Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

எனக்குள் ஒருவன்

எனக்குள் ஒருவன்,Enakkul Oruvan
13 மார், 2015 - 11:55 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » எனக்குள் ஒருவன்

எனக்குள் ஒருவனை தயாரித்து வௌிக்கொண்டு வர திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சி.வி.குமார், அபி.டிசிஎஸ் ஸ்டுடியோஸ் அபினேஷ் இளங்கோவன், சசிகாந்தின் ஒய்நாட் ஸ்டியோஸ், ரேடியன்ஸ் மீடியா வருண் மணியன் (த்ரிஷாவின் ஆத்துக்காரர் தான்...) உள்ளிட்ட நான்கைந்து பெரும் இளம் தயாரிப்பாளர்கள் இணைந்துள்ளதிலிருந்தே இவன் எத்தனை பிரமாண்டமானவன்? என்பது தெரிந்திருக்கும்!


ஜிகர்தண்டா, காவியத்தலைவன் ஆகிய படங்களின் வரிசையில், தமிழ் சினிமா இளம் ஹீரோக்களில் சோதனை முயற்சியாக வித்தியாசமான படங்களைத் தருவதில் சித்தார்த்துக்கு நிகர் அவர் தான்! என்றாலும் அதை கொஞ்சம் விறுவிறுப்பாக தர அவரும், அவரது சகாக்களும் முயறசிக்க வேண்டும் என்பது தான் எனக்குள் ஒருவன் படத்தின் மூலமும் சித்தார்த்துக்கு சொல்லப்படும் சங்கதி!


கதைப்படி திரையரங்குகளுக்கு தாமதமாக இருட்டில் வரும் ரசிகர்களின் டிக்கெட்டை பரிசோதித்து, டார்ச் லைட் வௌிச்சத்தில் அவர்கள் இருக்கையில் அமர உதவும் தியேட்டர் டார்ச் லைட் பையனாக வேலை பார்க்கும் அழுக்கு சித்தார்த்துக்கு, பீட்சா கார்னரில் வேலை பார்க்கும் தீபா சன்னிதி மீது காதல். இந்த காதல் கசிந்துருவதற்குள் தூக்கமின்மையால் தவிக்கும் சித்தார்த், தனது கூடா நட்பால் லூசியா எனும் ஒரு போதை மாத்திரைக்கு அடிமையாகிறார். அந்த மாத்திரை எப்படிபட்டதென்றால், தூக்கம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு தூக்கத்தை வரவழைத்து கொடுத்து கூடவே, அவர்கள் விரும்பும் வாழ்க்கையை கனவுலகிலும் அமைத்து கொடுக்கும் வல்லமை படைத்தது.


கொஞ்சம் கொஞ்சமாக அந்த போதை தூக்க மாத்திரைக்கு அடிமையாகும் சித்தார்த், கனவில் தான் விரும்பும் சினிமா ஹீரோ வாழ்க்கையை வாழ்கிறார். உடன் அவரது காதலியாக தீபா சன்னிதியும், நடிக்கும் ஆசையில் சித்தார்த்தையே வளைய வருகிறார். ஒருக்கட்டத்தில் போதை தூக்க மாத்திரைகளே துக்க மாத்திரையாகி, சித்தார்த்தை கோமா ஸ்டேஜில் தள்ளி, நாயகி தீபா சன்னிதியின் கைகளாலேயே கருணை கொலைக்கு முயலும் அளவிற்கு கொண்டு போகிறது. இறுதியில் சித்தார்த் - தீப்தி ஜோடி கனவிலும், நிஜத்திலும் சேர்ந்ததா.? நிஜம் எது.? கனவு எது..? என்னும் எதிர்பாராத திருப்பம் நிரம்பிய வித்தியாசமான கதையுடன், சித்தார்த்தின் இந்த நிலைக்கு காரணமானவர்களை சட்டம் என்ன செய்கிறது.? எனும் விஷயத்தையும் கலந்து கட்டி தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிய படைப்பை தர முயன்றிருக்கின்றனர். அது சற்றே சமீபமாக வௌிவந்த தனுஷின் அனேகன் படத்தை கொஞ்சமே கொஞ்சம் திரும்பவும் பார்த்த எஃபெக்ட்டை தருவது எனக்குள் ஒருவன் படத்தின் பெரும் பலவீனம்!


