Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

சினிமாவில் காதல் வியாபாரம்! - ஸ்பெஷல் ஸ்டோரி!

15 ஜூன், 2015 - 13:07 IST
எழுத்தின் அளவு:
Love-as-business-in-cinema

காதல் என்பது தமிழ் மொழியில் ஒரு வார்த்தை. கவிஞர்களுக்கு ஒரு பாடுபொருள், கதைகளுக்கு கரு. ஆனால் சினிமாக்காரர்களுக்கு அது ஒரு வியாபாரம் மூலப் பொருள். உலகெங்கும் காதல் கதைகள் இருந்தாலும் தமிழ்ச்சினிமாவில் காதல் என்பது அன்று முதல் இன்றுவரை குறைந்த பட்ச உத்திரவாதம் தரும் வியாபாரச் சரக்காக இருக்கிறது.


மூழ்காத டைட்டானிக் காதல்!


கப்பலே மூழ்கினாலும் மூழ்காத காதலைக் காட்டிய டைட்டானிக் போன்ற காதல் கதைகள் ஆங்கிலப் படங்களில் எப்போதாவது தான் வருகின்றன. இந்தியிலும் வெவ்வேறு கதைத் தளங்களுக்கு சினிமா பயணிக்க ஆரம்பித்துவிட்டது. தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே போன்ற நல்ல காதல் கதைகள் அவ்வப்போது கொண்டாடப்பட்டாலும். குடும்ப அமைப்பை நட்பை,குழந்தைகளைக் கொண்டாடும் படங்களும் கணிசமாக வருகின்றன.


மலையாளத்தில் காதல் கதைகள் இரண்டாம் மூன்றாம் பட்சம்தான். அவர்கள் வித்தியாசமான கருப்பொருள் தேடி மிகவும் சிந்திக்கிறார்கள். ஓர் ஆழ்துளை கிணற்றுக்காகத் தோண்டிய குழியில் ஒரு சிறுமி விழுந்ததை மையமாக்கிக் கூட மலையாளத்தில் முழுப்படம் எடுக்க முடியும். வெற்றி பெற வைக்கமுடியும். ஆனால் தமிழில் எடுக்க முடியுமா?


வியாபாரத்துக்காக காதல் கதைகள் எடுக்கப்பட்டாலும் தமிழில் காதலை மையப்படுத்தி எத்தனையோ படங்கள் வந்துள்ளன. அவற்றை முதல் 10, அதாவது டாப் டென் என்று கூட எதையும் கூற முடியாது. முதல் 100 என்று கூட எதையும் கூற முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளன. படங்களில் ஒவ்வொரு கதையும் ஒவ்வொருவிதத்தில் காதலைச் சொல்லியுள்ளது.


சப்பாணி முதல் காதல் கண்மணி வரை


உதாரணத்துக்கு அப்பிராணி சப்பாணியின் மீது மயிலு கொண்ட காதலைச்சொன்ன பதினாறு வயதினிலே, முதல் பின்னர் அதே பாணியில் வந்த படம் ஆவாரம்பூ வரை பல உள்ளன. சப்பாணிதான் பின்னர் சர்க்கரையானான்.



ஆச்சாரங்களை அறுத்து ஜெயித்த அலைகள் ஒய்வதில்லை ஒரு ரகம் என்றால் கல்லூரியில் ஒருவரை ஒருவர் தொடாமல் பேசாமல் கதை சொன்ன ஒருதலைராகம் இன்னொருரகம்.


ஒருவனின் மனைவி இன்னொருவனுக்கு காதலியாக இருக்க முடியாது என்று கூறிய அந்த ஏழு நாட்கள், வயதான பின்னும் காதல் வரும் என்று கூறிய முதல் மரியாதை, ஒரு கலைஞன் மீது கொண்ட பேரபிமானம் காதலாக மாறும் என்று கூறிய சிந்துபைரவி, காதல் என்பது அனுசரனையில் பிறப்பது என்று கூறிய கேளடி கண்மணி, தகுதியுள்ள நல்லவிதமான காதலர்களை குடும்பமே ஆதரிக்கும் முடிவைக் கொண்ட காதலுக்கு மரியாதை, ஒரு முறைதான் காதல் வரும் என்று நம்பவைத்த பூவே உனக்காக, அப்பாவின் காதல் ஒரு பக்கம், மகனின் காதல் ஒரு பக்கம் என்று கூறிய வானமே எல்லை, காதலுக்காக சகலமும் துறக்கவேண்டும் என்றால் அதற்காக காதலையே துறக்கலாம் என்று சொன்ன லவ்டுடே இப்படி எத்தனை கதைகள்!



