Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

கந்தசாமி

கந்தசாமி,
01 செப், 2009 - 00:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கந்தசாமி


தினமலர் விமர்சனம்


ஜென்டில்மேன், இந்தியன், ரமணா, அந்நியன் உள்ளிட்ட சூப்பர் ஹீரோ பட வரிசையில் வெளிவந்திருக்கும் மற்றுமொரு பிரமாண்ட தமிழ் படம் கந்தசாமி. சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் மட்டுமல்லாது இதில் சூப்பர்மேன் ஆகவும் ஹீரோ விக்ரம் வில்லன்களை பறந்து பறந்து தாக்குவது ஹைலைட்!


கதைப்படி பெரிய பெரிய பண முதலைகளிடம் கோடிக்கணக்கில் கொட்டி கிடக்கும் கறுப்பு பணத்தை தனது அதிகாரத்தையும், ஆள் பலத்தையும் பயன்படுத்தி கொள்ளையடித்து ஏழைகளுக்கும், அவர்களது தேவைகளுக்கும் பங்கிட்டு கொடுக்கும் சிபிஐ அதிகாரி விக்ரம். இப்படிப்பட்ட ஹீரோ, வில்லன் ஆசிஷ் வித்யார்த்தி வீட்டில் சிறப்பு சிபிஐ ரெய்டு நடத்தும்போது அவருக்கு அதிர்ச்சியில் பக்கவாதம் வந்து விடுகிறது. அதுகண்டு அவரது கோடீஸ்வர வாரிசு ஸ்ரேயா, தனது மேனிஅழகாலும், பணத் திமிராலும் விக்ரமை பழிவாங்க புறப்படுகிறார். ஆனால், ஸ்ரேயாவின் எண்ணம் தெரிந்த விக்ரமோ, விலகி விலகி போய் பணக்காரர்களிடம் உள்ள கறுப்பு பணத்தை அடித்து ஏழைகளுக்கு வழங்கும் கடமையிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார். இறுதியில் விக்ரம் வீழ்ந்து ஸ்ரேயா ஜெயித்தாரா? அல்லது விக்ரம் விழாமலேயே ஸ்ரேயா ஜெயித்தாரா? என்பதுடன் கறுப்பு பண ஒழிப்பு, வறுமை ஒழிப்பு... உள்ளிட்ட இன்னும் பல விஷயங்களுக்கு தீர்வு சொல்லியிருக்கிறது கந்தசாமி! கறுப்பு பண ஒழிப்பு, கதாநாயகி கவிழ்ப்பு என பழைய, பழகிய கதைதான் என்றாலும் அதை புதிய பாணியில் ஹைடைக்காக சொல்லி புண்ணியம் கட்டிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் சுசி கணேசன்.

கணவரின் மருத்துவ சிகிச்சைக்காக ஏழை பெண்ணிற்கு கொடுக்கும் பணத்தை காவல் அதிகாரி மன்சூர்அலிகானை சேவல் வேடத்தில் வந்து பறந்து பறந்து கொக் கொக்கென கூவியபடி துவம்சம் செய்வதில் தொடங்கி, சோளக்காட்டில் அதே சேவல் ரூபத்தில் வில்லன்களுடன் மோதுவது வரை ஆக்ஷனில் அடி தூள்பரத்தி இருக்கிறார் விக்ரம். ஆக்ஷன் காட்சிகளில் அசத்துவது போன்றே அழகி ஐஸ்வர்யா ராய் போல் வேடமிட்டு மயில்சாமி - சார்லி கோஷ்டிக்கு பாடம் புகட்டுவதிலும் சரி, வயோதிகராக வந்து விவசாயிகளுக்கு உதவுவது, சிபிஐ அதிகாரியாக சிலிர்த்து எழுவது என ஒவ்வொரு கெட்-அப்பிலும், மேக்-அப்பிலும், ச‌ெட்-அப்பிலும் சூப்பர் ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார் விக்ரம். அதேநேரம் ஆசிஷின் ஆட்களை போலீஸ் என நம்பி ஏமாறுவதும், மெக்சிகோவில் கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் செம்மண்பூமியில் அ‌‌லெக்ஸ் அண்ட் கோவினருடன் மோதுவதும் நம்ப முடியாத பிரமாண்டம்! இயக்குனர் நினைத்திருந்தால் அதுவும் மெக்ஸிகோ பைட் சீனில் விக்ரமின் அருகிலேயே படத்திலும் இருக்கும் (ஆக்டர் ஆகி விட்டார் டைரக்டர் சுசியும்!) இயக்குனர் சுசிகணேசன் இதை வேறு விதமாக நம்பும்படி படமாக்கி இருக்கலாம். இதையெல்லாம் மீறி வீக்ரம் புகுந்து விளையாடி இருப்பது பாராட்டத் தக்கது.

