ஜெயம் ரவியின் ஆசை ஜெயமாகப்போகிறது! | காதல் சந்தியாவிடம் சில்மிஷம் செய்த சந்தானம்! | பிரகாஷ்ராஜின் விவசாயி கனவு! | தயாராகிறது ரஜினியின் சந்திரமுகி-2 ? | திரையுலக வாழ்க்கையில் கிசுகிசுக்கள் சாதாரண விஷயம்: பிபாஷா பாசு | ஹாலிவுட் படம் இயக்கும் பி.வாசு | பாலா - எஸ்.ரா., மீண்டும் கூட்டணி | விரைவில் திலோன் ரேஞ்சர் | தமிழில் பேசி பழகலாமே ; தீபிகாவுக்கு ஷாரூக் அறிவுரை | யாருக்கு கல்யாணமானா எனக்கென்ன? உச்சக்கட்டகோபத்தில் அனுஷ்கா |
ஒவ்வொரு ஆண்டும், கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்தாண்டும் 43-வது சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் நவம் 20ம் தேதி கோலாகலமாக துவங்கியது. 10நாட்கள் நடக்கும் இவ்விழா நவம்-30 ம் தேதி வரை நடக்கிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட படங்கள் இங்கு திரையிடப்படுகிறது. பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி, இணையதளம் என 300க்கும் அதிகமான நிருபர்கள், புகைப்படகாரர்கள், டி.வி., கேமரா மேன்கள் கோவாவை முற்றுகையிட்டு திரைப்பட விழா குறித்த செய்திகளை எழுதவும், ஒலி, ஒளிபரப்பவும் செய்து வருகின்றனர். தினமலர் சார்பாக, கோவா திரைப்பட விழாவை முற்றிலும் சிறப்பான முறையில் தொகுத்து ஸ்பெஷல் ரிப்போர்ட்டாக தந்திருக்கிறார் மூத்த செய்தியாளர் எஸ்.ரஜத்.
கனடா நாட்டு இயக்குனர் பிலிப் பிளார்டியு இயக்கியுள்ள நான்காவது படம் மான்ஸியூர் லஹர் என்ற பிரெஞ்சு மொழிப்படம். எவிலின் டிலா செனேலியர் என்ற பெண் எழுத்தாளர் எழுதிய மேடை நாடகத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நமது ஊர்களில் விஜய் டி.வி.யில் 7 சி என்ற ஒரு தொடர் வருகிறது அல்லவா. அதேபோன்ற கதை தான் இப்படமும். அந்த தொடரில் எல்லா மாணவ மாணவியரும் தங்கள் ரோல் மாடலாக கருதும் ஸ்டாலின் என்ற ஆசிரியரின் மறுபதிப்பு இந்தபடத்தில் ஆசிரியராக வரும் மிஸ்டர் லஹர். (இப்படத்திற்கு இன்னொரு பெயரும் கூட)
அல்ஜிரீயா நாட்டில் இருந்து கனடா நாட்டுக்கு அகதியாக வரும் லஹர், மான்ட்ரியால் நகரில் உள்ள ஒரு ஆரம்ப பள்ளியின் ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்து கொள்ள அந்த இடத்திற்கு தற்காலிகமாக ஆசிரியராக வந்து சேர்கிறார். தன் வகுப்பில் உள்ள மாணவ மாணவியரை அணுகும் முறை, பாடம் சொல்லிக்கொடுக்கும் திறன், மற்றவர்களுடன் பழகும் திறன் உள்ளிட்டவைகள் இவரை அனைவருக்கும் பிடித்த நபராக்கிவிடுகிறது. இவருக்கு முன் இருந்த ஆசிரியை வகுப்பு அறையிலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு படிக்கும் சில மாணவர்களை பாதிக்கிறது. அதை போக்க லஹர் முயற்சி எடுக்கிறார்.
இதற்கிடையே கனடா நாட்டில் நிரந்தரமாக தங்க லஹருக்கு கனடா அரசு அனுமதி அளிக்கிறது. ஆனால் பள்ளி நிர்வாக குழுவின் தலைவி, முன்னாள் ஆசிரியை தற்கொலை பற்றி மாணவர்களிடம் விவாதித்து, அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டதாக சொல்லி, லஹரை வேலையை விட்டு போக சொல்கிறார். தனது பணியின் கடைசிநாளில் கூட மாணவர்களுக்கு உற்சாகத்தோடு பாடங்கள் நடத்திவிட்டு ஏன் போகிறேன் என்ற காரணத்தை சொல்லாமல் பள்ளியை விட்டு விடைபெறுகிறார்.
ஆசிரியர் லஹராக நடித்து மாணவர்கள் இடையே உற்சாகம், தன்னம்பிக்கை, படிப்பில் ஆர்வம் என நல்லாசிரியராகவே நடித்திருந்தார் முகமது பெல்லாக். தன்னை வேலையிலிருந்து போகச் செல்லும் நிர்வாக குழு தலைவியிடம் தன் மீது எந்த தவறும் இல்லை என்று அமைதியாக அவர் எடுத்து சொல்லும் காட்சி நம்மையே உருகச் செய்கிறது.
