Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

பாம்பு சட்டை

பாம்பு சட்டை,Paambu Sattai
புதியம் ஆடம் தாசன் இயக்கும் படம் பாம்பு சட்டை
31 மார், 2017 - 15:31 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » பாம்பு சட்டை

பாபி சிம்ஹா - கீர்த்தி சுரேஷ் முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடிக்க, ஆடம்தாசன் இயக்கத்தில் போலி கள்ள நோட்டு கும்பலிடம் சிக்கும் ஏழை இளைஞனின் எழுச்சியை பக்காவாக படம் பிடித்துக் காட்டி, ஒவ்வொரு ரசிகனையும் உஷார்படுத்தியிருக்கும் படமே "பாம்பு சட்டை".

சென்னை பின்னணியில் ஒரு நடுத்தரத்திற்கும் கீழான குடும்பத்தை சார்ந்த பாபி சிம்ஹா, திருமணமான ஒரே மாதத்தில் புருஷனை இழந்த தன் அண்ணி பானுவை தன் அம்மாவாக பாவித்து அவருடன் ஒரே வீட்டில் அவரது மறுமண வாழ்க்கைக்கு பாடுபட்டபடி, வசித்து வருகிறார். பானுவும் பாபியை தன் உடன் பிறந்த தம்பியாக கருதி பாசம் காட்டுகிறார். இவர்கள் இருவரையும் ஏரியாவாசிகள் தவறாக பேச, அதில் வெக்ஸாகும் பாபி சிம்ஹா, பெரிய படிப்பும் இல்லாது, பெரிதாக வேலை வெட்டியும் இல்லாது மொட்டை ராஜேந்திரனின் தண்ணீர் கேன் சப்ளை நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, ஏரியாவில், தண்ணீர் கேன் போட ஆரம்பிக்கிறார்.

அதன் வாயிலாக தனது அன்றாட வாழ்க்கையை நடத்திட முயற்சித்துவரும் பாபி சிம்ஹா தனது அண்ணிக்கு, ஊராரின் ஏச்சு பேச்சுகளுக்கு பயந்துவேறு திருமணம் செய்து வைக்கவும் முயற்சிக்கிறார். ஆனால், பாபியின் அண்ணன் ஞாபகமாகவே இருக்கும் பானு, அதற்கு மறுக்கிறார். இந்நிலையில், தண்ணீர் கேன் போடும் வேலையை விருப்பமில்லாமல் செய்ய ஆரம்பிக்கும் பாபி சிம்ஹா, வேலைக்கு சேர்ந்த முதல்நாளே, படத்தின் நாயகி கீர்த்திசுரேஷை சந்திக்கிறார். மேலும், முதல் சந்திப்பிலேயே கீர்த்தி மீது, பாபிக்கு காதலும் ஏற்படுகிறது. பின்னர் கீர்த்தியை பார்ப்பதற்காகவே தினமும் தண்ணீர் கேன் போடும் வேலையை தொடர்கிறார். ஒருநாள் தனது காதலை கீர்த்தியிடம் தெரிவிக்கிறார். முதலில் காதலிக்க மறுக்கும் கீர்த்தி, பின்னர் பாபி சிம்ஹாவின் உண்மை காதலை புரிந்து கொண்டு, அவரதுகாதலுக்கு சம்மதம் தெரிவிக்கிறார்.

