Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

கடந்து போக முடியாத காமெடியன் கவுண்டமணி - பிறந்தநாள் ஸ்பெஷல்

25 மே, 2016 - 14:03 IST
எழுத்தின் அளவு:
Happy-Birthday-to-Goundamani

தமிழ்சினிமாவின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் கடந்த காலங்களில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் வந்துபோயிருக்கிறார்கள் என்பது புரியும். அவர்களில் கவுண்டமணியும் ஒருவர் என்று கடந்துபோனால் வரலாறு நம்மை மன்னிக்காது. காரணம்... தமிழ்சினிமாவில் கவுண்டமணி தன்னிகரற்ற நகைச்சுவை நடிகர். அவர் நிகழ்த்திய சாதனைகள் அசாத்தியமானது.


பாமர மக்களுக்கு புரிபடாத பாஷைகளில் மேல்தட்டு வர்க்கத்தினரால் மட்டுமே ரசிக்கப்பட்டு வந்த தமிழ் சினிமா நகைச்சுவையை மாற்றி எல்லா தரப்பு மக்களும் ரசிக்கும்படி வெகுமக்களுக்கான விஷயமாக மாற்றியதில் கவுண்டமணிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.


கவுண்டமணிக்கு இன்று (மே 25) 77 ஆவது பிறந்தநாள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் கண்ணம்பாளையம் என்ற சிற்றூரில் மே 25 - ல் பிறந்தவர் கவுண்டமணி. அவரது நிஜப்பெயர்... சுப்ரமணி கருப்பையா. நாடக நடிகராக தன் கலைப்பயணத்தைத் தொடங்கியவர், தேனாம்பேட்டையில் தங்கி நாடகங்களில் நடித்துக் கொண்டே சினிமா வாய்ப்பும் தேடி வந்தார். நாடகங்களில் நடிக்கும்போது எதிரில் உள்ள நடிகர் பேசும் வசனங்களுக்கு உடனுக்குடன் பதிலடி - அதாவது கவுண்ட்டர் - கொடுப்பாராம் கவுண்டமணி. அதன் காரணமாகவே சுப்ரமணி கருப்பையாவின் பெயர் கவுண்டமணி ஆனது.


நீண்ட போராட்டத்துக்குப் பிறகு 1976 ஆம் வருடம் கவுண்டமணியாக தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். 26 வயது முதலே திரைப்படங்களில் நடித்து வந்த கவுண்டமணி, ஆரம்பத்தில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்தவர்தான். அதன்பிறகுதான் மிகப்பெரிய காமெடியனாக உருவெடுத்தார் கவுண்டமணி.


சினிமாவில் நடிக்க வந்த துவக்கக் காலங்களில் தனியாகவே நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் செந்திலுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்து, இருவரும் மாபெரும் வெற்றி கண்டனர். இந்த ஜோடி இரண்டு தலைமுறை ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்கள்.


கவுண்டமணி - செந்தில் ஜோடியின் மிகப் புகழ்பெற்ற நகைச்சுவை கரகாட்டக்காரனில் வந்த வாழைப்பழம் காமெடி. 1980, 1990 களில் செந்திலுடன் சேர்ந்து கவுண்டமணி செய்த காமெடிகளை எக்காலத்திலும் எவராலும் மிஞ்ச முடியாது. இந்த ஜோடி, ஹாலிவுட் நகைச்சுவை ஜோடியான லாரல் மற்றும் ஹார்டிக்கு இணையாக பாராட்டப்பட்டது.


கவுண்டமணி நம்பர் ஒன் காமெடியனாக இருந்தபோது முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக முக்கியத்துவம் பெற்றிருந்தார். ஹீரோக்கள் பஞ்ச் டயலாக் பேசிய காலம்போய் காமெடியனான கவுண்டமணி பேசிய பஞ்ச் டயலாக்குகள் காலத்தால் அழியாமல் இன்னும் ரசிகர்களால் உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சூரியன் திரைப்படத்தில் அவர் கூறிய அரசியலில்லே இதெல்லாம் சகஜமப்பா என்ற வசனம் இன்றும் கூட மிகவும் பிரபலம்.


- திருபுகழ் பாட பாட வாய் மணக்கும் அப்புறம் ஏன் நாய பல்லு விலக்குற? அதையே பாடு..


- ஏன்டா எப்ப பாரு எரும சானிய மூஞ்சுல அப்புன மாதிரியே திரியுற..?


- நீ குடுக்குற நாலணாவுக்கு வடைல நூல் தான்டா வரும்... வேட்டி சட்ட பாவாட எல்லாமா வரும்?


- அதென்ன அங்க வெள்ளையா ஏதோ இருக்கு...


- ஏன்யா நீ சோத்த வாழ்க்கையில பாத்ததே இல்லையா?


- துண்டு போட்டவன எல்லாம் புடிச்சீங்கன்னா குண்டு போட்டவனையும் புடிச்சிரலாம்.


- எவனோ சொந்தக்காரன் ஒருத்தன் சோத்துக்கு வந்துட்டான்டா. வண்டிய திருப்புடா வண்டிய திருப்புடா..


- உனக்கு எந்த மாதிரி ஜாக்கெட் வேணும்? எனக்கு குஷ்பு மாதிரியே வேணும்.. குஷ்புகிட்டயே எதாவது பழசு இருக்கும் வாங்கிப் போட்டுக்கோ..


