Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

பிச்சைக்காரன்

பிச்சைக்காரன்,Pichaikkaran
21 மார், 2016 - 14:19 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » பிச்சைக்காரன்

தினமலர் விமர்சனம்


சொல்லாமலே, பூ படங்களின் இயக்குனர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, அறிமுக நாயகி சாத்னா டைட்டஸ் ஜோடி நடிக்க, பெற்றத்தாயின் உயிர் பிச்சை வேண்டி கோடீஸ்வர மகன எடுக்கும் மடிப்பிச்சை இல்லை, இல்லை.... நிஜப் பிச்சைதான் பிச்சைக்காரன்.


கோவை பகுதியில் பெரிய பெண் மில் தொழில் அதிபரின் ஒற்றை வாரிசு விஜய் ஆண்டனி, அப்படிப்பட்ட கோடீஸ்வரன் தன் தாயின் உயிர் காக்க வேண்டி ஒரு மண்டலம், அதாவது நாற்பதெட்டு நாட்கள் பிச்சைக்காரனாக வாழும் வாழ்க்கை தான் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, இசைத்து, தயாரித்து, நடித்து... வெளிவந்திருக்கும் பிச்சைக்காரன் படத்தின் கரு, கதை, களம் காட்சிப்படுத்தல் ...எல்லாம்.


இதில் ஹீரோ விஜய் ஆண்டனி - சாத்னா டைட்டஸ் இடையேயான காதல், அம்மா - பிள்ளை சென்டிமெண்ட், பிச்சைக்காரன், தான், கோடீஸ்வரன் என்பதைக் காட்டிக் கொள்ளாமல் அதிகார வர்க்கத்துடன் மோதும் மோதல், நாயகர் நம்பும் உறவின் நம்பிக்கை துரோகம்... என சகலத்தையும் சரிவிகிதத்தில் கலந்து கட்டி, பெருந்தன்மையாக படைக்கப்பட்டிருக்கிறான் இந்த பிச்சைக்காரன் என்பது சிறப்பு.


கோயம்புத்தூர்... மில் அதிபரின் வாரிசாக, கோடீஸ்வரன் அலைஸ் பிச்சைக்காரன் அருளாக விஜய் ஆண்டனி அசத்தியிருக்கிறார். பிச்சை எடுக்க பிளைட்ல போன முதல் ஆள்... இவராகத்தான் இருக்க முடியும். இறுதியாக கையில் இருந்த எட்டாயிரத்து இருநூறு ரூபாயையும், பிச்சையாக போட்டுவிட்டு, விஜய் ஆண்டனி., பிச்சைக்காரனாகும் காட்சிகளில் வெளுத்து வாங்கியிருக்கிறார். காதலி, விஜய்யுடன் செல்பி எடுக்கும் போது பின்னாடி ஒரு பிச்சைக்காரன் பிரேமுக்குள்... வருகிறான்... எனக் கூற அவர் காட்டும் ரியாக்ஷனிலும் சரி, டிராபிக் போலீஸிடம் உண்மையை சொல்லி, காதலியை கூட்டிச் செல்லும் இடங்களிலும் கன கச்சிதமாக நடித்திருக்கிறார்.


பணம், கெளரவம் அடையாளம்.... இது எல்லாம் இழந்துட்டு வாழற ஒரு வாழ்க்கையை உங்கம்மாவுக்காக கொடுப்பீயா? அம்மா உயிர் திரும்ப கிடைக்குமா? என்பது கேள்வி அல்ல.... கொடுப்பீயா என்பது தான் கேள்வி... அம்மாவுக்காக, ஒரு மண்டலம், 48 நாள்... கொடுத்தா தான் கிடைக்குங்கறது பிரபஞ்ச நீதி.... நீ யாருங்கறது யாருக்கும் தெரியக்கூடாது, உன் பணக்கார செல்வாக்கை எந்த இடத்திலும் பயன்படுத்திவிடக் கூடாது... பிச்சைங்கற வார்த்தையே உன் வாயில வரமாட்டேங்குது... ஒவ்வொரு நாளையும் நீ வெறுங்கையோடு தான் ஆரம்பிக்கணும்... உன்னால எப்படி, அப்படி ஒரு வாழ்க்கை வாழ முடியும்? யோசி...? என மலையாள சாமியார் சந்தேகமாக கேட்டதையெல்லாம், சப்தமே இல்லாமல் சந்தோஷமாக செய்து முடித்திருக்கிறார் விஜய்!