2011ம் ஆண்டில் டொரொண்டோ சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த திரைப்படம் என்ற விருதும், 2012ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளர்கள் விருதும் பெற்றது. அதுமட்டுமின்றி 2012ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கும் சிபாரிசு செய்யப்பட்டது.
லஹர் மறக்கமுடியாத நல்லாசிரியர்!
தாய்மை உணர்வை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கும் படம் தான் ஜான். இப்படம் எந்த நாட்டுக்கும், எந்த மொழிக்கும் பொருந்தும். எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என மூன்று முக்கிய பணிகளை ஏற்றிருக்கும் ரஸித் ஸெலிகேசர், பார்ப்பவர்கள் மனதில் நிற்கும் படத்தை அளித்ததற்கு பாராட்டுக்குரியவர். 300 எபிசோடுகளை கொண்ட 12 டி.வி., தொடர்களை இயக்கியுள்ள ரஸித், இயக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் இது. 2012ம் ஆண்டு ஸ்ன்டான்ஸ் திரைப்பட விழாவில் நடுவர் குழுவின் விசேஷ விருதை பெற்றுள்ளது இப்படம்.
கமல், ஆயிஷா தம்பதியினர் குடும்பத்தினரின் எதிர்ப்புகளில் இருந்து தப்பிக்க இஸ்தான்புல் நகருக்கு ஓடி வந்துவிடுகின்றனர். கமல், ஆயிஷே இருவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக இருந்தாலும் குழந்தை இல்லாதது அவர்களுக்கு பெரிய குறையாக இருக்கிறது. மருத்துவ பரிசோதனையில் கமலிடம் தான் குறை உள்ளது என்றும், அவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்பது தெரிய வருகிறது. அவமானத்தில் வருத்தப்படும் கமல், ஒன்பது மாதங்கள் கழித்து ஒரு குழந்தையை தத்து எடுத்து கொள்ளலாம் என்று முடிவு செய்து தன் மனைவியிடம் அதுவரை கர்ப்பமாக இருப்பது போன்று நடிக்க சொல்கிறார். ஆயிஷாவுக்கு விருப்பம் இல்லை என்றாலும் தனது கணவரின் மானப்பிரச்னை என்பதால் ஒப்புக்கொள்கிறாள். அண்டை வீட்டுக்காரர்கள், உறவினர்கள் எல்லோரும் இவர்களை மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறார்கள். நிறைய கஷ்டத்தோடு தண்டனை போல கர்ப்பிணியாக நடிக்கிறாள் ஆயிஷா.
பணம் கொடுத்து குழந்தைக்கு ஏற்பாடு செய்கிறார் கமல். ஆனால் அந்த குழந்தையிடம், ஆயிஷாவுக்கு தாய்பாசம் வரவில்லை. இதனால் கணவன் - மனைவி இடையே விரிசல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் வெறுக்க ஆரம்பிக்கின்றனர். ஒருகட்டத்தில் இவர்களது திருமண பந்தமும் முறிகிறது. கமல் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடி ஒரு பணக்காரரின் மகளை திருமணம் செய்கிறார். ஆயிஷா ஒரு ரெஸ்டாரெண்டில் சமையல் பணிபுரிந்து தனக்கு பிறக்காத மகன் ஜானை வளர்க்கிறாள்.
வேண்டா வெறுப்பாக கணவருக்காக கர்ப்பிணி போல் நடிப்பது, கமல் தன்னை விட்டு பிரிந்து டெஸ்டாரண்ட்டில் கஷ்டப்படுவது, ரெஸ்டாரண்ட்டில் உடன் வேலை பார்க்கும் ஒருவர் ஆயிஷாவை விரும்புவது, பூங்காவில் விட்ட மகன் ஜான், அம்மா ஆயிஷாவை பின்தொடர்ந்து அவள் வேலை செய்யும் இடத்திற்கே வருவது, ஒருசமயம் கமல் காணாமல் போய் அவனை கண்டுபிடிப்பது, என படத்தில் பல கஷ்டங்கள் அனைத்தும் ஆயிஷாவின் மீதே திணிக்கப்பட்டுள்ளது. ஆயிஷாவாக நடித்து இருக்கும் அந்தை நடிகை மீது நம்மை அறியாமலேயே ஒருவித பரிதாபம் ஏற்படுகிறது. அவரைப்போலவே குழந்தையாக நடித்திருக்கும் ஜானும், ஆயிஷாவுக்கு சரிசமாக நடித்திருக்கிறார்.
நடிப்பு, கதை, இயக்கம் என்று பல துறைகளிலும் நல்ல வலுவான படம் ஜான்.
