கோவிந்தா ரிட்டர்ன்ஸ்
பாலிவுட்டில் சில ஆண்டுகளுக்கு முன் வரை, ஹீரோவாக கொடி கட்டி பறந்த கோவிந்தா, "தீவானா மேய்ன் தீவானா படத்தின் மூலம், மீண்டும் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின் கிடைத்த ஹீரோ வாய்ப்பு என்பதால், இந்த படத்தின் வெற்றியை, பெரிதும் எதிர்பார்த்துள்ளார், அவர். இதில், அவருடன் ஜோடி சேர்ந்திருப்பது, "மாஜி உலக அழகி, பிரியங்கா சோப்ரா. கே.சி.பகோடியா, இயக்கியுள்ள இப்படத்தில், காதர் கான், சக்தி கபூர் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தில், கோவிந்தா, ஒரு கலகலப்பு பேர் வழியாக நடித்துள்ளார். இவரது வாழ்வில் குறுக்கிடுகிறார், பிரியங்கா. இதனால், கோவிந்தாவின் இயல்பு வாழ்க்கை, டிராக் மாறுகிறது. பிரியங்காவின் மனதில் இடம் பிடிப்பதற்காக, வண்டி வண்டியாக, பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். கோவிந்தா கூறுவதெல்லாம் பொய் என, பிரியங்காவுக்கு தெரிந்து விடுகிறது. இதைத் தொடர்ந்து, பிரியங்கா எடுக்கும் முடிவு என்ன; பிரியங்காவின் மனதில் கோவிந்தா இடம் பிடிக்கிறாரா, இல்லையா என்பதை, கலகலப்புடன் விவரிக்கிறது, இந்த படம்.