Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

10வது மாதத்தில் கிடைத்த வெற்றி - 2017ன் 10 மாதப் படங்கள் ஓர் பார்வை

02 நவ, 2017 - 10:39 IST
எழுத்தின் அளவு:
Tamil-cinema-got-Big-success-in-10th-month-:-10-Month-of-Tamil-Cinema-report

தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரை இந்த 2017ம் ஆண்டு ஒரு தாயின் பிரசவ வேதனையைப் போன்றுதான் அனுபவித்து வந்தது. பத்தாவது மாதத்தில்தான் 'மெர்சல்' படம் மூலம் முதல் முறையாக ஒரு பெரிய வெற்றியை சுகமாக அனுபவித்திருக்கிறது. இந்த வெற்றி கிடைக்கப் பல காரணங்கள் இருந்தாலும், எப்படியோ ஒரு வெற்றி கிடைத்து விட்டதே என்று தான் தமிழ்த் திரையுலகத்தினர் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

160 படங்கள்
இந்த 2017ம் ஆண்டில் கடந்து போன பத்து மாதத்தில் சுமார் 160க்கும் மேற்பட்ட படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் வெற்றி சதவீதம் என்பது ஒரு பத்து சதவீதம் கூட இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

ஜுலை மாதம் ஜிஎஸ்டி வரி விதிப்பால் நடந்த தியேட்டர்கள் ஸ்டிரைக், அக்டோபர் மாதம் கேளிக்கை வரி விதிப்பால் புதிய படங்கள் வெளியிடப்படாத நிலைமை ஆகிய வாரங்களைத் தவிர மற்ற எல்லா வாரங்களிலும் புதிய படங்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.

வாரத்திற்கு நான்கு படங்கள்
ஒரு வாரத்திற்கு சராசரியாக வெளிவரும் 4 படங்களில் ஒரு படம் கூட 'ஆவரேஜ்' படமாகக் கூட இல்லை என்பது எதிர்காலத்திற்கும் சேர்த்து அடிக்கப்படும் ஒரு எச்சரிக்கை மணி.

கண்மூடித் தனமான நம்பிக்கை
பல புதிய இளம் கலைஞர்கள் வந்து கொண்டிருந்தாலும் அவர்கள் சினிமாவைப் புரிந்து வைத்திருப்பதும், மக்களின் ரசனையைப் புரிந்து வைத்திருப்பதும் சரியாக இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. தாங்கள் நினைப்பதை எடுத்தால், அதை வித்தியாசம் என நினைத்து மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற கண்மூடித் தனமான நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

ஆபாசம் திணிப்பு
அதிலும் கடந்த மாதம் வெளிவந்த ஆபாசபடமான ஹர ஹர மஹாதேவகி, இந்த அக்டோபர் மாதத்தில் வந்த இரண்டு படங்களான 'மேயாத மான், கடைசி பெஞ்ச் கார்த்தி' ஆகிய படங்களில் சொல்லப்பட்டிருக்கும் திருமணத்திற்கு முன்பே காதலர்கள் உடலாலும் இணைய வேண்டும் என்பது ஆபத்தான கதை சொல்லல் ஆகவே இருக்கிறது.

திரைக்கதையில் தான் வெற்றி
குடும்பப் பாங்கான கதைகள் வந்தால் இங்கு வெற்றி பெறுவதில்லை என்று சொல்கிறார்கள். ஆனால், 'கருப்பன்' போன்ற படங்களும் மக்களிடம் வரவேற்பைப் பெற்று வெற்றியைத் தந்துள்ளன.

திரைப்படம் என்பது கதை சொல்வதிலும், காட்சிகளை விறுவிறுப்பாக தொய்வில்லாமல் நகர்த்துவதிலும் தான் அமைந்துள்ளது. கூடவே இருக்கும் இனிமையான பாடல்கள் அந்தப் படங்களுக்கு மேலும் வலு சேர்க்கின்றன. கதையை எளிதில் பிடித்துவிடும் இளம் இயக்குனர்கள், திரைக்கதையில் கோட்டை விட்டதைப் பல படங்களில் பார்க்க முடிகிறது.

ஒரு படத்தை உருவாக்குவதற்கு முன்பு 'டிஸ்கஷனுக்காக' நீண்ட காலம் எடுத்துக் கொள்ளுங்கள். மக்களின் ரசனைகளை, விருப்பங்களை படங்களில் வையுங்கள், மிகப் பெரிய வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ சுமாரான வெற்றியாவது கிடைக்க வாய்ப்பிருக்கும்.