பாரீஸ் நகரில் உள்ள பிரபல பெண்கள் பத்திரிக்கை எல். அந்த பத்திரிக்கையில் பிரபல பெண் எழுந்தாளராக இருப்பவர் அனி. பணம் சம்பாதிக்க பகுதிநேர செக்ஸ் தொழிலாளிகளாக இருக்கும் இளம் பெண்களை பற்றி பேட்டி கண்டு புது கதை ஒன்றை எழுத விரும்புகிறார் அனி. அதற்காக இரண்டு இளம் பெண்களை சந்தித்து அவர்களிடம் கருத்து கேட்கிறார் அனி. அனியிடம் இளம்பெண் ஒருவர் நான் சந்திக்கும் நபர்களில் சிலர் என் தந்தைக்கு ஒப்பான வயது உடையவர்களும் இருப்பார்கள். கஸ்டமர்கள் பலவிதம். சிலர் நிறைய பேசுவார்கள். தங்களைப்பற்றி, தங்கள் மனைவியைப்பற்றி, குடும்பங்களை பற்றி எல்லாம் பேசுவார்கள். எனக்கு அவற்றின் மீதெல்லாம் அக்கறை இல்லை. அவர்கள் பேசுவது சில நேரங்களில் போரடிக்கும் ஆனாலும் பாதகமில்லை. எனென்றால் அவர்கள் என்னுடன் செலவழிக்கும் மொத்த நேரத்திற்கும்தான் தான் அவர்கள் பணம் கொடுப்பார்கள். சிலர் அழுவார்கள். சிலர் அன்புக்கு ஏங்குவார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும் என்று தனது கஸ்டமர்களை பற்றி அனிடம் சொல்லுகிறாள். இதற்கிடையே தனது பாய் பிரண்டு உடனும் அவ்வப்போது தனது நெருக்கத்தை அதிகப்படுத்தி கொள்கிறார் அந்த டீன் ஏஜ் பெண். அனிக்கும், அந்த டீன் ஏஜ் பெண்ணுக்கும் ஒரு நல்ல நட்பு உண்டாகிவிடுகிறது. அந்த பெண்ணின் வீட்டிற்கு வெளியே உள்ள உள்ள பார்க் ரெஸ்டாரென்ட் உள்ளிட்ட இடங்களில் இருவரும் அடிக்கடி சந்தித்து கொள்கிறார்கள.
தன் கஸ்டமர்களில் சிலருடன் செக்ஸில் ஈடுபட்டதை அந்த பெண் உள்ளதை உள்ளபடி அனிடம் சொல்கிறார். ஓரிரு காட்சிகள் சுருக்கமாக இடம்பெறும். தன்னுடைய கட்டுரை முழுமையாகவும், உண்மையை பிரதிபலிப்பதாகவும் அதேசமயம் அந்த டீன்-ஏஜ் பெண்களுக்கு நியாயம் தருவதாகவும் இருக்க வேண்டும் என்பதில் அனி மிகுந்த அக்கறை கொண்டவராக இருக்கிறார்.
ஒருசமயம் அனியும், அந்த பெண்ணும் பேசிக்கொள்ளும்போது உங்களுக்கும் அந்த உணர்வு வருகிறதா...? என்று அந்த டீன் ஏஜ் பெண் கேட்கும்போது அதிச்சிக்கு உள்ளாகும் அனி என்ன பேசுற...? என்பார் பதட்டமாக. இல்லை இல்லை அந்தமாதிரி கேள்வியை என்னிடம் கஸ்டமர்கள் கேட்பார்கள் என்று சொல்லி அவள் சமாளிப்பாள். அந்தரங்க விஷயங்களை பற்றி பேசினாலும் தன் கண்டிப்பையும், மரியாதையையும் அனி விட்டு கொடுப்பதில்லை.
பிரபல பிரான்ஸ் நடிகை ஜூலியட் பினோஷே பத்திரிக்கையாளர் அனியாக, யதார்த்தமாக நடித்து அசத்தியிருக்கிறார். இவரது நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். அதேபோல் டீன் ஏஜ் பெண்களாக வரும் அந்த இரண்டு பெண்களும் தங்களது பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். செக்ஸ் தொழிலாளியாக நடிக்கிறோமே என்று துளியும் கவலைப்படாமல் துணிச்சலுடன் நடித்திருக்கிறார்கள்.
பணம், செக்ஸ், சுதந்திரம், காதல் ஆகியவற்றின் இணைப்பை குறிப்பிட்டு சமுதாயத்திற்கு சில கேள்விகள் கேட்பது போல இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. செக்ஸ் தொழிலை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்டியிருக்கிறார் இப்படத்தின் பெண் டைரக்டர் மல்கோஸ்கா சுமோஸ்கா. இது இவரது ஐந்தாவது படைப்பாகும். டொரொண்டோ, பெர்லின் உள்ளிட்ட நகரங்களில் நடந்த சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்று இருக்கிறது.
கோவா 2012ம் ஆண்டு திரைப்பட விழாவில் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய படம் "லிலெட் நெவர் ஹேப்பண்டு". பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் சர்வ சாதரணமாக நடக்கும் குழந்தை செக்ஸ் தொழிலாளர்களின் உண்மை படைப்பு தான் இந்த லிலெட் நெவர் ஹேப்பண்டு. குழந்தை செக்ஸ் தொழிலாளர்கள் படும் கஷ்டங்களை உணர வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த படத்தை தான் எடுத்ததாக படத்தின் இயக்குனர் ஜாக்கோ க்ரோயென் கூறினார்.
