Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

தமிழில் சாதித்த 'டப்பிங்' படங்கள்...! ஓர் பார்வை

24 ஆக, 2015 - 15:13 IST
எழுத்தின் அளவு:
Dubbing-Movies-success-in-Tamil-cinema

இன்றைய டிஜிட்டல், தொலைக்காட்சி யுகத்தில் 'டப்பிங்' என்ற மொழி மாற்றுப் படங்களின் வரவு அதிகமாக இருக்கிறது. ஒரு காலத்தில் புரியாமல் பார்த்த பல ஆங்கிலப் படங்களைக் கூட இன்று பாமரனும் ரசிக்கும் விதத்தில் நகைச்சுவையான வசனங்களுடன், ஹாலிவுட் நடிகர்கள் சென்னைத் தமிழ் பேசுவதுவரை மாற்றி ரசிக்க வைக்கிறார்கள்.


டப்பிங் படங்கள் என்றால் இன்றைய தலைமுறையினருக்கு அதிகமான ஆங்கிலப் படங்களைப் பற்றித்தான் தெரியும். ஆனால், ஒரு காலத்தில் மற்ற தென்னிந்திய மொழிகளிலிருந்து, அதிலும் குறிப்பாக தெலுங்கிலிருந்து தமிழுக்கு 'டப்பிங்' செய்யப்பட்ட திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகமா இருந்தது.


நேரடித் தமிழ்ப் படங்களை விட அதிக வசூலைக் குவித்ததுடன் 100 நாட்களைக் கடந்து ஓடி சாதனையும் புரிந்தது. 90களின் முற்பகுதி வரை தெலுங்கு டப்பிங் படங்களின் ஆதிக்கம் ஓரளவிற்கு இருந்தது. போகப் போக அது மிகவும் குறைந்து விட்டது. சில வருடங்களுக்கு முன்னர் வரை அதிகம் வெளியாகாமல் இருந்த, அப்படியே வந்தாலும் வெற்றி பெறாமல் இருந்த படங்கள்தான் அதிகமாக இருந்தன. ஆனால், தற்போது மீண்டும் டப்பிங் படங்களின் ஆதிக்கம் லேசாகத் தலை தூக்க ஆரம்பித்துள்ளது.


திரைப்படம் என்பது மொழி கடந்த ஒன்று என்று பொதுவாகச் சொல்வார்கள். அப்படி மொழியைக் கடந்து, உதட்டசைவுகளைக் கடந்து தமிழில் டப்பிங் ஆகி கடந்த 25 ஆண்டுகளில் வெளிவந்த, வெற்றி பெற்ற, மறக்க முடியாத சில படங்களைப் பற்றிப் பார்ப்போம்.


1943ம் ஆண்டில் கன்னடத்திலிருந்து 'ஹரிச்சந்திரா' என்ற படம்தான் தமிழில் டப்பிங் செய்யப்பட்ட முதல் படமாக விளங்கியது. ஏவி.மெய்யப்பச் செட்டியாரால் டப்பிங் ஆகி அந்தப் படம் வெளியானது. அதைத் தொடர்ந்து அவ்வப்போது மட்டுமே சில டப்பிங் படங்கள் வெளிவந்தன.


கைதி


டப்பிங் படங்களுக்கெல்லாம் ஒரு மார்க்கெட் வேல்யூவை உருவாக்கியதில் தெலுங்கு நடிகரான சிரஞ்சீவிக்குத்தான் முக்கிய இடமுண்டு. கோதண்டராமி ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, மாதவி நடிக்க தெலுங்கில் 1983ம் ஆண்டு வெளிவந்த 'கைதி' திரைப்படம் பின்னர் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. சென்னையில் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்ட இந்தப் படம் தமிழில் 100 நாட்களைத் தாண்டி ஓடியது. சிரஞ்சீவிக்கு தெலுங்கில் முதல் மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது இந்தப் படம்தான்.


