Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

ராஜாவும், ராயல்டியும் : என்னதான் பிரச்னை?

01 டிச, 2018 - 17:31 IST
எழுத்தின் அளவு:
Ilayaraja-and-Royalty--:-What-is-the-Problem.?

தமிழ்த் திரையுலகத்தில் மீண்டும் இசை ராயல்டி சர்ச்சை எழுந்துள்ளது. 2015ம் ஆண்டு தன் பாடல்களை தன் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது என்று இளையராஜா அறிவித்தார். தொடர்ந்து அவர் கேட்ட தொகை ஏற்புடையது அல்ல என்று தெரிவித்து பல எப்.எம்., வானொலி நிலையங்கள் அவரது பாடலை ஒலிபரப்புவதை நிறுத்தின.

எஸ்.பி.பி., சர்ச்சை
இளையராஜா, அவருக்கென தனி இளையதளம், யு-டியூப் சேனல் ஆகியவற்றை ஆரம்பித்து, பாடல்களை இடம் பெறச் செய்தார். அடுத்து, தனது பாடலை வெளிநாட்டு மேடைக் கச்சேரிகளில் அனுமதி இல்லாமல் பாடக் கூடாது என்று எஸ்பி பாலசுப்பிரமணியத்திற்கு நோட்டீஸ் அனுப்பினர். அப்போது இந்த விவகாரம் சர்ச்சையானது.

மீண்டும் ராயல்டி பிரச்னை
இப்போது மீண்டும் சில நாட்களாக தனது பாடல்களைப் பாட இளையராஜா பணம் கேட்கிறார் என விமர்சிக்கப்பட்டு வருகிறார். ராயல்டி தொகையை வசூலித்துத் தரும் பொறுப்பை திரையிசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு தந்துவிட்டார் இளையராஜா. அந்த தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை சங்கத்தின் நலனுக்கும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளார். ராயல்டி தொகையில் இசைக் கலைஞர்களுக்கும் பங்கு தருவதாக அறிவித்துள்ளார்.

எங்களுக்கும் பங்கு
இப்போது, சம்பந்தப்பட்ட படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 2012ம் ஆண்டு திருத்தப்பட்ட காப்பிரைட் சட்டத்தின்படி ஒரு பாடலின் உரிமையில் 50 சதவீதம் தயாரிப்பாளருக்கும், 25 சதவீதம் இசையமைப்பாளருக்கும், 25 சதவீதம் பாடலாசிரியர்களுக்கும், பாடகர், பாடகிகளுக்கும் சேரும் என்று சட்டம் சொல்கிறது.

இளையராஜா விஷயத்தில் என்ன பிரச்னை என்றால் அவர் பாடலுக்கான மொத்த உரிமையும் தனக்கே சொந்தம் எனக் கோருவதுதான் என்கிறார்கள். தயாரிப்பாளர்களை அவர் சேர்த்துக் கொள்ளவில்லை என்று குறையாகச் சொல்கிறார்கள்.

பல்வேறு தரப்பினர் கூறியதாவது:

தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்:

“ஒரு தயாரிப்பாளர் படத்தின் இசை உரிமையை ஒரு நிறுவனத்திற்கு கொடுத்த பிறகு அவருக்கு இசையில் உரிமை கிடையாது. அதுவே அவர் ராயல்டி வேண்டும் என்று கேட்டு ஒப்பந்தம் செய்திருந்தால் உரிமை கோரலாம். பெரும்பாலான தயாரிப்பாளர்கள், இசை உரிமையை கொடுத்துவிடுவார்கள். தனுஷ், விஜய் ஆண்டனி போன்று சிலர், சொந்த இசை நிறுவனத்தில் உரிமையை வைத்துக் கொள்கிறார்கள்.

எந்த மாதிரி ஒப்பந்தம்
2012ம் ஆண்டு சட்டத்தின்படி ஒரு தயாரிப்பாளர், இசை உரிமையை கொடுத்துவிட்டால், அதன் உரிமை, இசை நிறுவனம், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடியவர்களுக்கே சொந்தம்.