சித்தார்த், நடிகர் விக்கியாகவும், தியேட்டர் டார்ச் பாய் விக்னேஷாகவும் இருவேறு பரிமாணங்களில் வெவ்வேறு உயரம் தொட்டிருக்கிறார். நடிகர் விக்கி எனும் விக்னேஷாக வரும் ஸ்டைல் சித்தார்த்தும், தியேட்டர் டார்ச் பாயாக வேலை பார்க்கும் அழுக்கு சித்தார்த்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் நடிப்பில் இருதுருவங்களை தொட்டிருப்பதற்காக சித்தார்த்துக்கு ஹேட்ஸ் ஆப் சொல்லியே ஆக வேண்டும்! அதேநேரம், பத்திரிகையாளர்கள், மீடியாக்கள் மீது சித்தார்த்திற்கு அப்படி என்ன கோபமோ.? மனிதர், நடிகர் விக்கியாக ஒரு பிரஸ்மீட் காட்சியில் கேள்விகேட்கும் நிருபரின் பர்ஸ்னல் வாழ்க்கையை பப்ளிசிட்டி பண்ண பார்ப்பது அபத்தமாக இருக்கிறது.


நடிகர்கள், இயக்குநர்கள், உள்ளிட்ட செலிபிரட்டிகளிடம், பத்திரிகையாளர்கள் துருவி துருவி கேள்வி கேட்பதற்கு காரணம், சாமானியர்கள் சட்டத்தை மீறி அவ்வளவு எளிதில் எதையும் சாதித்து விட முடியாது. ஆனால் பணபலமும், படைபலமும் படைத்த மேற்படி செலிபிரட்டிகள்., சட்டத்தை சட்டை பைக்குள் வைத்துக் கொண்டு எது வேண்டுமானாலும் சட்டத்திற்கு புறம்பாக செய்ய முடியும்! அவ்வாறு அவர்கள் செய்து விடக்கூடாது... பத்திரிகை மீடியாக்கள் அவர்களை கண்காணித்து கொண்டிருக்கின்றன... என்பதை உணர்த்த தான் மீடியா மீட்களில் அது மாதிரி கேள்விகள்... இவர்களது நடத்தைகள் செய்திகள் ஆகின்றன! இதை சித்தார்த்தும் இப்பட இயக்குநர் பிரசாத் ராமர் மற்றும் தயாரிப்பாளர் சி.வி.குமார் உள்ளிட்டவர்களும் புரிந்து கொண்டால், இது மாதிரி காட்சிகள் இடம் பெற்றிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது!


நான் என் உழைப்பால் வசதியானேன், நான் ஏன் அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும்? என கேட்பது மாதிரி., இருக்கிறது... நான் நடித்து புகழடைகிறேன், என்னை ஏன் எழுதுகிறீர்கள்.? ஏன் கேள்வி கேட்கிறீர்கள்.? என்பது இருக்கிறது... படத்தில் இடம்பெறும் சித்தார்த்தின் அந்த பிரஸ்மீட் பேச்சு! இது வலிய திணிக்கப்பட்ட காட்சி என்பதால், இது சித்தார்த்தின் எண்ணம் மட்டுல்ல... தயாரிப்பாளர் சி.வி.குமார் உள்ளிட்ட இப்படம் சம்பந்தப்பட்ட ஒட்டுமொத்த சினிமாக்காரர்களின் எண்ணமுமாக தெரிவதால், அவர்களுக்கு ஒரு கேள்வி....?


நீங்கள் மட்டும் அரசியல் பிரபலங்களையும், பெரும் தொழிலதிபர்களையும், சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களையும் தாக்கியும், தூற்றியும் படம் எடுக்கலாம், பத்திரிகையாளன் உங்களை பற்றி கேள்வி கேட்க கூடாதா.?, எழுதக்கூடாதா...?! என்பது தான் அது! சரி போகட்டும்!! சித்தார்த், சிவி குமார் உள்ளிட்டோர் இனியாவது இதுமாதிரி காட்சிகளை தவிர்ப்பது உத்தமம்!


திவ்யாவாக, இப்பட சித்தார்த் மாதிரியே இருவேறு உயரம் தொட்டிருக்கும் தீபா சன்னிதி, ஹோம்லி லுக்கிலும், கிளாமரிலும் ஒருசேர ரசிகர்களை மகிழ்விக்கிறார். காதலனை கருணை கொலை செய்ய முயலும் அவரது காஸ்ட்லி லுக்கிலும் சரி, பீட்ஸா பெண்ணாக யதார்த்தத்தை தியேட்டர் டார்ச் பாய் சித்தார்த்திற்கு புரிய வைக்கும் முயலும் சீன்களிலும் சரி நடிப்பில் மிளிர்கிறார்.


