Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

சினிமாக்காரர்களுக்கு சமூகப் பொறுப்பு வேண்டாமா? ஸ்பெஷல் ரிப்போர்ட்!

27 ஜூலை, 2015 - 11:51 IST
எழுத்தின் அளவு:
Cine-celebrities-should-have-social-responsibilities

தமிழ்ச்சினிமா 75வது ஆண்டுகள் கடந்தது என்று மகிழ்ச்சியைக் கொண்டாடினாலும் இது முழுமையான பெருமையா என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது. பட்டிமன்றப் பேச்சாளர் பாரதிபாஸ்கர் சினிமாக்காரர்கள் மத்தியிலேயே ஒருமுறை பேசினார். இந்த 75 ஆண்டு பெருமை பற்றிப் பேசும்போது, ஒருவன் 75 ஆண்டுகள் சாராயம் காய்ச்சினான் என்பதை பெருமையாக நினைக்க முடியுமா? அதில் என்ன பெருமை இருக்கப் போகிறது? ஒருவன் 75 ஆண்டுகாலம் கஞ்சா பயிரிட்டு வளர்த்தான் என்பதை பெருமையாகக் கருத முடியுமா? என்று கேட்டார். அதற்கு உரிய பதிலை யாராலுமே சொல்ல முடியவில்லை. இன்றும் பட்டி மன்றங்களில் இன்றைய சினிமாக்கள் பற்றி விமர்சித்துப் பேசுகிறார்கள். இப்போது வருகிற படங்களைப் பார்த்தால் ,அவற்றின் நோக்கம், உள்ளடக்கத்தைப் பார்த்தால் பாரதிபாஸ்கர் கூறியதில் தவறில்லையோ என்று தோன்றுகிறது.


அதெல்லாம் ஒரு காலம் !


ஒரு காலத்தில் ஏவி.எம் மெய்யப்ப செட்டியார் தன் நிறுவனத் தயாரிப்பாக ஒரு படத்திற்காக எடுக்கப்பட்ட பாடல் காட்சிகளைப் போட்டுப் பார்த்தாராம் அது கறுப்பு வெள்ளைப் படம்தான், சில காட்சிகளில் கதாநாயகியின் சட்டையில் கட்கத்தில் (அக்குளில் என்றால் கூட அது நாகரிகமற்ற வார்த்தை அப்போது) வியர்வையில் நனைந்து ஈரமாகி தெரிந்ததால் அடடே அசிங்கமாக இருக்கிறதே என்று மீண்டும் சட்டை வியர்வையில் நனையாமல் காட்சியை எடுத்துவரச் சொன்னாராம். அப்படி ஒரு நாகரிகமும், சமூகப் பொறுப்பும் நிறைந்தவர்கள் இருந்த சினிமாத் துறை இன்று யார் யார் கையிலோ சிக்கிச் சின்னா பின்னமாகிக் கொண்டு வருகிறது.


இன்று தன் படம் எப்படியும் பேசப்பட வேண்டும், எப்படியும்வெற்றி பெற வேண்டும் என்கிற ஆசையில் எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்க தயாராக இருக்கிறார்கள், கேட்டால் யதார்த்தம் என்று வாதிடுவார்கள். ஆபாசம், அருவருப்பு, வன்முறை போன்றவை இன்று படங்களில் எல்லை தாண்டி பயமுறுத்துகின்றன. பெரும்பாலான கதாநாயகர்கள் நிழல் உலகக் கதைகளில் நடித்து விட்டார்கள். பொறுப்பற்றவனாக, போக்கிரியாக, ரவுடியாக நடிக்க எந்த கதாநாயக நடிகர்களுக்கும் குற்றவுணர்ச்சியோ, கூச்சமோ இருப்பதில்லை, வெட்கமோ வேதனையோ படுவதில்லை.


அண்மையில் வந்துள்ள மாரி படத்தில் சர்வ காலமும் சிகரெட்டுடன் இருக்கிறார் தனுஷ். படம் முழுக்க புகைக்கிறார். மீதிக் காட்சிகளில் கையில் பாட்டில், கிளாஸ் என்று இருக்கிறார். புகைக்கிறார், குடிக்கிறார். இதற்கிடையில்தான் கதையையே சொல்கிறார்கள். எல்லா ரவுடி கதைக்கும் ப்ளாஷ்பேக் சொல்லி நியாயப்படுத்துகிறார்கள். அதுமட்டுமல்ல அத்தனை சீர்கேட்டையும் காட்சிகளாகவைத்து இது எங்கும் நடப்பதுதான் என்கிற சகஜமாக்குகிற பிரச்சாரத்தை மறைமுகமாக செய்து வருகிறார்கள்.


காலமாற்றமும், காட்சி மாற்றங்களும்!