இந்த 10 மாதங்களில் நம்மை ஓரளவிற்காவது ரசிக்க வைத்த படங்கள் எவை எனப் பார்ப்போம்.

ஜனவரி
ஜனவரி மாதத்தில் 8 படங்கள் மட்டுமே வெளிவந்தன. இவற்றில் 'பைரவா' ஓரளவிற்கு வெற்றிப் படமாக அமைந்தது. அனைத்து ஏரியாக்களிலும் லாபம் இல்லை என்றாலும் சில ஏரியாக்களில் சுமாரான லாபத்தைப் பெற்றுக் கொடுத்தது. பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த 'கோடிட்ட இடங்களை நிரப்புக' எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய படம்.

பிப்ரவரி
பிப்ரவரி மாதத்தில் வெளிவந்த படங்களில் 'போகன், சி 3' ஆகிய படங்கள் மட்டுமே வெற்றிக்கு அருகில் சென்ற படங்கள். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'சி 3' படம் மக்களால் ரசிக்கப்படாமல் போனது ஆச்சரியம்தான். முதல் இரண்டு பாகங்களின் சாயலிலேயே இந்த மூன்றாவது பாகமும் உருவாக்கப்பட்டதே அதற்குக் காரணம். விஜய் ஆன்டனி நடித்து வெளிவந்த 'எமன்' எதிர்பார்க்க வைத்து ஏமாற்றியது.

மார்ச்
மார்ச் மாதத்தில் அதிக பட்சமாக 25 படங்கள் வெளிவந்து அதிர்ச்சியைக் கொடுத்தது. இவற்றில் 'குற்றம்' படம் சுமாரான வெற்றியைப் பெற்று லாபத்தைக் கொடுத்தது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்து வெளிவந்த 'ப்ரூஸ் லீ, நயன்தாரா நடித்து வெளிவந்த 'டோரா' ஆகிய படங்கள் எதிர்பார்க்க வைத்து ஏமாற்றின. விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த 'கவண்' சுமாரான வெற்றியைப் பெற்றது.

ஏப்ரல்
ஏப்ரல் மாதத்தில் 13 படங்கள் வெளிவந்தன. கோடை விடுமுறைக் காலம் என்பதால் அதிகப் படங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது குறைவான படங்கள் வெளிவந்தன. தனுஷ் இயக்குனராக அறிமுகமான 'ப பாண்டி' படம் ஓரளவிற்கே ரசிக்க வைத்தது. ஆர்யா நடித்து வெளிவந்த 'கடம்பன்', ராகவா லாரன்சின் 'சிவலிங்கா' ஆகியவை ஏமாற்றின. இவற்றை விட மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'காற்று வெளியிடை' வந்த சுவடு தெரியாமல் காணாமல் போனது அதிர்ச்சியான ஒன்று. தெலுங்கிலிருந்து வந்த 'பாகுபலி 2' தமிழ்நாட்டிலும் 100 கோடிக்கு மேல் வசூலித்து தெலுங்குத் திரையுலகத்திற்குப் பெருமை தேடிக் கொடுத்தது.

மே
மே மாதத்தில் 18 படங்கள் வெளிவந்தன. கோடை விடுமுறை காலத்தில் பெரிய நடிகர்களின் படங்கள் ஒன்று கூட வராதது ஆச்சரியமாக இருந்தது. உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்த 'சரவணன் இருக்க பயமேன்', ராதா மோகன் இயக்கத்தில் வெளிவந்த 'பிருந்தாவனம்', சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்த 'தொண்டன்' ஆகியவைதான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படங்கள். ஆனால், இந்தப் படங்களும் தோல்விப் படங்களின் பட்டியலில்தான் சேர்ந்தன.

ஜுன்
மார்ச் மாதம் போலவே ஜுன் மாதத்திலும் அதிகமாக 25 படங்கள் வெளிவந்தன. இந்த மாதத்தில் வெளிவந்த படங்களில் பெரிய தோல்விப் படமாக சிம்பு நடித்து வெளிவந்த 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படம் அமைந்தது. அதற்கடுத்து 'சத்ரியன், ரங்கூன்' ஆகிய படங்கள் அமைந்தன. 'வனமகன்' படம் மிகச் சுமாராக ஓடியது. மாதக் கடைசியில் வெளிவந்த ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்ற 'இவன் தந்திரன்' படம் அடுத்து நடைபெற்ற ஜிஎஸ்டி வரி தியேட்டர் ஸ்டிரைக்கில் சிக்கிக் கொண்டது.