ஸ்ரேயா பணத்திமிரும், அழகும் நிறைந்த பெண்ணாக முதல் பாதியில் வில்லியாகவும், பின் பாதியில் காதல் கள்ளியாகவும் படுகவர்ச்சி உடையில் நம் மனதை கிள்ளுகிறார். அப்பா ஆசிஷ் வித்யார்த்தியே தன்னை கற்பழிப்பு காட்சி ஒன்றில் நடிக்க வைப்பதையும், தன்னிடமே பக்கவாதம் வந்தது மாதிரி நடிப்பதையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஸ்ரேயா துடிப்பது உள்ளிட்ட இடங்கள் கவர்ச்சி பதுமையாக காட்சி அளிக்கிறார் .அதுவும் பாடல் காட்சிகளில் எல்லாம் பேக் ரவுண்டில் வெளிநாட்டினரே இடம்பெறுவதும், ஆடுவதும் ஸ்ரேயாவையும் நம்மிடம் இருந்து அந்நியப்படுத்துகிறது...! சாரி!!

விக்ரம், ஸ்ரேயா தவிர்த்து சிரித்தபடியே சிக்கலான முடிச்சுகளை அவிழ்க்கும் போலீஸ் அதிகாரியாக பிரபு, தேங்காய் கடை தேனப்பனாக வரும் வடிவேலு, வில்லன்கள் ஆசிஷ் வித்யார்த்தி, ராஜ்மோகன், மெக்ஸிகோ புரோக்கர் அ‌லெக்ஸ், சிபிஐ உயர் அதிகாரியாக வரும் பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணா, ராஜ்மோகனின் காரியதரிசாக நடித்துள்ள விக்ரமின் தந்தையார் உள்ளிட்ட அனைவரும் பாத்திரத்திற்கேற்ற பளீச் தேர்வு. அதிலும் படத்தின் கதையுடனேயே ஒட்டி உறவாடி வலம் வரும் வடிவேலுவின் காமெடி வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் சரவெடி!

சிபிஐ அதிகாரியாக வரும் கந்தசாமி விக்ரமையும், சென்னை அருகில் உள்ள திருப்போரூர் கந்தசாமி கடவுளையும் இணைத்து புதுமையான முடிச்சுகளுடன் கதை சொல்லி இருக்கும் இயக்குனர் சுசிகணேசன், வில்லன் ராஜ்மோகனின் சொகுசு பஸ் வீடியோவில் விஜய்யுடன் முமைத்கான் ஆடும் பாடலை ஓட விட்டு தன் அடுத்த படத்தில் நாயகராக நடிக்க விஜய்க்கு குறி வைத்திருப்பதில் தொடங்கி, அன்புடனும், காதலுடனும் கொடுக்கும் காபி பில்டர் காபி போன்றதென்றும், காதலும் - அன்பும் இல்லாமல் கண்டம் விட்டு வந்து காபி குடித்தாலும் அது இன்ஸ்டண்ட் காபி போன்றுதான் இருக்கும் என்று வசனத்திலும், காட்சிகளிலும் தனது புத்திசாலித்தனத்தை புதைத்து வைத்து காட்சிக்கு காட்சி மெருகேற்றி, தான் ஒரு ஹைடெக் இயக்குனர் என்பத‌ை நிரூபித்திருக்கிறார். சபாஷ்!

