Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

நாயகி

நாயகி,Nayaki
29 செப், 2016 - 17:33 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » நாயகி

த்ரிஷா, கதையின் நாயகியாக நடிக்க, "சினிமா ஆசை காட்டி தன்னை சிதைத்து, சிதையாக்கி, புதைத்தவனை பழிக்கு பழிவாங்கும் இளம் பெண்ணின் ஆவியின் அட்டகாசங்களையே கரு, கதை, களம், காட்சிப்படுத்தலாக கொண்டு வெளிவந்திருக்கும் திகில் படமே "நாயகி".


த்ரிஷாவுடன் கணேஷ் வெங்கட்ராம், ஜெயப்பிரகாஷ், பிரமானந்தம்... உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடிக்க., கோவியின் இயக்கத்தில், "நாயகி" படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் பேனரில் என்.ராமசாமி வெளியிட்டிருக்கிறார்.


த்ரிஷாவையும் அவரது ரசிகர்களையும் மட்டுமே நம்பி வெளிவந்திருக்கும் இப்படக்கதைப்படி, சென்னை - செங்கல்பட்டு இடையில் இருக்கும் ஊர் நந்திவரம். அந்த ஊர் பெரியவரின் மகள் காயத்ரி. சின்ன வயதிலிருந்தே நடிப்பாசையுடன் வளரும், வளர்க்கப்படும் காயத்ரியின் பருவ வயதில், அவரை நடிகையாக்க அழைத்துப் போய் கற்பழித்து கொலை செய்கிறான் சினிமா ஒளிப்பதிவு இளைஞன் யுகேந்திரன். அதனால், தன் ஆன்மா சாந்தியடையாமல் ஆவியாகும் காயத்ரி, நந்திவரத்தில் உள்ள பண்ணை வீட்டில் பேயாக குடியேறி ஊர்மக்களை அலறவிட்டு, தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை பழி தீர்க்கும் கதை தான் நாயகி படத்தினுடைய கதை மொத்தமும்.


கதைநாயகி காயத்ரியாக, இதமான, பதமான, அபரிமிதமான அழகோடு... அசத்தலாக படம் முழுக்க பவனி வருகிறார் த்ரிஷா. படம் முழுக்க அழகிய ஆவியாகவும், சினிமா ஆசையில் சீரழியம் அப்பாவி பெண்ணாகவும் த்ரிஷாவின் நடை, உடை, பாவனைகள்... அனைத்தும் செம கச்சிதம். கதை மற்றும் காட்சியமைப்புபடி த்ரிஷா இறந்து போவதும், ப்ளாஷ்பேக் தவிர்த்து, ஆவியாய் நடமாடுவதும் மட்டுமே ரசிகனுக்கு துயரம் தரும் விஷயங்கள். மற்றபடி த்ரிஷா, எப்போதும் போல் இதிலும் க்ளாஸாய், ரசிகனுக்கு குளோசாய் தெரிகிறார்.


கிட்டத்தட்ட வில்லானாக யுகேந்திரனாக வரும் கணேஷ் வெங்கட்ராம் ப்ளாஷ்பேக் சீன்களில் மட்டும் ரசிகனின் கவனம் ஈர்க்கிறார்.


இன்னும் பிற நட்சத்திரங்களில்., தெலுங்கு பரமானந்தம் சில இடங்களில் சிரிக்கவும் சில இடங்களில் கடிக்கவும் செய்கிறார். மற்றபடி, காயத்ரி - த்ரிஷாவின் அப்பாவாக வரும் ஜெயப்பிரகாஷ் மட்டும் கச்சிதம். மீதி, நமக்கு அவ்வளவாய் தெரியாத தெலுங்கு முகங்கள் என்பது படத்திற்கு பலவீனம்!


கெளதம் ராஜுவின் பக்கா தொகுப்பும் அல்ல... பாடாவதி தொகுப்பும் அல்ல!


ஜெகதீஷின் ஒளிப்பதிவு பேய் படங்களுக்கே உரித்தான மிரட்டல் பதிவு.


ரகுகுஞ்சேவின் இசையில் "என்னானதோ எதானதோ..." பாடல் மட்டும் தாளம் போட வைக்கும் ரக ராகம்.


இயக்குனர் கோவி த்ரிஷாவை மட்டுமே நம்பி பெரும்பாலான காட்சிகளை காட்சிப்படுத்தியிருப்பதும், பின்னணி இசையில் திகிலையும், திடுக்கிடலையும் மிரட்டலாக கூட்டி, காட்சிகளில் காமெடிக்கே முக்கியத்துவம் கூட்டியிருப்பதாலும், படத்தில் இடம்பெறும் பெரும்பாலான தெலுங்கு முகங்கள், தத்தக்கா பித்தக்கா... என தமிழை கடித்து, குதறியிருப்பதாலும் அவ்வளவாய் தமிழ் ரசிகனால் "நாயகி"-யுடன் ஒட்டி உறவாட முடியவில்லை.. என்பது படத்திற்கு பலவீனம்.


