Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

திசை மாறியவர்கள்...! - ஸ்பெஷல் ரிப்போர்ட்

28 பிப், 2015 - 11:40 IST
எழுத்தின் அளவு:
Clebrtity-changes-their-ways---Special-report

கனவுகளின் உலகமாகத் திகழ்வதுதான் திரையுலகம். எண்ணற்ற கனவுகளுடன், கற்பனைகளுடன் சென்னை, கோடம்பாக்கத்தை நோக்கி தினமும் பலர் வந்து கொண்டுதானிருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலர்தான் அவர்களுடைய கனவுகளை நனவாக்கப் போராடுகிறார்கள். மீதம் பேர் முட்டி மோத முடியாமல் தங்கள் கனவுகளை மாற்றிக் கொண்டு வேறு பாதையில் பயணித்து விடுகிறார்கள்.


நடினகனாக வேண்டும், இயக்குனராக வேண்டும் என்ற கனவுதான் கோலிவுட்டிற்கு வரும் பெரும்பாலானோரின் கனவாக இருக்கிறது. அந்தக் காலத்திலிருந்தே சினிமா ஆசையில் இப்படி ஓடி வந்தவர்கள் பலர். அவர்களில் ஒரு சிலர்தான் நடிகர்களாகவும், இயக்குனர்களாகவும் மாறியிருக்கிறார்கள். அந்த ஒரு சிலரிலும் சிலர்தான் வெற்றிப் பாதையில் பயணிக்கிறார்கள். வேறு சிலருக்கு அவர்கள் கனவு கண்டது கிடைக்காமல் போனாலும், சினிமாவை விட்டு போகக் கூடாது என்ற லட்சியத்தில் சினிமாவிலேயே வெவ்வேறு துறைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு காலத்தைக் கழித்து விடுகிறார்கள்.


இங்கு நடிகராக ஆசைப்பட்டு வந்தவர் இயக்குனராகியிருக்கிறார், இயக்குனராக ஆசைப்பட்டு வந்தவர் நடிகராகியிருக்கிறார். அப்படி வந்தவர்களும் ஓரளவிற்கு வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்த பின் மற்ற துறைகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முயற்சித்து சிலர் வெற்றியும் பெறுகிறார்கள், சிலர் தோல்வியும் அடைகிறார்கள். இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்படும் சிலரும் இருக்கிறார்கள்.


இயக்குனர்களாக வந்தவர்கள் நடிகர்களாகவும், நடிக்க வந்தவர்கள் இயக்குனர்களாகவும், இசையைமக்க வந்தவர்கள் நடிகர்களாகவும், என வேறு வேறு துறைகளில் பரீட்சார்த்த முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறார்கள். அதில் வெற்றி பெற்ற சிலரைப் பார்க்கும் போது, அட, அவர்களுக்குள் இப்படிப்பட்ட ஒரு திறமையும் இருக்கிறதா என்று ஆச்சரியப்படவும் வைக்கிறார்கள்.


சமீப காலத்தில் இசையமைப்பாளர்கள் நடிகர்களாக மாறியதும், நடிகர்கள் இயக்குனர்களாக மாறியதும் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. நல்ல திறமைகள் யாரிடமிருந்தாலும் நமது ரசிகர்கள் அதற்கு சரியான அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சிலரைப் பற்றிப் பார்ப்போம்.


ஜி.வி.பிரகாஷ்குமார்


ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான 'ஜென்டில்மேன்' படத்தில் 'சிக்கு புக்கு ரயிலே...' பாடலில் சில வரிகளை சிறுவனாக இருந்த போதே பாடி யார் இந்தப் பையன் என பெயரெடுத்தவர். 2006ம் ஆண்டு வெளிவந்த 'வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படமே வெற்றிப் படமாகவும், பாடல்கள் ஹிட் ஆனதாலும் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்து முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இடம் பிடித்தார். அஜித் நடித்த 'கிரீடம்', தனுஷ் நடித்த 'பொல்லாதவன்', ரஜினிகாந்த் நடித்த 'குசேலன்', கார்த்தி நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்', ஆர்யா நடித்த 'மதராசப் பட்டிணம்', தனுஷ் நடித்த 'ஆடுகளம்', ஆர்யா நடித்த 'ராஜா ராணி' என பல படங்களுக்கு இசையமைத்து தற்போது 50வது படத்தை இசையமைப்பாளராக நெருங்கிக் கொண்டிருக்கிறார் ஜி.வி. பிரகாஷ்.


