Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

தலைவா

தலைவா,Thalaivaa
24 ஆக, 2013 - 11:33 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » தலைவா

   

தினமலர் விமர்சனம்


தடை பல கடந்து, டைட்டில் கார்டில் சப் டைட்டிலாக இடம் பெற்றிருந்த ‘டைம் டூ லீடு’ எனும் வார்த்தையை இழந்து ஒரு வழியாக வந்திருக்கிறது ‘‘தலைவா’’!

சந்தர்ப்பவசத்தால் மும்பையின் தாதா தலைவராக வாழ்கிறார் விஜய்யின் ‘தலைவா’ அப்பா! அப்பா இன்ன தொழில்தான் செய்கிறார் என்பது தெரியாமலே ஆஸ்திரேலியாவில் நண்பன் சந்தானத்துடன் குடிநீர் வியாபாரம் செய்து கொண்டே, ஆஸ்திரேலியாவே கொண்டாடும் நடன கலைஞராக விளங்குகிறார் விஜய்! அங்கு ஓட்டல் பிஸினஸ் செய்ய இந்தியாவில் இருந்து வரும் தொழில் அதிபர் சுரேஷின் மகள் அமலா பாலுக்கும், விஜய்யின் நடனத்தின் மீதும், விஜய் மீதும் காதல் உண்டாகிறது! காதல் கசிந்து உருகியதும் கல்யாண பேச்சு எழுகிறது. விஜய்யின் அப்பாவை பார்க்க வேண்டுமென்கிறார் சுரேஷ்! அமலாபால், விஜய், சுரேஷ் மூவரும் மும்பை வருகின்றனர். வந்த இடத்தில் விஜய்க்கு வில்லன் ஆகிறார் சுரேஷ். வில்லியாகிறார் அமலாபால்! இந்த இருவரது முடிவால் விஜய்யின் அப்பா அகால மரணமடைகிறார். அப்புறம்? அப்புறமென்ன.?! விஜய், அப்பா வகித்த தாதா தலைவர் போஸ்டுக்கு அன்னபோஸ்டாக வருகிறார்! வந்ததும் வில்லன்களை ஒரு கை பார்க்கிறார். வில்லியாக தெரிந்த அப்பாவி அமலாபால், விஜய்க்கு பக்கபலமாக இருந்து அவர் அப்பாவை கொன்றவர்களை பழி தீர்க்க உதவுகிறார்! அதற்கப்புறம்? அதற்கும் அப்புறம்... விஜய் தானே தலைவராகிறார். அமலாபால் அவரது இல்லத்தலைவி ஆகிறார்! இதுதான் தலைவா படத்தின் மொத்த கதையும்!

விஜய், வழக்கம் போலவே ஆடுகிறார், பாடுகிறார், ஓடுகிறார், ஓட்டுகிறார், அமலாபாலுடன் ஒட்டி உறவாடியிருக்கிறார். ஆனாலும் ‘தமிழ்பசங்க...’ என ஆரம்பத்தில் வரும் பாடலே நாளை காலையிலாவது முடிப்பாங்களா...? என நீண்டு கொண்‌டே போவது போர் அடிக்கிறது! அதே மாதிரி 3 மணி நேரத்திற்கு மேலான படமும் இழுவையாக இருப்பதை இயக்குநர் விஜய்யும், நாயகர் விஜய்யும் நினைத்திருந்தால் தவிர்த்து, விஜய் ரசிகர்களுக்கு நல் விருந்து படைத்திருக்கலாம்!

அமலாபால், ஜில்லென குளிரூட்டப்பட்டு, விடியற்காலையில் வீட்டு வாசலில் வந்து விழும் ‘ஆவின்பால்’ மாதிரி ‘பளிச்’ சென்று வந்து மனதில் ‘பச்சக்’ கென்று ஒட்டிக் கொள்கிறார். அம்மணி நன்றிகள் மொத்தத்தையும் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவுக்கு உரித்தாக்குவது நல்லது! ஆனாலும் அம்மணிக்கு போலீஸ் கெட்-அப் பொல்லாப்பாக தெரிகிறது. உஷார்!

சந்தானம், ஏங்கணா, வாங்கண்ணா... என ஒவ்வொரு படத்திலும் ஊரையே ஓட்டும் விஜய்யையே ஓட்டுவது காமெடி! அதிலும், இது ஒரு வழிப்பாதை... என விஜய், விஜய்யின் அப்பா எல்லோரும் சீரியஸாக தலைவா படத்திலேயே பேசும் டயலாக்கை சந்தானம் சிரிப்பாக்குவது ஹைலைட் காமெடி!

