Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

நான் பழி வாங்கும் எண்ணம் கொண்டவன் அல்ல: நடிகர் அரவிந்தசாமி பேட்டி

03 செப், 2015 - 01:35 IST
எழுத்தின் அளவு:
Aravind-swamy-interview-to-dinamalar

ரோஜா, பம்பாய் என்று மணிரத்தினம் படங்களில், ஆசை நாயகனாக ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் இடம் பிடித்தவர் நடிகர் அரவிந்தசாமி. நீண்ட இடைவெளிக்கு பின், தற்போது வெற்றிகரமாக பேசப்படும்,தனி ஒருவன் படத்தில், நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தாலும், திரையரங்குகளில் ரசிகர்கள் அரவிந்தசாமியின் நடிப்பை கொண்டாடுகின்றனர்.

தினமலர் நாளிதழுக்காக அவர் அளித்த சிறப்பு பேட்டி:

*அழகான,சாக்லெட் ஹீரோ திடீரென வில்லனா அவதாரம் எடுத்து, சித்தார்த் அபிமன்யு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் மீண்டும் வந்து அமர்ந்த உங்களின், தனி ஒருவன் பட அனுபவம் பற்றி சொல்லுங்க?
ரொம்ப நாளா எனக்கு ஒரு ஆசை; வழக்கமான வில்லன் என்று இல்லாமல், நெகட்டிவ் ரோல் பண்ணணும். ஒரு நல்லவன் நல்லவனா இருந்து ஏன் கெட்டவன் ஆகிறான். இந்த மாதிரி ரோலில் நடித்து, அதில் நான் நல்ல பெயர் எடுக்கணும். இந்த கேரக்டரையும் நல்லா பண்ணியிருக்கேன் என சொல்ல வேண்டும். படம் பார்த்து வெளியில் வரும்போதும், என்னை பற்றி பேச வேண்டும் என நினைக்கிறேன். இது எல்லாம், தனி ஒருவன் படத்தில் அமைந்தது சந்தோஷம். கூடவே ஒரு,ஷாக். தியேட்டரில் என் நடிப்பை பார்த்து சந்தோஷப்படுகின்றனர்.

*இந்த,கேரக்டர் எடுபடும் என எப்படி முடிவு செய்து நடித்தீர்கள்?
ஹீரோ, வில்லன் இப்படி எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. கதை என்பது ரசிப்பது போல் இருக்க வேண்டும். நாம் நடிக்க வாய்ப்பு இருக்க வேண்டும். சும்மா, வில்லன் மாதிரி வந்து அடி வாங்கிட்டு, அப்படியே போய்விட கூடாது.அதேசமயம், நான்தான் ஜெயிக்க வேண்டும், பெரிய,பில்டப் எனக்கு இருக்க வேண்டும் என விரும்ப மாட்டேன். அந்த, கேரக்டரை மக்கள் விரும்ப வேண்டும். தியேட்டரில் இருந்து மக்கள் வரும்போதும் ரசிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ராஜா, கதை சொல்லும்போது, என் கேரக்டர் பற்றி விளக்கிச் சொன்னார். என்னால் எவ்வளவு சிறப்பா நடிக்க முடியுமோ, அதை, என்ஜாய் பண்ணி நடிச்சிருக்கேன்.

*நெகட்டிவ் கேரக்டர் என, இயக்குனர் சொன்னபோதே,ஓகே சொல்லி விட்டீர்களா? யோசித்து ஒப்புக் கொண்டீர்களா?
ராஜா முதல் முறை கதை சொல்லும் போதே, வில்லனை மையமா வைத்து படம் எடுக்க ஆசைப்பட்டார். அவர் கதை சொன்ன விதத்தில், அவரை நம்பினேன். அந்த,கேரக்டர் மேல் அவருக்கு பெரிய ஆர்வம் இருந்தது. ரொம்ப ரசித்து சொன்னார். இவ்வளவு சொல்லும்போது, தப்பாகாது என்று நம்பி ஒப்புக் கொண்டேன்.

