அடுத்த படத்துக்கு திணறுகிறார் வெற்றி மாறன்!
ஆடுகளம் வெளிவந்து இரண்டு ஆண்டுகள் ஆகப்போகிறது. இன்னும் அடுத்த படத்தை ஆரம்பிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார் வெற்றி மாறன். வன்மையான கதைக் களம்தான் தனது டிரேட் மார்க் என்று கருதும் வெற்றி மாறன் வடசென்னை தாதாயிசத்தை மையமாக கொண்டு வடசென்னை என்ற பெயரிலேயே படம் இயக்க முடிவு செய்து அதற்கான ஸ்கிரிப்டையும் தயார் செய்தார். அதில் தனுஷ் நடிப்பதாக இருந்தது. ஏற்கெனவே பொல்லாதவன் படத்தில் வடசென்னை இளைஞனாக தனுஷ் நடித்துவிட்டதால் சிம்புவை நடிக்க வைக்க முயற்சித்தார். இதில் ஏதோ பிரச்னை ஏற்பட இப்போது வடசென்னை படத்தையே டிராப் செய்து விட்டார்.
தற்போது வேறொரு ஸ்கிரிப்ட் தயாரிக்கும் முயற்சியில் இருக்கிறார். வெற்றிமாறன் வேலூர் மாவட்டத்துக்காரர். இந்த மாவட்டத்தின் பின்னணியில் அவ்வளவு படங்கள் வரவில்லை. அதனால் வேலூர் மாவட்ட பின்னணியில் கதை எழுதி வருகிறார் என்று கூறப்படுகிறது. "பல தேசிய விருதுகள் பெற்று விட்டதால் அடுத்த படத்தை கொடுக்க ரொம்பவே மெனக்கெடுகிறார்" என்று அவரது நண்பர்களும், "இருந்த கற்பனை சரக்கை எல்லாம் முதல் இரண்டு படத்திலும் கொட்டிவிட்டதால் அடுத்த படம் இயக்க திணறுகிறார்" என்று சிலரும் சொல்கிறார்கள். இதில் எது உண்மை, எது வதந்தி என்பது வெற்றி மாறனுக்கு மட்டுமே தெரியும்.