நாசர், ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ் என நட்சத்திரங்கள் எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்!

ஜீ.வி.பிரகாஷின் இசையில், ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா...‘ பாடல் சூப்பர் ஹிட்! நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் மும்பையும், ஆஸ்திரேலியாவும் அமலாபால் மாதிரியே கொள்ளை அழகு! ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும், ‘நாயகன்’, ‘புதிய பறவை’ படங்களை ஞாபகப்படுத்தும்படியாக விஜய் இயக்கத்தில், விஜய் நடித்து வெளிவந்திருக்கும் ‘தலைவா’ - ‘தலைவலி வா’ எனும் ரீதியிலேயே இருக்கிறது.

மொத்தத்தில் ‘‘தலைவா’’ - ’’தாதா’’!!


------------------------------------------------------------------ 


 

வாசகர் விமர்சனம்


நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகு‌தியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

அமெரிக்காவிலிருந்து காயத்ரி வெங்கட்டின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : http://tamilthiraipadangal.blogspot.com/


விஜய் ப்ளஸ் விஜய் கூட்டணியில் ரமலான் விருந்தாக வெளிவந்துள்ளது தலைவா.

விஜய்யும், சந்தானமும் ஆஸ்திரேலியாவில் மினரல் வாட்டர் நிறுவனம் நடத்தி வருகிறார்கள், பிழைப்பிற்கு இதுவென்றால் விஜய்யின் பொழுதுபோக்கு ஆடுவது. நடனப்போட்டியில் விஜய்யின் தமிழ்ப்பசங்க குழு பங்கு பெறத் தேர்வாகிறது, இந்த அணியில் அமலாபாலும் இணைந்து நடனப் போட்டியில் வெல்கிறார்கள். இவர்கள் இருவரும் காதலிக்கத் தொடங்க, திருமணத்திற்குச் சம்மதம் வாங்க விஜய்யின் தந்தையை பார்க்க விஜய்யுடன் அமலா பாலும் அவர் தந்தை சுரேஷ்ஷும் மும்பைக்கு வருகிறார்கள். மறைந்து வாழும் விஜய்யின் தந்தை, தவறான தொழில் செய்கிறாரோ என்று வருந்தும் விஜய்க்கு ஏன்? எதற்கு என்று பின்னணி, முன்னணி விளக்க, ஒரு கட்டத்தில் விஜய்யே அம்மக்களுக்குத் தலைவனாகும் நிலைமை உருவாகிறது. அரசியல் எதிரிகளை எப்படி பழி வாங்குகிறார், மாஹிம் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குகிறார் என்பது மிச்சம் மீதி சுவாரஸ்யங்கள்.

முற்பாதி நேரம் போவதே தெரியவில்லை, பிற்பாதியின் நீளத்தைக் குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பாட்ஷா, தேவர் மகன், நாயகன் சாயல்கள் இருந்தாலும் விஜய்யை இவ்வகைப் பாத்திரத்தில் பார்ப்பது நமக்கெல்லாம் புதிது. விஜய் ஆடல், காதல், நகைச்சுவை, சண்டைக்காட்சிகள் என்று அனைத்திலும் பின்னி எடுக்கிறார், வயது குறைந்து கொண்டே வருகிறதா?  மனிதர் கலக்கியிருக்கிறார். முதல் பாதி காதல், கலாட்டா எனக் குதூகலமாகப் போகிறது.  முழு நேர நகைச்சுவை அல்லது காதல் படத்தில் விஜய் நடித்தால் நன்றாக இருக்குமே என்று ரசிகர்களை ஏங்க வைக்கிறார்.

அமலாபாலிற்கு மற்றப்பட நாயகிகளைப் போல கவர்ச்சிக்காக மட்டும் வந்து செல்வது போலல்லாமல் நடிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. நாயகியை ஒப்பந்தம் செய்வதற்கு முன் சந்தானத்திடம் பேசி ஒப்பந்தம் செய்து விடுவார்களோ? எனக்கு டான்ஸ் பிடிக்காது, ஏன்னா எனக்கு வராது, என்பது போன்ற சந்தானத்தின்  ஒரு வரி நகைச்சுவை வசனங்கள் பேஷ் பேஷ், ரசிக்கும்படி உள்ளது.