ஜுலை
ஜுலை மாதம் 18 படங்கள் வெளிவந்தன. இசையமைப்பாளரான ஆதி நாயகனாக அறிமுகமான 'மீசைய முறுக்கு' படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. விஜய் சேதுபதி, மாதவன் நடித்து வெளிவந்த 'விக்ரம் வேதா' படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. வியாபார ரீதியாகவும் அனைத்து ஏரியாக்களிலும் ஓரளவிற்கு லாபத்தை வாங்கிக் கொடுத்தது.

ஆகஸ்ட்
ஆகஸ்ட் மாதம் 13 படங்களே வெளிவந்தன. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் 'விவேகம்' விமர்சன ரீதியாக கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தது. படமும் தோல்வியடைந்து பலருக்கும் நஷ்டத்தைக் கொடுத்தது. தனுஷ் நடித்து வெளிவந்த 'வேலையில்லா பட்டதாரி 2' தோல்வியடைந்தது. 'தரமணி' படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது.

செப்டம்பர்
செப்டம்பர் மாதம் மார்ச், ஜுன் மாதங்கள் போல 25 படங்கள் வரை வெளிவந்தன. குறைந்த செலவில் நிறைவான படமாக 'குரங்கு பொம்மை' படம் அமைந்தது. விஜய் சேதுபதி நடித்து மிகத் தாமதமாக வெளிவந்த 'புரியாத புதிர்' தோல்வியடைந்தது. 'சத்ரியன், கதாநாயகன், மகளிர் மட்டும்' ஆகியவை தோல்வியடைந்தன. மகேஷ் பாபு தமிழில் அறிமுகமான 'ஸ்பைடர்' அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது. காமப் படமாக எடுக்கப்பட்ட 'ஹரஹர மகாதேவகி' படம் வசூலை அள்ளி அதிர்ச்சியைத் தந்தது.

அக்டோபர்
அக்டோபர் மாதம் முதல் இரண்டு வாரங்கள் கேளிக்கை வரி விவகாரத்தால் தயாரிப்பாளர் சங்கம் புதிய படங்களை வெளியிடவில்லை. பிரச்சனை முடிந்து தீபாவளிக்குப் புதிய படங்கள் வெளிவந்தன. இந்த மாதத்தில் 5 படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. 'மெர்சல்' படம் வெளியீட்டிற்கு முன்பு ஏற்படுத்திய சர்ச்சையை விட, வெளியீட்டிற்குப் பின்பு கிடைத்த சர்ச்சையால் மிகப் பெரும் வெற்றி பெற்று 200 கோடி ரூபாய் வசூலை அள்ளியிருக்கிறது. இந்த ஆண்டில் ஒரு நேரடித் தமிழ்ப் படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி, 200 கோடி ரூபாயையும் கடந்திருப்பது மகிழ்ச்சியான ஒன்று. அதனால்தான் பத்தாவது மாதத்தில் ஒரு சுகமான வெற்றியை அனுபவித்திருக்கிறது என்று ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தோம். 'மேயாத மான்' ஓரளவிற்கு வசூலைப் பெற்றது.

அதிக முதலீடு
இந்தியாவிலேயே ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளுக்குப் பிறகு அதிக அளவில் முதலீடு செய்யப்படும் திரையுலகம் தமிழ்த் திரையுலகம்தான். பல புதியவர்கள் வருவது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால் அவர்கள் சினிமாவைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டு, புரிந்து கொண்டு, மக்களுக்குப் பிடித்த வகையில் படங்களைக் கொடுக்கும் போதுதான் அவர்களும் வெற்றியை சுவைத்து லாபத்தைப் பார்க்க முடியும்.

காத்திருக்கும் 50 படங்கள்
கடந்த சில வருடங்களாக 200 படங்கள் ஒரு வருடத்தில் வருகின்றன. இந்த ஆண்டில் இதுவரை 160க்கும் மேற்பட்ட படங்கள் வந்துவிட்டன. கடைசி இரண்டு மாதங்களில் சுமார் 50 படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு படங்கள் வந்தாலும் ஒரு வருடத்தில் சிறந்த படங்கள் அல்லது வசூலித்த படங்கள் என்று 20 படங்களைக் கூடக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாமல் போகிறது.

தமிழ் சினிமா தொடர்ந்து நன்றாக இருக்க சம்பந்தப்பட்ட திரையுலகத்தினர்தான் ஆவன செய்ய வேண்டும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in