Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

வேலையில்லா பட்டதாரி

வேலையில்லா பட்டதாரி,Velai Illa Pattathari
31 ஜூலை, 2014 - 10:50 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » வேலையில்லா பட்டதாரி

தினமலர் விமர்சனம்


நம் நாட்டில் படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் பிரச்னைகளைப் பற்றி அவ்வப்போது படங்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன. சில படங்கள் மிகைப்படுத்தப்பட்ட கற்பனையாகவும், சில படங்கள் யதார்த்தமான படங்களாகவும் வந்திருக்கின்றன. படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் பிரச்னைகள் ஒரே மாதிரி இருப்பதில்லை. வாழ்க்கையின் முக்கியமான அடுத்த கட்டத்தில் காலடி எடுத்து வைத்து நன்றாக சம்பாதித்து, கல்யாணம், குடும்பம், குழந்தை என அவன் சிறகடிக்க ஆசைப்படும் நேரத்தில் அவன் பறப்பதை தடுக்கவும், அவனின் சிறகுகளை உடைத்தெறியவும் பல பேர் காத்துக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு இளைஞனின் வாழ்க்கையைத்தான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் வேல்ராஜ்.


பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய வேல்ராஜ் முதல் முறையாக இயக்கியிருக்கும் படம். ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக வெற்றி பெறும் இயக்குனர்களின் வரிசையில் இவரும் இடம் பிடித்துவிடுவார். தனுஷை ரசிகர்கள் எப்படிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவார்களோ அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தையும், அவருக்குப் பொருத்தமான கதையையும், காட்சிகளையும் உருவாக்கியிருக்கிறார். அதுவே அவருக்கு பாதி வெற்றியைக் கொடுத்துவிட்டது. ஒரு நடுத்தரக் குடும்பத்து யதார்த்த வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். இடைவேளை வரை யதார்த்த சினிமாவாக இருக்கும் படம், அதன் பின் கமர்ஷியல் பாதையை நோக்கி நகர்கிறது. அதிலும் யதார்த்தம் இருந்தாலும், சினிமாத்தனம் கொஞ்சம் அதிகம்தான். அதைக் கொஞ்சம் குறைத்திருந்தால் இரண்டாவது பாதியும் இன்னும் அதிகமாக ஈர்த்திருக்கும்.


ஒரு நடுத்தரக் குடும்பத்து வீட்டின் மூத்த மகன் தனுஷ். சிவில் இஞ்சினியரிங் படித்து முடித்து விட்டு நல்ல வேலைக்காக அலைந்து கொண்டிருக்கிறார். ஆனால், அவருடைய தம்பி நல்ல வேலையில் இருக்கிறார். வீட்டில் அப்பா சமுத்திரக்கனி எப்போதும் திட்டிக் கொண்டேயிருக்க, எல்லா அம்மா போலவே தனுஷின் அம்மா சரண்யா மகனுக்கு ஆதரவாக இருக்கிறார். பக்கத்து வீட்டிற்கு குடி வரும் அமலாபாலுடன் பழக ஆரம்பித்து போகப் போக அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார் தனுஷ். ஒரு சந்தர்ப்பத்தில் சரண்யா திடீரென இறந்துவிட, அதற்கு தனுஷும் ஒரு காரணம் என அப்பாவும், தம்பியும் தனுஷை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள். அதன் பின் இறந்து போன சரண்யாவின் நுரையீரல் தானத்தால் புது வாழ்வு பெறும் சுரபியின் அப்பா மூலமாக அவர்களது கான்ட்ராக்ட் கம்பெனியில் தனுஷுக்கு வேலை கிடைக்கிறது. 200 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிடம் கட்டும் அரசாங்க திட்டத்திற்கு பொறுப்பேற்கிறார் தனுஷ். ஆனால், போட்டி நிறுவனம் அந்த திட்டத்தை நிறைவேற்றாமல் தடுக்கும் முயற்சியில் இறங்குகிறது. அவற்றை தனுஷ் சமாளிக்கிறாரா, அவரது குடும்பத்தினரின் அன்பை சம்பாதிக்கிறாரா, அமலாவுடனான காதல் நிறைவேறுகிறதா என்பதுதான் படத்தின் மீதி கதை.


