நல்ல வேளை மதுரை மைக்கேல் ஆகவும், அவரே தாத்தா ஆன பின், துபாய் டான் எஸ்டிஆராகவும் இரண்டு கெட் அப்புகளிலேயே படம் முழுக்க வரும் சிம்பு, 3வதாக திக்கு-சிவாவாக வந்ததும் படத்தை முடித்து இரண்டாம் பாகத்திற்கு அழைப்பு விடுத்து ஆறுதல் அளிக்கின்றனர் .

ஆனாலும், இரண்டு கெட்-அப் சிம்புகளும் ரொம்ப கெட்ட பசங்க சார்... எனும் அளவிற்கு, கிராமத்தில் நகர் வலம் வரும் உற்சவர் மூர்த்தியை சகாக்களுடன் தோளில் சுமந்தபடி வரும் சிம்பு., அந்த சாமிக்கு அர்ச்சனை செய்ய வரும் ஸ்ரேயாவிடம் அவர் அப்பா மற்றும் கிராம மக்கள் கண் முன்னே செய்யும் ஒவர் சில்மிஷங்கள் தொடங்கி., "காதலிக்கிற பொண்ணக் கூட விட்டுக் கொடுப்பேன்... உயிருக்குயிரான நண்பனை விட்டே கொடுக்க மாட்டேன்..." என்பதில் தொடர்ந்து, "நான் ஒரு கன்னிப்பையன் கன்னிப் பொண்ணு வாயில தான் வாய் வைப்பேன்... " என்றெல்லாம் சிம்பு பேசுவது உவ்வே என குமட்டலைத் தான் தருகிறது. இருபதைந்து ஆண்டுகளுக்கு முந்தைய இப்படக் கதையோட்டத்தில் சமீபத்திய கபாலி ரஜினியின் "சிறப்பு..." எனும் வார்த்தையை அடிக்கடி உச்சரித்தபடி, முடியை கோதுவதும்... ம், ஜி.வி பிரகாஷின் பிதற்றலான, "கன்னிப் பசங்க சாபம் உன்ன சும்மா விடாதுடி....". வெர்ஜின் பொண்ணுங்க... பசங்க... என்றெல்லாம் பிதற்றுவதும் அய்யோ முடியலைடா சாமி என ரசிகனை அலறவிடுகிறது .

மேலும், ஸ்ரேயாவுக்கு திடீர் தாலி கட்டி விட்டு, முதலிரவுக்கு ஏங்கியவர், திடீரென ஒரு வழியா போட்டுட்டன்ல... மச்சி.. என்று நண்பர்களிடம் கூறிவிட்டு, பின் கேப் விட்டு அவ கழுத்துல மூன்று முடிச்சு... என்பதும், அதையே ஸ்ரேயா ரிப்பீட்டு செய்வதும் ஆபாசத்தின் உச்சம். ஆமாம் .. ரிஜிஸ்தர் ஆபிஸில், சிம்பு - ஸ்ரேயா திருமண சீன் தான் எதற்கு? அப்புறம், ஸ்ரேயா வேறு ஒருவருடன் மணமேடையில் அமர்ந்திருப்பதை பார்த்து விட்டு, எங்கிருந்தாலும் வாழ்க என ஓட்டம் எடுப்பது தான் எதற்காம். ..?

"ட்ரிங்ஸ் விட இன்ஜூரியஸ் டூ ஹெல்த் லவ் தான்" என்பதிலாகட்டும், "நான் சொன்ன நேரத்துக்கெல்லாம் வர மாட்டேன் நினைச்ச நேரத்துக்கு தான் வருவேன்...." என இருமாப்பு பிடித்து டயலாக் பேசுவதிலாகட்டும், "நான் மோசமானவன் தான் ஆனால், கேவலமானவன் கிடையாது... ஆனா, கொஞ்சம் கெட்டவன்..." என "பன்ச்" அடிப்பதிலாகட்டும், க்ளைமாக்ஸுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினி மாதிரி பியானோ வாசிப்பதிலாகட்டும்... பாடல் காட்சி ஒன்றில் எம்ஜிஆர் மாதிரி எஸ்டிஆரும் என வரிகளை வடித்திருப்பதிலாகட்டும், சகலத்திலும் ஒவர் தற்பெருமையில் தன்னிலை மறந்திருக்கிறார் எஸ்டிஆர். சிம்பு. இது ரொம்ப, ரொம்ப தப்பு தம்பு!