இயக்குனர் விஜய் தன் அண்ணன் உதயாவிற்கும்(வீடியோ எடுப்பவர்) ஒரு பாத்திரத்தை வழங்கியிருக்கிறார். நாசர், உதயா, ரேகா கெளரவத் தோற்றங்களில் வந்து செல்கிறார்கள். "தப்பைச் செஞ்சாத் தான் தப்பு, தப்பைத் தட்டிக் கேட்கிறது தப்பே இல்ல" போன்ற சில உரையாடல்கள் அருமை.

பாராட்டப்பட வேண்டிய மற்றொரு நாயகன் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா. சிட்னியின் அழகைக் கண்முன்னே கொண்டு வருவதாகட்டும் மும்பை நகர நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகட்டும் அவரின் கேமிரா காதலுடன் புகுந்து விளையாடியிருக்கிறது.

ஜி.வி. பிரகாஷின் இசையில் வாங்கண்ணே, யார் இந்த சாலையில் என்று ஓரிரு பாடல்கள் தேறுகின்றன,  தளபதி பாடல் தளபதி படப்பாடல் தளபதி! எங்கள் தளபதியை நினைவுபடுத்துகிறது.

முற்பாதி கலகலப்பு, பிற்பாதி விறுவிறுப்பு. திரையரங்கில் நெளிபவர்களின் நிலையைப் பார்த்தால் அந்தோ பரிதாபம். படத்தின் நீளம் மிகப்பெரிய குறை. பிற படங்களின் சாயல்கள் இல்லாமல் இரண்டாம் பாதியில் புதுமையைப் புகுத்தியிருந்தால் தலைவா ஆழமாக நின்றிருப்பான், இதயங்களை வென்றிருப்பான்.

இயக்குனரிடம் சில கேள்விகள்:

1. புத்திசாலி இளைஞனாக இருக்கும் விஜய்க்கு ஒரு தரம் கூட இந்தியா வந்து அப்பாவுடன் தங்க வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை?

2. தன் மகனை வெளிநாட்டில் பொத்தி பொத்தி வளர்க்கிறார், இருந்தாலும் பிள்ளையின் உயிர்ப்பாதுகாப்பிற்காக ஏன் ஆளை நியமிக்கவில்லை? மகனே நாயகன் என்பதாலா?

3. பிற்பகுதியில் விஜய் தலைவனான பிறகு கூலிங்கிளாஸ் அணிந்தே சண்டை போடுகிறார்? இருளிலும் கூலிங்கிளாஸ் போட்டுக் கொண்டே பேசுகிறார், நடக்கிறார்? ஏன்?

4. நாயகன் படத்தைப் பார்த்து அதே சாயலைப் படத்தில் திணிக்க முயன்றது ஏன்?

5. விஜய்யின் அரசியல் அச்சாரத்திற்கு வித்திடுவது போல சிலக் காட்சிகளைத் திணித்தது ஏன்?

6. மும்பையில் ஒரு சிலரைத் தவிர அனைவரையும் தமிழில் பேச வைத்தும் பாட வைத்தும் காதில் பூ சுற்றியது ஏனோ?

தலைவா நிச்சயம் விஜய் ரசிகர்களுக்கு ரமலான் விருந்தே தான்.


-----------------------------------------------------



நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகு‌தியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com