2012ம் ஆண்டு காப்பிரைட் சட்டத்திற்கு முன்பு இசை உரிமை தயாரிப்பாளருக்கே சொந்தம். இளையராஜா உச்சத்தில் இருந்த காலத்தில் அவருடைய இசை உரிமைகள் தயாரிப்பாளர்களிடம் இருந்தன. அதை அவர்கள் இசை நிறுவனங்களுக்கு விற்றனர். .

அந்த அடிப்படையில், ஏற்கனவே தயாரிப்பாளர்கள் விற்று விட்ட உரிமைகளும் தனக்கே சொந்தம் என்று இளையராஜா கேட்பதில் அவரிடம் என்ன ஆதாரம் இருக்கிறது என்று தெரியவில்லை. எந்த மாதிரியான ஒப்பந்தத்தை இளையராஜா, தயாரிப்பாளர்களுடன் போட்டிருக்கிறார் என்று பார்க்க வேண்டும். அதைப் பார்க்காமல், அவருக்கு மட்டுமே உள்ளதா அல்லது தயாரிப்பாளர்களுக்கும் அதில் பங்கு வேண்டும் எனப் பேசுவது முறையில்லை.

அந்தக் காலத்தில், இசைக்கென தனி ஒப்பந்தத்தை தயாரிப்பாளர்கள் போடவில்லை என்றால் அதன் மொத்த உரிமை இளையராஜாவுக்கே சொந்தம். இசைக்கென தனி ஒப்பந்தத்தை சரியான முறையில் போட்டு இருந்தால் அது தயாரிப்பாளர்களுக்கே சொந்தம். இளையராஜா பாடல்களுக்கான உரிமைகளை தயாரிப்பாளர்களிடமிருந்து பெற்ற இசை நிறுவனங்கள், உரிமை அவர்களுக்குத்தான் என்று குரல் எழுப்புகிறார்கள்.

பாடல் உரிமைக்காக இளையராஜா தொடர்ந்த வழக்கில் இடைக்காலத் தடை உத்தரவுதான் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் மிகவும் சிக்கலானது எனக் கூறிய நீதிமன்றம், இது பற்றி நிரந்தர முடிவுக்கு வரும்வரை தற்காலிகமாக இளையராஜாவின் அனுமதி பெறாமல் யாரும் அவருடைய பாடலைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லியிருக்கிறது.

ராயல்டியில் குழப்பம்:
இந்த சர்ச்சை கடந்த மூன்று ஆண்டுகளாகவே இருந்து வருவதுதான். ஒவ்வொரு முறையும் பாடகர்களுக்கு இசை நிகழ்ச்சிகளில் பாட ராயல்டி நிர்ணயிப்பதில் குழப்பங்களை தவிர்க்க தற்போது, அவர் ராயல்டியை இசைக் கலைஞர்களுக்கும் வழங்கியிருக்கும் முடிவை அறிவித்த பின், இது பற்றி மீண்டும் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராக வரும்போதே காப்புரிமை, ராயல்டி ஆகியவற்றுடன் தெளிவாக நுழைந்துவிட்டார். அதனால், அவரைப் பற்றி யாரும் இந்த விவகாரத்தில் பேசுவதில்லை,” என்கிறார் தனஞ்செயன்.

தயாரிப்பாளர் கே.ராஜன்


தயாரிப்பாளர் கே. ராஜன் கூறுகையில்,

“தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக தாணு இருந்த போது, இளையராஜா தயாரிப்பாளர் சங்கத்தை அணுகினார். அப்போது இந்தப் பிரச்சினையில் என் கூட ஒத்துழைத்தால் ராயல்டி வந்தால் 50 சதவீதம் தயாரிப்பாளர்களுக்குத் தருவதாகக் கூறினார். அதனால், தாணு, தயாரிப்பாளர்களிடம் இளையராஜாவுக்காக கடிதத்தை வாங்கிக் கொடுத்துவிட்டார். அதன்பின், அது சம்பந்தப்பட்ட விவகாரங்களிலும் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு உதவியது. இப்போது இளையராஜா தயாரிப்பாளர்களை ஏமாற்றிவிட்டார். அவர் சொன்னபடி 50 சதவீதத்தை தயாரிப்பாளர்களுக்குத் தரவில்லை.

