ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
2017ம் ஆண்டின் ஆரம்பம் தமிழ்த் திரையுலகத்திற்கு சரியான ஆரம்பமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஜனவரி மாதத்தில் வெறும் 9 நேரடித் தமிழ்ப் படங்களே வெளிவந்தன. பிப்ரவரி மாதத்தில் இரண்டு படங்கள் அதிகரித்து 11 நேரடித் தமிழ்ப் படங்கள் மட்டுமே வெளிவந்தன.
கடந்த சில வருடங்களாகவே ஒரு வாரத்திற்கு சராசரியாக குறைந்த பட்சம் 4 படங்களாவது வெளிவந்தன. ஆனால், 2017ம் ஆண்டில் அதில் பாதியாக 2 படங்கள் மட்டுமே வெளிவருவது ஆரோக்கியமான ஒன்றல்ல.
'டிமானிடைசேஷன்' வந்ததிலிருந்தே திரையுலகத்தில் சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தன. வார்தா புயல், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தால் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து போயின. பொங்கலுக்கு வந்த படங்கள் கூட பெரிதாக வசூலை அள்ளாத நிலையில், அது பிப்ரவரி மாதத்தில் சரியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அரசியல் சூழ்நிலைகள் பிப்ரவரி மாதம் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. திரைப்படங்களில் வரும் அதிரடியான திருப்புமுனைகளை விட தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் நிமிடத்திற்கொரு திருப்புமுனையாக அமைந்து படம் பார்த்தால் கிடைக்கும் ரசனையைவிட டிவியைப் பார்த்தால் கிடைக்கும் ரசனை அதிகமானது.
மியூசிக் சேனலில் பாடல்களையும், காமெடி சேனல்களில் காமெடியையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த குட்டீஸ்கள் கூட செய்திச் சேனல்களில் அரசியல் விவாதங்களைப் பார்த்து ஃபேஸ்புக்கில் கருத்துக்களைப் பகிரும் நிலை வந்தது. அதனால், திரைப்படங்களைப் பார்ப்பவர்களின் சதவீதம் வெகுவாகக் குறைந்தது.
அந்த அரசியல் பரபரப்பில் குழந்தைகள் அதிகம் ரசித்த முந்தைய 'சிங்கம்' பாகங்களை பின்னுக்குத் தள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட 'சி 3' கூட சிதறிப் போனது என்றுதான் சொல்ல வேண்டும். மார்ச் மாதத்தில் பரீட்சை நேரம் என்பதால் 2017ம் ஆண்டின் மூன்றாவது மாதமும் முண்டியடிக்கும் மாதமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 2ம் தேதி 'போகன், எனக்கு வாய்த்த அடிமைகள்' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளிவந்தன. ஜெய், பிரணிதா நடித்து வெளிவந்த 'எனக்கு வாய்த்த அடிமைகள்' படம் வெளிவந்தது எத்தனை பேருக்குத் தெரியும் என்றே தெரியாது. தான் நடிக்கும் படத்தின் எந்த ஒரு பிரமோஷனுக்கும் வராத ஜெய்யை நம்பி தயாரிப்பாளர்கள் எப்படி படங்களைத் தயாரிக்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா நடித்து வெளிவந்த 'போகன்' படத்தை முதல் நாளிலிருந்தே ஒரு வெற்றிப் படம் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சித்தனர். 'காப்பி' படமாக வெளிவந்த 'போகன்' படம் சுமார் 10 கோடி வரை நஷ்டத்தை ஏற்படுத்தியது என்பதுதான் கடைசியாகக் கிடைத்த தகவல். பிரபுதேவா இனிமேல் தமிழில் படமே தயாரிக்க மாட்டேன் என சொல்ல வைத்த பெருமை 'போகன்' படத்திற்கு உண்டு.