சலங்கை ஒலி


கே.விஸ்வநாத் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜெயப்பிரதா மற்றும் பலர் நடிக்க 1983ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'சாகர சங்கமம்' படம் அதே ஆண்டில் 'சலங்கை ஒலி' என தமிழ் பேசியது. நாட்டியக் கலைஞர்களான கமல்ஹாசன், ஜெயப்பிரதா ஆகியோருக்கிடையே உள்ள காதலை கண்ணீர் மல்க சொல்லிய படம் இது. இளையராஜாவின் இனிமையான இசையில் தெலுங்கில் மட்டுமல்லாது, தமிழிலும் பாடல்கள் இனிமையாக அமைந்தன. இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதையும் 'சாகர சங்கமம்' பெற்றுத் தந்தது.


பூ ஒன்று புயலானது


1985ம் ஆண்டு தெலுங்கில் டி.கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த 'பிரதிகடனா' என்ற திரைப்படம் தமிழில் 'பூ ஒன்று புயலானது' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது. விஜயசாந்திதான் படத்தின் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கேட்டா சீனிவாசராவ், சந்திரமோகன், சாய்குமார் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். தன்னை நடுவீதியில் அவமானப்படுத்திய வில்லன்களை தனி பெண்ணாக விஜயசாந்தி எதிர்த்து நின்று பழி வாங்குவதுதான் இந்தப் படத்தின் கதை. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜயசாந்திக்கென்று தமிழில் மிகப் பெரும் மார்க்கெட் உருவானது.


சிப்பிக்குள் முத்து


கே.விஸ்வநாத் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் கமல்ஹாசன், ராதிகா மற்றும் பலர் நடித்த படம். மனவளர்ச்சி குன்றிய ஒரு இளைஞருக்கும், ஐந்து வயது மகனுடன் இருக்கும் விதவையான ராதிகாவிற்கும் இடையில் ஏற்பட்ட திருமண பந்தமும், அதன் பின் அவர்கள் தங்களது வாழ்க்கையை எப்படி நகர்த்தினார்கள் என்பதையும் நெகிழ வைக்கும் அளவில் சொன்ன படம். கமல்ஹாசன், ராதிகா இருவரின் சிறந்த நடிப்பு தெலுங்கு மக்களை மட்டுமல்ல, தமிழ் மக்களையும் கட்டிப் போட்டது. தெலுங்கில் சிறந்த படத்திற்கான தேசிய விருதை அந்த ஆண்டில் பெற்ற பெருமைக்குரிய படம் இது.


இதயத்தை திருடாதே


மணிரத்னம் இயக்கத்தில் நாகார்ஜுனா, கிரிஜா, டிஸ்கோ சாந்தி மற்றும் பலர் நடிக்க 1989ம் ஆண்டு தெலுங்கில் 'கீதாஞ்சலி' என்ற பெயரில் வெளிவந்த படம் தமிழில் 'இதயத்தை திருடாதே'வாக மாறியது. இளையராஜாவின் இசையில் படத்தின் அனைத்துப் பாடல்களும் இனிமையாக அமைந்து படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. மணிரத்னம் ஸ்டைலில் ஒரு இளமையான, இனிமையான காதல் படமாக அமைந்த படம் இது. இந்தப் படத்தில் பலரின் மனதையும் கவர்ந்த நடிகை கிரிஜா அதன் பின் அதிகம் சோபிக்காமல் போய்விட்டார்.


உதயம்


இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனராக இன்று விளங்கி வரும் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் 1989ம் ஆண்டு வெளிவந்த படம் 'உதயம்'. தெலுங்கில் 'சிவா' என்ற பெயரில் வெளியானது. நாகார்ஜுனா, அமலா, ரகுவரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். கல்லூரி மாணவரான நாகார்ஜுனாவுக்கும் ரவுடியான ரகுவரனுக்கும் இடையில் நடக்கும் மோதலும், அதன் பின்னர் நாகார்ஜுனாவே மிகப் பெரிய ரவுடியாவதும்தான் படத்தின் கதை. இந்தப் படம் சென்னையில் மட்டும் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இளையராஜாவின் பின்னணி இசை இந்தப் படத்திற்கு மிகவும் பலம் சேர்த்த ஒன்றாக அமைந்தது.