ஒருகாலத்தில் கலைஞர் கருணநிதியின், இளங்கோவனின் வசனங்களில் தமிழ் வளர்ந்தது. ஆரூர் தாஸ் வசனங்களில் கருத்து வளர்ந்தது. கண்ணதாசன், பட்டுக்கோட்டை, வாலி பாடல்களில் வார்த்தையும் வாழ்க்கையும் பதியன் போடப்பட்டன, ஏ.பி.நாகராஜன் இயக்கிய படங்களில் குடும்ப அமைப்பும், பக்தியும், தமிழும் உயர்த்திப் பிடிக்கப்பட்டன. பீம்சிங் படங்களில் குடும்பமும், மனிதாபிமானமும், மனித நேயமும் வளர்ந்தன. பாலசந்தர் சமூகத்தை நாகரிகமாக படங்களில் பிரதிபலித்தார். பாரதிராஜா கிராமத்து மனிதர்களை, மண் மணத்தை அழகுணர்ச்சி யோடு பதிவு செய்தார்.


பின்னாளில் வந்த விக்ரமன், போன்றவர்கள் நாகரிகமான கதைகளைப் படமாக்கினார். ஒருகாலத்திலிருந்த பாசம் அன்பாகி காதலாகி இருந்தது, இன்று காமமாக வடிவெடுத்து படங்களில் நிரம்பி வழிகிறது. ஒரு காலத்தில் சிந்தனை, சிரிப்பு என்று இருந்த நகைச்சுவை இன்று கேலி, வெறுப்பு, எரிச்சல் என்று மாறி விட்டது. ஒரு காலத்தில் தியாகத்தின் உறைவிடமாக வீரம் காட்டப்பட்டது. இன்று வன்முறை, போக்கிரித்தனம், துரோகம், வன்மம், பழிவாங்கலே வீரம் என்று சித்தரிக்கப்படுகிறது. இப்படி அர்த்தங்கள் அனந்தத்தங்களானதற்கும், பாசம் ஆபாசம் ஆனதற்கும், நன்முறை வன்முறை ஆனதற்கும் யார் காரணம்?


எந்தவித மனசாட்சிக்கும் இடமின்றி படம் எடுத்து பாக்கெட்டை நிரப்பிக் கொள்ளத் துணியும் சில தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் திரையுலகில் வியாபித்து விட்டதே காரணம். இப்படிப்பட்ட அநாகரிகங்கள் பெரும்பாலும் ரசிகர்களால் புறக்கணிக்கப்படுகின்றன. இருந்தாலும் இப்படிப்பட்ட குறுக்குவழிக் கூட்டம் அதிகரித்து வருகிறது. விருதும் பெற்று பேசவும்பட்ட தங்கமீன்கள், காக்கா முட்டை, பாபநாசம் என இவ்வித படங்களில் வக்கிரம் எதுவுமில்லை. இவற்றின் வெற்றியாவது வறண்ட சிந்தனையாளர்களை திருத்துமா?


எதுவும் முடியாதது என்றில்லை !


காசி என்றொரு விக்ரம் நடித்த படம். நாயகன் காசிக்கு கண் தெரியாது. அவனுடைய தங்கையை கயவன் ஒருவன் சீரழித்து விடுகிறான். இதை பார்வையற்ற காசியும் அறிய வேண்டும். கயவனைப் பழிவாங்கவும் வேண்டும். ஆனால் இக்காட்சிகளில் வினயன் மிகவும் நாகரிகமாக கையாண்டு இருப்பார். கற்பழிப்பு காட்சியும் இருக்காது. கற்பழிப்பு என்றொரு வசனமும் இருக்காது. மற்றவர் என்றால் காட்சியை காசிக்கு விளக்குவதாக நினைத்து கற்பழிப்பு என்றால் என்ன என படம் வரைந்து பாகங்கள் குறித்து ஆபாசப்படுத்தி இருப்பார்கள். வினயன் மிகப் பொறுப்போடு காட்சிப் படுத்தியிருப்பார்.


மாப்பிள்ளை என்கிற படத்தில் தனுஷும், மாமியார் மனிஷா கொய்ராலாவும் முதலிரவு பற்றி அடிக்கிற லூட்டிகளும் பேச்சுகளும் காட்சிகளும் ஆபாசத்தின் உச்சம்.


அலெக்ஸ் பாண்டியன்' படத்தில் சந்தானத்தின் தங்கைகள் கார்த்தி இடம்பெறும் காட்சிகள் அருவருப்பின் அதிக பட்சம். இப்படி நிறைய உண்டு உதாரணங்கள்.


முதலிரவு என்பது தாம்பத்திய வாழ்வின் தொடக்கம் அது ஒரு ரகசிய அனுபவம் அது. தமிழ் சினிமாவில் கொச்சைப் படுத்தப்பட்ட அளவுக்கு கேவலப்படுத்தப்பட்ட அளவுக்கு எந்த சினிமாவிலும் வந்ததில்லை அது சம்பந்தமான காமெடிகளும் காமநெடியோடு இரக்கம் இல்லாமல் வருகின்றன.