ஒரு டாக்குமென்ட்ரி படத்திற்காக தான் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது, குழந்தை செக்ஸ் தொழிலாளர் லிலெட்டை ஒரு காப்பகத்தில் ஜாக்கோ சந்தித்தார். அவளது அனுபவங்களை கேட்டு அதிர்ச்சியடைந்த ஜாக்கோ அவளைப்பற்றி முழுநீள படமாக்க முடிவு செய்தார். 12 வயது லிலெட்டாக யாரை நடிக்க வைப்பது என்பதை முடிவு செய்ய ஜாக்கோ 500 பெண்களில் இருந்து சாண்டி தலக் என்ற பெண்ணை தேர்வு செய்தார். லிலெட் மற்றும் அவள் போன்று திசைமாறிய சிறுவன், சிறுமியருக்கு அடைக்கலம் கொடுத்து கல்வி கற்பிக்கும் சமூக ஆர்வலராக நடிகை ஜொஹன்னா டெர் ஸ்டீஜ் நடித்திருந்தார்.
அந்த விடுதியில் மற்றொரு பெண்ணோடு செக்ஸில் ஈடுபட வரும் உள்ளூர் போலீஸ் அதிகாரி, லிலெட்டை பார்த்ததும் அவளுடனும் செக்ஸில் ஈடுபட வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் லிலெட் மிகவும் சாமர்த்தியமாக அங்கு இருக்கும் எல்லா டூரிஸட்களின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்க்கும் வகையில், "இவர் என்னை இந்த விலை கொடுத்து செக்ஸில் ஈடுபட நினைக்கிறார், அதற்கு மேலே விலை கொடுக்க விரும்புவோர் கேட்கலாம் என்று..." தன்னை தானே ஏலத்தில் விடுகிறாள். மிகப்பெரிய விலை கொடுத்து ஒரு அமெரிக்கர் லிலெட்டை அழைக்கிறார். போலீஸ் அதிகாரி ஏமாற்றத்தில் வெளியேறுகிறார். 12 வயது பெண் தன் தைரியமான பேச்சால் சாதுர்யமான நடத்தையில் அனைவரையும் வியக்க வைக்கிறாள். சுலபமாக நிறைய பணம் சம்பாதிக்கும் டெக்னிக்கை லிலெட் புரிந்து கொண்டவள்.
லிலெட்டை அங்கிருந்து காப்பாற்ற அமெரிக்க பெண் சமூக ஆர்வலர் போலீஸ் உதவியை நாடுகிறார். போலீஸ் ரெய்டு நடத்தும்போது அந்த விபச்சார விடுதியை நடத்தும் தலைவியும், மற்ற சில பெண்களும் போலீஸிடம் மாட்டிக் கொள்கிறார்கள். லிலெட் மட்டும் தப்பிவிடுகிறாள்.
எந்த சூழ்நிலையிலும் லிலெட், அசாத்திய துணிச்சலோடு பேசுவது வியப்பூட்டுகிறது. எதிர்பாராமல் நிறைய பணம் சம்பாதித்த லிலெட் தன் பள்ளி நண்பனை 5-ஸ்டார் ஓட்டலுக்கு அழைத்து சென்று சாப்பிட வைப்பது, குழந்தை செக்ஸ் தொழிலாளர் என்று ஒப்புக்கொண்டு டி.வி.சேனலில் துணிச்சலாக பேட்டி கொடுப்பது என்று பல காட்சிகளில் லிலெட்டாக நடித்திருக்கும் சாண்டி தலக் அசத்துகிறார். இவரது சிறந்த நடிப்பிற்கு சிறந்த நடிகைக்கான விருது இவருக்கு கிடைக்கும் என விமர்சகர்கள் எதிர்பார்த்தார்கள்.
டேனி பாயல் எடுத்த ஸ்லம்டாக் மில்லினியர் படத்தை பார்த்து தான் தெருக்குழந்தைகளை வைத்து படமெடுக்க தனக்கு இன்ஸ்பிரேஷன் வந்தது என்கிறார் இப்படத்தின் டைரக்டர் ஜாக்கோ. படத்தில் ஒரு காட்சியில் கூட லிலெட்டை ஆபாசமாக காண்பிக்கவில்லை. சமுதாயத்தில் தொடர்ந்து இருக்கும் குழந்தை செக்ஸ் தொழிலாளர்களின் அவல நிலையை மனதில் உறைக்கும்படி படமாக்கிய இயக்குனரை பாராட்டலாம்.
கியூபா - அமெரிக்க நாடுகளில் தயாரிக்கப்பட்ட ஸ்பானிஷ் மொழிப்படம் "உனா நேஷே". படத்தை இயக்கி இருப்பவர் நியூயார்க்கை சேர்ந்த பெண் இயக்குனர் லூஸி முல்லாய். ட்ரிபெக்கா சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் விருது பெற்றவர். நியூயார்க்கில் திரைப்பட கலையை கற்று, கியூபாவிற்கு சென்று உனா நேஷே படத்திற்காக ஆராய்ச்சி செய்தவர். லூஸியின் முதல் முழுநீள திரைப்படம் இது தான். கோவா 2012ம் ஆண்டு திரைப்பட விழாவில், நடுவர் குழுவின் விசேஷ விருதும், வெள்ளி மயில் ப்ளஸ் 15 லட்சம் ரூபாய் பரிசு பெற்ற படம் இது.
