Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

100 டேய்ஸ் ஆப் லவ் (மலையாளம்)

100 டேய்ஸ் ஆப் லவ் (மலையாளம்),100 days of love (Malayalam)
21 மார், 2015 - 15:20 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » 100 டேய்ஸ் ஆப் லவ் (மலையாளம்)

நடிகர்கள் : துல்கர் சல்மான், நித்யா மேனன், வினீத், அஜு வர்கீஸ், ஜேக்கப் கிரிகேரி, சேகர் மேனன் மற்றும் பிரவீணா


இசை : கோவிந்த் மேனன்


ஒளிப்பதிவு : பிரதீஷ் வர்மா


வசனம் : எம்.ஆர்.விபின் & சுஹைல் இப்ராஹிம்


இயக்கம் : ஜென்யூஸ் முகம்மது



கதை : இன்னொருவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை காதலித்து தன் பக்கம் இழுக்கும் ஆயிரத்து ஒன்றாவது கதை தான்.. ஆனால் அதை படமாக்கிய விதத்தில் தான் ஃபீல் குட் ஸ்டோரியாக மாற்றி விசிலடிக்க வைத்திருக்கிறார்கள்.


பெங்களூரில் தனது நண்பன் சேகர் மேனன் வீட்டில் தங்கிக்கொண்டு ஒரு பத்திரிகையில் கார்ட்டூனிஸ்ட்டாக வேலை பார்க்கிறார் துல்கர் சல்மான். துல்கரின் கேர்ள்பிரண்ட் அவருக்கு குட்பை சொல்லிவிட்டு பிரிந்த ஒரு மழை நாளில், சோகத்துடன் வீட்டிற்கு போவதற்காக டாக்ஸி ஒன்றை துல்கர் அழைக்க, அதேநேரம் அங்கே வரும் நித்யா மேனனும் அந்த டாக்ஸியை அழைக்கிறார். டாக்ஸியை நித்யாவுக்கு விட்டுக்கொடுக்கிறார் துல்கர்.


ஆனால் நித்யாவின் ஹேண்ட்பேக் தவறி விழுந்துவிட, அதை பத்திரப்படுத்துகிறார் துல்கர் அதில் பழைய மாடல் கேமரா ஒன்றும் பிலிம் ரோல் ஒன்றும் இருக்கிறது. வீடியோ கேம் கடை நடத்தும் நண்பன் சேகர் மேனன், அந்த போட்டோக்களை பிரின்ட் போட்டு அதன் மூலம் நித்யாவை தேடி கண்டுபிடிக்கலாம் என அவர் பாணியில் கேம் விளையாட தூண்டுகிறார்.


ஒருகட்டத்தில் துல்கரின் இன்னொரு நண்பரான அஜு வர்கீஸை, ஒரு பெண் காரில் மோதிவிட்டதாக மருத்துவமனையில் சேர்க்க, அங்கே வரும் துல்கர் அந்தப்பெண் தான் தேடிய நித்யா மேனன் என்பதை அறிந்து சந்தோஷம் அடைகிறார். அடுத்த நிமிடம் நித்யா தனது பள்ளித்தோழி என்று தெரியவர அதிர்ச்சியுடன் அங்கிருந்து கிளம்புகிறார். காரணம் பள்ளிக்காலத்தில் துல்கரை அவமானப்படுத்தியவராம் நித்யா மேனன்..


ஆனால் தொடர்ந்து துல்கரை சந்திக்க வரும் நித்யா மேனனின் அன்பை, நட்பை உணர்ந்து அவருடன் நெருக்கமாக பழகும் துல்கர், ஒருகட்டத்தில் அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். தனது பெற்றோர் காதல் திருமணம் செய்தவர்கள் என்றாலும் கூட, காதலில் நம்பிக்கை இல்லாதவரான நித்யா மேனன், தனது தந்தையின் நண்பர் மகனை மணக்க ஏற்கனவே சம்மதித்துள்ளது துல்கருக்கு தெரியவருகிறது.. நிச்சயதார்த்தமும் முடிந்து விடுகிறது. இறுதியில் காதல் எப்படி ஜெயிக்கிறது என்பது தான் க்ளைமாக்ஸ்.


கொள்கை பிடிப்புடன் வேலையை உதறுவதாகட்டும், நித்யா மேனனுடன் குழந்தைத்தனமான ஈகோவை வெளிப்படுத்துவதாகட்டும், காதல் கைகூடாமல் போய்விடுமோ என்கிற வேதனையை வெளிப்படுத்துவதாகட்டும் காட்சிக்கு காட்சி கைதட்டலை அள்ளுகிறார் துல்கர். இவ்வளவு யதார்த்தமாக நடிக்க இந்த சிறுவயதிலேயே எங்கே கற்றுக்கொண்டார் துல்கர் என்கிற கேள்வி அவசியமற்றது. அவரது தந்தையே ஒரு நடிப்பு பாசறைதானே..