கிராமத்து செல்வியாக முதல்கதாநாயகியாக ஸ்ரேயா, மற்றொரு நாயகியாக தமன்னா இருவரில் ஸ்ரேயா, கிராமிய லுக்கிலும், தமன்னா மார்டன் லுக்கிலும் எஸ்டிஆரை., மட்டுமின்றி ஆடியன்ஸையும் வயது வரம்பின்றி வசீகரிக்கின்றனர்!

ஆனாலும், "அங்கு உன்கிட்ட ரஜினிகாந்தைப் பார்த்தேன்... காபி ஷாப்பில் ஒரு கமலை பார்த்தேன், மொத்தத்தில் ஒரு சிலம்பரசனைப் பார்த்தேன்..." என தமன்னா சிம்புவைப் பார்த்து வாய் பிளப்பதும், "பொண்ணுங்களை பின்னாடி தட்டுற உங்களை மாதிரி பொட்ட பசங்களை லவ் பண்றதை விட இது மாதிரி தாத்தாவையே லவ் பண்ணலாம் டா..." என அஸ்வின் தாத்தா சிம்புவை உசுப்பேத்துகிறார். அப்புறம் எதற்கு? தாத்தா சிம்பை விட்டு விட்டு அமெரிக்க வம்பை வர ழைக்கிறார் என்பது புரியாத புதிர்!

சிறப்பு தோற்றத்தில் சில நிமிடங்களே வரும் ஜி.வி.பிரகாஷ் குமார், "தாத்தா எஸ்டிஆருக்கு இந்த வயசுல உனக்கென்ன லவ்வு...?" என அட்வைஸ் செய்வதிலும், "என்ன மாதிரி சின்ன பசங்களையே ஏமாத்துறாளுங்க... பொன்னுங்க... அதனால தான் த்ரிஷா இல்லாட்டி நயன்தாரான்னு... நாங்களே போயிட்டிருக்கோம் நிலைமை இன்று அப்படி இருக்க, உன்னை மாதிரி கிழவன்களை பொண்ணுங்க ஏமாத்தமாட்டங்களா?" என நக்கலாய் கேட்பதிலும் சிம்புவின் நிலை கண்டு தியேட்டர் அதிர்கிறது. ஆமாம் எஸ்.டி.ஆர் உங்களுக்கு என்ன தான் ஆச்சு.?!

எஸ்.டி.ஆர், ஸ்ரேயா, தமன்னா, மாதிரியே மகத், விடிவி.கணேஷ், கோவை சரளா, நான் கடவுள்" ராஜேந்திரன், சுவாமிநாதன், கஸ்தூரி, ஒய்.ஜி.மகேந்திரன், சண்முகசுந்தரம், பாண்டு சிங்கமுத்து... உள்ளிட்ட ஒட்டு மொத்த நட்சத்திர பட்டாளமும் ஆபச ஆபசமாய் டபுள் மீனிங்கில் பேசுவதும், சிம்பு புராணம் பாடியிருப்பதும் பெரும் சலிப்பைத் தருகிறது.

ரூபனின் படத்தொகுப்பில், சிம்புவின் கை கத்திரியை ஒளித்து வைத்திருக்கும் போல... அத்தனை நீள நீள காட்சிகள்... ரொம்பவே படுத்தல். கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு, ஓஹோ ஆஹா பதிவில்லை என்றாலும் ஓ.கே பதிவென்பது ஆறுதல்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில், "இன்னைக்கு நைட்டு மட்டும் நீ காதல் பண்ணா போதும்..." உள்ளிட்ட பாடல்கள் சுபராகம்... என்பது படத்திற்கு பலம்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில், படம் முழுக்க ஏகப்பட்ட லாஜிக் குறைகள். சிம்பு, ஏன் துபாய் போனார்? அங்கு எப்படி டான் ஆனார்...? எனும் விஷயங்கள் காட்சிப்படுத்தப்படாதது மைனஸ்.