கீர்த்தியின் தந்தையாக சாக்கடை சுத்தம் செய்யும் தொழில் செய்பவராக வரும் சார்லி இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவிக்கிறார், ஆனால், பாபியின் ஏரியாவில் பாபி சிம்ஹாவையும், அவரது அண்ணி பானுவையும் சேர்த்து தவறாக பேசுவதாகக் கூறுகிறார். இதில் ஆத்திரமாகும் பாபி தனது அண்ணியை பற்றி நீங்களும் தவறாக பேச வேண்டாம் என்று, காதலையே உதற தயாராகி, வெளியேறுகிறார். இந்த பிரச்சனை பானுவுக்கு தெரியவர, பாபியின் காதல் வாழ்க்கைக்காக, தான் மறுமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்கிறார். அதன்பின், பானுவின் திருமணத்திற்காக தீவிரமாக களம் இறங்கும் பாபி சிம்ஹா, அதற்காக ஒரு மாப்பிள்ளையையும் தேர்வு செய்கிறார். ஆனால், அந்த மாப்பிள்ளை ஒரு பெரும் கடன்பிரச்சனையில் சிக்கிக்கொள்ள, அவரை மீட்க ரூபாய் எட்டு லட்சம் பணத்தை தயார் செய்யப்படாத பாடுபடும் பாபி சிம்ஹா, பைனான்ஸ் எனும் பெயரில் கள்ள நோட்டு ஏஜென்ட்டாக செயல்படும் குருசோமசுந்தரத்தின் வாயிலாக வில்லன் கே.ராஜனின் தலைமையிலான, போலி கள்ளநோட்டு கும்பலிடம் எட்டு லட்சத்திற்கு ஆசைப்பட்டு தான் கஷ்டப்பட்டு சேர்த்த, தனது ஐந்து லட்சம் பணத்தை இழக்கிறார். அதன் பின் தனது பணத்தை மீட்க, பாபி சிம்ஹா எப்படி போராடுகிறார்? தனது அண்ணி பானுவுக்கு தான் திட்டமிட்டபடி திருமணம் செய்து வைத்தாரா? தடை பல கடந்து கீர்த்தி சுரேஷை கரம்பிடித்தாரா...? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும் , விறுவிறுப்பாகவும் விடை சொல்கிறது "பாம்பு சட்டை" படத்தின் பரபரப்பான மீதிக்கதை.

"இன்னைக்கு மழை வருமான்னு ரமணன் சார், வானிலை பார்த்து ஆராய்ந்து தான் தெரிஞ்சுக்கணும்னு இல்ல... இந்த மயில் கிட்ட கேட்டுக் கூட தெரிஞ்சுக்கலாம்....." என்றபடி கீர்த்தியை பார்த்த மாத்திரத்தில் தொடங்கி, பொது இடத்தில், கீர்த்தியை இறுக்கி அணைத்து லிப் டு லிப் - கிஸ் அடித்து, விட்டு பேசும் டயலாக் வரை சகலத்திலும் பாபி சிம்ஹா படத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை தனது தனித்துவமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். கீர்த்தியுடனான காதல் காட்சிகள் மாதிரியே, ஆக்ஷன் காட்சிகளிலும் சரி, தனக்குரிய பணியை சரியாக செய்து இருக்கிறார். படத்தில் நாயகனாக இருந்தாலும் தனக்குள்ளே உள்ள வில்லத்தனத்தையும் சிறப்பாக கள்ள நோட்டு கும்பலிடம் காட்டி மிரட்டி உள்ளார். பாபி .வாழ்த்துக்கள். அந்த ஒவர் அடர்த்தியாக தெரியும் அவரது, ஹேர் ஸ்டைல் மட்டும் தான் கொஞ்சம் உறுத்தல்.

கதாநாயகி கீர்த்தி சுரேஷ், செம பாந்தமான குடும்ப பெண்ணாக, அடக்க ஒடுக்கமாகசேலை மற்றும் சுடிதார்களில்அழகான பெண்ணாக அம்சமாக வலம் வருகிறார். காதல் காட்சிகளிலும், தனி முத்திரை பதித்திருக்கிறார். அரிசி பையை தவறவிடும் முதியவருக்கு உதவும் முதல் காட்சியில் தொடங்கி, பள்ளியில் படிக்கும் காலத்தில் தன் தந்தை பார்க்கும் வேளையால் தனக்கு ஏற்பட்ட காதல் தோல்வியை பாபியிடம் சொல்லி, அவரது காதலை நிராகரிப்பதற்கான காரணமாக அதையே சொல்லி அசத்துவது வரை ஒவ்வொரு காட்சியிலும் ரசிகனை சிலிர்க்க வைக்கிறார்.

இப்படத்தில் பாபியின் அண்ணியாக வரும் மாஜி நாயகி பானு, இதில் சரியான கதாபாத்திரத்தை ஏற்று, ஒரு சிறந்த குணச்சித்திர நடிகையாக தனக்குரிய காட்சிகளை சிறப்பாக தந்திருக்கிறார். படம் முழுவதும் அழகான குடும்ப பாங்கில், அவர் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது.

