Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

திரைத்துறையில் சாதிப்பது சவால் நிறைந்ததே - மகளிர் தின ஸ்பெஷல்!

08 மார், 2017 - 10:25 IST
எழுத்தின் அளவு:
Battle-to-success-in-Cinema---Women-day-special

கருவாகி, உருவாகி, உடலாகி, உயிராகி உன்னத வாழ்க்கையின் ஓர் அங்கமாக பெண் திகழ்கிறாள். ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையில் பொக்கிஷமாய் திகழ்பவள் பெண், பெண்களை தெய்வங்களாய் வணங்கிய சமூகம் நம் சமூகம், காலத்தின் வெற்றியை கையில் பிடிக்க, காற்றை கிழித்து கடும் பயணம் செய்யும் பெண்களை, மண்ணுக்குள் கிடத்தாமல் இதய சிம்மாசனத்தில் இடம் கொடுத்து போற்றுவோம். ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்கு அளபரியதாக மாறியுள்ளது. அவர்களில் சிலர், மிகவும் கடினமான திரைத்துறையில் முத்திரை பதிக்கின்றனர். அவர்களில் சிலர் இங்கே:


ஜெயஸ்ரீ லக்ஷ்மிநாராயணன் - கலை இயக்குனர்


இந்த துறையில் இருக்கும் பெண்களை, விரல் விட்டு எண்ணி விடலாம். 8 ஆண்டுகளாக இங்கே பயணிக்கிறேன். கலை இயக்குனர் ராஜீவன் சாரிடம் வேலை கொஞ்சம் கற்று கொண்டேன். பிறகு மும்பை சென்று சாபு சிரிலோடு ஹிந்தி படங்களில் வேலை பார்த்தேன். கலை இயக்குனராக, மலையாளத்தில் நான்கு படங்களில் வேலை பார்த்தேன். தமிழில் மிஷ்கினின் பிசாசு படத்தில் அறிமுகமானேன்.


தற்போது, ஏ.எல்.விஜய் இயக்கத்தில், ஜெயம் ரவியின், வனமகன் படத்தில் கலை இயக்குனராக வேலை பார்க்கிறேன். என் வேலை கொஞ்சம் சவாலானது. தலை காட்டிவிட்டு போக முடியாது. ராத்திரி, பகல் பார்க்காம, செட்ல வேலை பார்க்கணும். இயக்குனர் மற்றும் கேமரா ஆட்களோடு, அவர்களின் எண்ணத்தை, நான் என் வேலையில் கொண்டு வர வேண்டும். பெண்கள், தேவை இல்லாததை பேசுவதை நிறுத்தினாலே, தேவை இல்லாத பிரச்னைகள் வராது என நினைக்கிறன். நீங்கள் தான் உங்களுக்கு சிறந்த பாதுகாப்பு.


நான், ஒரு படம் துவங்கும் முன், என் டீமுடன் உட்கார்ந்து, சார்ட் தயாரித்து, எந்த வகையில், எப்படி வேலை பார்க்கலாம் என திட்டமிடுவேன். அதன்பின் தான், படப்பிடிப்புக்கு செல்வேன். தேவையான உபகரணங்களை, எத்தனை மாடியாக இருந்தாலும் நான் தான் எடுத்து செல்லணும்; சென்றிருக்கிறேன். நிற்க, உட்கார நேரம் இருக்காது. இதில் வெட்கப்படவும், வேதனைப்படவும் இடமில்லை. சார்லி படம், பல விருதுகளையும், நல்ல பெயரையும் எனக்கு வாங்கி கொடுத்ததில் உற்சாகமாகி விட்டேன்.


ஏகா லகானி - காஸ்ட்யூம் டிசைனர்


பேஷன் டிசைன் படிப்பை, மும்பை மற்றும் நியூயார்க்கில் படித்து, ஒன்பது ஆண்டாக இந்த துறையில் இருக்கிறேன். இதுவரை, ஏழு ஹிந்தி படங்கள், மணிரத்னம் படங்கள் உட்பட, ஐந்து தமிழ் படங்கள் செய்திருக்கிறேன். என்னை பொறுத்தவரை, படக்குழுவினர், என்னை அவங்க வீட்டுப் பொண்ணாக தான் பார்க்கின்றனர். நான் வேலை பார்த்த படங்களிலும் சரி, வெளியிலும் சரி, எனக்கு எந்த பிரச்னைகளும் வந்ததில்லை.