சிருஷ்டி டாங்கே, நரேன், மகேஷ், அஜய் ரத்தினம், மகாதேவன், ஒய்சிஜி ஜெபி, இந்திரஜித், ரமாதாஸ், மிட்பு உள்ளிட்டர்வகளும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.


சந்தோஷ் நாராயணின் இசை, கோபி அமர்நாத்தின் ஔிப்பதிவு, லியோ ஜான்பவுலின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் லூசியா எனும் கன்னடப்படத்தை தமிழுக்கு ஏற்ற மாதிரி தந்து, அதில் சித்தார்த்தின்(நிஜக்) காதலையும் கொஞ்சம் கலந்துக(கா)ட்டி எனக்குள் ஒருவனாக தந்திருக்கும் இயக்குநர் பிரசாத் ராமர் நிச்சயம் பாராட்டுக்குரியவர்! அதேநேரம் வித்தியாசமான கதைகளை படமாக்கும்போது, அதை விறுவிறுப்பாகவும் தர முயற்சித்திருந்தார் என்றால் அவர் போற்றுதலுக்கும் உரியவராக இருந்திருப்பார்.


ஆகமொத்தத்தில், எனக்குள் ஒருவன் - ரசிகர்களுக்குள் ஒருவனாக இல்லாது சற்றே விலகி நிற்கிறான் பாவம்!




குமுதம் விமர்சனம்




எனக்குள் ஒருவன்


'எவன் தன்னோட வாழ்க்கையை வாழறான் இவனுக்கு அடுத்த வீட்டுக்காரன் பொண்டாட்டி மேல ஆசை. அவனுக்கு இவன் பொண்டாட்டி மேல ஆசை..' - படத்தில் வரும் கொச்சையான இந்த டயலாக்தான் கதையின் அடிநாதம்.

ஒரு டப்பா சினிமா தியேட்டரில் எடுபிடியாக இருக்கும் சித்தார்த் தன்னுடைய கனவில் மட்டும் பெரிய ஹீரோவாகத் தன்னை கற்பனை செய்து கொள்கிறார். ஒரு மாத்திரையின் உதவியால் அந்தக் கனவு தொடர, நிஜமும், நிழலும் சந்திக்கும் மையப் புள்ளிதான் 'எனக்குள் ஒருவன்' இயக்கம் பிரசாத் ராமர்.

இரண்டு மாறுபட்ட பாத்திரங்கள். கறுப்பு நிறம், எத்துப்பல், தயக்கமான உடல் பாவம் என்று அந்த தியேட்டர் தொழிலாளி பாத்திரத்தில் குட்டிக் கமலாய் மிளிர்கிறார் சித்தார்த். மார்டன் கெட்டப்புக்குச் சொல்லவா வேண்டும்?

கனவுக் காட்சிகளை எல்லாம் கறுப்பு வௌ்ளையிலேயே காட்டியிருப்பது கவிதை.

'சிலை' மாதிரி இருக்கிறர் தீபா 'சன்னதி'! நடிக்கவும் வருகிறது.

தியேட்டர் அதிபராக வரும் நரேனும் எந்த க்ளூவும் கிடைக்காத நிலையில் அஞ்சாமல் குற்ற முடிச்சை அவிழ்க்கும் மகேஷூம் கம்பீரம்.

சந்தோஷ் நாராயண் இசையில் கவிஞர் விவேக் எழுதிய 'பூ அவிழும்பொழுதில் ஓராயிம் கனா' பாடல் இதயத்தை வருடுகிறது.

'லூசியா' என்ற பெயரில் கன்னடத்தில் சூப்பர் ஹிட் அடித்த படம் அங்கங்கே கொஞ்சம் 'லூஸ்' ஆகியிருக்கிறது. டைட் செய்திருக்கலாம்.


எனக்குள் ஒருவன் - சாமானிய ரசிகனுக்கு அன்னியன்!


குமுதம் ரேட்டிங் - ஓகே


தியேட்டர் கமெண்ட்: 'ஏண்டி, சித்தார்த்தைப் பிடிக்கும்னு என்னைப் படத்துக்குக் கூட்டிட்டு வந்தியே, கதை எனக்குப் புரியல. வீட்டுக்கு வந்ததும் முழுக்கதையையும் நீ எனக்குச் சரியாகச் சொல்லணும்!'



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in