Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

இனி மக்களுக்காக வாழப்போகிறேன்: சாய்குமார் சிறப்பு பேட்டி!!

Actor saikumars special interviewடப்பிங் ஆர்ட்டிஸ்டாக வாழ்க்கையை தொடங்கிய சாய்குமார் இப்போது வரை ஆயிரம் படங்களுக்கு மேல் டப்பிங் பேசி விட்டார். 100 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்திருக்கிறார். கேரக்டர் ஆர்ட்டிஸ் மற்றும் வில்லனாக 150 படங்கள் வரை நடித்திருக்கிறார். தெலுங்கில் பல்வேறு விருதுகளை தனக்கு பெற்றுத் தந்த பிரஸ்தானம் படத்தின் தமிழ் மொழிமாற்றத்திற்காக சென்னை வந்திருந்தார் சாய்குமார். அவர் அளித்த சிறப்பு பேட்டி:

* இத்தனை ஆண்டு சினிமா வாழ்க்கையை எப்படி உணர்கிறீர்கள்?


நினைச்சுப் பார்த்தா ஆச்சர்யமாத்தான் இருக்கு. எங்கப்பா தெலுங்குல பெரிய டப்பிங் ஆர்ட்டிஸ். அதனால என் வாழ்க்கையும் டப்பிங் ஆர்ட்டிஸ்டாத்தான் தொடங்குச்சு. நான் சென்னையில படிச்சதால தமிழ் நன்றாக தெரியும் அதனால தமிழ்லேயும் டப்பிங் பேச ஆரம்பிச்சேன். அப்புறம் கன்னடம் கத்துக்கிட்டு அதுலேயும் பேச ஆரம்பிச்சேன். ரஜினி சாருக்காக தெலுங்குலேயும், சிரஞ்சிவி, என்.டி.ராமாராவ் சாருக்காக தமிழ்லேயும் பேசி இருக்கேன். டாக்டர் ராஜசேகருக்கு பேசினதுதான் என்னை தமிழ் நாட்டுக்கு அடையாளம் காட்டுச்சு. கமல் சார் தவிர மற்ற அத்தனை ஹீரோக்களுக்கும் டப்பிங் பேசியிருக்கேன்.

* உங்கள் டப்பிங் வாழ்க்கையில மறக்க முடியாததுன்னு எதை சொல்வீங்க?


டி.ராஜேந்தர் சாரோட படங்கள் ஒரு காலத்துல தெலுங்குல பிச்சுக்கிட்டு ஓடிச்சு. அவரோட அடுக்கு மொழி வசனத்தை தெலுங்குல பேசுறதுக்கு அத்தனை சுகமா இருக்கும். தெலுங்கை அப்படி நான் ரசித்து பேசினதை ஆந்திராவே கொண்டாடுச்சு. உயிருள்ள வரை உஷா படத்தோட தெலுங்கு டப்பிங் வெற்றி விழாவுக்கு அவர் ஐதராபாத் வந்திருந்தார். அங்கு என்.டி.ராமராவுக்கு பிறகு அதிக கூட்டம் வந்தது அவரோட விழாவுக்குத்தான். அத்தனை பெரிய கூட்டத்தை பார்த்ததும் கண்கலங்கிட்டார். அவர் மேடையில தமிழ்ல பேசினதை அங்கேயும் நான்நான் டப்பிங் (டிரான்சிலேட்) பேசினேன். அவர் அடுக்கு மொழியில தமிழ் பேசினதை. அதே அடுக்கு மொழி ஸ்டைலோடு நான் தெலுங்குல பேசினேன். அப்போ கூடியிருந்த கூட்டம் பண்ணின ஆரவாரம் இருக்கு பாருங்க என் வாழ்க்கையில மறக்கவே முடியாத அனுபவம் அது.

* 200 படத்துக்கு மேல நடிச்ச பிறகும் இன்னமும் டப்பிங் பேசுறீங்களே...?

நான் நடிக்க வர்றதுக்கு முன்னாடியே என்னோட குரல்தான் பிரபலம். டப்பிங் வேலைதான் என்னை ஹீரோவாக்குச்சு. என்னோட குரலுக்கு இன்னும் மதிப்பிருக்கு. ஜனங்க விரும்பி கேக்குறாங்க. ஹீரோக்கள் என்னை விரும்பி அழைக்கிறாங்க. அதான் டப்பிங்கை விட முடியவில்லை. டப்பிங் பேசிட்டிருக்குறப்பவே உயிர் போச்சுன்னா அதுதாங்க எனக்கு பெரிய சந்தோஷம்.

* தமிழ்ல ஆதி, தெனாவெட்டு, திருவண்ணாமலை,  இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்னு அப்பப்போ தலைகாட்டுறீங்க. அதுக்கு பிறகு காணாம போயிடுறீங்களே-?

