Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

யாக்கை

யாக்கை,Yaakkai
03 மார், 2017 - 13:54 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » யாக்கை

அரிய வகை இரத்தம் மற்றும் உடல் உறுப்புகள் உள்ளிட்டவைகளுக்காக மனிதர்களின் உயிரோடு விளையாடும் பணத்தாசைப் பிடித்த தனியார் மருத்துவமனைகள் சிலவற்றின் தகிடுதத்தங்களை கருவாக கொண்டு கழுகு கிருஷ்ணா, சுப்ரமணியபுரம் சுவாதி, ஜோக்கர் குருசோமசுந்தரம், பிரகாஷ்ராஜ், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம் புலி... ஆகியோர் அடங்கிய பெரும் நட்சத்திர பட்டாளத்துடன், யுவன் சங்கர் ராஜாவின் இசையில், குழந்தைவேலப்பன்.டி-யின் இயக்கத்தில் "ப்ரிம் பிக்சர்ஸ்", "4 சைடு என்டர்டெயின்மென்ட்" ஆகிய பேனர்களில் முத்துக்குமரன், தயாரித்திருக்கும் திரைப்படமே "யாக்கை".

கதிர் எனும் கதாநாயகர் கிருஷ்ணாவின் காதலி, கவிதா எனும் கதாநாயகி சுவாதியை அவரது அரிய வகை இரத்தத்திற்காக சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இயங்கும் ஒரு பிரபல தனியார் மருத்துவமனை முதலாளி, தன் ஆட்கள் மூலம் தீர்த்து கட்டி பல கோடி காசு, பணம் சம்பாதிக்கிறார். இதில் வெகுண்டெழும் நாயகர் கதிர் - கிருஷ்ணா, இந்த விவகாரத்தில் தன் டாக்டர் அப்பா ராதாரவியை இழந்ததற்கே பெரிதாக அலட்டிக் கொள்ளாத இப்பட வில்லனும் ஜோக்கர் பட நாயாகருமான குருசோமசுந்தரத்தை எப்படி? விரட்டி பிடித்து அடித்துக் கொல்கிறார்? என்பதுடன், இந்த மெடிக் கிரைம் கேஸில் புத்திசாலி போலீஸ் அதிகாரி பிரகாஷ்ராஜ் எவ்வாறு துப்பு துலக்குகிறார் என்பதும் தான் "யாக்கை" படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்!

கல்லூரியில் படிக்கும் வாலிபராக, கவிதா எனும் சுவாதியின் காதலர் கதிராக., கிருஷ்ணா, வழக்கம் போலவே தன் இயல்பான நடிப்பால் ரசிகனை இருக்கையோடு கட்டிப் போட காட்சிக்கு காட்சி முயற்சித்திருக்கிறார், பாராட்டுக்கள். காதல் காட்சிகளில் கண்களில் ரொமான்ஸையும், ஆக்ஷ்ன் காட்சிகளில் உடம்பில் கூடுதல் பிட்னஸையும் காட்டியிருக்கும் கிருஷ்ணா, அவரது முந்தையமற்ற படங்களைக் காட்டிலும் நிச்சயம் மிரட்டல்.

கவிதா எனும் கதாநாயகியாக "சுப்ரமணியபுரம்" சுவாதி, இப்படத்தில், தன் சேவை மனப்பான்மையால் பளபளவென ஜொலித்து, பரிதாபகரமான முடிவைத் தேடிக் கொள்வது, நாயகர் கிருஷ்ணாவை மட்டுமல்ல ரசிகனையும் கொல்கிறது! அவருக்கு ஏற்படும் முடிவு அய்யோ பாவம்... என ரசிகனை அலறவிடுவது அவரது பாத்திரத்திற்கும் படத்திற்கும் கூடுதல் வலு சேர்க்கிறது!