இவருக்குள்ளும் எழுந்த நடிப்பு ஆசை 'டார்லிங்' படம் மூலம் நிறைவேறியது. பொங்கலுக்கு வெளிவந்த படங்களில் படத்தை வாங்கியவர்களுக்கு அதிக லாபத்தை ஈட்டித் தந்த படமாகவும் அமைந்தது. இப்போது 'பென்சில், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' ஆகிய படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இசையைமப்பாளர் இடத்திலிருந்து நாயகனாகவும் வெற்றிகரமான ஆரம்பம் ஜிவிக்கு அமைந்துள்ளது.


விஜய் ஆண்டனி


இசையமைப்பாளராக இருந்து நாயகனாக மாறியவர்களில் ஜி.வி.பிரகாஷுக்கு முன்னாடியே மாறியவர் விஜய் ஆண்டனி. 2005ம் ஆண்டு வெளிவந்த 'சுக்ரன்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து “டிஷ்யூம், நான் அவனில்லை, காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், உத்தமபுத்திரன், வேலாயுதம், ஹரிதாஸ்” ஆகிய படங்களுக்கு இசையமைத்தார்.


'நான்' படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். வித்தியாசமான த்ரில்லராக அமைந்த இந்தப் படம் வியாபார ரீதியிலும் வெற்றி பெற, அடுத்து 'சலீம்' படத்திலும் நாயகனாக நடித்தார். இந்தப் படமும் பாக்ஸ் ஆபீசில் வெற்றி பெற தற்போது 'இந்திய பாகிஸ்தான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்தப் படம் வெளியாக உள்ளது. இந்தப் படங்கள் மட்டுமல்லாது, அடுத்தடுத்து 'திருடன், சைத்தான், பிச்சைக்காரன்' ஆகிய படங்களிலும் நாயகனாக நடித்து வருகிறார். ஒரு பக்கம் இசை, மறுபக்கம் நடிப்பு என இரண்டு குதிரையிலும் வெற்றிகரமாகவே சவாரி செய்து கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி.


எஸ்.ஜே.சூர்யா


தமிழ் சினிமாவின் வெற்றிப் படங்களில் இரண்டு படங்களைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஒன்று அஜித் நடித்து வெளிவந்த 'வாலி', மற்றொன்று விஜய் நடித்து வெளிவந்த 'குஷி'. அவர்களிருவருக்குமே அவர்களது திரையுலகப் பயணித்தில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த படங்கள் அவை. அந்தப் படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா அடுத்து மேலும் உச்சிக்குப் போகப் போகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அவருக்குள்ளும் எழுந்த நடிப்பு ஆசை அவருடைய பாதையையே மாற்றிப் போட்டுவிட்டது. அவரது நடிப்பு, இயக்கத்தில் வெளிவந்த 'நியூ' படம் கமர்ஷியலாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடிக்கவே ஆசைப்பட்டார். மீண்டும் அவரது நடிப்பு, இயக்கத்தில் வெளிவந்த 'அன்பே ஆருயிரே' படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இயக்கத்தை விட்டு நடிப்பை மட்டுமே பிடித்துக் கொண்டார். அவர் நடித்து மட்டும் வெளிவந்த படங்கள் அவருக்கு பெயர் சொல்லாமலே போய்விட்டன. கடந்த பத்து ஆண்டுகளாக எந்தப் படத்தையும் இயக்காமல் கடந்த மாதம் நடிப்பு, இயக்கத்தோடு, அவர் இசையமைத்த படமான 'இசை' படம் வெளிவந்தது. ஆனாலும், அவருடைய இசை பெரிதாகப் பேசப்படவேயில்லை.