காதல் காட்சிகளில்..!


எல்லாப் பிரச்சினைக்கும் காதல்தான் தீர்வு என்று கற்பிக்கப்படுகிறது. இது எவ்வளவு பெரிய அபத்தம்? ஒரு பெண்ணைத் தொடர்ந்து பின்பற்றுவதும், துன்புறுத்துவதும் நடந்தால் அவள் மனத்தில் இடம் பிடிக்க முடியும் என்கிற போலியான நம்பிக்கையை இளைஞர்கள் மத்தியில் படங்களின் மூலம் விதைக்கிறார்கள். பதின் வயது பருவக் கிளர்ச்சியை காதலாக அர்த்தப்படுத்தி நம்ப வைக்கிறார்கள். யாரும் யாரையும் காதலிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. தனக்கான இணையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பும் கவனமும் உரிமையும் பெண்களுக்குக் கிடையாது என்கிற ஆணாதிக்க மனோபாவம் கட்டி எழுப்பப்படுகிறது. ஆண் தேர்ந்தெடுப்பவள் தான் அவனை அடைய வேண்டும் என நிறுவப்படுகிறது.


நகைச்சுவைக் காட்சிகளில்!


இன்று நகைச்சுவை காட்சிகள் என்றால் பகைச்சுவை காட்சிகள் என்று மாறிவிட்டன ஆரோக்கியமாக சிந்தித்து காட்சிப் படுத்துமளவுக்கு யாரும் மூளையை யோசிக்க விடுவதில்லை. அடுத்தவரைக் கேலி பேசுவது, கிண்டல் செய்வது வெறுப்பேற்றுவது, எரிச்சல் மூட்டுவது இவைதான் நகைச்சுவை காட்சிகள். குறிப்பாக சந்தானம் யாரையாவது கிண்டல் செய்யாமல் இருந்திருக்கிறாரா?


நடந்து போகிறவர் தவறி கிழே விழுந்தால் க்ளுக் கென்று சிரிக்கிற மனப்பான்மையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அடுத்தவன் துன்பத்தைப் பார்த்து இன்பப்படுவது சாடிசம் என்கிற மனநோயல்லவா? சினிமா நகைச்சுவைக் காட்சிகளின் மூலம் இப்படிப்பட்ட மனப்பான்மையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். செந்தில் ,வடிவேலு நகைச்சுவைக் காட்சிகளின் சாராம்சமே அடி வாங்குவது தானே?


சந்தானம் பெற்ற தந்தையையே அப்பன் வர்றான், போறான் என்கிறார் சினிமாவில் பேராசிரியரைக் கேலி பேசாத கல்லூரி வகுப்பறை உண்டா? இதற்கு சந்தானம் மட்டுமல்ல, விவேக்கும் விதிவிலக்கல்ல.


கூவத்திலிருந்து தன்னைக் காப்பாற்றி சேறு போகக் குளிப்பாட்டி விடும் ஏழைப்பெண்ணைக்கூட நாட்டுக்கட்டை நல்லாருக்கு என்பார் விவேக்.


ஒரு காட்சியில் 5.10-க்கு போறதா இருக்கேன். என்கிற பெண்ணிடம் ஏன் நல்லாத்தானே இருக்கே 50 நூறுக்குப் போகலாமே என்பார் சந்தானம். இது கடும் சர்ச்சையாகி அக்காட்சி நீக்கப்பட்டது.


சமூக வலை தளங்களில் பரவும் வைரஸ்!


இப்போது எந்த நல்ல விஷயத்தையும் மட்டுமல்ல, குப்பை விஷயத்தையும் பரப்பி விடமுடிகிற சாதனமாக சமூக ஊடகங்கள் உள்ளன. இப்படி அடுத்தவரைக் கேலி கிண்டல் பேசும் வசனங்கள் காட்சிகள் சில இளைஞர்களால் பரப்பப்படுகின்றன. பிரபலமாகியும் விடுகின்றன.


மாரி படத்தில் கொலை செய்வதை செஞ்சுருவேன் என்பார் மாரி. ஆனால் அதைத் தனுஷ் பேசுவதால் குழந்தைகளும் செஞ்சுருவேன் என்கிறார்கள். ஏதோ கொஞ்சிருவேன் என்பது போல் ஐஸ்க்ரீம் மாதிரி பேசுகிறார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை? ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டாலே நடிகர்கள் அரசியல், பதவி, முதல் அமைச்சர் என்ற கனவு காண்கிறார்கள். எம்.ஜி.ஆர் ஒருவர் முதல்வராகிவிட்டதால் எல்லாருக்கும் அந்த உரிமையும் தகுதியும் வந்து விடுமா? அவர் நடித்த படங்களில் அவர் குடித்து புகைத்து தரக்குறைவான காட்சியில் நடித்ததுண்டா, தவறான கருத்தைச் சொன்னதுண்டா?.