"நீ வாங்குற சம்பளத்துல மாசா, மாசம் என் மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு காசு குடுக்குற உன்னை நான் கொல்ல மாட்டேன் தட் ஈஸ் மை பிஸினஸ் எத்திக்ஸ்..." என்றபடி, போலீஸ் பிரகாஷ்ராஜை, சித்ரவதை செய்யும் அடப்பாவி ரக வில்லனாக வரும் "ஜோக்கர்" நாயகர் குருசோமசுந்தரம், அவரது அப்பாவி, டாக்டர் அப்பாவாக வரும் ராதாரவி, சுகர் பேஷன்ட் கம் புத்திசாலி புலனாய்வு போலீஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ்ராஜ், கிருஷ்ணாவின் அப்பா எம்.எஸ்.பாஸ்கர், காமெடி போலீஸ் சிங்கம் புலி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளத்தின் அனுபவ நடிப்பும், நாயகர் கிருஷ்ணாவின் கல்லூரி நண்பர்களாக வரும் மெல்வின், நூர் - ஹரி கிருஷ்ணா உள்ளிட்ட புதுமுக நடிகர்களது அய்யோ பாவ நடிப்பும் கூட படத்திற்கு பலம் சேர்க்க முற்பட்டிருக்கின்றன என்பது ஆறுதல்.

எட்வர்ட் கலைமணியின் கலை, இயக்கம் கண்களுக்கு குளிர்ச்சி என்பதும் கூடுதல் ஆறுதல். படத்தொகுப்பாளர் சாபு ஜோசப்பின் கத்திரி, இந்த "யாக்கை" படத்தொகுப்பின் போது சில, பல இடங்களில் சற்றே மொக்கையாக இருந்திருப்பது சற்றே சலிப்பைத் தருகிறது.

மெடி-க்ரைம் கதை என்பதால், ஒற்றைக் கண் மட்டும் ஆம்புலன்சில் கிடக்கும் கொடுரக் காட்சி, சத்யா பொன்மாரின் ஒளிப்பதிவில் பதிவு செய்யப்பட்டிருக்கும் விதம்... ரசிகனை அலறவிடும் மிரட்டல் என்றால், இன்னும் சில, பல ஆக்ஷன் காட்சிகளிலும், ரொமான்ஸ் காட்சிகளிலும் இயற்கை எழில் கொஞ்சம் இவரது அழகிய ஒளிப்பதிவு, ஓவியப்பதிவு.. என்பது படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் "என்னுள்ளே ஏன் சலனம்...", "நான் இந்த காற்றில்..", "எந்தன் இறுதி மூச்சு..." உள்ளிட்ட மெல்லிசை பாடல்களும், பின்னணி இசையும் இப்படக் கதைக்கேற்ற, இசை கருவிகள் உருட்டல், மிரட்டல்.

குழந்தைவேலப்பன்.டி.யின் இயக்கத்தில், சில, பல இடங்களில் நடைபெறும் தனியார் மருத்துவதுறை குற்றங்களை, "மருந்து கம்பெனி கண்டு பிடிக்கும் மருந்தெல்லாம் நோயைக் குணப்படுத்தும்னா, உலகத்துல நோய்களே இல்லாமல் அல்ல.. இருக்கணும்..." என்பது உள்ளிட்ட வம்படி வசனங்கள், சாட்டையடி காட்சிகள் வாயிலாக இட்டு நிரப்பி, பட்டவர்த்தனமாக படம் பிடித்துக் காட்டியிருக்கும் துணிச்சலுக்காக "யாக்கை" படத்திற்கு ஒரு சல்யூட் அடிக்கலாம். என்றாலும்., படம் முழுக்க பரவி, விரவிக் கிடக்கும் சில, பல லாஜிக் குறைகளுக்காக அந்த சல்யூட்டை வாபஸும் வாங்கிக் கொள்ளலாம்!

ஆக மொத்தத்தில், "பணத்துக்காக மக்களின் உயிரோடு விளையாடுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் சில, பல தனியார் மருத்துவமனைகளின் தகிடுதத்தங்களை படம் பிடித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றிருக்கும் யாக்கை - பெரிதாக பெறவில்லை தமிழ் சினிமா ரசிகர்களின் வாக்கை... என்பது வேடிக்கை!"



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
யாக்கை தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in