இதுதாண்டா போலீஸ்


கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் டாக்டர்.ராஜசேகர், ஜீவிதா மற்றும் பலர் நடித்து 1990ம் ஆண்டு வெளிவந்த படம் 'இதுதாண்டா போலீஸ்'. மிகவும் நேர்மையான போலீஸ் அதிகாரியான டாக்டர்.ராஜசேகர் தன்னுடைய ஆசானும், குருவுமான முதலமைச்சரைக் காப்பாற்ற தன் உயிரைக் கொடுப்பதுதான் படத்தின் கதை. தெலுங்கில் ராஜசேகருக்கு திருப்புமுனையாக அமைந்த படம். தமிழிலும் மாபெரும் வெற்றி பெற்றது. படம் வெளிவந்த போது 'இதுதாண்டா' என்ற வார்த்தை அதிகமான அளவில் புழக்கத்தில் வந்தது. கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடிக்க, ஹிந்தியில் சிரஞ்சீவி நடிக்க இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டது.


1980 முதல் 1990 வரையில் தெலுங்கிலிருந்து தமிழுக்கு வெளிவந்த பல டப்பிங் படங்களில் மேலே சொன்ன ஒரு சில டப்பிங் படங்கள் பல்வேறு காரணங்களால் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட படங்களாக இருந்தன. அவற்றில் “பாடும் பறவைகள், சலங்கையில் ஒரு சங்கீதம், வைஜெயந்தி ஐ.பி.எஸ்., இந்திரன் சந்திரன், முதல் இரவே வா, அஸ்வினி, பாரத்பந்த், கமிஷனர்” ஆகிய படங்களைச் சொல்லாம்.


90களில் வெளிவந்த டப்பிங் படங்களின் எண்ணிக்கை அதிகமாக இருத்து. ஆனாலும் தரமான டப்பிங் படங்களின் எண்ணிக்கை அப்படியே குறைய ஆரம்பித்தது. அதன் பின் விரல் விட்டு எண்ணக் கூடிய சில படங்கள் மட்டுமே வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றன. டப்பிங் படங்களாக இருந்தாலும் சில படங்களின் பாடல்கள் இனிமையாக இருந்து ரசிகர்களைக் கவர்ந்தன. சில படங்கள் பிரமாதமாக ஓடவில்லை என்றாலும் சுமாராக ஓடின. கடந்த இருபது வருடங்களில் 'அம்மன், அருந்ததி' போன்ற சில படங்கள்தான் வசூல் ரீதியாக சாதனை புரிந்தன.


இன்றைய தலைமுறை தெலுங்கு நடிகர்களின் படங்கள் தமிழில் டப்பிங் ஆகி பெரிய சாதனையை ஏற்படுத்த தவறிவிட்டன. ஆனாலும், அவர்கள் நடித்த படங்களைத் தொலைக்காட்சிகளில் மட்டுமே அதிகம் பார்க்க முடிகிறது. இன்றைக்-கு 40 வயதைக் கடந்த சினிமா ரசிகர்கள் அவர்களது இளமைக் காலத்தில் டப்பிங் படங்களைப் பார்த்து ரசித்தவர்களாகவும் இருப்பார்கள்.


டப்பிங் படங்களுக்கென்றும் தனி ரசிகர்கள் கூட்டம் அப்போது இருந்தது. தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆகி வந்த படங்களின் மார்க்கெட்டை, இன்று ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆகி வரும் படங்கள் பிடித்துக் கொண்டது. ஒவ்வொரு வாரமும் பல டப்பிங் படங்கள் வந்து கொண்டுதானிருக்கிறது. ஆனால், அவை வந்த சுவடு கூட தெரியாமல் போய்விடுகிறது என்பதுதான் உண்மை.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in