ஒவ்வொரு பெண்ணும், தன் கனவுகள், குறிக்கோள்களில் தெளிவாக இருக்க வேண்டும்; இலக்கை அடையும் வரை போராட வேண்டும். நீங்கள் உங்கள் லட்சியத்தில் உறுதியாக இருந்தால், உங்கள் கனவை, ஒருவராலும் தடுத்து நிறுத்த முடியாது. வெற்றி கிடைக்கும் வரை, மீண்டும் மீண்டும் முயற்சி செய்தால், வெற்றி நம்மை வந்து சேரும்.


நான் இந்த துறைக்கு வருவதற்கு, என் அப்பா தான் ரோல் மாடல். என் ஆசைகளுக்கு துணை நின்றார். என் அப்பா, மும்பையில், ஜவுளி பிசினஸ் செய்து வருகிறார்.


எங்களுக்கு சிறிய தொழிற்சாலையும் இருக்கிறது. என்னை போல் இன்னும் பலரும், இந்த துறைக்கு வரணும்.


உமா தேவி - திரைப்பட பாடலாசிரியர்


நெஞ்சமெல்லாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே; கண்களெல்லாம் இன்பம் கூடி கண்ணீர் ஆகுதே... என, கபாலியில், மக்கள் ரசித்த மாய நதி பாடலை எழுதினேன். பெண்களை முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என, நினைக்கும் இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் வாய்ப்பு தருகின்றனர். சமீபத்தில் வெளிவந்த அதே கண்கள் படத்தில், மூன்று பாடல்கள், மூன்று பெண் பாடல் ஆசிரியர்கள் எழுதினோம்; நான், பார்வதி, அனுராதா. இது ரொம்ப அரிதான விஷயம் சினிமாவில். இத்தனை போராட்டங்களுக்கு இடையில், கபாலி படத்தில் இயக்குனர், ரஞ்சித் வாய்ப்பு கொடுக்கவில்லை எனில், நான் வெளியே தெரிந்து இருக்க மாட்டேன்.


இப்போது, ஜோதிகா நடிக்கும் மகளிர் மட்டும் படம், நயன்தாரா நடிக்கும் அறம்; த்ரிஷா நடிக்கும், 96 படங்களில், நான் பாடல் எழுதி வருகிறேன். எல்லா காலங்களிலும் பெண்கள் போற்றப்படுவதில்லை என்று தான் சொல்வேன். பலரும் ரெண்டு மன நிலையில் இருக்கின்றனர். ஒரு சாரார் பெண்கள் வரணும், முன்னிலை படுத்தணும் என விரும்புகின்றனர். அதே சமயம், பெண்களுக்கு நெருக்கடி கொடுக்கிறவர்களும் இருக்கின்றனர். எத்தனை இறப்புகளை சமீபத்தில் நாம் பார்த்திருக்கோம், பாலியல் வல்லுறவுகள் செய்வதன் மூலமாக, பெண்கள் ஒடுக்கப்பட நினைக்கின்றனர். அவர்கள் வீட்டுக்குள் முடங்கி போற நிலைக்கு, கொண்டு வந்துவிடுகின்றனர்.


எந்த காலத்திலும் இந்த சமூகம், பெண்களுக்கு ஆதரவு தராது. வெறும், 10 சதவீத பேர் தான், பெண்களுக்கு ஆதரவாக உள்ளனர்; உண்மை இதுதான். என்னோட பாடல்கள், சமூகத்திற்கு நன்மை செய்யக்கூடிய, பெண்களுக்கு சுதந்திர உணர்வை தரக்கூடிய வகையில் தான் எழுதுவேன். பெண்கள் முன்னேற்றம் இங்கே முக்கியம். எந்த ஒரு அடக்கு முறையும், பெண்ணை ஒடுக்காது. இதை எல்லாம் மீறி தான், சாதித்து கொண்டிருக்கிறோம்; மீண்டும் மீண்டு எழுகிறோம். தன்னை எப்போதும் எல்லா இடத்திலும், பெண் நிலை நிறுத்திக் கொள்ளும் அளவுக்கு, பெண் சமூகம் வளரணும்.


