Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

அன்று ஜிவி... இன்று அசோக்...! - கந்து வட்டி, கட்ட பஞ்சாயத்தின் பிடியில் தமிழ் சினிமா...!

22 நவ, 2017 - 14:34 IST
எழுத்தின் அளவு:
Tamil-Cinema-under-Kandhu-vatti-Mafia

சினிமாவை வெறும் சம்பாத்தியமாக பார்க்காமல், அதன் மீதுள்ள காதலால் சினிமாவிற்கு படையெடுத்தவர்கள் ஏராளமான பேர். இதில் படித்தவர், படிக்காதவர்கள், ஜாதி, மதம் எல்லாம் கடந்து கலை என்ற ஒன்றை மட்டும் மனதில் கொண்டு நாமும் நல்ல படங்களை கொடுத்து இந்த துறையில் சாதிக்க வேண்டும் என்று தான் வருகிறார்கள்.

ஆபிஸ் பையனாக இருந்து படிப்படியாக முன்னேறி தயாரிப்பாளராக மாறியவர்களும் இங்கு இருக்கிறார்கள். இந்த சினிமா தொழில், ஒரு வகையான சூதாட்டம் என்கின்றனர் இங்கே இருப்பவர்கள். இதில் ஜெயித்தவர்களும் உண்டு, தோற்று மரணத்தை தழுவியவர்களும் உண்டு. நேற்று(நவ., 21) அப்படி ஒரு மரணம் சம்பவம் தான் நிகழ்ந்துள்ளது.

சுப்ரமணியபுரம் படம் மூலம் சினிமாவில் நுழைந்தவர் மதுரையை சேர்ந்த சசிகுமார். தயாரிப்பாளராக, இயக்குநர், நடிகர் என வளர்ந்து... தொடர்ந்து சில வெற்றி படங்களை கொடுத்தவர், இயக்கத்தை குறைத்து விட்டு தன் தயாரிப்பு நிறுவனத்திலும், பிற தயாரிப்பு நிறுவனங்களின் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

சசிகுமாரின் அலுவலகத்தில் நிறுவனத்தின் மேலாளராகவும், இணை தயாரிப்பாளராகவும் இருந்தார் அசோக் குமார். இவர், சசிகுமாரின் அத்தை மகன் ஆவார். அசோக்குமார் கந்து வட்டி கொடுமையால் நேற்று தற்கொலை செய்து உள்ளார். தனது தற்கொலைக்கு காரணம், மதுரையை சேர்ந்த பைனான்சியர் அன்புச் செழியன் என குறிப்பிட்டிருக்கிறார். அசோக் குமாருக்கு, வனிதா(38 வயது) மனைவி, சக்தி(வயது 12) என்ற மகனும், பிரார்த்தனா (வயது 9) என்ற மகளும் உள்ளனர்.

அசோக் குமாரின் மரணத்திற்கு கந்து வட்டி கொடுமை தான் முழுக்க முழுக்க காரணம். கந்து வட்டி கொடுமையால் மரணத்தை தழுவிய சினிமா பிரபலம் இவர் மட்டுமல்ல, தயாரிப்பாளர் ஜிவி.,யும் தான். இயக்குனர் மணிரத்னம் சகோதரர் ஜிவி என்று அழைக்கப்படும் ஜி.வெங்கடேஸ்வரன், மௌன ராகம், அக்னி நட்சத்திரம், குரு, அஞ்சலி, தளபதி போன்ற படங்களை தயாரித்தவர். இதே கடன் நெருக்கடியால் 2003-ம் ஆண்டு, மே 3 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது இவரது இறப்புக்கு காரணமாக சொல்லப்பட்ட பெயரும், இப்போது அசோக் இறப்புக்கு காரணமாக சொல்லப்பட்ட பெயரும் மதுரை அன்பு என்ற பெயர் தான்.

யார் இந்த அன்பு?
மதுரையில் சிறிய அளவில் பைனான்ஸ் செய்து கொண்டிருந்த அன்பு, சென்னைக்கு தன் சகோதரர் உடன் வந்து பெரிய பெரிய படங்களுக்கும், நடிகர்களுக்கும், தயாரிபாளர்களுக்கும் வட்டிக்கு பணம் கொடுக்க தொடங்கினார். இவர் ஆளும் கட்சியின் அரசியல் ஒருவரின் பினாமி என்று சொல்லப்படுகிறது.

நிர்வாண கொடுமை
முதலில் ஒரு புது படம் ஆரம்பிக்கிறார்கள் என்றால் ஐம்பது லட்சம் முதலில் நாலு வட்டிக்கு கொடுப்பது பின் அந்த படத்தின் சாட்டிலைட் ஓவர் சீஸ் என்று ஒட்டு மொத்தமாக எழுதி வாங்கிவிடுவாராம். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் குறிப்பிட்ட நாளில் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை என்றால் அவர்களை நிர்வாணமாக உட்கார வைத்து கேட்காத கேள்வி எல்லாம் கேட்டு அடுத்த சில நாட்களில் பணத்தை வசூலிப்பது தான் இவரது பாணி.