“தேவதையைக் கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், யாரடி நீ மோகினி” பாதைக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார் தனுஷ். இம்மாதிரியான படங்களும், கதாபாத்திரங்களையும்தான் அவரிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை இந்தப் படம் தனுஷுக்கு நன்றாகவே உணர்த்தும். இந்த மாதிரி படங்களும், கதாபாத்திரமும் அவருக்கு லட்டு மாதிரி, நடிக்கிறதப் பத்தி கேட்கணுமா. ஆனால், அவ்வப்போது ரஜினிகாந்த் ஏன் எட்டிப் பார்க்கிறார் என்றுதான் தெரியவில்லை. பல காட்சிகளில் ரஜினியின் மேனரிசத்தைப் பார்க்க முடிகிறது. நீங்க நீங்களாவே இருப்பதுதான் நல்லது தனுஷ். பல காட்சிகளில் தனுஷ் பேசும் வசனத்திற்கு தியேட்டரில் கைதட்டல். அவ்வளவு பேர் அவரை மாதிரியே இருப்பாங்க போல. முக்கவால் வாசி காட்சிகளில் புகைப் பிடித்துக் கொண்டிருப்பது ஏனோ. ஒரு காட்சியில் சுரபிக்கு புகைபிடிப்பது பற்றி அட்வைஸ் கொடுத்துவிட்டு, அதன் பின் இவர்தான் அதிகமாக புகைபிடிக்கிறார். வேலையில்லாத பட்டதாரிகளில் புகை பிடிக்காத பல லட்சம் பேர் இருக்கிறார்கள்.


தனுஷ் காதலியாக அமலாபால். பல் டாக்டர் கதாபாத்திரம், எந்த ஊர்ல பல் டாக்டருக்கு மாதம் 2 லட்ச ரூபாய் சம்பளம் தருகிறார்கள்?. சும்மா பெருமைக்காக வைத்த வசனமா, இல்லை சீரியசாகவே இந்த வசனத்தை வைத்தார்களா தெரியவில்லை. தனுஷ் சொல்ற மாதிரி சினிமா நடிகை மாதிரி இல்லைன்னாலும், சீரியல் நடிகை மாதிரிதான் அமலா பால் தெரிகிறார். அடிக்கடி தனுஷுக்கு அட்வைஸ் மழை பொழிந்து அவரை மாற்ற முயற்சிக்கிறார். ஆனால், அமலா பால் முகத்தில் ஒரு சோகம் குடி கொண்டிருக்கிறதே. ஒரு வேளை இந்தப் படத்தில் நடிக்கும் போதுதான் திருமணம் பற்றி முடிவெடுத்திருப்பாரோ? இதற்குப் பிறகு நடிக்க மாட்டோமா என்ற கவலை வந்து விட்டது போல.


அமலா பாலுக்கு அப்படியே கான்டிராஸ்டாக சுரபி. எப்போதும் பளிச்சென இருக்கிறார். அவரைக் காட்டும் போதெல்லாம் ஒளிப்பதிவாளர் ஸ்பெஷல் லென்ஸ் போட்டு எடுத்திருப்பார் போல. சில காட்சிகளில் வந்து போகும் கதாபாத்திரத்திம்தான் என்றாலும் தன் அழகால் கவனத்தை ஈர்க்கிறார் சுரபி. ஆனால், இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்தால், அதையே நம் இயக்குனர் வழக்கமாக்கிவிடுவார்கள் என்பதை யாராவது அவருக்குச் சொல்லியாக வேண்டும்.