அதை விட பெரிய மை னஸ், மொத்தப் படமும் மிகவும் ஆபச வசனங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம். "வெர்ஜினா பொறக்கறது நம்ம தப்பில்ல வெர்ஜினா சாகறது தான் நம்ம தப்பு...", "லவ்வெல்லாம் மேட்டர் அல்ல... மேட்டர் தான் லவ்வுன்னு புரிய வச்சீங்களே...", "சில பசங்களுக்கு வயசான ஆன்ட்டிகளை பிடிக்கறதில்ல... அது மாதிரி, சில பெண்களுக்கு, வயசான ஆம்பளைங்களை தான் பிடிக்கும்..." என்பது உள்ளிட்ட ஆபாச வசனங்களின் வழியாகவும், ஒரு தேவையே இல்லாத ரேஷன் கடை காட்சியில், ஸ்ரேயாவைப் பார்த்து லவ் சிம்பிள் கொட்டாவி விடும் கிராபிக்ஸ் காட்சியில், சிம்புவின் கொட்டாவிக்கு ஊர் பொம்பளைகள் எல்லோரும் பதில் கொட்டாவி விடுவதும் ஸ்ரேயா தாமதமாக அந்த கொட்டாவி லவ் சிம்பிள் மீது அம்பும் விடுவதுமான கீழ்த்தரமான காட்சிகளாலும், ஒரு கிளப்பில் ஒருவரை சம்பவம் செய்யக் கிளம்பும் மதுர - சிம்பு, "பொருள் பொருளோடு இருக்கு..." என பேசியபடி பொருளை எடுக்கும் இடமும் அதைத் தொடர்ந்த, அந்த கேவலமான பேச்சு... உள்ளிட்டவைகள் மூலமும் இயக்குநர் சொல்ல வருவது என்ன? என்பது இயக்குநருக்கே வெளிச்சம்!

மேலும், வெர்ஜின் பையன் சாபம்... கன்னி பொண்ணு பாவம்.... என சம்பந்த சம்பந்தமில்லாது அடிக்கடி வரும் புலம்பல்கள் கேட்க நாரசம்! இப்படி படம் முழுக்க காம நெடி காட்சிகளும், வசனங்களும் படமாக்கிவிட்டு, "யார் பேச்சையும் நான் கேட்டதில்ல... அவன் பேச்சை நான் என்றைகும் மீறினதில்ல..." என்றும், "சாதியால வந்தது இல்லேன்னே மனுஷன்... மனுஷனால வந்ததுன்னே சாதி..." என்றும், "காதலிச்ச பொண்ண அடையறது காதல் இல்ல... காதலிச்ச பொண்ணு நல்லா வாழட்டும்னு நாம ஒதுங்கி வாழாறதுதான் உண்மையான காதல்....", என்பது உள்ளிட்ட டயலாக்குகளிலும் தங்களை நல்லவர்களாக காட்டிக் கொள்ள முயலும், எஸ்.டிஆர் எனும் சிம்புவையும் - இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனையும் சபித்தபடியே, வெளியேறுகின்றனர் ரசிகர்கள்.

இவற்றுக்காக இவர்களை மன்னித்தாலும் கதைப்படி, 25 வருடங்களுக்கு முந்தைய கிராமத்து பெண்ணான ஸ்ரேயா, தன் தந்தை ஒய்.ஜி மகேந்திரா ஒரு காட்சியில் சிம்புவால் குத்துப்பட்டு சாகக்கிடக்கிறார்... என தெரிந்தும் "எங்கப்பா என்ன செத்தாப் போயிட்டார்? எங்கப்பாவை பார்த்துக்க, எங்க ஆத்தா இருக்கா... உன்னப் பாத்துக்க நான் தான் இருக்கேன்... கிளம்பு..." என சிம்புவோடு துபாய் ஓடிப்போக ரெடியாவதும், க்ளைமாக்ஸில், தாத்தா, தாதா அஸ்வின் - வெஸ் - திக்குவாய் சிவா என இரண்டு எஸ்டி ஆருக்கும், இடையேயான முட்டல், மோதல் எதிர்பார்ப்பு கூட்டும் இரண்டாம் பாகத்திற்கான பில் - டப் போடு படத்தை முடிப்பதும் கண்டு பொங்கி எழுந்து, முதல் பாகத்தையே தாங்க முடியல... இதுல இவங்க சொந்தக்கதை சோகக் கதையை கேட்க.... இரண்டாம் பாகம் வேறயா என எக்கசக்கமாய் ரசிகர்கள் மெர்சல் ஆகிறார்கள்... பாவம்!

மொத்தத்தில், "அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - ஆபாசமானவன், ஆபத்தானவன், ஆதரிக்கப்படக் கூடாதவன் (யாராலும்)!"

 

பட குழுவினர்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