புஷ்கர் காயத்ரி - இயக்குனர்


நானும், என் கணவரும் எங்கேயும் ஜோடியாக தான் செயல்படுவோம். இதுவரை இரண்டு படங்களை இயக்கியுள்ளோம். இந்த துறையில் ஏன் பெண்கள் அதிகம் வருவதில்லை என்பதே எனக்குப் புரியவில்லை. உதவி இயக்குனரா வாய்ப்பு கேட்டு பசங்க தான் வராங்க; பெண்கள் வருவதில்லை. பெண்கள் வந்தா, கண்டிப்பா நான் அவர்களுக்கு, சப்போர்ட் பண்ண விரும்புறேன்.


குடும்பம், நேரக் கட்டுப்பாடு, மற்ற சூழ்நிலை காரணமாக, இதுபோன்ற விஷயங்களில் பெண்கள் ஈடுபட மறுக்கலாம். ஆனா, குடும்பத்தில் யாரேனும், சப்போர்ட் செஞ்சா தான், பெண்களால் இங்கே ஜொலிக்க முடியும். பெண்கள் உரிமை, சுதந்திரம் என்று எத்தனை வருஷம் பேசிக்கிட்டே இருப்பது... இது நமக்கான சுதந்திரம்; நாம் தான் எடுத்துக்கணும். எடுத்த முயற்சிகளில் பின் வாங்காமல் வாழப் பழகினாலே, பாதி வெற்றி கிடைத்த மாதிரி தான்!


கலா - நடன இயக்குனர்


சினிமாத் துறையை பொறுத்தவரை, தற்சமயம் பாதுகாப்பு குறைந்து போயுள்ளது. நான் இந்த துறைக்கு வந்த புதிதில், படப்பிடிப்பு தளத்தில், இரண்டு பெண்கள் மட்டுமே இருப்போம். இப்போது, 20 ஆண்களில், 10 பேர் பெண்கள் இருக்கின்றனர். சினிமாவில் பல துறைகளில் இப்போது பெண்கள் வந்திருக்கின்றனர். இது ஒரு பக்கம் மகிழ்ச்சியை தந்தாலும், பாவனா சம்பவம், பெண்களை பயமுறுத்துவது போல இருக்கிறது. அவள் ரொம்ப தைரியமாக வெளியில் வந்து சொன்னதால், இந்த விஷயம் வெளியே தெரிந்தது. இல்லையெனில், எப்படி வெளியில் வரும்?


சில தினங்களாக சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள், புகைப்படங்கள் சினிமாத் துறைக்கு அவ்வளவு நல்லதாக இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் எப்படி வெளியே வருவர், கொஞ்சம் சங்கடம் இல்லையா... பொதுவாக பெண்கள் தைரியமானவர்கள், எதையும் கடந்து வருவர்; எத்தனை வந்தாலும் சமாளிக்கும் திறன் படைத்தவர்கள். எல்லாத் துறையும் போலவே சினிமாத் துறையும் பாதுகாப்பானது என, புதிதாக வருபவர்களுக்கு நம்பிக்கை தர வேண்டியது அவசியம். பெண்களால் முடியாதது ஒன்றும் இல்லை. எந்த வயதிலும் யாரும் சாதிக்கலாம். உங்கள் முயற்சிகளை மட்டும், கை விட்டு விடாதீர்கள்.


இஷ்ரத் காதிரி(ஏஆர் ரஹ்மான் சகோதரி) - பாடகி, இசை அமைப்பாளர்


நான் முதலில் பாடகியாக வரவே ஆசைப்பட்டேன். கர்நாடிக் படிச்சிருக்கேன். இசையை பொறுத்தவரை கடல் போன்றது... அதில் நான் வருவேன் என, எதிர்பார்க்கவில்லை. என் அண்ணன் ஏஆர்.ரஹ்மான் மற்றும் என்னோடு இருப்பவர்கள், நான் இசை அமைக்க விரும்பினர். கொஞ்சம் பயத்தோடு தான் உள்ளே வந்தேன். எல்லாவற்றுக்கும், ஒரு கால நேரம் இருக்கு. எனக்கான நேரம் இப்போது தான் வந்துள்ளது.