கமிஷன் ஏஜன்ட்

இப்போது அதன் ராயல்டியில் 80 சதவீதத்தை அவர் வைத்துக் கொண்டு 20 சதவீதத்தை திரையிசைக் கலைஞர்களுக்கு கொடுப்பதாக அறிவித்துள்ளார். அதை வசூலிக்கும் பொறுப்பை திரையிசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு கொடுத்து அவர்களை கமிஷன் ஏஜன்ட்டாக மாற்றிவிட்டார்.

வழக்கு தொடருவேன்

பாடகர்கள், நடிகர்கள், படமாக்க அரங்குகள், இசை வெளியீடு, பாடலைப் பிரபலப்படுத்த என செலவு செய்வது தயாரிப்பாளர்கள்தான். அதனால், அதில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு இருக்கிறது. தயாரிப்பாளர்களுக்கான ராயல்டி உரிமையை இளையராஜா தரவில்லை என்றால் தயாரிப்பாளர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவேன், நீதிமன்றத்திலும் வழக்கு தொடருவேன்,” என கூறுகிறார்.

பாடலாசிரியர் பிறைசூடன்:

“இளையராஜா, ஒரு மேதை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவரிடம் உரிமை இருக்கும் பாடல்களுக்கு மட்டும் அவர் ராயல்டியைக் கேட்கலாம். மற்றவர்களுக்காக அவர் கேட்க முடியாது. ஒரு பக்கம் இளையராஜா செய்வது சரி, மறுபக்கம் தவறு. இதற்கு முன் எக்கோ நிறுவனத்திலிருந்து அவர் மற்றவர்களுக்கு எவ்வளவு உரிமையை பெற்றுத் தந்தார் என்பதைச் சொல்ல வேண்டும். அந்தப் படங்களுக்கு இசையமைக்கும் போதே அதற்கான சம்பளத்தை வாங்கிவிட்டார். பாடலின் உரிமை தயாரிப்பாளருக்கு, இசையமைப்பாளருக்கு, எழுதியவர்களுக்கும், பாடியவர்களுக்கும் உண்டு.

பல கோடிகளை வாங்கி தந்தோம்

இளையராஜாவை அதிகமாக நேசிக்கிறோம், மதிக்கிறோம் என்பதற்காக அவர் எது வேண்டுமானாலும் பேசக் கூடாது. நான் எழுதிய பாடல்களுக்கு நான் வாங்கிய சம்பளம் போதும். அதற்கு இப்போது மேலும் பணம் வேண்டும் என நான் சண்டையிட விரும்பவில்லை. இளையராஜா எங்களைப் போன்றவர்களிடம் இது குறித்து ஆதரவு கேட்கவேயில்லை. ஐபிஆர்எஸ் அமைப்பில் அவர் இருந்த போது அவருக்கு பல கோடிகளை வாங்கிக் கொடுத்திருக்கிறோம். அந்த அமைப்பிற்குத் தலைவராக இருந்த நானே அதற்கு சாட்சி.

இது விஷயமாக அவர் தயாரிப்பாளர்கள், மற்றவர்களிடம் உட்கார்ந்து கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும். அவர் இசைக்கு மட்டும் கேட்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. எங்கள் எழுத்திற்கு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இந்தியாவில் காப்பிரைட் சட்டத்தை சரிப்படுத்த முடியவில்லை. நான் இதுவரை எழுதியுள்ள சினிமா பாடல்கள், பக்திப் பாடல்கள் ஆகியவற்றை அமெரிக்காவிலோ வெளிநாட்டிலோ எழுதியிருந்தால் என்னுடைய அடுத்த பதினைந்து தலைமுறைக்கும் பணம் வந்து கொண்டிருக்கும்,” என்கிறார்.