ரெளல், எலியோ இருவரும் கியூபா நாட்டில் ஹவானா நகரில் வாழும் டீன்-ஏஜ் நண்பர்கள், பணக்காரர்கள் டூரிஸ்ட்டுகள் வந்து தங்கும் நட்சத்திர ஓட்டலின் சமையல் அறையில் பணிபுரிவர்கள். எத்தனை நாளைக்கு நாள் தான் ஏழ்மையாக வாழ்வது என்று கருதி, அமெரிக்கா சென்று சுதந்திரமாக பணம் சம்பாதித்து நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் எனபது இவர்களுடைய நெடுநாள் திட்டம். ஒரு வெளிநாட்டவரிடமிருந்து ரெளல் பணம் திருடும்போது போலீஸ் துரத்துகிறது. ஊரைவிட்டு ஓடுவது தான் ஒரேவழி என்று ரெளல் முடிவு செய்கிறான். இரட்டையரான தன் சகோதரி லைலாவை விட்டுவிட்டு ரெளல் உடன் சென்றுவிடலாம் என்று எலியோ முடிவு செய்கிறான். அவர்கள் இருவரும் வெளநாட்டுக்கு தப்பித்து சென்றுவிட ஏற்பாடு செய்வதை அறிந்த லைலாவும் அவர்களுடன் போக விரும்புகிறாள். முதலில் மறுத்தாலும் எலியோ பின்னர் ஒப்புக் கொள்கிறான்.
படகை செலுத்த தேவைப்படும் மோட்டார் என்ஜினை வாங்கி, படகில் பொருத்தி கிளம்புகிறார்கள். கடலில் எண்பது மைல் பயணம் செய்தால் அமெரிக்காவின் மியாமி நகரை கடலில் அடைந்துவிடலாம் என்று அவர்களது எண்ணம். கொஞ்சதூரம் சென்றதுமே மோட்டார் என்ஜின் வேலை செய்யவில்லை. எலியாவும், ரெளலும் துடுப்பு வலித்து படகை செலுத்துகின்றார்கள். லைலா, ரெளலிடம் அதிக ஈடுபாடு காட்டுவதை எலியோ உணர்கிறான். எதிர்பாராவிதமாக பெரிய திமிங்கலம் அவர்களது படகை தாக்குவதில் படகு நீரில் மூழ்க தொடங்குகிறது. இதில் ரெளல் பலியாகிறான். எலியாவும், லைலாவும் அதிர்ச்சி அடைகிறார்கள். எப்படியோ சமாளித்து, அமெரிக்க இளைஞர்கள் நால்வர் உதவியோடு மியாமி கடற்கரையை வந்து அடைகிறார்கள். இனி வாழ்க்கையில் என்றும் வசந்தம் என்று நினைக்கும்போது, சட்டவிரோதமாக தங்கள் நாட்டுக்குள் வந்ததற்காக எலியா, லைலா இருவரையும் அமெரிக்க போலீஸ் கைது செய்து அழைத்து செல்கிறது.
வீடுகள், கட்டிடங்கள் மேல் ஓடும் ரெளல், அவரை துரத்தும் போலீஸ், ஏழ்மையான வாழ்க்கையில் சட்டத்தை மீறும் சாதரண மக்களின் செயல்கள், சவால்கள் மிக்க கடல் பயணம் போன்ற காட்சிகளில் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது. அமெரிக்காவை சொக்க பூமியாக பார்க்கும் இளைஞர்களின் நிலைமை யதார்த்தமாக காண்பிக்கப்படுகிறது. நடுவர் குழுவின் விசேஷ விருது - வெள்ளி மயில் ப்ளஸ் 15 லட்சம் ரூபாய் இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கிறது.
கோவாவிலிருந்து -எஸ்.ரஜத்-
இலங்கை நாட்டின் தயாரிப்பாக, இயக்குனர் பிரசன்ன வித்தநாகேயின் 7வது திரைப்படம் "வித் யூ வித் அவுட் யூ". மாண்ட்ரியால் சர்வதேச திரைப்பட விழாவில் முதலில் திரையிடப்பட்டு பாராட்டுகள் பெற்றது இப்படம்.