- புளிச்சோத்துல முட்டைய வச்சு ப்ரியாணின்னு தர்றியாடா.!?


என காலத்தால் அழிக்க முடியாத கவுண்டமணியின் வசனங்களை பட்டியல்போட்டுக் கொண்டே போகலாம். கவுண்டமணியின் கொங்கு தமிழ் பேச்சும் நக்கல் கலந்த வசன உச்சரிப்பும் எவரையும் எடுத்தெறிந்து பேசும் பாவனையும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றன. இவர் சுமார் 750 திரைப்படங்களில் நடித்துள்ளார். அவற்றில் சுமார் 10 திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். கவுண்டமணி கதாநாயகனாக நடித்த பணம் பத்தும் செய்யும் என்ற படம் மிகப்பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்தது.


ஹீரோவாக மட்டுமல்ல வில்லன், குணசித்திர நடிகராகவும் நடித்துள்ள கவுண்டமணிக்கு கடந்த சில வருடங்களாக அவ்வளவாக பட வாய்ப்புகள் இல்லை. போதாக்குறைக்கு சக்கரை வியாதி வேறு. எனவே கடந்த சில வருட காலமாக தமிழ்த்திரையில் கவுண்டமணியை காண முடியவில்லை.


49ஓ படத்தின் மூலம் மீண்டும் அடுத்த ரவுண்ட்டுக்குத் தயாரான கவுண்டமணி தற்போதுவாய்மை, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமிழ்சினிமாவில் சுமார் 40 ஆண்டுகாலமாக இயங்கி வரும் கவுண்டமணி, நடிக்க வந்த நாள் முதல் எந்தவொரு பத்திரிகைக்கு பேட்டி தந்ததில்லை. பேட்டி என்று யார் வந்தாலும் நோ சொல்லிவிடுவார். அதே சமயம் பத்திரிகையாளர்களிடம் நட்புமுறையில் மணிக்கணக்கில் பேசும் வழக்கம் கொண்டவர் கவுண்டமணி.


அதேபோல் பிறந்தநாள் கொண்டாட்டமும் அவருக்கு உடன்பாடில்லாத ஒன்று. பல படங்களில் அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை கேலி செய்திருக்கிறார். 'என்னய்யா விளம்பரம்.. அந்த சினிமாக்காரங்கதான் அப்படி செய்றாங்க, தனக்குத் தானே போஸ்டர் அடிச்சு பிறந்தநாள் கொண்டாடிக்கிறாங்க' - இது கவுண்டமணியின் வசனம். அதை வாழ்க்கையிலும் மீறாதவர் கவுண்டமணி.


கடந்த வருடம் பிறந்தநாள் அன்று, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் கவுண்டமணி. பிறந்தநாள் அன்று எந்த நடிகராவது படப்பிடிப்பில் கலந்து கொண்டால் பெரிய சைஸ் கேக் வாங்கி வெட்டுவதுதான் கோடம்பாக்கத்தின் வழக்கம். அதன்படி, கவுண்டமணியின் பிறந்தநாளுக்கு கேக் வாங்க தயாராகி இருக்கிறார்கள் படக்குழுவினர்.


விஷயம் அறிந்ததும், 'என்னது கேக்கா? அந்த சமாச்சாரமெல்லாம் நமக்கு எப்போதும் கிடையாது' என்று கேக் வெட்ட மறுத்துவிட்டார் கவுண்டமணி. இன்றைய ஆண்ட்ராய்டு உலகில், மொபைல் ரிங் டோனில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் சினிமா டயலாக்குகள் கவுண்டமணியின் காமெடி வசனங்கள்தான். அந்த அளவிற்கு இப்போது இருக்கும் தலைமுறையினரும் கூட கவுண்டமணியின் காமெடியை வெகுவாக ரசிக்கிறார்கள்.


முன்னணி ஹீரோக்களின் பிறந்தநாள் என்றால் மட்டுமே ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்துக்களை வாரிக் குவிப்பார்கள். முன்னணி கதாநாயக நடிகர்களின் பிறந்தநாளின்போது ரசிகர்களால் ட்விட்டரில் ட்ரெண்ட் உருவாக்கப்படுவது தற்போது வழக்கத்திலும் உள்ளது. முன்னணி ஹீரோக்கள் சிலர் ட்விட்டரில் ட்ரண்டு உருவாக்க சிலருக்கு பணம் கொடுத்து செயற்கையாக டிரெண்டை உருவாக்கி வருகின்றனர்.


கடந்த வருடம் கவுண்டமணியின் பிறந்தநாள் தினத்தில் #HappyBirthdayGoundamani என ட்ரெண்ட் உருவானது. முதல்முறையாக காமெடியன் ஒருவரின் பெயர் இந்திய அளவில் இடம்பிடித்திருக்கிறதென்றால் அது கவுண்டமணிக்காகத்தான் இருக்கும்.


1977 முதல் தற்போதுவரை தனது டைமிங் காமெடியால் தமிழக மக்களை சிரிக்க வைத்து வரும் கவுண்டமணிக்கு இன்று தனது 77-வது பிறந்தநாள். கடந்த ஆண்டைப்போலவே, இந்த ஆண்டும் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் கவுண்டமணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதைதொடர்ந்து #HBDGoundamani எனும் ஹேஷ் டேக் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in