இது மூளை, மனது சம்பந்தப்பட்ட வேலை. சில ஆல்பங்கள் நான் பண்ணியிருக்கேன். அண்ணன் ஏ.ஆர்.ரஹ்மான் எல்லாரும் அதை கேட்டு பாராட்டினர். அப்போ கொஞ்சம் தைரியம் வந்தது. அண்ணன் என்னை விட எவ்வளவு பெரிய சீனியர். மக்கள், அவர் வேலையும், என் வேலையும் ஒப்பிடக் கூடாது. தமிழில் நான் படங்கள் பண்ண ரொம்ப ஆசை. இப்போது சில கதைகள் பேசிட்டு இருக்கேன்; விரைவில் இசை அமைப்பேன்.


தமிழில் பெண் இசையமைப்பாளர்கள் குறைவு தான். ஆனால், திறமைசாலிகளை யாருமே கன்ட்ரோல் பண்ண முடியாது. அவங்க எப்ப இருந்தாலும் வெளில வருவாங்க, தெரிவாங்க, பேசப் படுவாங்க. மற்ற துறைகளை பற்றி அவ்வளவாக எனக்கு தெரியாது. ஆனால், இசை துறையைப் பொறுத்தவரை, பெண்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கிறது. எல்லாத்துக்கும் மேல, நாம் எப்படி நடந்துக்குறோம் என்பதை பொறுத்து தான் இருக்கிறது, நாம் அடி எடுத்து வைப்பது.


இசை அமைப்பை பொறுத்தவரை, மனதை அமைதியாக வைத்திருந்தால் தான், நல்ல இசையை கொடுக்க முடியும். அதனால் முடிந்த அளவு அமைதியாக இருக்கவே ஆசைப்படுவேன். என்னோட ரோல் மாடல், என் அண்ணா தான். நிறைய இசை அமைத்து வச்சிருக்கேன். எப்போவெல்லாம் எனக்கு மனதில் நல்ல இசை தோணுகிறதோ, உடனே ரெகார்ட் பண்ணி வைப்பேன். இப்போ ஹாலிவுட் படம் ரிலீசுக்காக காத்திருக்கேன். படத்தோட, ரீ ரெக்கார்டிங் வேலை இப்போது நடக்கிறது. தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு என, எல்லா மொழிகளிலும் நான் இசையமைக்க விரும்புகிறேன்.


தன்சிகா - நடிகை


அலுவலகமாக இருந்தாலும் சரி, சினிமாத் துறையாக இருந்தாலும் சரி... நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதை வைத்துதான், நம்மை எடை போடுவர். நாம் சரியாக இருந்தால், நம்மைச் சுற்றி இருப்பவர்கள் சரியாக இருப்பர் என்பது, என் எண்ணம். இப்போது நிறைய விஷயங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது சந்தோஷமாக உள்ளது. அதே சமயம், பெண்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லாததும் வருத்தமாக உள்ளது.


பெங்களூர் சம்பவமாக இருக்கட்டும், டில்லி சம்பவமாக இருக்கட்டும், பாவனா சம்பவமாக இருக்கட்டும், சென்னையில் நடந்ததாக இருக்கட்டும்... இதெல்லாம் நம் கண்முன் அப்படியே வந்து நிற்கிறது. பெற்றோரிடம் நான் பணிவுடன் கேட்டு கொள்வது, பெண் குழந்தைகளுக்கு எப்போதும் பயத்தை காட்டாமல், அவர்கள் எண்ணத்துக்கு, தைரியத்தை புகுத்த வேண்டும்.


நாளிதழ்களில் வரும் செய்திகளை படித்து, நான் நிறைய பாதித்துள்ளேன். சினிமா என்றில்லை, சாதாரண பெண்களும் தன்னை தற்காத்து கொள்ள, ஏதேனும் ஒன்றைக் கற்று வைத்தல் அவசியம். குறைந்தது, அந்த இடத்தில் இருந்து ஓடுவதற்காவது நமக்கு தெரிய வேண்டும். பலரும் நடிகை என்ற வார்த்தை கேட்டாலே, தப்பான கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர்.