*சித்தார்த் அபிமன்யு - அரவிந்த சாமி, கொஞ்சமாவது தொடர்பு இருக்கிறதா, நிஜ வாழ்க்கையில்?
கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை. நான் அவ்வளவு பழிவாங்கும் எண்ணம் உடையவன் இல்லை. ஒரு புதிய அனுபவம். நான் வேற; இந்த நடிப்பு வேற. பல விஷயங்கள் எனக்கு இதில் தெரியாது.

*தம்பி ராமையா போல் ரொம்ப வெகுளித்தனமான அப்பா, உங்க அப்பாவை எங்காவது நினைவுப்படுத்தியதா?
என் அப்பா, என்னை விட நுாறு மடங்கு திறமைசாலி, புத்திசாலி. தஞ்சாவூர் பக்கத்தில், மெலட்டூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். அவரது, 16வது வயதில் வீட்டில் இடம் போதவில்லை என்ற காரணம் சொல்லிவிட்டு கோல்கட்டா போய்விட்டார்.அங்கு ரொம்ப கஷ்டப்பட்டு, பல வேலைகள் பார்த்திருக்கார். இந்திய சுதந்திரத்திற்கு போராடியவர்களுக்கு எல்லாம் கூட இருந்து உதவி செய்திருக்கார். நான் செய்வதெல்லாம், ஒரு சதவீதம் கூட இல்லை. அம்மாவும் தஞ்சாவூர் தான்; பரதநாட்டிய டான்சர். அவங்க, இரண்டு பேரும் தான் என் பலம்.

*நீங்க கற்றுக்கொண்ட முதல் வேலை என்ன?
சின்ன கதை இருக்கு இதில். அப்பா கஷ்டப்பட்டு வளர்ந்ததால், நானும் அந்த கஷ்டத்தை உணர்ந்து வாழ ஆசைப்பட்டார். காரில், பள்ளி கொண்டு வந்து விட்டனர், எட்டாவது படிக்கும் போது, பஸ்சில் போக சொல்லி பழக்கினார். கல்லுாரி போகும் போது, ஒரு பைக் வாங்கி கொடுத்தார்.கல்லுாரி முடித்த போது, அப்பா, திருச்சியில் சிறிய தொழிற்சாலை நடத்தி வந்தார். அங்க அனுப்பி வைத்து, எனக்கு முதன் முதலில், இரண்டு மாதம்,வெல்டிங் வேலையைச் செய்ய கற்றுக் கொடுத்தார். ஏசி வசதி, கார் வசதி எல்லாம் இருந்தும், ஆயிரம் பேர் வேலை பார்த்த அந்த இடத்தில், நானும் ஒரு தொழிலாளி போல என்னை உணர வைத்தார்.சமூக வாழ்வியலை நான் தெரிந்து கொள்ளவும், பந்தா பகட்டு இல்லாமல் மக்களோடு மக்களாக வாழ பழகச் செய்தார்.

டாக்டர் ஆக முடியலயே என்ற வருத்தம் இப்பவும் இருக்கா?




ஆரம்பத்தில் இருந்தது. அதன்பிறகு, பிஸியான நடிகர் ஆனபோது, தொழில்முறை மாறிப்போயிருச்சி. என்னோட 20 வயதில தளபதி படம் வந்தது. அப்பாவுக்கு படிக்கணும்னு விருப்பம். 1, 2 படம் பண்ணிட்டு வந்துடுறேன்னு சொல்லிட்டு படத்துக்கு போயிட்டேன். ரோஜா படம் முடித்தபிறகு, அமெரிக்கால ஸ்காலர்ஷிப்ல படிக்க வாய்ப்பு கிடைத்தது. அங்கே போக சொல்லிட்டார். ரோஜா பட ரிலீஸ்ல கூட நான் இந்தியாவில் இல்லை. அங்க படிச்சிட்டு இருக்கும் சமயத்தில, அப்பா, அம்மா 2 பேருக்கும் உடம்பு சரியில்லை. 1993ம் ஆண்டு இறந்திட்டாங்க. எனக்கு ஒண்ணும் புரியல. தவிச்சி போயிட்டேன். ஆபிஸ் போகமுடியல, தனிமையாக்கப்பட்டேன். அப்ப தான், மணி சார், வா பாம்பே படம் பண்ணலாம்னு கூப்பிட்டு போனார். மனசு சரியில்லாம இருந்த பாதி நாட்கள் பாம்பே பட சூட்டிங்கில் தான் இருந்தேன். தொடர்ந்து நடிப்பு, பிஸினஸ் என்று உள்நாடு, வெளிநாடு என்று என்று கேரியர் என்னென்னவோ மாறியே போயிடுச்சு. இப்போ, சந்தோஷமா தான் இருக்கேன். அடுத்து என்ன பண்றீங்க சார்னு கேட்குறாங்க. இப்ப என் ஆபிஸ் போறேன்னு சொல்லிட்டு வர்றேன்.