வெங்கட் பிரபு


திரையுலகம் யாரை எப்போது மாற்றும் என்று சொல்லவே முடியாது என்பதற்கு சிறந்த உதாரணம் வெங்கட் பிரபு. இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் கங்கை அமரனின் மகனான வெங்கட் பிரபு ஒரு பாடகராகத்தான் திரையுலகத்திற்கு அறிமுகமானார். அதற்கு முன் அவர் நாயகனாக நடித்த 'பூஞ்சோலை' என்ற படம் வெளிவராமலே போய்விட்டது. இருந்தாலும் 2003ம் ஆண்டு வெளிவந்த 'ஏப்ரல் மாதத்தில்' படத்தில் நாயகன் ஸ்ரீகாந்திற்கு நண்பனாக ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். சமுத்திரக்கனி இயக்குனராக அறிமுகமான 'உன்னைச் சரணடைந்தேன்' படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்தார். அடுத்து 'நெறஞ்ச மனசு, ஜி, சிவகாசி,” ஆகிய படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இருந்தாலும் திடீரென இயக்குனர் அவதாரம் எடுத்து 2007ம் ஆண்டு 'சென்னை 28' படத்தை இயக்கினார். இளைஞர்களின் அமோக ஆதரவுடன் அந்தப் படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து “சரோஜா, கோவா'' ஆகிய படங்களை இயக்கியவருக்கு அஜித் நடித்த 'மங்காத்தா' படத்தை இயக்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது. அந்த வாய்ப்பு அதிர்ஷ்டத்தால் கிடைத்தல்ல என அவருடைய திறமையை நிரூபித்து அஜித்திற்கும் ஒரு திருப்புமுனையான படத்தைக் கொடுத்தார். இன்று சூர்யா, நயன்தாராவை வைத்து 'மாஸ்' படத்தை இயக்குமளவிற்கு மாஸ் இயக்குனராக உயர்ந்திருக்கிறார். நடிக்க வந்தவர் இயக்குனராக வெற்றித் தடம் பதித்திருக்கிறார்.


கே.வி. ஆனந்த்


இன்றைய கமர்ஷியல் இயக்குனர்களில் குறிப்பிடவேண்டிய ஒரு இயக்குனராக இடம் பெற்றுள்ளவர் கே.வி. ஆனந்த். இவர் இயக்கிய முதல் படமான 'கனா கண்டேன்' படத்திலேயே வித்தியாசமான கதைக் களத்தைக் கையாண்டு ஆச்சரியப்பட வைத்தவர். ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்களாக மாறுவது தமிழ் சினிமாவிற்கு ஒன்றும் புதிதில்லை. ஆனால், வித்தியாசமான கமர்ஷியல் இயக்குனராக பெயரெடுப்பது என்பது சாதாரண விஷயமில்லை. அதை சூர்யாவை வைத்து இயக்கிய 'அயன்', ஜீவா நடித்த 'கோ' படங்களின் மூலம் நிரூபித்தார். சமீபத்தில் 'அனேகன்' படம் மூலமும் தான் ஒரு கமர்ஷியல் இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார்.


ஒரு புகைப்படக் கலைஞராக தனது வாழ்க்கையைத் துவக்கிய கே.வி.ஆனந்த், பின்னர் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராகச் சேர்ந்து ஒளிப்பதிவாளராக அறிமுகமான முதல் மலையாளப் படமான 'தேன்மாவின் கொம்பத்து' படத்தில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை வாங்கியவர். தொடர்ந்து தமிழில் “காதல் தேசம், நேருக்கு நேர், முதல்வன், விரும்புகிறேன், செல்லமே, சிவாஜி” ஆகிய படங்களுக்கும் சில மலையாளம், ஹிந்தி படங்களுக்கும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர். தற்போதைக்கு ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறியவர்களில் முன்னணியில் இருப்பவர்.


பிரபு தேவா


தற்போதைக்கு தமிழில் எந்தப் படத்தையும் இயக்கவில்லை என்றாலும் நடன இயக்குனராக இருந்து நாயகனாக மாறி, பின்னர் இயக்குனராகவும் ஜொலிக்கும் பிரபுதேவாவைப் பற்றி எழுதாமல் இருக்க முடியாது. 'அக்னி நட்சத்திரம்' படத்தில் குரூப் டான்சர்களில் ஒருவராக நடனமாடியவர். அடுத்து 'இதயம்' படத்தில் நால்வரில் ஒருவராக நடனமாடி யார் இந்தப் பையன் என ஆச்சரியப்பட வைத்தவர். 'சூரியன்' படத்தில் 'லாலாக்கு டோல் டப்பிமா...' பாடலில் தனி டான்சராக நடனமாடி பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். தொடர்ந்து சோலோ பாடல்களுக்கு நடனமாடியவரை தன்னுடைய 'காதலன்' படத்தின் மூலம் தனி நாயகனாகவும் உயர்த்தியவர் ஷங்கர். தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்து, அப்போதே 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியவர் என்று பேசப்பட்டவர் பிரபுதேவா.


சில வருடங்களுக்கு முன் நடிப்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டு 2005ல் வெளிவந்த 'நூவொஸ்தாவன்டே நேநொன்தன்டானா' படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். அந்தப் படத்தின் மாபெரும் வெற்றி பிரபுதேவாவை இன்றுவரை இயக்குனராகவே அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழில் விஜய் நடித்த 'போக்கிரி' என்ற வெற்றிப் படத்தையும், 'வில்லு' என்ற தோல்விப் படத்தையும் இயக்கினார். பின்னர், ஹிந்தியில் 'வான்டட்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இன்றும் 'மோஸ்ட் வான்டட்' இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.