பணக்காரரான அடகு கடை முதலாளி சரத்சிரி, அழகிய இளம் தமிழ் பெண் செல்வியை சந்திக்கிறார். அவளால் ஈர்க்கப்படும் சரத்சிரி, செல்வி வீட்டின் சம்மதத்தோடு அவளை மணக்கிறார். இனி தன்வாழ்வில் என்றும் வசந்தம் என்று நினைக்கிறார். செல்வியும், கணவர் சரத்சிரியை ரொம்பவும் நேசிக்கிறாள். இந்தியாவிற்கு செல்ல வேண்டும் என்ற செல்வியின் விருப்பத்திற்கு மகிழ்ச்சியோடு ஒப்புக்கொள்கிறார் சரத்சிரி. ஒருநாள் பீரோவில் ஒரு கைத்துப்பாக்கியை சரத் வைத்திருப்பது செல்விக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சரத்தின் நெருங்கிய நண்பர் ஒருவர் இவர்கள் வீட்டில் ஒருநாள் தங்குகிறார். அவரிடமிருந்து, சரத் சிங்கள ராணுவத்தில் பணிபுரிந்து இருப்பது செல்விக்கு தெரியவர அதிர்ச்சி ஆகிறாள். செல்வியின் இரு தம்பிகளையும் சிங்கள ராணுவத்தினர் சுட்டுக் கொன்றது, செல்விக்கு தீராத வருத்தம். கணவருடன் நெருக்கத்தை தவிர்க்கிறாள். பிறகு சரத், சிங்கள ராணுவத்தில் இருந்து வந்த நண்பர் உட்பட நான்கு ராணுவ வீரர்கள், ஒரு தமிழ் பெண்ணை கற்பழித்து கொன்றது, நண்பர்களை காபாற்ற அவர்கள் தன்னுடன் தான் இருந்தார்கள் என்று பொய் சொல்லி, அவர்களை தண்டனையிலிருந்து காப்பாற்றியது உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் மனம் வருந்தி செல்வியுடன் சொல்கிறார்.
அடகுகடையில் கிடைத்த வருமானத்தை வைத்து ஒரு டீ எஸ்டேட் வாங்க திட்டமிடுகிறார் சரத். அடகுகடையை விற்று பணமாக்குகிறார். செல்வியுடன் இந்தியா செல்ல விமான டிக்கெட்டுகளை வாங்கி திரும்பும் சரத்திற்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. வீட்டின் மாடியிலிருந்து கீழே குதித்து செல்வி தற்கொலை செய்து கொள்கிறாள். தனக்கு கணவராக வந்திருப்பவர் முன்னாள் ராணுவத்தினர் என்பதையும், அங்கு வாழும் தமிழர்களுக்கு அக்கிரமம் செய்திருப்பவர் என்பதையும் செல்வியால் ஜீரணிக்க முடியவில்லை. அப்படிப்பட்ட ஒருவரை என்னால் கணவராக முழுமையாக ஏற்று அவருடன் வாழ முடியாது என்று கருதி அந்த முடிவை எடுக்கிறாள்.
செல்வியாக மகாராஷ்டிராவை சேர்ந்த அஞ்சலி பாடில் யதார்த்தமாக நடித்து அசத்தியிருக்கிறார். படத்தில் வசனங்கள் குறைவு. அதிலும் பல இடங்களில் தமிழ் வசனங்கள் பேசப்படுகின்றன. மன்னிப்பாயா...? என்ற பாப்புலர் பாடலை செல்வி சில நேரங்களில் ஒரு வரி பாடுவார். தன் கணவரை முழுமையாக நேசிக்க ஆரம்பிக்கும் போது பேரிடியாக அவரது கணவரின் கடந்தகால நிகழ்வுகள் செல்வியை பாதிக்கின்றன.
இந்தபடத்திற்காக 2012 கோவா திரைப்படவிழாவில், சிறந்த நடிகைக்கான வெள்ளி மயில் விருது, ப்ளஸ் பத்து லட்சம் ரூபாய் பரிசும் பெற்றார் அஞ்சலி. அவர் பெறும் முதல் விருதே சர்வதேச திரைப்பட விழாவில் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மிகப்பெரிய ஊக்கமும், நல்ல படங்களில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைக்கு என்று நம்பலாம்.
திரைப்படத்துறையில் பல சாதனைகளை படைத்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல இயக்குனர் பால் காக்ஸ், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்பட்டார். விழாவில் பங்கேற்று பேசிய அவர் சினிமா பற்றி பல்வேறு விஷயங்களை பேசினார். குறிப்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளையும் தெரிவித்தார். அவர் பேசியதில் இருந்து...
* இந்தியாவில் இருக்கும் பத்திரிக்கைகளும், நடிகர்களும் எப்போதும் ஹாலிவுட் திரைப்படங்கள் பற்றியே பேசுகிறார்கள். ஹாலிவுட் படங்களில் நடிப்பது பற்றியும், ஆஸ்கர் விருதுகள் பற்றியும் நிறைய பேசுகிறார்கள். இந்தியர்கள் மிகச் சிறந்த படங்களை எடுக்கும் ஆற்றல் பெற்றவர்கள். என்னுடைய ஒரு படம் ஆஸ்கர் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டது. ஆனால் நான் அதை பெரிதாக நினைக்கவில்லை. ஒரு லட்சம் டாலர்கள் நான் செலவு செய்வதாக இருந்தால் என்னுடைய இன்னொரு படமும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்ய முடியும் என்று என்னுடைய நண்பர் ஒருவர் கூறினார். அப்போது தான் தெரிந்தது ஆஸ்கர் விருதுகளின் லட்சனங்களை பற்றி. உலகம் முழுவதும் ஆஸ்கர் விருதுகளை கவனிப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் அதை நான் சீரியஸாக எடுத்து கொள்வதில்லை. இந்திய திரைப்பட இயக்குனர்கள் ஹாலிவுட் படங்களையும், பாலிவுட் படங்களையும் அடிக்கடி ஒப்பிட்டு பார்க்கிறார்கள். ஹாலிவுட்டை விட்டுவிடுங்கள், ஹாலிவுட்டை காட்டிலும் இந்திய படங்கள் சிறந்த உணர்வுபூர்வமான படங்களை உருவாக்க முடியும்.