*ரஜினியுடன்,தளபதி படத்தில் நடித்துள்ளீர்கள். அவர் இப்போது நடிக்க உள்ள,கபாலி படத்தில் வில்லன் மாதிரி, ஒரு ரோலில் நடிக்க அழைத்தால் நடிப்பீர்களா?
இதுவரை என்னிடம் யாரும் அப்படி கேட்டு வரவில்லை. அத்துடன், இனி நான்,நெகட்டிவ் ரோலில் நடிக்க அவ்வளவா விரும்பவில்லை. திரும்ப வேற எதாவது முயற்சி எடுப்பேனே தவிர,நெகட்டிவ் ரோலில் நடிக்க ஆசை இல்லை.

*மணிரத்னம் படங்களில், ரோஜா, பம்பாய் எது மறக்க முடியாத படம்?

ரொம்ப கஷ்டமான கேள்வி இது. என் பொண்ணை பிடிக்குமா; பையனை பிடிக்குமா என்பது போல் உள்ளது. இரண்டுமே என் மனதை விட்டு அகலாமல் உள்ளன. இந்த மாதிரி படங்கள் நடிகர்களுக்கு அமைவது அபூர்வம் என சொல்வேன்.

*எப்போதும் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளீர்கள்; உங்களை பிடிப்பதே கஷ்டமாக உள்ளதே?
நான், போனில் அதிகம் பேசும் பழக்கம் இல்லை. நிறைய நேரம் போனை,ஆப் செய்து வைத்து இருப்பேன். கதை, கதையா பேசும் பழக்கம் இல்லை. ஆனால்,தனி ஒருவன் பட வெற்றிக்கு பிறகு நிறைய தொலைபேசி அழைப்புகள் வருகிறது. பாராட்டுதல், ரசிகர்களின் உற்சாகம், எனக்கு பெரிய மகிழ்வை, மனநிறைவை கொடுத்துள்ளது. முடிந்தவரை எல்லாருக்கும் பதில் சொல்ல பழகுகிறேன்.

*உங்க மனைவி, குடும்ப பிரச்னை, உங்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி இருக்கா?
கேமரா தாண்டி வெளியில வந்து விட்டால், எல்லாருக்குமே குடும்ப வாழ்க்கை ஒன்றாக தான் உள்ளது. சாதாரண மனிதர்களை போல தான். சூழ்நிலைக்கு தகுந்தார் போல் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒருவகையில் சிறு, சிறு பிரச்னைகள் உண்டு. அது எனக்கும் உண்டு; நெருக்கடியில் இருந்திருக்கேன்.நான்கு ஆண்டுகளுக்கு முன் என் பள்ளித் தோழி அபர்ணா முகர்ஜியை (வழக்கறிஞர்) திருமணம் செய்த பிறகு, கொஞ்சம், ரிலாக்ஸ் ஆகியிருக்கேன். எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார்; மீண்டும் பழைய உற்சாகத்திற்கு திரும்பி உள்ளேன்.

*சென்னையில், சுதந்திரமாக வெளியில் போக முடிகிறதா?
எந்த, இமேஜ்ம் இல்லாமல், சென்னையில்,ஷாப்பிங் போகிறேன். என், இரண்டு குழந்தைகளுடன் எல்லா இடங்களுக்கும் போய் வருகிறேன். அது எனக்கு எப்போதும் பிரச்னையாக இருந்தது இல்லை.