பிரமிக்க வைக்கும் ஸ்ரேயாவின் ஆடம்பர படுக்கை அறையில் தொடங்கி, விக்ரமின் போட்டிங் பகுதி, வில்லனின் சொகுசு பஸ் களியாட்டங்கள், மெக்ஸிகோ ‌லெகேஷன்கள் என ஒவ்வொரு காட்சியிலும் தன் ஒளிப்பதிவு மூலம் தனி முத்திரை பதித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம் என்றால், எக்ஸ்கியூஸ்மீ மிஸ்டர் கந்தசாமி... உள்ளிட்ட பாடல்கள் மூலம் தானும் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்! வாவ்!!

இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கறுப்பு கோடிகளை ஏழைகளுக்கும், அவர்களது தேவைகளுக்கும் எடுத்துக் கொடுத்தால் இங்கு ஏழ்மை என்பதே இருக்காது என பல கோடிகளை கொட்டி படமெடுத்திருக்கின்றனர். ஒரு பக்கம் இவர்களது புதுமையான ஐடியா புலப்பட்டாலும், மறுபக்கம் ஏற்கனவே இலவச வீட்டுமனை பட்டா, இலவச காஸ் அடுப்பு, இலவச கலர் டிவி, இரண்டு ரூபாய்க்கு அரிசி இவற்றால் கூலி வேலைக்கு கூட வரமறுக்கும் மக்களை மேலும் சோம்பேறிகளாக்கும் ஐடியாவாகி விடுமோ கந்தசாமியின் திட்டம் எனும் பயமும் எழுகிறது.

மொத்தத்தில் கணேசன் கந்தசாமியை நம்பி இருக்கிறார். கந்தன், இயக்குனர் சுசிகணேசனை மட்டுமல்ல.. தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, விக்ரம், ஸ்ரேயா, விநியோகஸ்தர்கள், திரையரங்கு அதிபர்கள் அனைவரையும் கைவிடாதிருந்தால் சரி!

கந்தசாமி : ஏழைகளுக்கு அள்ளித் தந்த சாமி! ரசிகர்களுக்கு?!

----------------------------

விகடன் விமர்சனம்


ஓர் அரசாங்க ஆசாமி, ஏழைகளின் வேண்டுதல்களை நிறைவேற்றும் சாமி அவதாரம் எடுத்தால் அவர்தான்..."கந்தசாமி!''

திருப்போரூர் கந்தசாமி கோயில் மரத்தில் தங்களுடைய பிரச்னைகளைச் சீட்டில் எழுதி வைத்தால், வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன. நிறைவேற்றுவது  சிபிஐயின் பொருளாதாரக் குற்றப் பிரிவு எஸ்.பி.விக்ரம். அதற்கு அவருக்குக் கைகொடுப்பது  பெரும்புள்ளிகளிடம்  பதுங்கி இருக்கும் கருப்புப்பணம்.  தன் தந்தையின் சொத்தை முடக்கியதால் விக்ரமைப் பழிவாங்க, அவரைக் காதலிப்பது போல நடிக்கிறார் ஸ்ரேயா.  அப்போது ""வரம் கொடுக்கும் கந்தசாமி'' விக்ரம் என்ற ஆசாமிதான் என்பதைக் கண்டுபிடிக்கிறார்.  இன்னொரு பக்கம், ""கந்தசாமி யார் ?'' என்று கண்டுபிடிக்க துப்பறியும் உளவுத்துறை போலீஸ் பிரபுவும்  விக்ரமை நெருங்குகிறார். வில்லன்  கோஷ்டியினர் விக்ரமின் உயிருக்குப் பொறி வைத்து காத்திருக்கிறார்கள்.