இசைக் கலைஞர்கள் சங்க தலைவர் தினா:

“இசைஞானி அவருடைய 75 ஆண்டுகால பணியை, ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை எங்கள் சங்கத்திற்குத் தர வேண்டும் என விருப்பப்படுவதாகச் சொன்னார். பண உதவி, மருத்துவ உதவி செய்து விடலாம். ஆனால், தன் மூளையில் உதித்த இசையை அடுத்தவர்களுக்கும் பகிர்வதை இந்த உலகத்தில் யாருமே செய்யவில்லை.

5500 பாடல்கள் காப்புரிமை

பாடல் உரிமை என்பது இசையை உருவாக்கிய இசையமைப்பாளருக்கும், எழுதிய பாடலாசிரியர்களுக்கும், பாடியவர்களுக்கும் போய்ச் சேரும். ஒரு தயாரிப்பாளர் அதற்கான இசை உரிமையை விற்றுவிட்ட பின் உரிமையிலிருந்து அவர்கள் விலகிவிடுகிறார்கள். சினிமா என்பது வியாபாரம் தான், யாரும் சேவையோ, தொண்டோ செய்ய வரவில்லை. ஆயிரம் படங்கள், 5500 பாடல்கள் அனைத்தின் காப்புரிமையை எங்களிடம் கொடுத்துள்ளார். சுமார் 1500 இசைக் கலைஞர்கள் இருக்கிறார்கள். இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கால்ஷீட்களில் அவர்கள் இசையமைத்துள்ளார்கள்.

இளையராஜா 7 மணிக்கு பாடல் பதிவுக்கு வந்தால் இசைக் கலைஞர்கள் அவருக்கு முன்னதாகவே வந்து தயாராக இருப்பார்கள். அவருடன் சேர்ந்து இத்தனை ஆண்டு பயணித்தவர்களுக்காக அவர் இதை செய்திருக்கிறார். 500க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் அவருடைய படங்களில் வாசித்திருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டுமல்லாது, மற்ற இசையமைப்பாளர்களின் இசைக் கலைஞர்களுக்கும் பேருதவி செய்திருக்கிறார்.

சரித்திர நிகழ்வு

இது ஒரு சரித்திர நிகழ்வு. ஒவ்வொருவரும் அவர்களது சொத்தை அவர்களது வாரிசுகளுக்குத்தான் கொடுப்பார்கள், இளையராஜா கலைஞர்களுக்காகவும் கொடுத்திருக்கிறார். அவரது உரிமை மூலம் வரும் பணத்தை உறுப்பினர்களின் அறக்கட்டளையில்தான் சேர்க்கிறோம். அவர்களது சேமநல நிதிக்காக மட்டுமே அந்தத் தொகை பயன்படுத்தப்படும். இளையராஜா குறித்து தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள். மக்களிடம் எப்போது டிக்கெட் கட்டணம் பெற்று இசை நிகழ்ச்சி நடத்துகிறீர்களோ, அதில்தான் ஒரு தொகையை அவர் கேட்கிறார். இலவசமாக நிகழ்ச்சிகளுக்கு அவர் கேட்கவில்லை.

இளையராஜா கேட்பதால் சர்ச்சை

இளையராஜா இப்போது சொல்லும் இந்த உரிமை எதிர்கால இசைக் கலைஞர்களுக்கும் ஒரு வழிகாட்டுதலாக இருக்கும். வெளிநாடுகளில் லட்சம் லட்சமாக பணம் பெற்று, அவருடைய பாடல்களைப் பாடும் கலைஞர்களிடம் இருந்து அவர் தொகையைக் கேட்கவில்லை. அந்த நிகழ்ச்சி நடத்துபவர்களிடம் ராயல்டி தொகையை வாங்கிக் கொடுங்கள் என்று தான் கேட்கிறார்.