*மணிரத்னம் பற்றி?
என் பள்ளி அவர் தான். அவர் கூட நிறைய நேரம் செலவு செய்வேன். எல்லோரும் நான் அமைதியானவன் என கூறுவர். மணிரத்னம் கூட இருக்கும்போது, அவர், அதிகம் பேசவே மாட்டார். நான் தான் மனதில் இருக்கும் எல்லாத்தையும் அவரிடம் ரொம்ப அதிகமாகவே பேசியிருக்கேன், பேசுவேன். என்னிடம் அவர் கூறியது, நிறைய பரீட்சார்த்த முயற்சி எடு; பயப்படாதே; புதுசு புதுசா செய். முடிந்தவரை அதை பின் தொடர்கிறேன். அப்படி எடுத்த ஒரு முயற்சி தான் சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரம்.

*சினிமாவில் இப்போதுள்ள மாற்றங்கள்?
முன்பு எப்படி படம் எடுக்க வேண்டும் என யோசிப்பார்கள். ஆனால், இப்போது எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் என்ற சூழல் உள்ளது. நிறைய இளைஞர்கள் துணிச்சலோடு, புது புது சிந்தனையோட வருகின்றனர்.எப்படி படம் எடுப்பது என்று இணையதளங்களில் விளக்கம் கிடைக்கிறது. இப்போது படிக்கும்போதே படம் எடுக்கின்றனர். இன்னும் ஒருபடி மேலே போய், மொபைல் போனில், சிறு படம் ஒன்று, அவங்க மனதில் நினைச்சதை எடுத்திட வாய்ப்பு உள்ளது. இப்போது,டெக்னாலஜி நிறைய வளர்ந்துள்ளது.ஒரு சில கேமராக்களில் எங்க, எப்படி நிற்க வேண்டும் என்பது வரை சொல்லி விடுவது அதிசயம்தானே. என்னிடம், அட்வைஸ் கேட்கும் கல்லுாரி மாணவர்களுக்கு, நிறைய படிங்க; நிறைய பார்த்து தெரிஞ்சுகிட்டு, உங்களை தயார்படுத்திக்கங்க... என்று சொல்லியிருக்கேன்.

*எப்போது படம் இயக்க போறீங்க; தயாரிப்பில் ஆர்வம் உள்ளதா?
தயாரிப்பு எனக்கு தெரியாது; ரொம்ப கஷ்டம். ஆனால், கிடைத்த நேரத்தில், ஒரு கதை தயார் செய்து வைத்துள்ளேன். அழகான காதல் கதையா வந்துள்ளது. நமக்கு அதுதானே வரும். எப்ப படம் இயக்குவேன் என தெரியவில்லை. கொஞ்சம் நேரம் எடுக்கும்; படம் இயக்க ஆசை தான்.

*உங்க அடுத்த திட்டம்?
தனி ஒருவன் படத்துக்குப் பின், இந்தியில், டியர் டாட் படத்தில் நடித்தேன். படம் முடிந்து எடிட்டிங் வேலைகள் நடக்கிறது. மிகவும் முக்கியமான கதை இந்த படம். என் சொந்த கம்பெனி வேலை, 6 மாதத்திற்கு பார்க்க வேண்டும். நேரம் கிடைக்கும்போது, கதை கேட்க நேரம் ஒதுக்குவேன்.

*எப்படி சினிமா, தொழில் இரண்டையும் குளறுபடி ஆகாமல் பார்க்க முடியும்?
ஐ.டி., தொடர்பான கம்பெனி நடத்துகிறேன். இந்தியா முழுவதும் என் அலுவலகங்கள் உள்ளன. 5,000 பேர் வேலை பார்க்கின்றனர். அவர்களை அப்படியே விட்டு விட்டு வந்துவிட முடியாது. அதேபோல், என் சிறிய வயதில் சினிமா பற்றி புரியவில்லை; நடிப்பு பற்றி தெரியவில்லை; மக்கள் என்மேல் வைத்துள்ள அன்பை தெரிந்து கொள்ளாமல் போய் விட்டேன். அதனால் நடிப்பு, தொழில் இரண்டையும், எவ்வளவு சிறப்பா, நாகரிகமா செய்ய முடியுமோ, அந்த அளவு சிறப்பா செய்ய முயற்சி எடுக்கிறேன்; அந்த நம்பிக்கையும் இருக்கு.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in