தனுஷின் அப்பாவாக சமுத்திரக்கனி, நடுத்தரக் குடும்பத்து அப்பாவை கண்முன் நிறுத்துகிறார். ஒரு காலத்துல நாமும் அப்படித்தானே திட்டு வாங்கியிருக்கிறோம், இப்பவும் திட்டு வாங்குகிறோம் என பல இளைஞர்களை யோசிக்க வைக்கும்.


அம்மான்னா சரண்யாதான், சரண்யான்னா அம்மாதான். இப்படிப்பட்ட அம்மாக்களால்தான் பல இளைஞர்கள் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். படத்தில் சரண்யாவின் முடிவு கண்ணீரை வரவழைக்கும் காட்சி. அந்த சோகப் பாடல் வேறு இன்னும் மனதை அழுத்தி விடுகிறது.


தனுஷின் தம்பியாக நடித்திருக்கும் புதுமுகம் அருமையான தேர்வு. வில்லனாக அமித்தேஷ், பணக்காரத் தோரணயை அழகாக காட்டியிருக்கிறார்.


இன்றைய இளைஞர்களின் ரசனைக்கேற்ப பாடல்களைப் போட்டிருக்கிறார் அனிருத். படத்தின் கதையை மீறி கொஞ்சம் மாடர்ன் ஆன இசையாக இருக்கிறது, அம்மா பாடலைத் தவிர.


வேலையில்லா பட்டதாரி - வேலைக்குப் போன பட்டதாரியை விட வேலையில்லாத பட்டதாரிதான் அதிகமா ரசிக்க வைக்கிறார்.










----------------------------------------------------



குமுதம் சினி விமர்சனம்




சாதா கதைதான். ஆனால் தனுஷ் என்னும் நடிப்பு அசுரனால் ஸ்பெஷல் சாதா ஆகியிருக்கிறது!


தண்டச்சோறு, வெட்டிப்பையன் என்று வீட்டால் வெறுப்பேற்றப்படும் ஓர் இளைஞன், வாழ்க்கையில் இனம் புரியாமல் வரும் எல்லா எதிர்ப்பையும் காலி செய்து வி.ஐ.பி. ஆகும் படம். இயக்கம் வேல்ராஜ்.


சமீப காலங்களில் தமிழில் ஹிட் தள்ளிக்கொண்டே போன தனுஷ் எல்லாவற்றிற்கும் சேர்த்து வைத்து பட்டையைக் கிளப்பியிருக்கிறார். கொஞ்சம் ரஜினி, கொஞ்சம் கமல் என்று ஸ்டைலும், பாவமும் சேர்ந்து களை கட்டுகிறார். ஏக்கம், கோபம், இயலாமை என்று அத்தனையும் அசால்ட்டாய் வருகிறது. மூச்சு விடாமல் பேசுவது ரகளை. அவருடன் சேர்ந்ததால் அந்த மோஃபாவும் நன்கு நடிக்கிறது.


அமலாபால் அடக்க ஒடுக்கம். திருமதி ஆயிட்டாங்க பாஸ்!


சுரபி என்னும் அழகு தேவதையை இன்னும் கொஞ்சம் உபயோகப்படுத்தியிருக்கலாம்.


சரண்யா வழக்கம் போல அம்மா கொடியை பலமாகப் பறக்க வைக்கிறார். சமுத்திரக்கனியும் ஓகே.


சண்டை மற்றும் பாடல் காட்சிகளில் தனுஷ், அனிருத் என்று இரண்டு ஒல்லிப்பிச்சான்களும் இணைந்து கில்லி அடித்திருக்கிறார்கள்.


லைட்டான வசனம் அங்கங்கே டச் பண்ணுகிறது.


பெரிய திருப்பம் எதுவும் இல்லாததும், எல்லாக் காட்சிகளையும் சுலபமாக யூகிக்க முடிவதும் மைனஸ்.


வே.ப. - பிரமோஷன்


குமுதம் ரேட்டிங் - நன்று



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

வேலையில்லா பட்டதாரி தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in