ஹீரோ ஃபாரீன்ல இருக்கார். ஹீரோயினைப்பார்த்ததும் லவ் வந்துடுது. பாப்பாவுக்கும் அவர் மேல லவ் தான் , ஆனா பாருங்க ஒரு வெட்கம் , தயக்கம் . இந்த பொண்ணுங்களுக்கு பசங்களை சுத்தி அடிச்சு காய விடறதுல அலாதி ஆனந்தம் . ஆல்ரெடி தனக்கு மேரேஜ் ஆகிடுச்சுன்னு அள்ளி விடுது. பாப்பாவோட டிராமாவை ஹீரோ கண்டு பிடிச்சு கலாய்க்கறாரு. இப்படி ஜாலியா 6 ரீல் போகுது ஆட்டம் பாட்டம் காதல் , காமெடின்னு.
ஹீரோவோட அப்பாவை நேர்ல பார்த்து சம்பந்தம் பேசனும்னு பாப்பாவோட அப்பா சொல்றாரு. ஹீரோவோட அப்பா இந்தியாவில் மும்பைல இருக்கார். அவர் ரொம்ப பிசி, நாமளே போய்ப்பார்ப்போம்னு கிளம்பறாங்க .அங்கே போய்ப்பார்த்தா ஹீரோவோட அப்பா ஒரு தாதா.
இந்த இடத்துல 2 ட்விஸ்ட் வருது .
அதுக்குப்பின் இயக்குநருக்கு வேலை பஞ்சாமிர்தம் பண்றதுதான் . அதாவது ஆல்ரெடி ஹிட் ஆன பாட்ஷா, நாயகன் , தளபதி, தேவர்மகன், சர்கார், பிஸ்னெஸ்மேன், புன்னகை மன்னன் 7 படங்களில் இருந்தும் காட்சிகளை உருவி கதம்பம் ஆக்குவதுதான் .
இளைய தளபதியின் லைஃப் கேரியரில் இது ஒரு முக்கியமான படம் . அப்பா பேச்சை ஆராயாமல் கேட்டு விடக்கூடாது என்ற படிப்பினை , அரசியல்வாதிகளுடன் மோதும் முன், பின் விளைவுகளுக்குத் தயாராக இருக்கனும் என்ற இரு பாடங்களைக்கற்றுக்குடுத்த படம்
விஜய், சச்சின் படத்துக்குப்பின் மிக அழகாக, ஸ்டைலிஷாக தோற்றம் அளித்த படம் இதுதான். பிரமாதமாக இருக்கிறார். ஓப்பனிங்க் சாங்கில் அவர் நடன ஸ்டெப் பிரமாதம் . கலக்கிட்டார். சாம் ஆண்டர்சனை நக்கல் அடிக்கும் காட்சி, அமலாபால் கால்வாறும் காட்சிகளில் அவர் எள்ளல்கள் கொடி கட்டிப்பறக்கிறது .
இடைவேளைக்குப்பின் வரும் காட்சிகளில் விஜய் -ன் அண்டர்ப்ளே ஆக்டிங் சூப்பர். தளபதி தளபதி எங்கள் தளபதி பாடல் காட்சிக்கு அவர் காட்டி இருக்கும் பாடிலேங்குவேஜ் , ஃபேஸ் எக்ஸ்பிரஷன் அபாரம் .
வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாட்டுக்கான நடனத்திற்கும் பாட்டுக்கும் தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ் .விஜய் அனுபவித்து ஆடி இருக்கிறார்.
யார் இந்த சாலயோரம் பாடல் காட்சியில் விஜய் -ன் நடன ஸ்டெப்கள் ரசிக்க வைத்தது. மின்னலைப்பிடித்து மின்னலைப்பிடித்து பாடல் காட்சிக்குப்பின் இந்தப்பாட்டில் தான் அவர் நடனம் அபாரம்.
சந்தானம் கவுண்ட்டர் டயலாக்ஸில் அப்ளாஸ் அள்ளுகிறார். சைக்கிள் கேப்பில் விஜயையே 2 இடங்களில் ஓட்டுகிறார். .அது புரியாமல் விஜய் ரசிகர்களே கை தட்டுகிறார்கள்
அமலாபால் ஹீரோயின் . சிந்து சமவெளியில் சீம்பால் மாதிரி தள தள என இருந்தவர் இதில் பால் காரன் கை பட்டு தண்ணீர் மிக்ஸ் பண்ணிய பால் மாதிரி நீர்த்துப்போய் இருக்கிறார். இவர் முகத்தில் அட்ராக்‌ஷன் மிஸ்சிங்.
ஹோட்டல்ல பொங்கல் ஸ்டாக் இல்லைன்னு ஃபீலிங்க்ல இருக்கும்போது வெஜ்டபுள் ஃப்ரைட் ரைஸ் இருக்குன்னு சொல்ற மாதிரி அமலா பால் டொக்கானா என்ன நான் இருக்கேன் என்பது மாதிரி புதுமுகம் ராகிணி.