மற்றவர்களின் பாடல்களைப் பாடும் போது அந்தத் தொகையைத் தந்துவிடுகிறார்கள். இளையராஜா கேட்பதால் சர்ச்சையை ஏற்படுத்துகிறார்கள். பெரும்பாலான இசை நிகழ்ச்சிகளில் இளையராஜா பாடல்கள் தான் அதிகம் பாடப்படுகிறது. இந்தப் பிரச்னையில் சில நாட்களாக அவரைப் பற்றி எழும் விமர்சனங்கள் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. வாழ்க்கையில் போராடிப் போராடி வளர்ந்தவர், இப்போதும் அவருடைய உரிமைக்காக போராட வேண்டிய சூழலை உருவாக்கி வருகிறார்கள். அவர் செய்த வேலைக்கான உரிமை, அங்கீகாரத்தை மட்டுமே அவர் கேட்கிறார்.

நன்றிக் கடன்

மைக்கேல் ஜாக்சன் இருந்த போது அவர் அணிந்த உடை, கண்ணாடி என ஒவ்வொன்றிற்கும் காப்பிரைட் செய்து வைத்திருந்தார். வெளிநாடுகளில் காப்பிரைட் விஷயம் சரியாக இருக்கும். இங்கு புரிதல் இல்லாமல் பலவிதமாக பேசி வருகிறார்கள். இளையராஜா, செய்த இந்த பேருதவிக்கு இசைக் கலைஞர்கள் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்,” என்கிறார் தினா.

இசையமைப்பாளர் சத்யா கூறுகையில்,

“இளையராஜா இசைக் கலைஞர்களுக்கும் ராயல்டியில் பங்குண்டு என்று சொல்லியிருப்பது மகத்தான ஒன்று. இது போன்று யாருமே செய்தில்லை. ராயல்டி பற்றி எந்த புரிதலும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் அவரைப் பற்றிய மீம்கள், விமர்சனங்கள் போடுவது வருத்தமாக உள்ளது. அவரை நான் இசை தெய்வமாகவே பார்க்கிறேன். அவரைப் பற்றித் தவறாக செய்தி வந்தால் கூட படிக்க மாட்டேன். இது குறித்து எந்தவிதமான சர்ச்சை வந்தாலும் எங்களது சங்கம் இதில் தலையிட்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பது எனது ஆசை, என்கிறார் சத்யா.

உரிமையை கேட்பதில் என்ன தவறு.?

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அறிவு சார்ந்த சொத்துக்களுக்கு அதன் தளங்களுக்கேற்ப ஒரு நிரந்தர வருமானம் கிடைத்து வருகிறது. அந்தக் காலத்தில், எதிர்காலத்தில் இப்படியெல்லாம் அறிவியல் வளர்ச்சி இருக்கும் என்று யாராலும் கணித்திருக்க முடியாது. இன்று டிவிக்கள், ரேடியோக்கள், யு டியூப் தளங்கள், மொபைல் போன்கள் என பல ஊடகங்களில் பாடல்கள் என்பது வருமானம் தரக் கூடியதாக இருக்கிறது. அதை வைத்து வியாபாரம் செய்வர்கள் நிறைய சம்பாதிக்கும் போது, அந்த அறிவு சார் சொத்தை உருவாக்கியவர்கள் சட்டப்படி உரிமையைக் கேட்பதில் தவறில்லை.

இளையராஜா எழுப்பும் பிரச்னையை சம்மந்தப்பட்டவர்கள் பேசித் தீர்க்க வேண்டும். இளையராஜாவின் பாடலைப் பற்றி விமர்சிப்பதற்கு உரிமை இருக்கிறது. ஆனால், அவர் கோரும் உரிமைகளைப் பற்றி விமர்சிப்பது தவறு.

படைப்பாளிகள் பலரும் மென்மையான குணம் கொண்டவர்கள். அவர்களை விமர்சனங்களால் காயப்படுத்தக் கூடாது. இந்த உலகத்தில் ஏதாவது ஒரு மூலையில் ஒவ்வொரு நொடியும் இளையராஜா இசை கேட்டுக் கொண்டிருக்கும். நாம் ரசிகர்களாகவே இருப்போம்... அவருடைய பாடலை ரசிப்போம், அதோடு நிறுத்திக் கொள்வோமே. ஏன், நமக்கு சம்பந்தமில்லாத வியாபாரத்தைப் பற்றிப் பேச வேண்டும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in