நடிகர்கள் : இம்ரான் ஹாஸ்மி, நர்கீஸ் பக்ரி, பிராச்சி தேசாய்
இயக்கம் : டோனி டிசோசா
விளையாட்டு வீரர்களான மில்கா சிங், மேரி கோம் ஆகியோரை மையமாக வைத்து பாலிவுட்டில் ஏற்கனவே படங்கள் வெளிவந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாரூதினின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவந்திருக்கும் படம் அசார். இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்துள்ளது என்று இனி பார்ப்போம்...
அசார் படம் முழுக்க முழுக்க அசாரின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவரவில்லை. அவருடைய வாழ்க்கையின் ஒருபாதியை தான் படத்தில் காண்பித்துள்ளார்கள். இதில் அசாராக இம்ரான் ஹாஸ்மி நடித்துள்ளார். கதைப்படி, அசார் சூதாட்ட புகாரில் எப்படி சிக்கினார், பின்னர் அந்த பிரச்னையிலிருந்து தன் நண்பரும், வக்கீலுமான ரெட்டி(குணால் ராய் கபூர்) உதவியுடன் அசார் எப்படி தப்பித்தார், அவரின் கடந்தகால வாழ்க்கை, வெளிநாட்டு பயணத்தின்போது நடிகை சங்கீதா பிஜ்லானி(நர்கீஸ் பக்ரி) உடன் காதல் வசப்பட்டது, அது எப்படி மீடியாக்களில் பரபரப்பானது உள்ளிட்ட அசாரின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை கலந்து கட்டி இப்படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் டோனி டிசோசா.
அசாரூதினாக இம்ரான் ஹாஸ்மி நடித்துள்ளார். ஆனால் அவரின் நடிப்பு எடுபடவில்லை. அசாரை போன்று நடை, உடை, பாவனைகள், ஆடுகளத்தில் அவரின் ஸ்டைல் உள்ளிட்ட விஷயங்களை தன்னால் முடிந்தவரை கொடுத்துள்ளார் இம்ரான். ஆனால் அதில் பாதி தான் அவருக்கு ஒர்க்-அவுட்டாகியுள்ளது. குறிப்பாக அசாரின் உயரம் இம்ரானுக்கு இல்லாததால் பல இடத்தில் இம்ரானின் நடிப்பு செயற்கையாக தெரிகிறது.
நர்கீஸ் பக்ரி, பிராச்சி தேசாய் என இரண்டு நடிகைகள் இருந்தாலும் நர்கீஸின் நடிப்பு தான் அனைவரையும் கவருகிறது. லாரா தத்தாவின் நடிப்பு ஓ.கே., குணால் ராய் கபூர் தன் நடிப்பால் ரசிகர்களுக்கு சிரிப்பை வரவழைக்கிறார்.
மேரி கோம், பாக் மில்கா பாக் போன்ற படங்களில் இருந்த சுவாரஸ்யம் அசார் படத்தில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக நடிகர்கள் தேர்வில் பெரும் சொதப்பியிருக்கிறார் இயக்குநர் டோனி டிசோசா. குறிப்பாக கபில்தேவ்வாக வரும் வருண் பட்லா, ரவிசாஸ்திரியாக வரும் கவுதம் குலாதி, சித்துவாக வரும் மனோஜ் சிங் போன்ற யாரும் அந்த கேரக்டருடன் ஒன்றவில்லை. மேலும் ஒளிப்பதிவும், இசையும் சுமாராகத்தான் உள்ளது.
ஒட்டுமொத்தமாக அசார் படத்தை பார்க்கும்போது பொழுதுபோக்கு படமாக இருக்கிறது. அதுவும் ஒரு டிவியில் சீரியல் பார்த்த எபக்ட்டை தருவது அசார் படத்தின் பலவீனம்.
மொத்தத்தில், அசார் - வெறும் உதார்...!