ஆரம்பத்துல நிறைய தமிழ் படங்கள்ல நடிச்சேன். ஹீரோவாகவே பத்து படங்கள் வரைக்கும் நடிச்சிருப்பேன். அப்புறம் கன்னடம் பக்கம் ஒதுங்கிட்டேன். அங்கதான் 100 படங்களை தாண்டினேன். தமிழ்ல நானே வாய்ப்பு கேட்டு வர்றதில்லை, தேடி வருகிற படங்கள்ல நடிக்கிறேன். ஒரு படம் ரிலீசாகும்போது நிறைய பட வாய்ப்புகள் வரும் அப்போ நான் வேறு மொழி படங்களுக்கு தேதி கொடுத்திருப்பேன். அதனால நடிக்க முடியாம போயிடும். இங்குள்ளவர்களும் சாய்குமாரை பிடிக்க முடியாதுன்ன விட்டுருவாங்க. இப்படியே எல்லா சான்சையும் மிஸ் பண்ணியிருக்கேன்.

* பிரஸ்தானம் படத்தை தமிழ்ல கொண்டு வர ஏன் இவ்வளவு ஆர்வம்?

பிரஸ்தானம் என் சினிமா கேரியர்ல முக்கியமான படம். எனக்கு நிறைய விருதுகளை பெற்றுத் தந்த படம். இது எல்லா மாநிலத்துக்கும் பொருந்தக்கூடிய அரசியல் படம். வெளி உலகத்துல பகட்டா தெரியக்கூடிய அரசியல் உள்ளுக்குள்ள எவ்வளவு கொடூரமானதுன்னு சொல்ற படம். மக்களுக்கு அரசியல் பற்றிய விழிப்புணர்வை கொடுக்குற படம். இது எல்லா மக்களுக்கும் போய்ச் சேரணுங்கறதுக்காகத்தான் இத்தனை ஆர்வம்.

* இனியாவது தமிழில் ஆர்வம் காட்டுவீர்களா?

நிச்சயமாக. பிரஸ்தானம் அந்த கணக்கை துவக்கி வைக்கும்னு நினைக்கிறேன். ஹீரோன்னு இல்லாம நல்ல கேரக்டர், வில்லன் எப்படி வேணாலும் நடிக்க தயாராக இருக்கேன்.

* சிவாஜி சாரோட பெரிய ரசிகராமே?

வெறி பிடித்த ரசிகன். எந்த படத்துலேருந்து அவரோட வசனத்தை கேட்டாலும் அப்படியே மனப்பாடமா பேசிக் காட்டுவேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவரோட படத்தை திருப்பி திருப்பி பார்ப்பேன். என்னோட லேப் டாப்புல எப்போதும் அவரோட 25 படங்கள் ஸ்டோரேஜ்ல இருக்கும். என்னோட கேரவன்ல, என்னோட மேக்அப் ரூம்ல அவரோட பெரிய சைஸ் போட்டோ இருக்கும். அதை கும்பிட்டுட்டுதான் மேக்அப் போடவே ஆரம்பிப்பேன். அவர் இறந்தப்போ கடைசிவரைக்கும் அவர் உடம்பு பக்கத்துலேயே இருந்து அழுதேன். ஒரு முறை பிரபு சார் தெலுங்கு பட ஷூட்டிங் வந்திருந்தார். அவர் என்னை பார்க்க என் கேரவனுக்கு வந்தார் கதவை திறந்ததால் ஆளுயரத்துக்கு சிவாஜி படம் இருந்திருக்கு. அதிர்ச்சியாயிட்டார். உள்ளே வந்தவர் திடீர்னு அப்பா நிக்கற மாதிரியே இருந்திச்சு. "நாங்க அண்ணன் தம்பி ரெண்டு பேர் இல்லடா கமலும், ரஜினியும் எங்க குடும்பத்துல ஒருத்தர் மாதிரி நீயும் ஒருத்தன்"னு சொன்னப்போ கண் கலங்கிட்டேன்.

* சினிமா தாண்டி எதுவும் செய்ய திட்டம் இருக்கா?

நிறைய இருக்கிறது. மகள் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில டாக்டரா இருக்கா. அவளுக்கு சமீபத்துலதான் கல்யாணம் பண்ணி வச்சேன். மகன் தெலுங்குல இரண்டு படம் ஹீரோவா நடிச்சிட்டான். அவனோட கேரியரும் நல்லா இருக்கு. என்னோட கடமைகள் முடிஞ்சிருச்சு. இனி எனக்கு வாழ்க்கை கொடுத்த மக்களுக்கு ஏதாவது செய்யணுங்ற ஆசை இருக்கு. அதுபற்றி தீவிரமா யோசிச்சிட்டிருக்கேன்.

Tags »
saikumar, special interview, சாய்குமார், சிறப்பு பேட்டி,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட்

Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in