நடிகைகளும் பாதிப்பு
சொந்த படம் எடுத்த நடிகைகள் தேவயானி, ரம்பா போன்றவர்கள் கூட இவரது அவஸ்தையில் சிக்கியவர்ககள் என்கின்றனர்.

பண பலம், அரசியல் பலம்
இவரால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் அவரைப்பற்றி வெளியில் சொல்வது கிடையாது. அப்படியே சொன்னாலும் அவர் மீது நடவடிக்கை கிடையாது. காரணம் அவருக்கு இருக்கும் பண பலமும், அரசியல் பலமும் தான்.

தமிழ் சினிமாவில் இருக்கும் கந்து வட்டி பற்றி திரையில் உள்ள பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள் என்று இங்கு பார்ப்போம்...

தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார்

பத்து வருடங்களுக்கு மேலாக விநியோகஸ்தராக, தயாரிப்பாளராக இருக்கிறார். தங்க மீன்கள் படத்துக்காக தேசிய விருதும் பெற்றவர். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், பரதேசி, ரம்மி, தரமணி போன்ற படங்களை தயாரித்துள்ளார். இவர் கூறுகையில்,

இப்போது உள்ள சூழ்நிலையில் தயாரிப்பாளர்கள் வங்கியில் கடன் வாங்க முடியாது. பாதுகாப்பான பைனான்ஸ் முறைகளும் இங்கு இல்லை. எனவே யாரிடம் கடனாக வாங்கினாலும் அவர்களுக்கு வெற்றுதாளிலும், வெற்று காசோலையிலும், தான் கடனாக வாங்குகிறோம். புது நபர்களுக்கு ஐந்து முதல் ஆறு ஏழு வரை வட்டி போகும், பழைய ஆளுக்கு 3 வட்டிக்கு தருவார்கள். படம் முடித்து படம் வெளி வர தாமதம் ஆனால் அவ்ளோதான். மொத்த வட்டியும் சேர்ந்து விடும். அதில் இருந்து வெளியில் வர முடியாது. எடுத்த படத்தையும் அவர்களுக்கு எழுதி கொடுக்க வேண்டியது தான்.

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட கூட்டமைப்புகள் உள்ளன. ஆனால் கட்டப்பஞ்சாயத்து தான் நடக்கிறது. இதை முதலில் ஒழிக்க வேண்டும். மெர்சல் படம் பெரிய வெற்றி என்பார்கள். ஆனால் அவர்களுக்கும் இருபது முதல் முப்பது கோடி வரை நஷ்டம் இருக்கும். இங்கு இருக்கும் பல திட்டங்கள் மாற்றப்பட வேண்டும், அப்போது தான் தயாரிப்பாளர் வாழ முடியும் என்கிறார்.

அம்மா கிரியேசன்ஸ் டி.சிவா
பூந்தோட்ட காவல்காரன் படம் மூலம் தயாரிப்பாளரானவர். தெய்வ வாக்கு, சின்ன மாப்ள, சரோஜா, அரவான், கடவுள் இருக்கான் குமாரு என பல படங்களை தயாரித்தவர் இப்போது வெங்கட்பிரபுவின் பார்ட்டி படத்தை தயாரிக்கிறார். இவர் கூறுகையில்,

அசோக் இறந்து போனது வருத்தத்துக்கு உரிய விஷயம். எந்த பிரச்சனையாக இருந்தாலும் பேசி தீர்க்க வேண்டும். இங்கு 90 சதவீதம் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தில் தான் உள்ளனர். அதில் நானும் மாட்டிக் கொண்டு உள்ளேன். தியேட்டர் பிரச்னை, ஜிஎஸ்டி., என ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படத்திற்கு ஏகப்பட்ட பிரச்னைகள் இருந்ததால் அந்த படத்திற்கு சரியான ஓபனிங் கிடைக்கவில்லை.

சினிமாவில் மட்டும் தான் நம்பிக்கை இல்லாமல் கோடிகளில் பண புழக்கம் இருக்கும். இந்த படத்தில் விட்டதை அடுத்த படத்தில் சரி செய்து கொள்ளலாம் என்று நினைத்து தான் பார்ட்டி படத்தை எடுத்து வருகிறேன். முன்பு இருந்தது போன்று சினிமா இல்லை. தயாரிப்பாளர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்கிறார் சிவா.