இதே போல் முரட்டு மிரட்டல் காதலைச் சொன்ன சேது, காதலுக்காக நாக்கை அறுக்க வைத்த சொல்லாமலே , ஒரு முரட்டுப் போக்கிரியின் காதலைச் சொன்ன பருத்திவீரன் , கார் பயணத்தில் காதலை வளர்த்த பையா, ஊனமுள்ள மனிதருக்கும் காதல் உண்டு எனக் கூறிய பேரழகன், இரண்டாவது காதலை எற்கும்படிச் செய்த ரிதம் இப்படி எத்தனை ரகங்கள்?


இரு நோயாளிகளின் இதயக் காதலைச் சொன்ன இதயத்தை திருடாதே, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலே காதலித்த கதை சொன்ன காதல்கோட்டை , எதிரில் இருந்த காதலியை அறியாமல் இருந்த காதலன் கதையைச் சொன்னது கண்ணெதிரே தோன்றினாள், காதலை வைத்து கழுத்தை அறுக்க வைத்த சுப்ரமணியபுரம், அழுக்குப் பையனின் கிறுக்கான காதலைக் கூறிய காதல், அடித்தட்டு மக்களின் அன்பான காதலைக் கூறிய வழக்கு எண் 18-9, காமத்தை காதலாகப் புரிந்துகொண்டு உதவி பின் வருந்தும் நண்பர்களைச் சொன்ன நாடோடிகள், உழைக்கும் வர்க்கத்தின் உயரிய காதலைச் சொன்ன அங்காடித் தெரு இப்படி எத்தனை விதங்கள்?


காதலுக்கு விலைபேசிய கதை காசு, காதலுக்கு காதலியின் தந்தையிடம் விலை பேசி அதைக் கடனாக்கி விளையாடிய கதை திருவிளையாடல் ஆரம்பம்.


நிஜமான காதல் என்பது காதலர்கள் எங்கு பிரிந்து இருந்தாலும் பரஸ்பரம் நலம் விரும்பிகளாக இருப்பது என்று கூறிய படம் பூ, தெரியாமல் தாலிகட்டிக்கொண்டு காதலித்த கதை அலைபாயுதே ஒப்பந்தம் போட்டு வாழ்க்கை நடத்தும் காதலைச் சொன்னது. என் காதல் கண்மணி. ஒரு காதல் போயின் இன்னொரு காதல் என்று கூறிய இருவர் ஒன்றானால் வரை எத்தனையோ கற்பனை முறைகளில் காதல் என்கிற கரு கதையாகியுள்ளது.


சினிமாவில் மிகைப்படுத்தப்பட்ட காதல்


இப்படி எத்தனை படங்கள் எத்தனை காதல்கள். அப்பாவி மீது காதல், ரவுடி மீது காதல் ஏழை மீது காதல், பணக்காரப் பெண் மீது காதல் என்று சில சூத்திரங்களுக்குள் தான் தமிழ் சினிமாவில் இன்று காதல் இயங்குகிறது. இவற்றில் பெரும்பாலம் மிகைப்படுத்தப்பட்ட காதல்களாகத்தான் சொல்லப் படுகின்றன. காதலில் எதுவும் முடியும், எல்லா விதி மீறல்களும் ஏற்கப்படும் என்கிற பொது விதியை வைத்துக் கொண்டிருப்பார்கள். ஒரே படத்தில் இரு மத காதலர்களை இணைத்து மத வேறுபாடுகளை தீர்த்து விடுவார்கள்.


ஏழை பணக்கார காதலர்களை இணைத்து எளிதில் சமத்துவம் உண்டாக்கி விடுவார்கள். இருவேறு பகையுள்ள ஊர்க்கார காதலர்களை இணைத்து ஊரை ஒன்றாக்கி விடுவார்கள். இருவேறு சாதிப் பிரச்சினையுள்ள காதலர்களை இணைத்து சாதி பிரச்சினையை இரண்டரை மணி நேரத்தில் சரி செய்து விடுவார்கள். ஆனால் இந்த சமூகம் அத்தனை நெகிழ்வுத் தன்மையுடன் இருப்பதில்லை. படங்களில் காதல் மீதான மிகை பிம்பம் திட்டமிட்டு ஏற்படுத்திப் பரப்பப்படுகிறது.


காதல் என்பது கண்டதும் காதல், பெண்ணைப் பிடித்தவுடன் அவளை அடைந்து விடவேண்டும், பிடிக்கிற பெண்ணை அடைவது ஆணின் உரிமை, அதை தடுத்தால் நாயகன் எதுவும் செய்வான். தனக்கு பிடித்து விட்டது என்றால் அவளை அடைந்தே தீருவான். ஒரு பெண்ணை தொடர்ந்து பின் தொடர்வது அவளை துன்புறுத்தி வற்புறுத்தி வசப்படுத்துவது போன்று கதைகள், காட்சிகள் பெரும்பாலும் ஆணாதிக்க சிந்தனையுடன் தான் எடுக்கப்படுகின்றன.