* சினிமாக்கள் இன்று பணம் போடும் முதலாளிகளிடம் அகப்பட்டு கொண்டிருக்கிறது. சினிமா என்பது மனிதர்களைப்பற்றி என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. மனித உணர்வுகளை ஆராய்வது தான் நல்ல சினிமா என்று நினைக்கிறேன்.
* மனிதர்களை ஆணவம் மிக்கவர்களாக ஆக்கியிருக்கிறார்கள். தாங்கள் ரஷ்யர்களைவிட சக்தி வாய்ந்தவர்கள் என்று நிரூபிக்க அமெரிக்கர்கள் சந்திரனில் குண்டு போட திட்டமிடுகிறார்கள் என்று சமீபத்தில் செய்தி படித்தேன். என்ன ஒரு மடத்தனம்? நமது வாழ்க்கைக்கும், பூமியில் மனித இனம் வாழ்வதற்கு சந்திரன் எவ்வளவு அவசியம் என்பதை அவர்கள் அறியாதவர்களா...?
* அமெரிக்கர்கள் சந்திரனில் காலடி வைத்தபோது கூட சந்திரன் பற்றி நம் அனைவருக்கும் இருந்த புரியாத தன்மை பாதிக்கப்பட்டது. நிலவில் காலடி எடுத்து வைத்த மனிதனை நான் அப்போதே மன்னித்துவிட்டேன். ஆனால் அங்கு அமெரிக்க கொடியை நட்டதை நான் மன்னிக்க மாட்டேன். அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ரிச்சர்டு நிக்சனுடன் அங்கிருந்து பேசினார்கள். நிக்சன் எப்படிப்பட் மனிதர், குற்றவாளி என்று பின்னர் தெரிந்தது. அவரோடு போனில் பேசியதற்கு பதிலாக உலகத்தின் கிழக்கு பகுதியில், ஏன் கங்கை கரையில் உள்ள ஒரு சிறு குழந்தையோடு பேசியிருக்கலாம்.
* இப்போது நான் என் வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்கிஸில் இருக்கிறேன். எனக்கு கல்லீரல் புற்றுநோய் முற்றிப்போய் உயிர் பிழைக்க போவதில்லை என்று சொல்லிவிட்டார்கள். பிறகு கல்லீரல் மாற்று சிகிச்சை செய்தார்கள். நான் அதிர்ஷ்டவசமாக பிறகு பிழைத்து கொண்டேன். என் மனைவியையும் அதே ஆஸ்பத்திரியில் சந்தித்தேன். அவரும் கல்லீரல் மாற்று சிகிச்சைக்காக அங்கு வந்திருந்தார்.
* எனக்கு நேர்ந்த அனுபவத்தை திரைப்படமாக எடுக்க திட்டமிட்டு இருக்கிறேன். முதலில் ஆசியாவை சேர்ந்த ஒரு நடிகையை அதில் நடிக்க வைக்க விரும்பினேன். ஆனால் இப்போது அதை மாற்றி ஒரு இந்திய பெண்ணை நடிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தியர்களிடம் அன்பும், வெகுளித்தனமும் அதிகம் இருக்கும். அதனால் இந்திய நடிகையை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறேன். (கத்ரீனா கைப் அந்த ரோலில் நடிப்பார் எனத் தெரிகிறது)
இவ்வாறு அவர் பேசினார்.
* கோவா முதல்வர் மனோகர் பரிக்கர், கோவா மேயர் வாஞ்சு, 2012ம் ஆண்டுக்கான கோவா திரைப்பட விழா இயக்குனர் சங்கர் மோகன், கோவா என்டர்டெயின்மென்ட் தலைவர் மனோஜ் ஸ்ரீவத்சவரி உள்ளிட்டவர்களுடன் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த திலையுலக பிரமுகர்கள், இந்தியாவில் இருந்து பல பகுதிகளில் இருந்து வந்திருந்த திரை உலக பிரமுகர்களும் இந்த நிறைவு விழாவில் கலந்து கொண்டார்கள்.
* பரிசளிப்புக்கு முன்பு விழாவில் பிரபல நடன இயக்குனர் லாங்கினஸ் பெர்ணான்டஸ் தயாரித்து அளித்த நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் விநாயகர், காளி இவர்களை போற்றும் நடனங்கள், ஷங்கரின் தெலுங்கு அன்னியன் படத்திலிருந்து அண்டங்காக்கா கொண்டைக்காரி... பாடல், பஞ்சாபி மொழிப்பாடல், கொங்கினி மொழியில் கோவா பாடல் உள்பட பல பாடல்களுக்கு இளம் பெண்களும், ஆண்களும் நடனமாடியது ரசிக்கும்படி இருந்தது.
* கோவா முதல்வர் மனோகர் பரிக்கர், 2014ம் ஆண்டுக்குள் உலகதரம் வாய்ந்த தியேட்டர்கள், திரை அரங்குகள் கட்டப்படும், தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் திரைப்பட விழா மேலும் சிறப்பாக நடத்தப்படும் என்றார்.
