பாலிவுட்டின் குயினான நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியாகியிருக்கும் ரொமாண்ட்டிக், காமெடி படம் தான் ''கட்டி பட்டி''. இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்துள்ளது என்று இனி பார்ப்போம்...
வெவ்வேறு ஊரை சேர்ந்த மாதவ் காப்ரா எனும் இம்ரான் கானும், பயல் எனும் கங்கனா ரணாவத்தும் கல்லூரியில் ஒன்றாக படிக்கின்றனர். இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். கல்லூரி முடியும் தருவாயில் இருப்பதால் இருவரும் பிரியும் சூழல் உருவாகிறது. இதனால் இருவரும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ முடிவு செய்கின்றனர். ஐந்தாண்டுகளுக்கு பிறகு பயல், மாதவ்வை விட்டு பிரிந்து செல்கிறார், அத்துடன் இனி நாம் சந்திக்க வேண்டாம் என்றும் கூறுகிறார். அதேசமயம் மாதவ்விற்கு மீண்டும் பயல் உடன் வாழும் ஆசை ஏற்படுகிறது. இருவரும் மீண்டும் இணைந்தார்களா..? இல்லை பிரிந்தது பிரிந்ததாகவே இருந்ததா..? என்பதற்கு வித்தியாசமாக விடையளிக்கிறது கட்டி பட்டி படத்தின் மீதிக்கதை.
இம்ரான் கான் அற்புதமாக நடித்திருக்கிறார். கங்கனாவுடனான ரொமான்ஸ் காட்சிகளிலும் மனிதர் பட்டைய கிளப்புகிறார்.
'தனு வெட்ஸ் மனு' படத்திற்கு பிறகு கங்கனாவின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் இது என்பதால் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு, ஆனால் அந்த எதிர்பார்ப்பை கங்கனா பூர்த்தி செய்ய தவறிவிட்டார். அதேசமயம் படத்தில் அவர் அவ்வளவு அழகாக இருக்கிறார்.
ஹீரோ படத்திற்கு பிறகு நிகில் அத்வானியின் இயக்கத்தில் இந்தாண்டு வெளியாகியிருக்கும் இரண்டாவது படம் இதுவாகும். பழைய ஒயினை புதிய பாட்டில் அடைத்து வைத்து கொடுத்தார் போன்று, 1990களில் வந்த கதையை இப்போது ஒரு சிறிய மாற்றம் செய்து வெளியிட்டிருப்பது போன்று தோன்றுகிறது. இதனால் கட்டி பட்டியில் புதிதாக ஒன்றும் இல்லை. படத்தின் இசை சிறப்பாக இருக்கிறது.
பழைய கதையை திரும்ப பார்ப்பது போன்ற ஒரு உணர்வும், திரைக்கதையில் காணப்படும் தொய்வும் படத்தை போரடிக்க செய்துவிடுகிறது. இம்ரான்-கங்கனா இருவரும் இம்முறை தங்களது மேஜிக்கை செய்ய தவறிவிட்டனர்.
மொத்தத்தில், ''கட்டி பட்டி - பழைய மொந்தையில் புதிய கள்!''
ரேட்டிங் - 2/5