ரசிகர்களுக்கு இதில் எதிராபாராத போனஸ் சர்ப்ரைஸாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் துல்கர் சல்மான்.. ஆனால் இன்னொரு துல்கர் இடைவேளைக்கு முன் ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் இந்த துல்கரின் அண்ணனாக, அவரது அப்டேட்டட் ஹைடெக் வெர்ஷனாக வருவது ஆஹா. ஆஹா.. பாக்கியம்.


காதலையும் நட்பையும் ஒன்றாக குழப்பிக்கொள்ளாத தெளிவான க்யூட் கம் சப்பி கேர்ளாக மனதை அள்ளுகிறார் நித்யாமேனன். காதலில் நம்பிக்கை இல்லாத அவர் கடைசி நேரத்தில் காதலில் விழுவது ஹைக்கூ கவிதை.. நியூ இயர் பார்ட்டிக்கு செல்வதற்கு முன் துல்கர். நித்யாவிற்கு பார்ட்டி தருவதும், ஆனால் துல்கர் தந்த உணவு புட் பாய்சனாகி, இருவரும் மருத்துவமனையில் நியூ இயர் கொண்டாடுவதும் புதுசு.


வழக்கமாக அதிரவைக்கும் காமெடிக்கு சொந்தக்காரரான அஜு வர்கீஸ் இதில் அமைதியாக வந்து செல்கிறார். துல்கருடன் இரண்டு படங்களில் காமெடி ஜோடி போட்ட ஜேக்கப் கிரிகேரியை க்ளைமாக்ஸ் காட்சியில் மட்டும் காண்பித்து வீணடித்திருக்கிறார்கள். அவரை இன்னும் கொஞ்சம் விளையாடவிட்டிருக்கலாம்.


இவர்கள் இருவரையும் காமெடியில் ஈசியாக ஓவர்டேக் செய்துவிடுகிறார் துல்கரின் நபராக படம் முழுதும் வரும் சேகர் மேனன். பார்ப்பதற்கு நம்ம ஊர் இசையமைப்பாளர் விபின் சித்தார்த் மாதிரி மெகா சைஸில் இருக்கும் இவர், துல்கருடன் சேர்ந்து அடிக்கும் கூத்துகளை பார்க்கும்போது, சினிமாவில் இவரது இன்னிங்க்ஸ் வெற்றிகரமாக ஆரம்பமாகி இருப்பது தெரிகிறது. நித்யாவின் பெற்றோராக வினீத், பிரவீணாவின் நடிப்பு நிறைவாக இருக்கிறது.


வசனகர்த்தாக்களான எம்.ஆர்.விபின் & சுஹைல் இப்ராஹிம் இருவரும் படத்தின் கலகலப்பிற்கு துணை நிற்கிறார்கள். குறிப்பாக சினிமாக்களில் இடம்பெறும் ரயில்வே ஸ்டேசன் க்ளைமாக்ஸை கிண்டலடித்து, அதே ரயில்வே ஸ்டேஷனில் க்ளைமாக்ஸ் காட்சியை அமைத்திருப்பது சூப்பர். பேஸ்புக் கமென்ட்டுகளையும், காதலைப்பற்றிய லேட்டஸ்ட் கருத்துக்களையும் அங்கங்கே கடுகாக தாளித்திருக்கிறார்கள்.


முழுக்க முழுக்க பெங்களூரில் நடைபெறும் கதைக்களத்தில் பெங்களூர் டேய்ஸ்' ஆபத்தில் நாம் பார்த்த பெங்களூரு நகரத்தில் இருந்து முற்றிலும் வித்தியாசமான ஒரு நகரமாக நம் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரதீஷ் வர்மா. கோவிந்த் மேனன் இசை மனதை வருடும் மயிலிறகாக பாடல்களை நம் மனதில் நுழைக்கிறது.


நம்ம ஊரில் இதே கதையை படமாக்கியிருந்தால் பப்படமாக்கி வந்த சூட்டோடு பெட்டிக்குள் அனுப்பியிருப்பார்கள். ஆனால் பிரபல மலையாள இயக்குனர் கமலின் வாரிசாக, இயக்குனராக அறிமுகமாகியுள்ள அவரது மகன் ஜென்யூஸ் முகம்மது கொஞ்சம் கூட சுவராஸ்யம் குறையாமல் படத்தை நகர்த்தி சென்றிருக்கிறார். கூடவே துல்கர் சல்மான்- நித்யாமேனன் கெமிஸ்ட்ரி சேர்ந்துகொண்டு இந்தப்படத்தை வெற்றிக்கோட்டை தாண்டி அழைத்து சென்றிருக்கிறது.


100 டேய்ஸ் ஆப் லவ் - திகட்டாத காதல்



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in