Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

படங்கள் அதிகம், வெற்றி....? செப்டம்பர் மாதப் படங்கள் ஓர் பார்வை

10 அக், 2017 - 12:40 IST
எழுத்தின் அளவு:
2017-September-movie-Report

2017ம் ஆண்டின் முக்கால் பகுதியைக் கடந்து விட்டோம். கடந்து போன இந்த 9 மாதங்களில் இதுவரை வெளியான படங்களின் எண்ணிக்கை 150ஐத் தாண்டி விட்டது.

ஒவ்வொரு மாதமும் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை மாறுபட்டுக் கொண்டிருந்தாலும் சில மாதங்களில் அதிகமான படங்கள் வெளிவந்து விடுகின்றன. அந்த விதத்தில் செப்டம்பர் மாதத்தில் 24 படங்கள் வரை வெளிவந்துள்ளன. மார்ச், ஜுன் மாதங்களில் தலா 25 படங்கள் வெளிவந்தன. அதற்கடுத்து அதிகப் படங்கள் வந்த மாதம் செப்டம்பர் மாதம்.

வெளியீட்டு நாட்கள் என்ற விதத்தில் பார்த்தால் செப்டம்பர் மாதத்தில் மட்டும் செப்டம்பர் 1, 8, 14, 15, 22, 27, 29 என 7 நாட்களில் புதிய படங்கள் வெளியாகியுள்ளன. வெள்ளிக் கிழமைகளில் மட்டுமே பொதுவாக படங்கள் வெளிவருவது வழக்கம். இப்போது அந்த வழக்கமும் மீறி, நாள், நட்சத்திரம், சென்டிமென்ட் பார்த்து படங்களை வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள். 14ம் தேதி வியாழக்கிழமை 'துப்பறிவாளன்' படமும், 27ம் தேதி புதன் கிழமை 'ஸ்பைடர்' படமும் வெளியாகியுள்ளன.

செப்டம்பர் மாதம் வெளியான 24 படங்களில் சூப்பர் ஹிட்டாக ஓடிய படம் என்று ஒரு படத்தைக் கூட சொல்ல முடியாத நிலைமையே ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை எப்போது மாறும் என்று திரையுலகத்தினரும் வருத்தத்தில் இருக்கிறார்கள், படத்தைப் பார்ப்பவர்கள் ஒரு நல்ல படம் கூட வர மாட்டேன் என்கிறதே என்ற ஏக்கத்தில் இருக்கிறார்கள்.

கவனம் ஈர்த்த குரங்கு பொம்மை
செப்டம்பர் 1ம் தேதி வெளிவந்த 'குரங்கு பொம்மை, ஒரு கனவு போல, புரியாத புதிர்' ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் ரசிகர்களின் ஏக்கத்தைக் கொஞ்சம் தீர்த்து வைத்த படமாக 'குரங்கு பொம்மை' படம் அமைந்தது. கதைக்களமும், கதாபாத்திரங்களும் யதார்த்தமாக இருந்ததால் படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது.

'ஒரு கனவு போல' படம் சில மாதங்களுக்கு முன்பே வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு செப்டம்பர் 1ம் தேதி வெளியானது. எந்த நட்சத்திர அந்தஸ்தும் இல்லாமல் போனதால் கவனத்தை ஈர்க்கவில்லை. 'மெல்லிசை' ஆக உருவான படம் 'புரியாத புதிர்' ஆக மாறி வெளியானது. ஒரு படம் உருவாவதில் இருக்கும் பிரச்சனைகளை விட சரியான சமயத்தில், காலத்தே வெளியாகாமல் போனால் என்ன ஆகும் என்பதற்கு 'புரியாத புதிர்' சரியான உதாரணம்.