புதுமுகம் சாத்னா டைட்டஸ், மகிழினி பாத்திரத்தில் காலேஜ் முடிச்சுட்டு எம்என் சிகாரனுக்கு அடிபணிய பிடிக்காது, பிரண்ட்ஸுடன் சேர்ந்து, பீட்ஸா ஷாப் வைத்து, ஈ.ஓட்டிக் கொண்டிருக்கும் பாத்திரத்தில் பக்காவாக, அப்போதைய காதல் சந்தியாவை ஞாபகபடுத்தும்படி நடித்திருக்கிறார். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீந்த பீட்சாக்களைத்தரும் நாயகி, சப்ளை செய்யும் காட்சி உள்ளிட்ட ஓவ்வொரு காட்சியிலும் மனம் கவருகிறார்.


அம்மா கேரக்டரில் கோவை தமிழ் பேசியபடி வரும் புவனேஸ்வரி மில்ஸ் ஓனர் பெண்மணி தீபா., வில்லன் - பெரியப்பா கேரக்டர் முத்துராமன், பிச்சை நண்பர் கருப்பசாமி குத்தகைதாரர் இயக்குனர் மூர்த்தி, விஜய்யின் பி.ஏ .நண்பர், பகவதி பெருமாள், வில்லனின் டிரைவர் சிவதாணு உள்ளிட்டவர்கள் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.


அதிலும் , விஜய் ஆண்டனியின் பணத்தாசை பிடித்த பெரியப்பாவாக வரும் அவினாசி - கேரக்டர் ரசிகனை வசியம் செய்யும் குரூரம். அவர், ஒரு காட்சியில் கைவிரல் போனது பற்றிக் கூட அவர் கவலைப்படாது, என்னை அடிக்கையில ஒருத்தன் ஜோப்புலருந்து பத்து ருபா காசு விழுந்தது அதை தொழாவு... என்னும் போது தியேட்டர் அதிர்கிறது. அதே மாதிரி, ஒயிட் & ஒயிட் தவுலத் வில்லன், கையேந்துறவன், கை ஓங்க மாட்டான்... என விஜய் ஆண்டனியை சந்தேகிப்பது எல்லாம் "நச் படமாக்கப்பட்டுள்ளது.


இவர்களைக் காட்டிலும், அவங்க சாமிகிட்ட பிச்சை எடுக்க உள்ளே போகும்போது பிச்சை கேட்டு டிஸ்டர்ப் பண்ணக் கூடாது, அவங்க குடுக்கற, ஒரு ரூபாக்கு நமக்கு 2 கண்ணும் இருக்க கூடாதுன்னு நினைப்பாங்க.... பிச்சைக்காரனுக்கும் மனசு இருக்க ... 6 மணிக்கு மேல அவங்களுக்கும் வேற லைப் இருக்கு... என்றபடி , முகம் முழுதும் கறுப்பு பூசி விஜய்யை பிச்சைக்கு தயார் செய்யும் க.சா.கு.தாரர் மூர்த்தி., முதல் படத்துல பார்க்க சகிக்காத முகத்தை மூனாவது படத்துல இவர்தான் நம்ம ஹீரோன்னு ஏத்துக்கறோமே .... அது என்ன? அந்த நடிகன் அழகாயிட்டான்னு அர்த்தமா ? என்ன ..? என உதாரணம் ... சொல்வது சூப்பராக தியேட்டரில் அலப்பறையை கூட்டுகிறது. அதே மாதிரி பிச்சைக்காரனிடம் அடி வாங்கியதை வெளியில் சொல்லக் கூடாது... என அடியாட்கள், சக ஆளுக்கு தரும் ஒயின்ஷாப் காட்சி களேபரம் அதகளம்!