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
 
1. அமலாபாலுக்கு சந்தானம் நூல் விடும் காட்சிகள் , சாம் ஆண்டர்சன் காட்சிகள் கலக்கல்
2. எதிர்பாராத இடைவேளை ட்விஸ்ட்
3. விஜய் -ன் டிரஸ் கோடு ரசிகர்களிடையே பல நாட்கள் பேசப்படும் , நீட்
4. வில்லன் , ஹீரோ இருவரும் ஒருவருக்கு ஒரே டைமில் ஃபோன் போடுவது , விஜய்க்கு லைன் கிடைத்ததும் அவரை வில்லன் டிரேஸ் அவுட் பண்ணாமல் இருக்க ஐடியா செய்வது பர பரப்பான நிமிடங்கள்


இயக்குநரிடம் சில கேள்விகள் , திரைக்கதையில் சில ஆலோசனைகள்

1. படத்தின் நீளம் ரொம்ப ஓவர் . 3 மணி நேரம் எல்லாம் நம்மாளுங்க உக்காந்திருக்கவோ முடியாது. பின் பாதியில் அரை மணி நேர ட்ரிமிங்க் அவசியம
2. தன் அப்பா தன்னை இந்தியாவுக்கு வரவே விடமாட்டேங்கறார் என்பது ஹீரோவுக்கு எந்த சந்தேகத்தையும் ஏற்படுத்தவில்லையா?
3. தலைவா என எல்லாரும் கொண்டாடும் அளவுக்கு விஜய் என்ன செய்தார்? எல்லாம் தற்செயலாக நடப்பதுதானே?
4. அமலாபால் காதல் டிராமா என வெறுக்கும் விஜய் , தன் தந்தையின் சாவுக்கு காரணமானவர் அமலாபால் என்ற கோபத்தில் இருக்கும் விஜய், பின் எந்தப்புள்ளியில் அவரை ஏற்றுக்கொள்கிறார்?
5. அப்பாவைக்கொன்னவங்களைப்பழி வாங்கும் சாதாக்கதைக்கு எதுக்கு இத்தனை பில்டப் ?
6. அவ்வளவு பெரிய தலைமைப்பொறுப்பில் இருப்பவர் தண்ணி அடிக்கலாமா? முன் மாதிரியாக இருக்க வேணாமா?
7. விஜய் தாதா ஆவது ஓக்கே , அந்த டிரஸ் கோடு எதுக்கு? அவர் அப்பா சொல்லித்தந்ததா?
8 . க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் தேவையில்லாத திணிப்பு
9 . நடு முதுகில் ஆழமான குத்து வாங்கிய பின்னும் ஹீரோ 28 பேரை வீழ்த்துவது ஓவர்


