இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
2015ம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதம் 17 திரைப்படங்கள் வெளிவந்தன. அவற்றில் குறிப்பிடத்தக்க வெற்றியை “ஐ, டார்லிங்” ஆகிய படங்கள் மட்டுமே அனைவருக்கும் லாபகரமான படங்களாக அமைந்ததாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மற்ற படங்கள் மூலம் யாருக்கும் பெரிதாக எந்த லாபமும் இல்லை. அவற்றில் பல படங்கள் படுதோல்வியைச் சந்தித்த படங்கள்.
பிப்ரவரி மாதத்தில் மொத்தமாக 12 படங்கள் மட்டுமே வெளிவந்தன. உலகக் கோப்பை கிரிக்கெட், இறுதித் தேர்வு நெருங்கும் நேரம், சில மாதங்களில் கோடை விடுமுறை போன்ற சில காரணத்தால் பிப்ரவரி மாதத்தில் வெளியான படங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
பிப்ரவரி மாதம் வெளியான படங்கள்...
பிப்ரவரி 5
என்னை அறிந்தால்
பிப்ரவரி 6
பொங்கி எழு மனோகரா
பிப்ரவரி 13
அனேகன்
மண்டோதரி
மனித காதல் அல்ல
பிப்ரவரி 20
கதிர் கஞ்சா கருப்பு
சண்ட மாருதம்
தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்
பிப்ரவரி 27
காக்கி சட்டை
வஜ்ரம்
எட்டுத்திக்கும் மதயானை
மணல் நகரம்
பிப்ரவரி மாதத்தில் வெளியான படங்களில் வியாபார ரீதியாக பெரிய ஹீரோக்களின் படங்கள் என்று பார்த்தால் என்னை அறிந்தால், அனேகன், சண்டமாருதம், காக்கி சட்டை ஆகிய படங்கள் மட்டுமே இடம் பிடிக்கும்.
மற்ற எட்டு படங்களுமே பாப்புலரான ஹீரோக்கள் நடிக்காத, புதுமுகங்கள் அல்லது சிறிய நடிகர்கள் நடித்த படங்களாகத்தான் வெளிவந்தன.
என்னை அறிந்தால் படம் சுமார் 60 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு 100 கோடி ரூபாய் வரை வசூலை அள்ளியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அனேகன் படம் எவ்வளவு வசூலானது என்று படத்தின் நாயகனான தனுஷே படம் வெளியான முதல் நாளிலிருந்து டிவிட்டரில் தெரிவித்து வந்ததால் அவர் சொன்னதை அப்படியே கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். அவர் சொன்ன தகவலின் படி படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கிறது.
காக்கி சட்டை படம் இரண்டு தினங்களுக்கு முன்தான் வெளிவந்தது. சிவகார்த்திகேயன் நடித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளிவந்த இந்தப் படத்தின் இரண்டு நாள் வசூல் நன்றாக இருப்பதாகவே திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படம் பார்த்து விட்டு வெளியில் வருபவர்களும் இந்தப் படமும் என்னை அறிந்தால் படத்தின் கதையும் ஒரே மாதிரிதான இருக்கிறது என்கிறார்கள். கௌதம் மேனன் அவருடைய ஸ்டைலில் கிளாஸ் படமாக என்னை அறிந்தால் படத்தை எடுத்திருக்க காக்கி சட்டை படத்தை இயக்குனர் துரை செந்தில் குமார் மாஸ் ஆக எடுத்திருக்கிறார். ஆர்கன் டிராஃபிக்கிங் , அதாவது மனித உடல் உறுப்புக்களின் கடத்தல் என்பது இரண்டு படத்திற்கும் உள்ள பொதுவான கரு. இந்தப் படத்தின் வெற்றியைப் பொறுத்து சிவகார்த்திகேயனுக்கு தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தர இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கோலிவுட்டினர் தெரிவிக்கிறார்கள்.
சண்டமாருதம் போன்ற படங்களில் நடிப்பதையெல்லாம் சரத்குமார் தவிர்க்கலாம். சென்னையில் ஒரு நாள் படம் போன்ற ஸ்டைலிஷான போலீஸ் ஆபிசர் போன்ற கேரக்டர்கள்தான் அவருக்கு இனி பொருத்தமாக இருக்கும். 80களில் வெளிவந்த மசாலாப் படம் போன்ற கதைதான் சண்டமாருதம் படத்திற்கான மிகப் பெரிய மைனஸ் பாயின்ட்.
“தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், வஜ்ரம், மணல் நகரம், எட்டுத் திக்கும் மதயானை போன்ற படங்கள் வித்தியாசமான கதைக் களத்துடன் அமைந்த படங்கள். மற்ற படங்கள் 2015ம் ஆண்டில் வெளியான படங்களின் பட்டியலில் மட்டுமே இடம் பெறும்.
கௌதம் மேனன், கே.வி.ஆனந்த் ஆகிய முன்னணி இயக்குனர்களின் படங்கள், ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இரண்டு படங்கள், அனிருத்தின் இசையில் ஒரு படம் ஆகியவை முன்னணி கலைஞர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள படங்கள்.
என்னை அறிந்தால், அனேகன் ஆகிய இரண்டு படங்களில் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் அனேகன் பாடல்கள் மட்டுமே ரசிக்க வைத்தன.
அனிருத்தின் இசையில் காக்கி சட்டை படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.
காக்கி சட்டை படத்தின் வெற்றி எந்த அளவிற்கு இருக்கிறது என்பது இன்னும் சில நாட்களில்தான் தெரிய வரும். அதுவரை பிப்ரவரி மாதத்தின் வியாபார ரீதியிலான வெற்றிப் படங்களாக என்னை அறிந்தால், அனேகன் ஆகிய படங்களை மட்டுமே சொல்ல முடியும்.