வில்லனின் மனைவி, அவரிடம், இத்தனை வருஷமா உங்க கூட குடும்பம் நடத்தி இருக்கேன் உங்களை எப்படி தூங்க வைக்கிறதுன்னு தெரியாதுங்களா? என்றபடி நோட்டு எண்ணும் மிஷினில் ஒரு ஐநூறு ரூபா கட்டை போட்டு அது எண்ணும் காட்சியும், சப்தமும் அவர் கண்ணில் படும்படி தூங்க வைப்பது, உள்ளிட்ட காட்சிகள், பால் போடுறவன் பால்காரன்... பேப்பர் போடுறவன் பேப்பர்காரன்... அப்போ பிச்சைப் போடுறவன் தான பிச்சைக்காரன்.... என்பது உள்ளிட்ட லாஜிக் ... கேள்விகள்.... பன்ச் டயலாக்குகள்...., ஆடிக் கார் காரனே ஆடிப் போயிட்டான்... சீன், பச்சே, எண்ட காதலி உண்ட மனைவி ஆகலாம்.... எனும் அந்த 7 நாட்கள் டயலாக்கை அர்த்தபுஷ்டியாக நிரப்பிய ஒயின்ஷாப் சீன்... என ஒவ்வொரு காட்சியையும் பார்த்து, பார்த்து செதுக்கியிருக்கிறார் இயக்குனர். வாவ்!


வீர செந்தில்ராஜின் படத்தொகுப்பு, பிரசன்னகுமாரின் ஒளிப்பதிவு, விஜய் ஆண்டனியின் இசையில், நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்........., நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில்... எனத் தொடங்கித் தொடரும் பாடல்கள் உள்ளிட்டவை ப்ளஸ் பாயிண்ட்டுகள்.


நான் எத்தனையோ நாள் பிச்சைக்காரனா இருந்திருக்கேன்... அதுக்காக வருத்தப்பட்டதில்ல... ஆனா, பணக்காரனா இருப்பதுக்கு இந்த நிமிஷம் வேதனைப்படுறேன், "என தன் வசதியான நிலைத்தெரிந்து மன்னிப்பு கேட்கும் இன்ஸ்பெக்டரிடம் கூறும் க்ளைமாக்ஸுக்கு முந்தைய காட்சி ஒன்று போதும், சசியின் இயக்கத்திற்கு சலாம் போட! உங்களுக்கு, எனக்கு, இந்த உலகத்துல உள்ள எல்லோருக்கும் நிரந்தர ஒரே எதிரி பசி..., "நம்பிக்கையோட பலமே, முழுசா நம்புறதல தாண்டா இருக்கு... எனும் தத்துவ "பன்ச்சுகள் வரை.... சகலமும் , பிச்சைக்காரனுக்கு பிடித்த , சில்லறைகளாக சசியின் இயக்கத்தில் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்றன... இவை அனைத்தும் ,ரசிகனுக்கும் பிடித்து அவை தயாரிப்பாளருக்கு நோட்டுகளாகட்டும்!


மொத்தத்தில், விஜய் ஆண்டனி - சசி கூட்டணியின் பிச்சைக்காரன் - எல்லோருக்கும் பிடித்த, குணக்காரன், பணக்காரன்!


---------------------------------------------------------------


குமுதம் சினி விமர்சனம்
நான், சலீம் என்று தனக்குப் பொருத்தமான கதையைத் தேர்ந்தெடுப்பதில் விஜய் ஆண்டனி கில்லாடி.. இந்தப் படத்திலும் அது தொடர்கிறது.


கதை?

கோடீஸ்வரத் தொழிலதிபரான விஜய் ஆண்டனியின் அம்மா, ஒரு விபத்தில் கோமா நிலைக்குப் போகிறார். அம்மா கண் திறக்க வேண்டுமானால் நீ யார் என்று வெளியில் சொல்லாமல் ஒரு மண்டலம் (48 நாட்கள்), பிச்சைக்காரனாகவே முழுமையாக வாழ வேண்டும் என்கிறார் சாமியார்.

பிச்சைக்காரனமாக மாறும் விஜய் ஆண்டனி அதை எப்படி எதிர்கொள்கிறார்? இடையில் ஏற்படும் மெல்லிய காதல் என்று சில்லறைக் காசுகளை சிதறவிட்டமாதிரி கலகலவென்று செல்கிறத படம். இயக்கம், சசி.