"விக்ரம் உயிர் தப்பினாரா? ஸ்ரேயாவை காதலித்தாரா? வில்லன்களின் கொட்டத்தை அடக்கினாரா? ஏழைகளின் துயர் துடைத்தாரா?'' என எக்குத் தப்பு கேள்விகளுக்கு மூன்று   மணி நேரம் நேரத்துக்கும் மேலாக பொறுமையாக, நிதணமாகப் பதில் சொல்கிறார்கள்.

"ஜென்டில்மேன்" பாணி ஏழைகளுக்கு உதவும் ஹீரோ. "ரமணா''வின் ஹீரோ நெட்வொர்க், "சிவாஜி''யின் கருப்புப் பணம் களவாடுவது, "அந்நியன்'' ஹீரோ அவதாரம் என சூப்பர் டூப்பர் ஹிட்களை நினைவுபடுத்தும் ராபின்ஹூட் ஹீரோ கதை செய்திருக்கிறார் இயக்குனர் சுசி கணேசன். சூப்பர் ஹீரோவாக விக்ரம் பறந்து பறந்து அடிப்பதற்கு  டெக்ஜனாலஜியே காரணம் என்று லாஜிக் கற்பிக்கும் இடத்தில் மட்டும் அட சொல்ல வைக்கிறார் இயக்குனர்.

"அந்நியனா''கப் பரிச்சயமான கேரக்டர் என்றாலும், மனித சேவலாகவே கூவுவதும், தலையை வெடுக் வெடுக் கென்று திருப்பி நடப்பதுமாக கந்தசாமி குறை வைக்காமல் வீறு கொண்டு வித்தியாசப்படுத்துகிறார். அடிதடி சேஸிங், முரட்டுப்பிடி கிஸ்ஸிங் என மொத்தப் படத்தையும் குத்தகைக்கு எடுத்துப் பட்டாசு வெடிப்பது விக்ரம் மட்டுமே!

ஹாலிவுட் கேங்ஸ்டர் படங்களில் வில்லனின் ஆளாக ஹீரோவுடனேயே வளைய வரும் மேன்லி லுக் வில்லி கம் ஹீரோயின் போன்ற கேரக்டர் ஸ்ரேயாவுக்கு. சிலுப்பிய தலையும்,  ஒல்லிப்பிச்சு உடம்புமாக "அட! ஸ்ரேயா பொண்ணு கூட நடிக்கிதுப்பா!'' என்று சில இடங்களில் ஆச்சர்யம் கொடுக்கிறார். "உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு. நான் வெறும் டம்மி பீஸூ!'' என்று போலீஸ் ஸ்டேஷனில் மட்டுமே கலகலக்க வைக்கிறார் வடிவேலு.

சுவாரஸ்யமோ, எதிர்பார்ப்போ இல்லாத மெகா மகா நீள நீள காட்சிகள்தான் படத்தின் பலவீனம். ஒற்றை மனுஷியாக விக்ரமின் பின்னணியை ஸ்ரேயா கண்டுபிடிக்க, உளவுத்துறை போலீஸ் மட்டும்  கடைசி வரை கந்தசாமி யார் என்று தேடிக் கொண்டே இருப்பது காமெடி. விக்ரம் கையில் சுத்தியல் இருக்கிறது என்பதற்காகவே அத்தனை கோடீஸ்வரர்களும் மாடி, வீட்டுச்சுவர், பஸ்பாடி என்று சுத்தியலால் உடைப்பதற்கு வாகான இடங்களிலேயே டாக்குமெண்ட், பணம் வைத்திருப்பதை என்னவென்று  சொல்வதம்மா?

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் அத்தனை பாடல்களும் அசத்தல் ரகம். ஏகாம்பரத்தின் கேமரா ஆக்ஷன் ஸீன்களில் சூப்பர் ஹீரோவுக்கு இணையாக காடு, மலை என சுற்றிச்  சுழன்று உழைத்திருக்கிறது.

ஒரே டிக்கெட்டில் நாலு பழைய படம் பார்த்த எஃபெக்ட் கொடுப்பது தான் "கந்தசாமி''யின் சிறப்பு!''வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in