இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
2016ம் ஆண்டு 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்தது. இந்த 2017ம் ஆண்டிலும் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை 200-ஐ கடக்குமா என்பது ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்திலேயே ஒரு சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டது.
வழக்கமாக பொங்கலுக்கு குறைந்த பட்சம் 5 படங்களாவது வெளிவருவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டில் இரண்டே இரண்டு படங்கள் மட்டுமே வெளிவந்தது திரையுலகத்திற்கே அதிர்ச்சியைத் தரக் கூடிய விஷயமாகும். அது மட்டுமல்ல ஜனவரி மாதத்தில் 10க்கும் குறைவான படங்களே வெளிவந்தது மற்றுமொரு அதிர்ச்சியைத் தந்திருக்கும்.
பொங்கலுக்குப் பிறகு ஜல்லிக்கட்டுப் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், பொங்கலுக்கு அடுத்து படங்களை வெளியிட உகந்த நாளான குடியரசு தினத்தன்று ஒரே ஒரு படம் மட்டுமே வெளிவந்தது.
பல படங்களின் வெளியீடுகளை பிப்ரவரி மாதத்திற்குத் தள்ளி வைத்தார்கள். பிப்ரவரி மாத மத்தியிலிருந்தே முழு ஆண்டுத் தேர்வுக்கான நேரம் என்பதால் இனி வரும் நாட்களிலும் அதிகப்படியான படங்களின் வெளியீடு இருக்காது. மார்ச் மாதத்தில் கேட்கவே வேண்டாம், தமிழ்நாடடே தேர்வு ஜுரத்தில் இருக்கும். ஏப்ரல் மாதத்தில் தான் அதிகமான படங்களின் வெளியீட்டை எதிர்பார்க்க முடியும்.
ஜனவரி மாதம் வெளிவந்த குறைவான படங்களின் எண்ணிக்கையைப் போலவே வெற்றி விகிதமும் மிக மிகக் குறைவாகவே இருந்தது.
ஜனவரி 6ம் தேதிதான் 2017ம் ஆண்டின் முதல் வெள்ளிக்கிழமையாக இருந்தது. அன்றைய தினம் “பச்சைக்கிளி பரிமளா, பெய்யெனப் பெய்யும் குருதி, சூரத் தேங்காய், உன்னை தொட்டு கொல்ல வா” ஆகிய நான்கு படங்கள் வெளிவந்தன. இந்த நான்கு படங்களும் நான்கு காட்சிகளாகவாவது ஓடியிருக்குமா என்பது சந்தேகமே. 2017ம் ஆண்டின் முதல் வெள்ளிக்கிழமையே இப்படி அமைந்துவிட்டதே என குறை சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியாது. 2017-லாவது இப்படிப்பட்ட படங்கள் வெளிவருவது குறைந்தால் அது தமிழ் சினிமாவுக்கும் நல்லது.
ஜனவரி 12ம் தேதி விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த 'பைரவா' படம் வெளியானது. பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே படத்தை வெளியிட்டார்கள். இரண்டு நாள் முன்னதாக வந்தால் முதல் நான்கைந்து நாட்கள் அதிக வசூலைப் பெற்றுவிடலாம் என்பதுதான் அதற்குக் காரணம். அவர்கள் நினைத்தது போலவே முதல் நான்கைந்து நாட்கள் இப்படத்தின் வசூல் சிறப்பாகவே இருந்தது. அதற்கடுத்து ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழ்நாடு முழுவதும் பெரிய அளவில் இருந்ததால் அது படத்தின் வசூலை வெகுவாகப் பாதித்தது. அதனால் எதிர்பார்த்த வசூலை இந்தப் படம் பெறவில்லை என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் நடித்து இதற்கு முன் வெளிவந்த 'தெறி' படத்தை வெளியான சில நாட்களிலேயே '100 கோடி வசூல்' என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், 'பைரவா' படத்திற்கான சத்தம் சீக்கிரமே அடங்கிப் போனது ஆச்சரியமான ஒன்று.
ஜனவரி 14 பொங்கல் தினத்தன்று பார்த்திபன் இயக்கி நடித்த 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படம் மட்டுமே வெளியானது. 'பைரவா' படத்தைக் கிண்டலடித்து விளம்பரப்படுத்தி எப்படியாவது தன் படத்திற்கு ரசிகர்களை ஈர்க்கலாம் என்று நினைத்த பார்த்திபனின் எண்ணம் ஈடேறவில்லை. அவருடைய முந்தைய படமான 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்திற்குக் கிடைத்த வரவேற்பு இந்தப் படத்திற்குக் கிடைக்கவில்லை.
ஜனவரி 20ம் தேதி 'சிவப்பு எனக்கு பிடிக்கும்' படம் வெளியானது. 2014ம் ஆண்டே வெளிவந்திருக்க வேண்டிய படம். தள்ளித் தள்ளி கடந்த மாதம் வெளிவந்தது. இப்படி ஒரு படம் வந்தது என்பதே திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் கவனத்திற்குக் கூட வராமல் போய்விட்டது.
ஜனவரி 26ம் தேதி 'அதே கண்கள்' படம் வெளிவந்தது. அறிமுக இயக்குனர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் வந்த இந்தப் படம் போட்டிக்கு வேறு எந்த படமும் இல்லாததால் இந்தப் படம் ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்றது. சிறிய பட்ஜெட் படமாக இருக்கும் பட்சத்தில் இந்தப் படம் நல்ல லாபத்தைக் கொடுத்திருக்கும். படத்தைத் தயாரித்த நிறுவனமே படம் குறித்து தனது திருப்தியை நேற்று வெளியிட்டார்கள்.
ஜனவரி மாதத்தில் 8 படங்கள் மட்டுமே வெளிவந்தது. அந்த 8 படங்களில் 'பைரவா, அதே கண்கள்' ஆகிய படங்கள் மட்டுமே வெற்றிக் கோட்டைத் தொட்ட நிலையில் உள்ளன.
2017ன் முதல் மாதமே கொஞ்சம் மோசமான மாதமாக அமைந்தது துரதிர்ஷ்டமே, அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அது இனி வரும் மாதங்களில் நடக்காது என எதிர்பார்ப்போம்.
2017 ஜனவரி மாதம் வெளிவந்த திரைப்படங்கள்...
ஜனவரி 6
பச்சைக்கிளி பரிமளா
பெய்யெனப் பெய்யும் குருதி
சூரத் தேங்காய்
உன்னை தொட்டு கொல்லவா
ஜனவரி 12
பைரவா
ஜனவரி 14
கோடிட்ட இடங்களை நிரப்புக
ஜனவரி 20
சிவப்பு எனக்குப் பிடிக்கும்
ஜனவரி 26
அதே கண்கள்