தனுஷ்


'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான தனுஷ் தொடர்ந்து 'காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதையைக் கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன், யாரடி நீ மோகினி, படிக்காதவன், ஆடுகளம், உத்தமபுத்திரன், மாப்பிள்ளை, 3, மயக்கம் என்ன, வேலையில்லா பட்டதாரி, அனேகன்” போன்ற பல படங்களில் நடித்தவர். இவற்றில் 'ஆடுகளம்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றவர். 2004ம் ஆண்டு வெளிவந்த 'புதுக்கோட்டையிலிருந்து சரவணன்' படத்திலேயே 'நாட்டு சரக்கு...' என்ற பாடலைப் பாடி பாடகராகவும் அறிமுகமானவருக்கு, 2012-ல் வெளிவந்த 'கொல வெறி...' பாடல் ஒரு பாடகராகவும் அடையாளப்படுத்தியது. அவர் நன்றாகப் பாடுகிறாரா இல்லையா என்பது கேள்வியல்ல, அவர் பாடும் பாடல்கள் ஹிட் ஆகிவிடுகிறதே அதுதான் குறிப்பிட வேண்டிய ஒன்று. சமீபத்தில் வெளிவந்த 'அனேகன்' பாடலான 'டங்கா மாரி...' வரை பின்னணிப் பாடகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.


'மயக்கம் என்ன' படத்தில் மூன்று பாடல்களை எழுதி தனுஷின் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் 'பொயட்' ஆகவும் மாறிவிட்டார். தொடர்ந்து '3, எதிர் நீச்சல், மரியான், வேலையில்லா பட்டதாரி, வை ராஜா வை' ஆகிய படங்களுக்கும் பாடல்களை எழுதியுள்ளார். நடிக்க வந்து, பாடகராக மாறி, பாடலாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் மாறியுள்ள தனுஷ் அனேகமாக அடுத்து விரைவிலேயே இயக்குனராக மாறுவார் என்று எதிர்பார்க்கலாம்.


மேலே சொன்னவர்களைத் தவிர்த்து இன்னும் நடிக்க வந்து இயக்குனரானவர்களைப் பற்றியும், இயக்குனர்களாக வந்து நடிகர்களானவர்களைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம். அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இயக்குனராக இருந்து நடிகராக மாறியவர்களில் அமீர், சமுத்திரக்கனி, மிஷ்கின், ஜெயம் ராஜா, தம்பி ராமையா ஆகியோரையும் முக்கியமாகக் குறிப்பிடலாம். இவர்களில் தம்பி ராமையா சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் 'மைனா' படத்திற்காகப் பெற்று விட்டார்.


இவர்களுக்கெல்லாம் முத்தாய்ப்பாக அந்தக் காலத்திலிருந்தே பலர் சாதனையாளர்களாக வெற்றி வாகை சூடியிருக்கிறார்கள். எம்ஜிஆர் மகத்தான ஹீரோவாக மட்டும் இல்லாமல் இயக்குனராகவும் வெற்றி பெற்றிருக்கிறார். பாக்யராஜ், டி.ராஜேந்தர் இயக்கம், நடிப்பு, இசை என பல துறைகளிலும் சாதனை படைத்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பின் பாண்டியராஜன், பார்த்திபன் என்று அடுத்த தலைமுறையினரும் சாதித்திருக்கிறார்கள்.


இன்றைய தலைமுறையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிலம்பரசன் கடந்த சில வருடங்களாக படங்களையே தராமல் அப்படியே நின்று விட்டார். தற்போது அறிமுகமாகி வரும் பலரும் பல்கலை வித்தகர்களாகவே இருக்கிறார்கள். சரியான நேரத்தில் அவர்களது திறமை வெளிப்படும் போது அவர்களும் கண்டிப்பாக சாதனையாளர்களாக வலம் வர வாய்ப்பு உண்டு.


சினிமாவில் அதிர்ஷ்டமும், நேரமும் அவசியம் என்பார்கள், ஆனால் அதையும் மீறி திறமையும், உழைப்பும், இடைவிடாத முயற்சியும் இருந்தால் மட்டுமே இங்கு ஜெயிக்க முடியும் என்பதுதான் உண்மை.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in