மேலும், இயக்குனர் கோவியின் இயக்கத்திலும்., கிராபிக்ஸ் கைங்கர்யத்திலும் பறக்கும் டி.வி ரிமோட், கர்ண கொடூரமாய் துரத்தும் கசாப்புக் கடை கத்தி, சில வினாடிகள் தோன்றி மறையும் பேய் உருவங்கள் எல்லாம் படத்திற்கு பெரும்பலம். அதேநேரம், அப்படி பயமுறுத்தும் பேய் உருவங்களும் பறக்கும், துரத்தும் சாதனங்களும் ரசிகனின் சில நிமிட ஆச்சர்ய புருவ உயர்த்தலோடு காணாமல் போய்விடுகிறது... என்பது மேலும், பலவீனம்.


ஆக மொத்தத்தில், ஒரு கட்டத்திற்கு மேல், ரசிகனால்... த்ரிஷாவை பேயாய் பார்க்க முடியவில்லை என்பதால்., "நாயகி நல் தோழி அல்ல!!"




----------------------------------------------------------------------


கல்கி சினி விமர்னம்




பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள், பேயாக மாறிப் பழிவாங்கும் கதைகளுக்க நடுவில் இது கொஞ்சம் வித்தியாசமான படம். தம்மைக் கெடுத்த கயவனை உடனடியாகக் கொன்றுவிட்டதோடு, பெண்களுக்கு இன்னல் விளைவிக்கும் யாராக இருந்தாலும் தம் மாளிகைக்கு வரவழைத்துப் பட்டாக்கத்தியால் சதக் செய்யும் பரோபகாரப் பேய்தான் நாயகி.

இதற்கு உறுதுணையாக ஆட்களைப் பிடித்து அனுப்புவது பேயின் தந்தை. (இவரும் ஒரு பேய்தான்) ஆனால் டேப்லட்டில் கேண்டி கிரஷ் விளையாடும் நவீனப் பேய்.

அனுஷ்கா, நயன்தாரா மட்டும்தான் பேயாகித் திகில் கிளப்புவார்களா? நானும் சிறந்த பேயாகிப் பேர்வாங்குவேன் என்று சாதிக்கும் வெறியோடு த்ரிஷா களமாடியிருக்கிறார்.

தெலுங்கு, தமிழ் இரண்டு மொழிகளிலும் தயாரான படம் என்கிறார்கள். ஆனால் ஜெயப்ரகாஷின் தார்ப்பாய்ச்சு வேட்டியும், பிரம்மானந்தத்தின் நமத்துப்போன காமெடியும், கதாநாயக வில்லனின் மிகை நடிப்பும் தெலுங்கு டப்பிங் என்ற உணர்வையே தருகின்றன.

படத்தில் த்ரிஷா அழகோவியமாகத் திகழ்கிறார். ஃப்ரஷ் என்றால் அப்படியொரு ஃப்ரஷ்!

பேயைக் கிண்டலடிக்கும் சத்யம் ராஜேஷ். அதன் உக்கிரம் தாளாமல் அக்கா என அழைத்து தாஜா செய்ய முயல்வது சிரிப்பலைகளை உருவாக்குகிறது.

'எல்லாம் கல்யாணத்துக்குப் பிறகுதான்' என்பன போன்ற பேசித் தேய்ந்த வசனங்கள் அநேகம்!

அகால மரணம் அடைந்த நாயகி, பேயாகிப் பன்னுகிறார். சரிதான் அவரால் கொல்லப்பட்ட பலரும் பேய்களாக மாறுகின்றனர். அதுவும் ஓ.கே! நியாயப்படி த்ரிஷாவுக்கு எதிராகப் போர்க்கொடி அல்லவா உயர்த்தியிருக்க வேண்டும் அந்தப் பேய்க் கூட்டம்? அதுதான் இல்லை! நாயகிப் பேய்க்கு அடிமையாகி, துஷ்டர்களை கும்மாங்குத்துக் குத்துகின்றன.

சாதா கண்களுக்குத் தெரியாத பேய், கேமரா மூலம் பார்த்தால்தான் தெரியும். அதற்கான காரணத்தை கேட்டால் அசந்து போவீர்கள். நடிக்கும் ஆசையில் செத்துப்போன பேய் அது; அதனால்தான் அப்படியாம். பேயின் நிறைவேறாத ஆசையை, அதை நடிக்க வைத்துத் தீர்த்து வைக்கிறார் கதாநாயக வில்லன்! அடேயப்பா!

நம்ம ஊர்ப் படம் பார்க்கும் உணர்வை அளிக்கிறது. லேசாகச் சிரிப்பும் வருகிறது. மாளிகைக் காட்சிகள் அசத்தலாக இருக்கின்றன.

பேய்ப் படத்தில் அதிர்ச்சியும் கிலியும் இலலாத குறை, சடாரென்று குரலெடுத்த ஜெயப்ரகாஷ் பாடும்போதும், த்ரிஷா ஆடும்போதும் நீங்குகிறத.

மொத்தத்தில் பேய்ப் படத்துக்குண்டான தில்லும் இல்லை! திகிலும் இல்லை.




திரையரங்கில் ரசிகர் வேளச்சேரி சீனிவாசன் கருத்து: பேயைப் பார்த்தால் பயத்துக்குப் பதில் பாவமாக இருக்கிறது. வித்தியாசமான பேய்ப்படம். சுமார் ரகம்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
நாயகி தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in