பிப்ரவரி 9ம் தேதி சூர்யா, ஸ்ருதிஹாசன், அனுஷ்கா நடித்த 'சி 3' படம் வெளிவந்தது. இரண்டு மூன்று முறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு கடைசியாக பிப்ரவரி 9ல் வெளிவந்தது. ஆரம்பத்தில் கொஞ்சம் பரபரப்பாகப் பேசப்பட்ட படம் அரசியல் நிலவரங்களால் அப்படியே அமுங்கிப் போனது. இருந்தாலும் மூன்றே நாளில் 100 கோடி என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். அது யார் காதிலும் விழாமல் போனதுதான் பரிதாபம். முந்தைய இரண்டு பாகங்களுடன் ஒப்பிடும் போது 'சி 3' படம் வசூலிலும் தோல்விப் படமே.
பிப்ரவரி 10ம் தேதி 'பிரகாமியம்' என்ற படம் வெளிவந்தது. எந்த விதத்திலும் படம் பிரபலம் ஆகாமலே போனது.
பிப்ரவரி 17ம் தேதி 'என்னோடு விளையாடு, காதல் கண் கட்டுதே, பகடி ஆட்டம், ரம்' ஆகிய சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாகின. இவற்றில் 'காதல் கண் கட்டுதே' படம் மட்டும் கொஞ்சம் கவனிக்க வைத்தது. 'ரம்' படத்திற்கெல்லாம் அனிருத் ஏன் இசையமைத்தார் என்பது ஆச்சரியமில்லை. படத்தின் நாயகன் அவருடைய உறவினர். அனிருத் பெயரை வைத்து விளம்பரப்படுத்தியும் கூட படம் 'ரம்பம்' ஆக இருந்ததால் அனிருத்தாலும் காப்பாற்ற முடியவில்லை. 'துருவங்கள் 16' படத்தின் வெற்றியால் ரகுமானுக்குக் கிடைத்த வரவேற்பை வைத்து 'பகடி ஆட்டம்' படத்தை பரபரப்பாக்க முயற்சித்தனர். ஆனால், 'ஆட்டம்' சரியாக அமையவில்லை. 'என்னோடு விளையாடு' படம் பிப்ரவரி 17 படங்களின் ஆட்டத்தில் யாராலும் கண்டு கொள்ளாத படமாக அமைந்தது.
பிப்ரவரி 24ம் தேதி 'கனவு வாரியம், முத்துராமலிங்கம், யமன்' ஆகிய படங்கள் வெளிவந்தன. 'கனவு வாரியம்' யதார்த்தமான, கருத்துள்ள படமாக அமைந்தது. 'முத்துராமலிங்கம்' படத்தை வெளியான சில சில நாட்களிலேயே திரையிட நீதிமன்றம் தடைவிதித்துவிட்டது. 'யமன்' படம் விஜய் ஆண்டனிக்கு அடுத்த வெற்றியாக இருக்கும் என்று பேசப்பட்டது. ஆனால், பரீட்சை நேரத்தில் படத்தை வெளியிட்டு எதிர்பார்த்த வசூலைப் பெற முடியாத தவறை வெளியிட்டவர்களே செய்துவிட்டார்கள். இருந்தாலும் முதலுக்கு மோசமில்லை என்கிறார்கள்.
பிப்ரவரி மாதம் வெளிவந்த 11 படங்களிலும் பிரமாதமான வெற்றி என்று எந்தப் படத்தையும் சொல்ல முடியவில்லை. ஜனவரியில் வந்த 9 படங்களிலும் அப்படி ஒரு வெற்றியைச் சொல்ல முடியாத நிலையே இருந்தது. மார்ச் மாதத்திலும் அதே நிலை நீடிக்குமா இல்லை மாற்றம் வருமா என்பதை இன்னும் நான்கு வாரங்களுக்குப் பிறகே சொல்ல முடியும்.
மார்ச் மாதத்தில் வான் மழை பொழிய வாய்ப்பில்லை, வசூல் மழையாவது பொழியுமா...?.
பிப்ரவரி மாதம் வெளிவந்த திரைப்படங்கள்...
பிப்ரவரி 2 : போகன், எனக்கு வாய்த்த அடிமைகள்
பிப்ரவரி 9 : சி 3
பிப்ரவரி 10 : பிரகாமியம்
பிப்ரவரி 17 : என்னோடு விளையாடு, காதல் கண் கட்டுதே, பகடி ஆட்டம், ரம்
பிப்ரவரி 24 : கனவு வாரியம், முத்துராமலிங்கம், யமன்.