மனம் கவர்ந்த வசனங்கள்
 

1. நான் செய்யற எந்தக்காரியமும் என் பையனோட வாழ்க்கைல இடைஞ்சலா இருந்துடக்கூடாது.
2. நாம ஒரு விஷயத்துல இறங்கிட்டா விளைவு வெற்றியாத்தான் இருக்கனும்
3. இப்போ உடனே எனக்கு தண்ணி வரனும்
உடனே தண்ணி வரனும்னா ஒரு கிலோ வெங்காயம் வாங்கி வர
4. உனக்கு ஏண்டா டான்ஸ்னாலே பிடிக்காது ?
ஏன்னா எனக்கு டான்ஸ் வராது
5. உனக்கு ஏண்டா காதலியே இல்லை?
எங்கடா? இப்பவெல்லாம் 10 வயசுலயே ரிசர்வ் பண்ணி வெச்சுக்கறானுங்க, அதுக்கு கீழே இறங்கி வர மனசு இடம் கொடுக்க மாட்டேங்குதே.
6. புருஷன் குடிச்சுட்டு வந்தாலும் கதவைத்திறக்கறவங்க தமிழ்ப்பொண்டாட்டிங்க , பொண்டாட்டியே குடிச்சுட்டு வந்து கதவை தட்டுனா ஃபாரீன் பொண்டாட்டிங்க . அதான் ஐ லைக் தமிழ் சம்சாரம்ஸ்
7. இந்த யூ ட்யூப்பும் , ஊர்க்கிழவியும் ஒண்ணுதான் .ஒரு விஷயம் கிடைச்சா போதும் , ஊர் பூரா பரப்பிடுவாங்க
8. பிளாக் காபி சூப்பர்
டேய், அது ரசம்
9. அமலாபால் - ஐ லவ் யூ கேள்விப்பட்டிருக்கேன் , வீ லவ் யூ - இப்போதான் கேள்விப்படறேன்
10. யாருப்பா இவன் ? பவர் ஸ்டார் தம்பி புவர் ஸ்டார் மாதிரி இருக்கான் ?
11. படுத்துட்டு ஆடறது , உக்காந்துட்டு ஆடறது , உடம்பை வளைச்சுட்டு ஆடறது இப்டி ஏண்டா இம்சை பண்றே?
12. அடுத்தவன் பட்டா போட்ட இடத்துல நீ ஏண்டா கொட்டாய் போடப்பார்க்கறே?
13. அடுத்தவன் ஃபோன்ல ஐ எஸ் டி கால் பண்றது தப்பு டா செல்லம்
14. என் கூடவே வந்துடு
இது ஒரு வழிப்பாதை , திரும்புனா உயிர் தான் வரும்
15. நம்மால மத்தவங்க வாழ்ந்ததாத்தான் இருக்கனும் , செத்ததா இருக்கக்கூடாது
16. தலைவன்கறது நாமா தேடிப்போகும் விஷயம் இல்லை , நம்மைத்தேடி வரும் விஷயம்
17. ஏதோ மீட்டிங்னு சொன்னே? பீடா கடைக்காரனுங்க கூட எல்லாம் பேசிட்டு இருக்கான் ?
18 . ஒரு தடவை கைல கத்தி வந்துட்டா 1 காக்கும் 2 அழிக்கும் ஆனா கத்தியை விட முடியாது
19. தலைவன் தலைவன்னு சொல்லி ஒரு கூட்டமே அவனை தலைல தூக்கி வெச்சுக்கிட்டு கொண்டாடுது
20. இவங்களுக்கு என்னால என்ன கொடுக்கமுடியும்னுதோணல , ஆனா இருப்பதை கொடுப்பேன்
21. எப்படி தப்பிச்சேன் பார்த்தியா?
இதுக்கு மாட்டியே இருக்கலாம்
22. போல் போல் எதுவா இருந்தாலும் என் கிட்டேயே போல் . நான் விஷ்வாவை விட மேல் ( ஹிந்தில போல் = சொல்லு )
23. இந்த டிரஸ்ல நீ வைஜயந்தி ஐ பி எஸ் ல வர்ற டிஸ்கோ சாந்தி மாதிரி சாரி விஜய சாந்தி மாதிரி இருக்க
24. அரசியல்ல எல்லாமே நமக்கு சாதகமா நடக்காது , நடப்பதை நமக்குசாதகமா ஆக்கிக்கனும்
25. அவ டிஎஸ்பின்னு என் ஈ எஸ் பி சொல்லுது
26. எல்லாத்தொழிலுக்கும் தலைவன்னு ஒருத்தன் இருப்பான்
27. சரக்கு ஃபாரீனா இருந்தாலும் சம்சாரம் தமிழ் நாடா இருக்கனும்
28. என் சமையல் பார்த்தா எல்லார் வாயிலும் எச்சில் ஊறும்
எதுக்கு? து-ன்னு காரித்துப்பவா?
29. தமிழ் நாட்டிலேயே தண்ணி இல்லை, ஆனா நீங்க ஆஸ்திரேலியாவுக்கே தண்ணீர் கொண்டாந்துட்டீங்க
30. டான்ஸ்ங்கற பேர்ல தரையைக்கூட்டிட்டு இருப்ப
31. பொண்ணுங்க நம்ம பின்னால வரனும்னா அவங்க ஹேண்ட் பேக்கை திருடிட்டுதான் ஓடனும்
32. நாளைக்கு எங்க வீட்டுக்கு வர்றப்போ சாப்பிடாம வந்துடுங்க
ஏன்? பிளட் டெஸ்ட் எடுக்கப்போறீங்களா?
33. மூவ்மெண்ட்ங்கற பேர்ல கால் முட்டி செத்த மாதிரி ஒரு ஸ்டெப்
34. அடுத்தவன் ஆட்டோல ஆயுத பூஜை போடறது தப்பும்மா
 