செப்டம்பர் 8ம் தேதி “ஆறாம் வேற்றுமை, காதல் கசக்குதய்யா, கதாநாயகன், மாய மோகினி, நெருப்புடா, ஒன் ஹார்ட், தப்பு தண்டா” ஆகிய படங்கள் வெளியாகின. 'கதாநாயகன், நெருப்புடா' ஆகிய படங்கள் வளர்ந்து நாயகர்களான விஷ்ணு விஷால், விக்ரம் பிரபு ஆகியோர் நடித்து வெளிவந்த படங்கள். ரசிகர்களை ஓரளவிற்காவது இந்தப் படங்கள் ரசிக்க வைக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அது கடைசியில் ஏமாற்றத்தில்தான் முடிந்தது. ஏ.ஆர்.ரகுமானின் மேடை இசை நிகழ்ச்சியை மையப்படுத்திய 'ஒன் ஹார்ட்' படம் சில ஆயிரம் பேரின் இதயத்தையாவது தொட்டதா என்பது கேள்விதான். மற்ற படங்கள் அனைத்துமே இந்த ஆண்டில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கையைக் கூட்டிய படங்களே.

ஹிட்டான துப்பறிவாளன்
செப்டம்பர் 14ம் தேதி 'துப்பறிவாளன்' படம் மட்டும் வெளிவந்தது. மிஷ்கின், விஷால் கூட்டணியில் வெளிவந்த முதல் படம். வித்தியாசமான துப்பறியும் கதையாக இருந்தாலும் மிகப் பெரிய வெற்றியைப் படம் பெறவில்லை என்பதே உண்மை. இருந்தாலும் விஷாலின் முந்தைய சில தோல்விப் படங்களைக் காட்டிலும், 'துப்பறிவாளன்' ஓரளவிற்கு வெற்றி பெற்றது என்று சொல்லலாம்.

ஏமாற்றிய ஜோதிகா
செப்டம்பர் 15ம் தேதி ஜோதிகா நடித்த 'மகளிர் மட்டும்' படம் வெளிவந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா நடித்து இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளிவந்த '36 வயதினிலே' படத்தின் வெற்றியுடன் ஒப்பிடும் போது 'மகளிர் மட்டும்' படத்தின் வெற்றி மிகக் குறைவுதான். மகளிர் முன்னேற்றத்தைப் பற்றிப் பேசிய படத்திற்கு மகளிரை வரவைப்பதற்கு புடவை பரிசு என்று விளம்பரப்படுத்தியதெல்லாம் முரண்.

சின்ன பட்ஜெட் படங்கள் ஆதிக்கம்

செப்டம்பர் 22ம் தேதி “ஆயிரத்தில் இருவர், பயமா இருக்கு, காக்கா, களவுத் தொழிற்சாலை, கொஞ்சம் கொஞ்சம், பிச்சுவா கத்தி, தெரு நாய்கள், வல்ல தேசம்” ஆகிய படங்கள் வெளிவந்தன. ஒரே நாளில் இத்தனை படங்கள், அதிலும் சிறிய பட்ஜெட் படங்கள் வெளிவந்ததை முறைப்படுத்தினால் மட்டுமே சிறிய படங்களும் ரசிகர்களிடம் கொஞ்சம் போய்ச் சேரும். அஜித், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட சிலருக்கு திருப்பு முனையைக் கொடுத்த இயக்குனர் சரண் இயக்கிய 'ஆயிரத்தில் இருவர்' படமும் இந்த வெளியீட்டுக் கூட்டத்தில் காணாமல் போனதைப் பற்றி என்ன சொல்வது...

மகேஷ் பாபுவின் தமிழ் என்ட்ரி
செப்டம்பர் 27ம் தேதி தெலுங்கின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு தமிழில் முதல் முறையாக நடித்த 'ஸ்பைடர்' படம் வெளிவந்தது. மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் தெலுங்கில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. மாறாக தமிழில் ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு தமிழ் இயக்குனர் தெலுங்குப் படத்தை இயக்கியதையும், தங்கள் மனம் கவர்ந்த தெலுங்கு நாயகன் தமிழ்ப் படத்தில் நடித்ததையும் தெலுங்கு ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை 'ஸ்பைடர்' படம் உணர்த்தியிருக்கிறது என்பதை வெளிப்படையாகச் சொல்லியே ஆக வேண்டும்.