விஷால் பிலிம் பேக்டரி இணை தயாரிப்பாளர் முருகராஜ்
என்ன தான் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தாலும் எங்களுக்கும் பிரச்சனகள் இருக்கிறது. முன்பு மாதிரி சாட்டிலைட் வியாபராம் இல்லை. கடன் வட்டி அதிகம். மாதம் மாதம் வட்டி கட்ட முடியல. ஆறு மாதம் தொடர்ந்து வட்டிகட்டவில்லை என்றால், படம் ரிலீஸ் சமயத்தில் பெரிய சுமையாய் இருக்கும். ஒரு படம் ஆரம்பித்து ஒன்றரை வருடம் ஆனால், அந்த படம் வெற்றி அடைந்தாலும் நமக்கு எதுவும் கிடைக்காது.

முதலில் வட்டிக்கு வட்டி முறை ஒழிக்கணும். விஷால் கத்தி சண்டை படத்துக்கு வாங்கிய சம்பளத்தையே திருப்பி கொடுத்து விட்டார். சங்கத்தில் பல முறை சொல்லி விட்டார்கள். விவரம் தெரியாமல் படம் எடுக்க வராதீர்கள் என்று. அப்படியே வந்தாலும் சங்கத்தில் ஆலோசனை கேளுங்க. பூஜை போடும்போதே படம் எப்போது ரிலிஸ் ஆகும், எத்தனை தியேட்டர்கள் கிடைக்கும் என எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்ய வேண்டும்.

டிக்கெட்டுகள் முதலில் ஆன் லைன் ஆக்க வேண்டும். அப்ப தான் உண்மையான கலெக்சன் என்னவென்று தெரியும். ஆன் லைன் ஆக்கிவிட்டால் தயாரிப்பாளர் எங்க இருந்தாலும் தியேட்டர் நிலவரம் தெரிந்து கொள்ளலாம். இது தயாரிபாளர்களுக்கு உதவி செய்யும்.

இந்த துறையில் ஏழு எட்டு பேர் கட்ட பஞ்சாயத்து பண்ணி கொண்டு இருக்கிறார்கள். அவர்களை முதலில் சரி செய்ய வேண்டும். இப்போது எங்கள் தயாரிப்பில் சண்டக்கோழி 2, இருப்புத்திரை போய் கொண்டிருக்கிறது. வட்டி பிரச்சனகளுக்கு ஒரு முடிவு எடுத்தால் தமிழ் சினிமா நன்றாக இருக்கும் என்கிறார் முருகராஜ்.

தயாரிப்பாளர் சிவி குமார்
திருக்குமரன் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் சார்பில் அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், முண்டாசுபட்டி இன்று நேற்று நாளை என பல படங்களை தயாரித்தும், விநியோகித்தும் உள்ளார். இப்போது மாயவன் படத்தின் மூலம் இயக்குநராகவும் களமிறங்கி உள்ளார். கந்து வட்டி பற்றி இவர் கூறுகையில்,

மதுரையில் எனக்கு சொந்தமான இடத்தை மதுரை அன்புவிடம் அடமானம் வைத்து தான் இந்தப்படத்தை இயக்கி உள்ளேன். ஆனால் இன்னும் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. அதேசமயம் அன்புவிடம் வாங்கிய பணத்திற்கு வட்டியுடன் பணத்தை கொடுத்துவிட்டேன். ஆனால் என் டாக்குமென்ட்டை திருப்பி தர மறுக்கிறார். இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்க சென்றேன். அதற்குள் சில தயாரிப்பாளர்கள் கமிஷனரை சந்தித்து இதை பெரிதுப்படுத்த வேண்டாம், நாங்கள் பேசி தீர்த்து கொள்கிறோம் என்றனர். இதையடுத்து அவர்கள் சமாதானத்திற்கு வரச் சொன்னார்கள். ஆனால் என் டாக்குமென்ட்டை தந்தால் தான் நான் வருவேன் என்று சொல்லிவிட்டேன். இன்னும் எனக்கு எந்த நியாயமும் கிடைக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.

தயாரிப்பாளர் எஸ்.தாணு
இதுப்பற்றி தாணு கூறுகையில், அனைத்து தயாரிப்பாளர்களும் ஒன்று கூடி ஒரு 3 மாதத்திற்கு படங்கள் தயாரிப்பை நிறுத்தி வைத்து இந்த பிரச்னை பற்றி பேசி ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும். இல்லையென்றால் நடிகர்களின் சம்பளத்தை முன்கூட்டியே கொடுக்காமல் படம் வெளியாகும் சமயத்தில் கொடுத்தால் ஓரளவுக்கு பிரச்னையை சமாளிக்கலாம். நானும் கடனுக்கு வாங்கி தான் படத்தை தயாரிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இனியாவது தமிழ் திரையுலகினர் அனைவரும் ஒன்று கூடி இந்த விஷயத்தில் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்த் திரையுலகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in