செட் பிராப்பர்ட்டியான தாலி


காதலை விமர்சித்தோ, எதிர்த்தோ படமெடுக்க யாரும் துணிவதில்லை. அந்த அளவுக்கு ஆளுங்கட்சியாகிவிட்டது காதல். காதலை அந்த அளவுக்கு வியாபாரப் பொருளாக்கி விட்டனர். வியாபாரப் பொருளையே தரக்குறைவாக விமர்சிக்க முடியுமா? தாலி என்பது நம் நாட்டு சம்பிரதாயப்படி புனிதமானது. தாலி கட்டிய பெண்கள் கணவன் உயிருடன் இருக்கும் வரை அதை கழுத்திலிருந்து கிழே இறக்குவதில்லை. கழற்றுவதில்லை என்பது நம்பிக்கை.


திரைப்படப் படப்பிடிப்புகளில் தாலி என்பது ஒரு செட் ப்ராபர்ட்டி அதாவது படப்பிடிப்பு தளத்தில் பயன்படுத்தப்படும் போன், பேனா, பென்சில், குண்டூசி போல ஒரு பொருள் அவ்வளவுதான். நடிகைகள் தாலி மீது பொட்டு வைத்து கண்களில் ஒற்றிக் கண்ணீர்விட்டெல்லாம் நடித்து விட்டு கழற்றி அருகில் சுவரில் ஆணியில் தொங்கவிட்டு விடுவார்கள். அதுபோலதான் சினிமாவில் காதலும் விலைபோகும் ஒரு சரக்காகவே பார்க்கப்படுகிறது. நிராசையுள்ள இளைஞர்களின் ஏக்கங்களுக்கு வடிகாலாக காதல்படங்கள் தமிழ்ச் சூழலில் உருவாகின்றன அவ்வளவுதான்.


குறுகிய வட்டத்துக்குள் சினிமா காதல்


காதல் பற்றிய போதையை ஊட்ட ஊட்டடத்தான் காதல் படங்கள் விலை போகும் வியாபாரம் நடக்கும் .ஆனால் வெளியில் விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள்? காதலைத் தவிர வேறு ஒன்றும் இவர்களுக்கு தெரியாதா? இந்த குறுகிய வட்டத்தை விட்டு வெளிவரவே மாட்டார்களா என்று சிரிக்கிறார்கள். இரண்டரை மணி நேரத்தில் கடைசி பத்து நிமிடத்தில்தான் ஐலவ்யூ என்று சொல்கிறார்கள். அப்படியானால் அவர்களுக்குள் அவ்வளவு தகவல் தொடர்பு பிரச்சினையா என்று கேட்கிறார்கள்.


சிந்தனை வறட்சியும், காதல் வியாபாரமும்


தமிழ்ச் சினிமாவில் கற்பிக்கப்படும் காதல் போன்று நடைமுறையில் இல்லை. பெண்களை அவ்வளவு எளிதில் கண் மூடித்தனமாக நம்ப வைக்க முடியாது. இந்த சமூகத்தில் காதல்பற்றிய பார்வையும் போக்கும் மாறியுள்ளன. இளைஞர்களின் பாலின ஈர்ப்பை காதலாக்கி சினிமாவில் காசு பார்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். கல்லூரிக்காலத்தில் இருந்த காதலை பள்ளிக்காலத்துக்குக் கொண்டு வந்துள்ளது சினிமாவின் சாதனை என்று விமர்சிக்கிறார்கள். அதில் உண்மை இல்லாமலில்லை. பருவக் கவர்ச்சி இயல்பானது அது காதலல்ல. அப்படிப்பட்ட பதின் பருவ இளைஞர்களைக் குறிவைத்தே இப்படிப்பட்ட படங்கள் எடுக்கப்படுகின்றன. சிந்தனை வறட்சி காரணமாக தமிழ் சினிமாவில் காதலைத் தவிர வேறுவித கதைகள் யோசிக்கப்படுவதில்லை. ரசிகர்களை வேறுவித கதைகளை ரசிக்கப் விடுவதில்லை.


அண்மையில் வெற்றியும் விருதும் பெற்ற காக்கா முட்டை காதல் கதையில்லையே. சினிமாவில் சொல்லப்படாத எவ்வளவோ உணர்வுகள் இன்னும் இருக்கிறன. போலியான காதல் கதைகளில் தமிழ் சினிமாவை சிறைப்படுத்த வேண்டாம். புத்திசாலித்தனமாக புதுவிதமாக யோசித்தால் புதிய கதைக்களம் காணலாம். வெற்றியும் பெறலாம் என்பது நல்ல சினிமா விரும்பிகளின் விருப்பமாக உள்ளது. செய்வார்களா?


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in