ரணங்களாய் சில உதாரணங்கள்!


பருத்திவீரன் படம் புகழப்பட்டாலும் அது குழுப் பாலியல் கொடுமையை அறிமுகப்படுத்திய படம் என்பதை யாராலும் மறுக்க முடியுமா?


தீக்குச்சி படத்தில் வருகிற ஒரு காட்சி ஏடி எம்மில் வருகிறவரிடம் பணம் பிடுங்கக் கற்றுத் தருகிறது.


ரேணிகுண்டா வில் வரும் ஒரு காட்சி யார் யாரிடம் பணம் இருக்கும்? எப்படி வழிப்பறி செய்வது என்று சொல்கிறது.


கள்ளப்படம் எப்படி திருடுவது என்று பாடம் எடுக்கிறது.



வெற்றிப் படம் என்று பேசப்பட்ட சூதுகவ்வும் படமே ஆள்கடத்திப் பணம் பறிக்கும் கதைதான். அப்படத்தை ஊடகங்களே உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டாடின.


தகராறு பீரோ புல்லிங் திருடன் கதை. திருட்டு நுணுக்கங்களை கற்றுக் கொடுக்கிற படம்.


மூடர் கூடம் உறவினர் விட்டில் திருடுவதை நியாயப் படுத்துகிறது.


பெரும்பாலான படங்களில் பெண்களை கரெக்ட் செய்வதே கதாநாயகர்களின் காதல் எனப்படுகிறது. அதில் அன்பு இல்லை. காதலும் இல்லை. காமமே லாபமே உள்ளன. துரத்தியவள் உன்னைத் துரத்தினாலும் ,துப்பினாலும் தொடர்ந்து செல்; செருப்பால் அடித்தாலும் சென்று கொணடே இரு; இறுதியில் ஒரு பெண் வசப்படுவாள் என்று விடாமல் படங்களில் போதிக்கப் படுகின்றன. ஆனால் இப்படி படமெடுக்கும் இயக்குநர்கள் தங்கள் வீட்டில் நடந்தால் ஏற்கமாட்டார்கள். இயக்குநர் ஒருவரின் மகள் காதல் விஷயத்தை நாடே அறியும். காதல் எல்லாவற்றையும் தாண்டியதுதானே?


திருந்த வேண்டும்!


நல்லகதையம்சம் உள்ள நாகரிகமான காட்சிகள் உள்ள படங்களை ரசிகர்கள் வரவேற்கவே செய்வார்கள். சமீபத்தில் வெற்றிபெற்ற படங்கள் கூறும் செய்தி இதுதான். ஆனால் படைப்பாளிகள் குல்கந்து எதிர் பார்க்கும் ரசிகர்களிடம் குப்பையைத்தான் தருகிறார்கள். கதையை எதிர்ப்பார்த்தால் வெறும் சதைக் காட்சிகளைத் தருகிறார்கள். சினிமாக்காரர்களுக்கு சமூகப் பொறுப்பு வேண்டாமா என்பதே இக்கட்டுரையின் கேள்வி நோக்கம் எல்லாம்.. படங்கள் வெறும் காட்சிகள் பிம்பங்கள் அவைபற்றி கவலைப்படவோ, கரிசனப் படவோ தேவையில்லை என்பவர்கள் சிலருண்டு.


சினிமாவை சினிமாவாக பார்க்கும் சமூகமல்ல இது. சினிமாவை வாழ்க்கையாக நடிப்பவர்களை அத்துடன் பொருத்திப் பார்த்து பரவசப்படும் வருத்தப்படும் முதிராத சமூகம் இது. அதனால்தான் ஒரு குட்டி நடிகனுக்கும் வருங்கால முதல்வரே என போஸ்டர் ஒட்டுகிறார்கள். ஒரு வெற்றிப் படத்துக்கே கட் அவுட்டுக்குப் பாலாபிஷேகம், பீராபிஷேகம் செய்கிறான் ரசிகன். நட்சத்திரத்தின் சம்பளம் பல கோடிகளாக உயர உயர ரசிகனின் மதிப்பு மிகக் கீழே தாழ்கிறது என்பதுதான் தர்க்க ரீதியான பொருளாகும்.


இப்படி ஒரு முதிராத மனம் கொண்ட சமூகத்தைக் கொண்ட நம் சூழலில் தான் பொறுப்பாகப் படமெடுக்க வேண்டும் படைப்பாளிகளுக்கு சமூகப் பொறுப்பு வேண்டும் என்கிறோம். அது தவறா?


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in