செப்டம்பர் 29ம் தேதி 'ஹரஹர மகாதேவகி, கருப்பன், நெறி' ஆகிய படங்கள் வெளியாகின. 'அடல்ட்ஸ் ஒன்லி' படம் குடும்பத்துடன் வராதீர்கள் என்று சொல்லுமளவிற்கு படத்தை எடுத்திருந்தார்கள். இப்படிப்பட்ட சினிமாக்கள் வருவதால் என்ன ரசனை மாற்றம் வந்துவிடப் போகிறது என்று தெரியவில்லை. இம்மாதிரியான படங்களுக்கு ஒரு 'ஏ' மட்டும் போதாது. விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த 'கருப்பன்' வழக்கமான கிராமத்துக் காதல் திரைப்படம்தான். சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக ஒன்றுமில்லை. 'நெறி' படம் இந்த வருடப் படங்களின் எண்ணிக்கையைக் கூட்டிய மற்றுமொரு படம்.

யார் முறைப்படுத்துவது?
இதற்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 2017ம் ஆண்டில் தமிழ் சினிமா மோசமான ஒரு கட்டத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. பைரசி இணையதளங்கள், ஜிஎஸ்டி வரி விதிப்பு, தற்போது கேளிக்கை வரி விதிப்பு, தரமற்ற படங்கள், வசூலைக் கணக்கிடாமல் தயாராகும் பெரிய பட்ஜெட் படங்கள் என பல பிரச்சனைகள். இவற்றை முறைப்படுத்தி சரியான பாதையில் கொண்டு போகவில்லை என்றால் இந்த ஆண்டில் தமிழ்த் திரைப்படத் துறையில் ஏற்படும் பெரிய நஷ்டத்தை யாராலும் தடுக்க முடியாது.

2017ம் ஆண்டில் மீதமிருக்கும் மிச்ச நாட்களிலாவது ஏதாவது அதிசயம் நடக்கட்டும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படங்கள்...
செப்டம்பர் 1 : குரங்கு பொம்மை, ஒரு கனவு போல, புரியாத புதிர்
செப்டம்பர் 8 : ஆறாம் வேற்றுமை, காதல் கசக்குதய்யா, கதாநாயகன், மாய மோகினி, நெருப்புடா, ஒன் ஹார்ட், தப்பு தண்டா
செப்டம்பர் 14 : துப்பறிவாளன்
செப்டம்பர் 15 : மகளிர் மட்டும்
செப்டம்பர் 22 : ஆயிரத்தில் இருவர், பயமா இருக்கு, காக்கா, களவுத் தொழிற்சாலை, கொஞ்சம் கொஞ்சம், பிச்சுவா கத்தி, தெரு நாய்கள், வல்ல தேசம்
செப்டம்பர் 27 : ஸ்பைடர்
செப்டம்பர் 29 : ஹரஹர மகாதேவகி, கருப்பன், நெறி

Advertisement
மீண்டும் ஒரு ஸ்டிரைக், தாங்குமா தமிழ்த் திரையுலகம்?மீண்டும் ஒரு ஸ்டிரைக், தாங்குமா ... வரிசை கட்டும் இரண்டாம் பாகப் படங்கள் : இத்தனை ஏன்... ? வரிசை கட்டும் இரண்டாம் பாகப் ...


வாசகர் கருத்து (2)

A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
11 அக், 2017 - 10:44 Report Abuse
A.George Alphonse This films analysis are tottaly waste and wasting the time of readers.What these medias are gaining or loosing by such useless and unwanted analysis. It clearly shows the film industries are heading towards their ruining and down fall in coming days.It is a very good signs and great change in this present day generation on cenimas.
Rate this:
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
11 அக், 2017 - 05:48 Report Abuse
Bebeto இவங்க படத்தை, ஒருத்தனும் பார்க்க மாட்டான். இவங்க எல்லோரும் நேஷனல் வேஸ்ட்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Sandi Muni
  • சண்டி முனி
  • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
  • நடிகை : மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
  Tamil New Film Rajabheema
  • ராஜபீமா
  • நடிகர் : ஆரவ்
  • இயக்குனர் :நரேஷ் சம்பத்
  Tamil New Film Billa Pandi
  • பில்லா பாண்டி
  • நடிகர் : ஆர் கே சுரேஷ்
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :சரவண சக்தி
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in