அழுக்கு உடையுடன் கையேந்தி படம் முழுக்க பிச்சைக்காரனாக நடிக்க ஒரு அசாத்திய துணிச்சல் வேண்டும். கொஞ்சம் அப்பாவித்தனம், கொஞ்சம் காதல், கொஞ்சம் ஆக்ஷன், கொஞ்சம் ஹ்யூமர் என்று வெற்றிகரமாகக் கையாண்டு மனதில் பதிகிறார் விஜய் ஆண்டனி. அதுவும் காதலியுடன் பைக்கில் செல்லும்போது தன்னை மறித்து மாமூல் கேட்கும் போலீஸ்காரரிடம் தான் யார் என்று அசால்ட்டாகச் சொல்லும் காட்சி ஆஹாஹா!


சட்டென்று பார்க்க காலக சந்தியாவின் கலர் பதிப்பு மாதிரி இருக்கிறார் சட்னா டைட்டஸ், காசுக்காக காதலன் கையேந்தும்போது, அந்தக் கையில் முகம் புதைத்து கலங்குவது நைஸ்.

அந்த சிரிப்பு அடக்க முடியாத வில்லனும், காருக்குள் அடிக்கடி அடி வாங்கும் டிரைவரும் சின்ன வேடம் என்றாலும் புன்னகைக்கு வைக்கிறார்கள்.


பிச்சைக்காரர்களின் இன்னொரு உற்சாக உலகத்தை ஜாலியாகக் காட்டியிருக்கிறார்கள்.

பாடல்கள் ஓகே. பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு பளிச்.


அந்த அம்மா, சின்ன வயதிலும் வயதானவர் போலவே தோன்றுவது ஏனோ?


மனநோயாளிகளிடம் புதிய மருந்துகளை சோதிக்கும் காட்சிகளும் தேவைதானா?


கத்திக்குத்து வாங்கிய காதலியைக் காப்பாற்ற காசு இல்லாததால் தன் சத்தியத்தை மீற விஜய் ஆண்டனி முயலும்போது பிச்சைக்காரர்கள் எல்லாம் பணம், நகை, செல்போன் என்று எடுத்துக் கொடுக்கும் காட்சியில் தியேட்டரில் கைத்தட்டுகிறார்கள்!


பிச்சைக்காரன் : ஃபுல் மீல்ஸ்.


குமுதம் ரேட்டிங் - நன்று


--------------------------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்!
'எதிர்மறைப் பொருளில் தலைப்பு வைப்பது ராசியில்லை' என்ற கோடம்பாக்க விதியை மீறியதே ஒரு புதுமைதான்.


பாசத்துக்குரியவர்களின் சிக்கல் தீருவதற்காக மண்சோறு சாப்பிடுவது, மடிப்பிச்சை எடுப்பது போன்ற நேர்த்திக் கடன் செயல்பாடுகள் புழக்கத்தில் இருக்கும் வழக்கங்கள்தாம். இந்தப் படத்தில் 48 நாட்கள் முழு நேரப் பிச்சைக்காரனாக வாழ்ந்து தன்னுடைய தாயின் பிரச்னையைக் கதாநாயகன் தீர்த்து வைக்கிறார்.


கதை கரு வித்தியாசமானதுதான், ஆனால் பீட்ஸாக் கடை முதலாளியான பெண்ணுடன் (கனவு) காதல் பாட்டு, அடிக்கொரு தடவை பெரிய காரணம் எதுவும் இல்லாமலே பலரையும் சவட்டி எடுப்பது, சாயங்காலம் 6 மணிக்குமேல் பிராண்டட் ஷர்ட் போட்டு உலவுவது, மனநோயாளியாக நடித்துச் சாலையோரத்தில் உறங்கும் இளம் பெண் பிச்சைக்காரியின் கற்பை காப்பது, போலி மருந்து நிறுவனத்துக்கு ஆப்பு வைப்பது மாதிரியான மசாலா வேலைகளையும் கதாநாயக இலக்கணப்படி உபரியாகச் செவ்வனே செய்கிறார் 'பிச்சைக்காரன்'.


கொங்கு வட்டார மொழி சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கிறது. நெம்ப நல்லாயிருக்குதுங்கோவ்! ஆனாக்க, விஜய் ஆன்டனி மட்டும் சினிமாத் தமிழ்லயே பழமை பேசுறது ஏனுங்கோவ்?