படம் பார்த்தபோது , பார்த்த பின் போட்ட ட்வீட்ஸ்

1. டைம் டூ லீடு கேப்ஷனை எடுத்தா மட்டும் பத்தாது, ஹீரோ ( அவரோட ) கால் மேல கால் போட்டபடி தெனாவெட்டா அமர்ந்திருக்கும் ஸ்டில்லும் நீக்கனும்
2. ஜெ - தலைவா லேட்டா ரிலீஸ் ஆனதால 20 கோடி ரூபாய் நட்டம் ஆகி இருக்கும். எப்பூடி? OPS - தேர்தல் ல இதனால எத்தனை ஓட்டு குறையப்போகுதோ? # கற்பன
3. விஜய் ரசிகையை மேரேஜ் பண்ணிக்கிட்டா அவரை மாதிரி ஆடத்தெரியுமா?ன்னு கேட்கும்.வம்பு.அஜித் ரசிகைனா சும்மா நடந்து காட்னாலே போதும்
4. டூ இன் ஒன் ,த்ரீ இன் ஒன் பார்த்திருப்பீங்க.7 இன் ஒன் பார்த்திருக்கீங்களா? # தலைவ
5. தலைவா ல விஜய் வெள்ளை சட்டை போட்டதால வீரம் ல அஜித்தும் வெள்ளைக்கு மாறிட்டார்னு யாரும் இன்னும் கிளம்பலையா?
6. DVD ஷாப் -ஸார். நீங்க கேட்ட பாட்ஷா, நாயகன், தளபதி, தேவர்மகன், சர்கார், பிஸ்னெஸ்மேன்,புன்னகை மன்னன் 7 ம் இந்தாங்க.
அப்டியே 7 1/2 யா தலைவா தாங்க
7. ஏ எல் விஜய் - இனிமே பாரீன் படத்தைப்பார்த்து காப்பி அடிக்கறேன்னு ஒரு பயலும் சொல்லிடமுடியாது
8. ஒரு இயக்குநர் காதலிக்கும் நடிகையை நாயகி ஆக்கினால் நாயகனை ( படத்தில் கூட ) நெருங்க விடமாட்டார் இயக்குநர்
9. வாங்கண்ணா வணக்கங்கண்ணா ஓப்பனிங் சாங்காக வைத்திருக்கலாம்
10. தலைவா படத்தின் பிளஸ் விஜய்.மிகப்பெரிய மைனஸ் ஏ எல் விஜய்
11. அமலாபால் - நான் உங்களுக்கு அம்மாவா வரலாமா ? விஜய் - இப்பவெல்லாம் அம்மான்னாலே அலர்ஜி எனக்கு.
12. தலைவா தியேட்டரில் டிக்கெட் கவுன்ட்டர் வாசலில் டைமிங்க் பஞ்ச் - இது ஒரு வழிப்பாதை.திரும்பி வர முடியாது. உசுரு மட்டும் தான் வரும
13. எம் ஜி ஆர் - நீ அண்ணாவையே மிஞ்சிட்டே டயலாக்கை விஜய் யை பார்த்து பேசுனதும் மேல் லோகத்துல இருக்கற அண்ணாவுக்கே ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு
14. அஜித் - கிரீடம் படத்தை எடுத்து என் பேரை ரிப்பேர் ஆக்கிட்டீங்க . ஏ.எல்.விஜய் - ஒண்ணும் கவலைப்படாதீங்க.விஜய் பேரையும் ரிப்பேர் பண்ணியாச்சு
15. புதுமுகம் ராகிணி -விஜய் க்கு ஒரு டூயட் வைத்திருக்கலாம்.டைரக்டர் மிஸ்ட்
16. சுறா ,வேட்டைக்காரன் லெவலுக்கு ரொம்ப மொக்கை இல்லை என்றாலும் தலைவா ஒரு தோல்விப்படம்
17. பின் பாதி திரைக்கதையில் நாயகன், தேவர் மகன், பிஸ்னெஸ்மேன் சாயல் இல்லாமல் மெனக்கெட்டு மெருகேற்றி இருந்தால் தலைவா ஹிட் ஆகி இருக்கும்
18. வழக்கமாக பெண்கள் கூட்டம் அள்ளும் விஜய் படத்துக்கு சிதம்பரம் லேனாவில் மாலை 7 மணி காட்சிக்கு 8 பெண்கள் மட்டும்
19. 100 படங்களைத்தாண்டிய பின் ரஜினி தளபதி யும், கமல் நாயகனும் கொடுத்தார்கள். 50 படமே தாண்டிய விஜய்க்கு இவ்வளவு வெயிட்டான ரோல் இப்பவே எதற்கு?
20. விஜய் ரசிகர்களைத்தவிர பொதுஜனங்களை தலைவா ஈர்ப்பது கடினம்
21. விஜய் - அமலா பால் நடனப்பயிற்சியில் விஜய் ஸ்டெப் அழகு.ஆனால் புன்னகை மன்னன் படத்தில் ஆல்ரெடி வந்ததே. இசையும் அதே சாயல்
22. தளபதி தளபதி எங்கள் தளபதி பாடல் காட்சியில் அரங்கம் அதிர்ந்தது.நீரவ் ஷா வின் கேமரா டாப் ஆங்கிள் ஷாட்ஸ் ஆர் நைஸ்
23. வாங்கண்ணா வணக்கங்க்ணா பாடல் ல் விஜய் நடனம் ,அண்டர் ப்ளே ஆக்டிங் வென் விஷ்வா பாய் ரோல் குட்
24. தலைவா விஜய் கட் அவுட்டைப்பார்த்தா " தாளிச்சுடறேன் வா" னு கூப்பிடற மாதிரி இருக்கு