நாங்களும் மற்றவர்களை போல மனிதர்கள் தான். ஒரு நடிகையாக இதுவரை, எனக்கானக் கட்டுப்பாடு, வேலி போட்டு வைத்துள்ளேன். உங்களை காத்துக் கொள்ள உங்களுக்கும் வேலி அவசியம் என, நினைக்கிறேன். பலரும் வாங்க, நாம் புரட்சி ஏற்படுத்தலாம் எனக் கூறவில்லை. நம்மை, நாம் பாதுகாத்துக் கொள்வோம்; நம் கனவு வெற்றிப் பயணத்தை துவங்கலாம்.


கீதா குரப்பா - சவுண்ட் டிசைனர்


எனக்கு சிறு வயதில் இருந்தே சினிமா தான். நிறைய படங்களை அப்போதே பார்ப்பேன். இந்த ஆர்வமே என்னை, டெலி கம்யுனிகேஷன் சவுண்ட் அன் டிவி படிப்பை படிக்க தூண்டியது. படிப்பை முடித்த சமயம், தூர்தர்ஷன் போன்ற தொலைக்காட்சிகளின் துவக்கத்தால், ஏதேனும், டிவிகளில் வேலை கிடைக்கும் என்ற எண்ணம். அப்போது, தூர்தர்ஷன் சீரியல் தான், என் முதல் அறிமுகம். பின், அப்படியே வெளியே வந்து, முதல் படமாக கன்னட இயக்குனர், ஜி.வி.அய்யர் இயக்கிய படத்தில், வேலைப் பார்த்தேன். அந்த படத்துக்கு தேசிய விருது கிடைத்தது.


என் வேலை கிட்டத்தட்ட ஆண்களுக்கு நிகரானது. ஒரு படத்தின் துவக்கம் முதல், முடிவு வரை வசனம், பாடல், சண்டைக் காட்சிகள் என, அத்தனையும், 5.1 சவுண்ட் முடித்து, நீங்கள் தியேட்டரில் பார்க்கும் போது, சவுண்ட் எல்லாம் தெளிவாக கேட்கும் அந்த பொறுப்பு என்னுடையது. ஒரு படத்துக்கு இரவு, பகல் பார்க்காமல், 10 - 15 நாட்கள் வேலை பார்க்க வேண்டும். நான் சவுண்ட் மிக்சிங் வேலை பார்த்த படங்களில் இப்படி பல படங்கள் உள்ளன.


என் கணவர் தெலுங்கில் இசை அமைப்பாளராக இருக்கிறார். இரண்டு பேரும் இத்துறையில் இருப்பதால், எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது. தமிழ், தெலுங்கு என, 100க்கும் மேற்பட்ட படங்களில் வேலை பார்த்துள்ளேன். மற்றவர்களோடு சேர்ந்து இதுவரை, 500 படங்களில் வேலைப் பார்த்துள்ளேன்.


இத்துறையை பொறுத்தவரை, பெண்கள் இன்னும் வளரவில்லை. எவ்ளோதான் க்ரியேட்டிவா இருந்தாலும், சவுண்ட் பொறுத்தவரை ஏனோ வருவதில்லை. எல்லாத் துறையை போல இந்த துறையிலும், ஆண் ஆதிக்கம் இருக்கிறது. வாய்ப்புக்காக இங்கு போராடும் நிலை இன்னும் உள்ளது. இப்போது மீடியாவை நோக்கி பெண்கள் அதிகமாக வர துவங்கியுள்ளதால், ஆண்களும் கொஞ்சம் விட்டுக் கொடுக்க வேண்டும்.


Advertisement
தமிழக அரசியலால் காத்து வாங்கிய தியேட்டர்கள்...! - பிப்., மாத படங்கள்... ஓர் பார்வைதமிழக அரசியலால் காத்து வாங்கிய ... வெள்ளித்திரையின் விடிவெள்ளிகள்! - மகளிர் தின ஸ்பெஷல் வெள்ளித்திரையின் விடிவெள்ளிகள்! - ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film RK Nagar
  • ஆர்.கே.நகர்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : சனா அல்தாப்
  • இயக்குனர் :சரவண ராஜன்
  Tamil New Film Jippsy
  • ஜிப்ஸி
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : நடாஷா சிங்
  • இயக்குனர் :ராஜூ முருகன்
  Tamil New Film Tik Tik Tik
  • டிக் டிக் டிக்
  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : நிவேதா பெத்ராஜ்
  • இயக்குனர் :சக்தி சவுந்தர்ராஜன்
  Tamil New Film Chennai 2 Bangkok

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in