பொதுவாகப் பொறுக்கிகளை, மேல்தட்டு வர்க்க பெண்கள் காதலிப்பதாகக் கதை பண்ணுவது தரைப்பட மரபு. இந்தப் படத்தில் பிச்சைக்காரனிடம் மோகிக்கிறார் கதாநாயகி. சமுதாயத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தியிருக்கிறார்கள் பலே!


கணவனுக்குத் தூக்கம் வருவதற்காக கரன்சி நோட்டுக் கட்டுக்களை எண்ணும் இயந்திரத்தை மனைவி இயக்குவது பளிச்! துண்டான தன்னுடைய விரலைக் கூட எடுக்காமல், தன்னை அடித்தவன் சட்டைப் பையில் இருந்து விழும் 10 ரூபாய் நாணயத்தைப்பொறுக்கும் காட்சியில் ஆலை அதிபரின் குணாதிசயம் கச்சிதமாகச் சொல்லப்படுகிறது.


விஜய் ஆன்டனி ஆரம்பத்தில் பிச்சை எடுக்கத் தயங்கும் காட்சிகள் யதார்த்தம். பழகிப்போன பிறகு முதுகு அரிப்பைத் தீர்த்துக் கொள்ள கம்பத்தில் உராய்வது பரிதாபம்! சக பிச்சைக்காரர்கள் தொழில் கற்றுத் தரும் பாங்கு செம!


வசனங்கள் பல இடங்களில் இயல்பான நகைச்சுவை பொதிந்து, தேன் மிட்டாய்க்குள் இருக்கும் இனிப்புப் பாகாய் மிளிருகின்றன. உதாரணம்: பிச்சைக்காரிடம் உதை வாங்கு வில்லன்கள், பல வீட்டு சாப்பாடு அதான் இந்த வலி என்பது ஏந்துற கைக்கு ஓங்குற பழக்கம் இருக்காது போன்ற நறுக் வசனங்கள் அநேகம். சிரிப்பை அடக்குவது மாதிரி நடிப்பது ரொம்பக் கஷ்டம். அதை வில்லனின் அல்லக்கை ஒருவர் செய்திரக்கும் விதம் அபாரம்.


'உண்மைச் சொன்னால் அம்மா இறக்க நேரிடலாம்; சொல்லாவிட்டாலோ காதலி இருப்பார்' இந்த இறுதி காட்சி முடிச்சு பட்டாஸ்!
பிச்சைக்கார்! கல்லாகட்டிடுவான்!
படம் பார்த்துவிட்டு வந்த வேலூர் சுரேஷ் நாத் கருத்து: 'தாய்ப் பாசம் அருமை. வாழ்க்கையே நம்பிக்கையில் இருக்கு என்ற கருத்து சூப்பர். காதலுக்கு அந்தஸ்து தேவையில்லைங்கிறதும் பிடிச்சிருக்கு.'வாசகர் கருத்து (10)

K.Kamatchinathan - Sivakasi,இந்தியா
03 ஏப், 2016 - 12:09 Report Abuse
K.Kamatchinathan கருப்பு பணத்தை ஓழிக்க சொல்லும் ஐடியா சூப்பர் .... .... .... ....
Rate this:
Ravi Varma - coimbatore,இந்தியா
21 மார், 2016 - 10:57 Report Abuse
Ravi Varma வெரி குட்
Rate this:
M.CHANDRASEKARAN - coimbatore,இந்தியா
15 மார், 2016 - 20:20 Report Abuse
M.CHANDRASEKARAN அருமையான படம் வெகு நாட்களுக்கு பிறகு தமிழ் திரைக்கு கிடைத்த பொக்கிஷம்
Rate this:
sunil - thiruvannamalai,இந்தியா
15 மார், 2016 - 16:07 Report Abuse
sunil very super movie
Rate this:
sunil - thiruvannamalai,இந்தியா
15 மார், 2016 - 15:46 Report Abuse
sunil வெரி சூப்பர் படம், 2016 சூப்பர் ஹிட் படம் கதை பிரமாதம் நன்றி டைரக்டர் சசி சார் சுனில் (இந்திய எல்லை பாதுகாப்பு படை) புது டெல்லி
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
பிச்சைக்காரன் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in