* மாலை நான்கு மணிக்கு நிறைவு விழா ஆரம்பம் என்று அழைப்பிதழ்களில் போடப்பட்டிருந்தாலும் விழா இருபத்தி ஐந்து நிமிடங்கள் தாமதமாகவே துவங்கியது. கடந்தாண்டும் கோவா திரைப்பட விழாவில் நடிகர் ஷாரூக்கான் தாமதமாக வந்ததால் விழா ஆரம்பம் தாமதமானது குறிப்பிடத்தக்கது.
* சிறந்த படங்கள், விருதுகளை தேர்வு செய்த நடுவர் குழுவிற்கு தலைவராக பிரபல வங்காள இயக்குனர் கெளதம் கோஷ் இருந்தார். பதினைந்து தேசிய திரைப்பட விருதுகள், மூன்று பிலிம்பேர் விருதுகள், தனது மோனர் மனுஷ் வங்க படத்திற்காக 2010ம் ஆண்டு கோவா திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான தங்கமயில் விருது, கேன்ஸ், வெனிஸ் திரைப்பட விழாக்களில் விருதுகளையும் கெளதம் கோஷ் பெற்றிருக்கிறார்.
கவுதம் கோஷ் உடன் ரொமேனியாவை சேர்ந்த பிரபல நடிகை அனாமாரியா மரின்கா, போலந்து நாட்டை சேர்ந்த பிரபல ஓவியர், இயக்குனர் லெச் மெஜெஸ்கி, லண்டன் கார்டியன் பத்திரிகையில் 30 ஆண்டுகளாக திரைப்பட விமர்சகராக புகழ்பெற்ற டெர்ரிக் மால்கம், நடிகர் திலகம் சிவாஜியுடன் பைலட் பிரேம்நாத் படத்தில் ஜோடியாக நடித்த இலங்கையை சேர்ந்த பிரபல நடிகையும், எம்.பி.யுமான டாக்டர் மாலினி போனசிகா ஆகிய நால்வரும் நடுவர் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
* கோவா படவிழா நிகழ்ச்சிகளை நடிகர் ரோஹித் மற்றும் நடிகை ஸிமோன் சிங் இருவரும் தொகுத்து வழங்கினார்கள்.
கோவா திரைப்படவிழாவின் நிறைவு நாளில் பங்கேற்ற பேசிய தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, சினிமாவில் பெரிய சூப்பர் ஸ்டாராக புகழ்பெற்ற என் தந்தை என்.டி.ராமாராவ், தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கி தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே மகத்தான வெற்றி பெற்று ஆந்திர பிரதேசத்தின் முதல்வராக பதவி ஏற்று, மக்களுக்கு மகத்தான சேவை செய்தவர். நட்சத்திரங்களாக இருந்து அரசியலுக்கு வந்து தமிழ்நாட்டின் முதல்வர்களாக சிறப்பாக பணியாற்றிய எம்.ஜி.ஆர். பற்றியும் தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவை பற்றியும் பெருமையாக குறிப்பிட்டார். இந்தியாவில் அதிகமான திரைப்படங்களை தென்னிந்திய சினிமா தான் தயாரிக்கிறது என்றும், அவற்றில் அதிகமான படங்களை தெலுங்கு மொழிப்படம் தான் தயாரிக்கிறது என்றார். மேலும் அவர் பேசுகையில், 135 படங்கள் தயாரித்து சாதனை புரிந்து டி.ராமாநாயுடு பற்றியும், பிரபல தெலுங்கு-இந்தி திரைப்பட இயக்குனரும், பின்னர் மத்திய மந்திரியாக பணிபுரிந்த தாசரி நாராயணராவ் பற்றியும் குறிப்பிட்டார். நடிகர் பாலகிருஷ்ணா பேசும்போது மைக் சரியாக இயங்காததால் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
கோவா சர்வதேச திரைப்பட விழாவின் சிறப்பு விருதான தங்கமயில் விருது பஞ்சாப் மொழி படத்திற்கு கிடைத்தது. 43வது சர்வதேச கோவா திரைப்பட விழாவின் நிறைவு நாளில் குர்வீந்தர் சிங் இயக்கிய அன்ஹே கோர்ஹேதா டான் என்ற பஞ்சாபி மொழிபடத்திற்கு சிறந்த படத்திற்கான தங்கமயில் விருதும் ப்ளஸ் ரூ.50 லட்சம் பணமும் வழங்கப்பட்டது. படத்தின் இயக்குனர் குர்வீந்தர் சிங் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் என்.எப்.டி.சி., ஆகிய இருவரும் தலா ரூ.25லட்சம் பெற்றனர். இந்தப்படம் ஏற்கனவே 2011ம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த இயக்குனர் விருது, சிறந்த ஒளிப்பதிவாளர் விருது மற்றும் சிறந்த பஞ்சாபி மொழிபடத்திற்கான விருது என 3 தேசிய விருதுகளையும், அபுதாபி சர்வதேச திரைப்பட வழாவில் நடுவர்களின் விசேஷ விருதையும் பெற்றுள்ளது. மேலும் இது குர்விந்தர் சிங் இயக்கிய முதல்படம் என்பது குறிப்பிடத்தக்கது.