சி பி கமெண்ட் -தலைவா - முதல் பாதி கமர்ஷியல் கலக்கல், பின் பாதி அவியல், பொரியல். விஜய் நடனம், டிரஸ்கோடு சூப்பர், திரைக்கதை சொதப்பல் - சிதம்பரம் லேனா திரை அரங்கில் படம் பார்த்தேன்.



வாசகர் கருத்து (107)

Venki Raja - mahalapye ,போஸ்ட்வானா
15 செப், 2013 - 10:54 Report Abuse
Venki Raja இது ஒரு படமா சரியான குப்பை .......
Rate this:
meena - bangalore,இந்தியா
14 செப், 2013 - 15:20 Report Abuse
meena தலைவா மரண மொக்கை....யாராவது சூசைடே பண்ணனும்னு நெனச்சா தலைவா பாருங்க........
Rate this:
panner - thanjavur  ( Posted via: Dinamalar Android App )
05 செப், 2013 - 23:36 Report Abuse
panner தலைவா தலவலி
Rate this:
Loga - Doha,கத்தார்
01 செப், 2013 - 23:36 Report Abuse
Loga I REALLY DONT UNDERSTAND HOW VIJAY AGREED TO ACT SUCH MOVIE. NO .NO ACT.TOTALLY WASTE FILM..MARK 0/100
Rate this:
Lakshmi Narayanan - Pune,இந்தியா
27 ஆக, 2013 - 13:12 Report Abuse
Lakshmi Narayanan காயத்ரி வெங்கட்டின் உங்கள் கேள்விக்கு பதில்.... 1. புத்திசாலி இளைஞனாக இருக்கும் விஜய்க்கு ஒரு தரம் கூட இந்தியா வந்து அப்பாவுடன் தங்க வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை? Ans - இது அப்பாவின் ஆர்டர். 2. தன் மகனை வெளிநாட்டில் பொத்தி பொத்தி வளர்க்கிறார், இருந்தாலும் பிள்ளையின் உயிர்ப்பாதுகாப்பிற்காக ஏன் ஆளை நியமிக்கவில்லை? மகனே நாயகன் என்பதாலா? Ans - படத்தை சரியாக பார்க்கவில்லை என்று நினைக்கறேன்... இந்த உலகத்துக்கு அவன் இல்லாம இருக்கறது நல்லது என்று சத்யராஜ் நாசர்இடம் கூறுவார். 3. பிற்பகுதியில் விஜய் தலைவனான பிறகு கூலிங்கிளாஸ் அணிந்தே சண்டை போடுகிறார்? இருளிலும் கூலிங்கிளாஸ் போட்டுக் கொண்டே பேசுகிறார், நடக்கிறார்? ஏன்? Ans - இது ஒன்னு பெரிய குறையா தெரில.. இருந்தாலும் இயக்குனர் இதை தவிர்த்து இருக்கலாம். 4. நாயகன் படத்தைப் பார்த்து அதே சாயலைப் படத்தில் திணிக்க முயன்றது ஏன்? Ans - பாட்ஷா படம் சாயல் இருக்கிறது... நாயகன் சுத்தமா பொருந்தல 5. விஜய்யின் அரசியல் அச்சாரத்திற்கு வித்திடுவது போல சிலக் காட்சிகளைத் திணித்தது ஏன்? Ans - என்ன அரசியல் கண்டீர்கள் இதில்..? 6. மும்பையில் ஒரு சிலரைத் தவிர அனைவரையும் தமிழில் பேச வைத்தும் பாட வைத்தும் காதில் பூ சுற்றியது ஏனோ? Ans - படத்தில் தமிழ் நடிகர்கள் தவிர அனைவரும் ஹிந்தி இல் தான் பேசுகிறார்கள்... Dubbing தான் தமிழ் லிப் அசைவை கவணிக்கவிலை என்று நினைகேரன்.
Rate this:
மேலும் 102 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

தலைவா தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in