படத்தில் போலி கள்ள நோட்டு கும்பல் தலைவனாக வில்லனாக வலம் வரும் கே.ராஜன் படம் முழுவதும் தன் வழக்கமான ஒவர் ஆக்டிங்கில் இருந்து ரொம்பவே மாறி, மிரட்டி இருக்கிறார். இப்படத்தில், இவருக்கு ஒரு வலிமையான கதாபாத்திரம். அதில், அவரது வசனங்களும், தோற்றமும், நடை, உடை, பாவனைகளும், பக்காவாக பொருந்தி ரசிக்கும்படி உள்ளது.

அவரால் பாபி மாதிரியே ஏமாற்றப்பட்டு அவருக்கு ஏஜன்ட்டாக வரும் "ஜோக்கர்" பட நாயகர் குருசோமசுந்தரம் சூழ்நிலைக்கு ஏற்ப தனது போக்கை மாற்றிக் கொள்ளும் ஒரு நல்ல பாத்திரத்தை ஏற்று பக்காவாக நடித்திருக்கிறார். அவரது கேரக்டர், "ஜோக்கர்" படத்தில் பேசப்பட்டது போலவே இதிலும் பேசும்படி இருக்கிறது. பாராட்டுக்கள்.

மொட்டை ராஜேந்திரனும் காமெடியில் கலக்கிய நேரத்தில் பாபி சிம்ஹாவுக்கு சில அறிவுரைகளை கூறுவதன் மூலம் குணசித்திர கதாபாத்திரத்தையும் சிறப்பாக ஏற்று நடித்திருக்கிறார். முக்கிய பாத்திரத்தில் வந்து ஹீரோவுக்கு உதவும் ஆர்.வி .உதயகுமாரும் கச்சிதம்.

நாயகி கீர்த்தியின் அப்பாவாக ,துப்புரவு தொழிலாளராக வரும் சார்லி தனது அனுபவ நடிப்பை சிறப்பாக தந்திருக்கிறார். அவர் பேசும் யதார்த்த தத்துவ வசனங்களும் மனதில் நிற்கிறது. அதிலும், சாப்பிடும் போது ஒரு சோற்று பருக்கையை தவறவிடும் இளையமகளிடம், அந்தபருக்கை எங்கெங்கெல்லாம் தப்பி, அவரது சாப்பாட்டு தட்டிற்கு வந்து சேர்ந்தது? என்பதை சார்லி விளக்கும் இடம் தியேட்டரில் படம் பார்ப்போரை மிகவும் யோசிக்க வைக்கிறது.

கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவு, ஒவியப்பதிவு. "கனவுகளால் கலைந்தோமே...", "நீயும் நானும் ஒன்னா சேர்ந்தா", "நீ உறவாக ஆச..." உள்ளிட்ட பாடல்களும் ரசனை. அதே மாதிரி அஜேஷ் அசோக்கின் பின்னணி இசையும் படத்தோடும் இப்படக் கதையோடும் ஒன்றவைக்கின்றது. படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. வசனங்கள் மிகப்பெரிய பலம்.

இயக்குநர் ஆடம் தாசன், இப்படத்தின் கதை, திரைக்கதை, களம்... எல்லாவற்றையும் சிறப்பாக அமைத்திருக்கிறார். அவரது , "பாம்பு சட்டை" எனும் பட டைட்டிலுக்கான விளக்கம் மற்றும் "தவறுசெய்பவர்கள் நிச்சயம் அதன் தண்டனையை அனுபவிப்பார்கள். அதில், இருவேறு கருத்துக்கு இடமே இல்லை..." என்ற ஒருதகவலையும், "சாப்பாட்டுக்குக்கூட வழி இல்லாத ஏழை எளியோர், தங்களது வாழ்க்கைக்காக, ஒரு போதும் தவறான வழிக்கு செல்ல மாட்டார்கள். அதற்கு அவர்களது மனசாட்சி இடம் கொடுக்காது..." எனும் மெஸேஜையும் பக்காவாக சொல்லி இருக்கிறார். அதற்காகவே இயக்குனரை பாராட்டலாம் "பாம்பு சட்டை" படத்தையும் பார்க்கலாம். ரசிக்கலாம்!

ஆகமொத்தத்தில், "பாம்பு சட்டை - பக்கா சட்டை!"



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in