Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

சகல கலை வல்லவன் - சந்தானம்!

21 ஜன, 2015 - 09:44 IST
எழுத்தின் அளவு:

ஹிந்தித் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ஷாரூக்கான் ஒரு காலத்தில் 'சர்க்கஸ்' என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்தவர். அதன் பின்தான் திரையுலகில் அறிமுகமாகி இன்று உலகப் புகழ் பெற்று விளங்குகிறார். நம்ம ஊர் மாதவன் பல வருடங்களுக்கு முன்பு 'பனேகி அப்னி பாத், சீ ஹாக்' போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர். அதற்குப் பிறகு 'அலைபாயுதே' படத்தில் அறிமுகமாகி தற்போது இந்திய நடிகராக புகழ் பெற்றிருக்கிறார். அவர்கள் இருவரும் தொலைக்காட்சி நடிகர்களாக இருந்துதான் சினிமாவில் அறிமுகமாகி வெற்றி பெற்றார்கள். ஆனால், அந்தக் கலாச்சாரம் தமிழில் வருவதற்கு மேலும் சில வருடங்கள் பிடித்தது.


விஜய் டிவியில் ஒளிபரப்பான 'லொள்ளு சபா' என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் சிறிய சிறிய வேடங்களில் தலை காட்டிக் கொண்டிருந்த ஒருவர், அந்த நிகழ்ச்சியில் நாயகனாக நடித்த வேறொருவர் வேறு தொலைக்காட்சியில் நடிக்கப் போய்விட்டதால், 'லொள்ளு சபா'வில் நாயகனாக நடிக்க ஒருவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை 'கப்'பென்று பிடித்துக் கொண்டு அப்படியே 'சகலை ரகளை' நிகழ்ச்சியையும் கூடுதலாகத் தொகுத்து வழங்கியவர் சினிமாவிலும் அறிமுகமாகி இன்று தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராகியிருக்கிறார். அவர்தான் சந்தானம்.


டிவியிலிருந்து வருபவர்களை சினிமாவுக்குள் நுழைக்கவே நம்மவர்கள் விரும்ப மாட்டார்கள். அவர்கள் எல்லாம் டிவிக்குத்தான் லாயக்கு என்ற ஒரு மனோபாவம் இருந்தது. அதை 'மன்மதன்' படத்தின் மூலம் மாற்றி சந்தானத்தை ஒரு நகைச்சுவை நடிகராக அறிமுகப்படுத்திய பெருமை சிம்புவையே சாரும். டிவியால் ரசிகர்களிடையே ஏற்கெனவே கிடைத்த அறிமுகம் சந்தானத்திற்கு ஒரு பலமாக இருந்தது. அதை அப்படியே படிக்கட்டுக்களாக மாற்றி கடகடவென முன்னேறி விட்டார்.


'மன்மதன்' படத்திற்கு முன்பாகவே சிம்பு நாயகனாக அறிமுகமான 'காதல் அழிவதில்லை' படத்திலும் சந்தானத்தை கூட்டத்தோடு கூட்டமாக நீங்கள் பார்த்திருக்கலாம். வழக்கம் போலவே எந்த ஒரு நடிகருடைய ஆரம்பம் கொஞ்சம் தடுமாற்றத்துடன் ஆரம்பிக்கிறதோ, அவர்கள் போகப் போக நல்லதொரு வெற்றிப் பாதையில் பயணிப்பார்கள் என்பது தமிழ் சினிமாவின் விதி. அப்படித்தான் ஆரம்ப காலங்களில் பல படங்களில் நடித்தாலும் ஒரு சில படங்கள்தான் சந்தானத்திற்கு பேர் சொல்லும் படங்களாக அமைந்தன.


அந்தக் காலக் கட்டங்களில் வடிவேலுவின் வைகைப் புயல் கடுமையாக வீசிக் கொண்டிருந்த நேரம். அவரை மீறி ஒருவர் நகைச்சுவையில் தடம் பதிக்க முடியுமா என்று அனைவரும் யோசித்திருந்த நேரம். அந்த சூழ்நிலையில் ஒருவருக்கு அமையும் படங்கள்தான் அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக ஏணிப்படியில் ஏற்றி விடும்.


அப்போது சந்தானம் நடித்த “சச்சின், இங்கிலீஷ்காரன், பிப்ரவரி 14, இதயத் திருடன்,” ஆகிய படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் அந்தப் படங்களில் அவருடைய நகைச்சுவை நடிப்பு கவனிக்கப்பட்டது. அவருக்கு ஓரளவு திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்த படமாக 'உனக்கும் எனக்கும்' படம் அமைந்தது. 'மன்மதன்' படம் மூலம் சிம்புவால் அறிமுகப்படுத்தப்பட்ட சந்தானத்திற்கு மீண்டும் ஒரு முழுமையான வாய்ப்பை தான் இயக்கி 'வல்லவன்' படத்தில் கொடுத்தார் சிம்பு.


அந்த சமயத்தில் வெளிவந்த 'சில்லுனு ஒரு காதல், ரெண்டு, வியாபாரி” ஆகிய படங்களும் சந்தானத்தின் நகைச்சுவையை வெளிச்சம் போட்டுக் காட்டின. எந்த ஒரு நகைச்சுவை நடிகருக்குமே பெரிய ஹீரோக்களுடன் சேரும் போது அதிகம் கவனிக்கப்படுவார்கள். அப்படி ஒரு வாய்ப்பு 'கிரீடம்' படம் மூலம் சந்தானத்திற்குக் கிடைத்தது.


அஜித்தின் நண்பனாக 'கிரீடம்' படத்தில் நடித்த சந்தானம் அந்தப் படத்தின் நகைச்சுவை மூலம் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்க ஆரம்பித்தார். பெரிய ஹீரோக்களுடன் சேரும் போது நகைச்சுவை நடிகர்களும் திரையுலகத்தில் உள்ள மற்றவர்களாலும் பெரிதும் கவனிக்கப்படுவார்கள். அப்படி கவனிக்கப்பட்டு தனக்குக் கிடைத்த 'பொல்லாதவன்' படத்திலும் இன்றைய இளைஞர்களின் மனங்களை பிரதிபலிக்கும் விதமான வசனங்களைப் பேசி இளைஞர்களின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக இடம் பிடிக்க ஆரம்பித்தார் சந்தானம்.


தொடர்ச்சியாக சில தோல்விப் படங்களில் நடித்தாலும் சந்தானத்தின் பாதை வெற்றியை நோக்கித்தான் போய்க் கொண்டிருந்தது. 'சந்தோஷ் சுப்ரமணியம்' படத்தில் நான்கு நண்பர்களில் ஒருவராக நடித்திருந்தாலும் அதிகம் கவனிக்கப்பட்ட நண்பராக இருந்தார்.


அடுத்து ஒரு பெரிய வாய்ப்பு அவருடைய கதவைத் தட்டியது. ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் 'அறை எண் 305ல் கடவுள்' படத்தில் இரு நாயகர்களில் ஒருவராக நடித்தார். வழக்கமான அவருடைய நகைச்சுவை நாயகனாக நடித்த படத்தில் இல்லாததால் அந்தப் படம் தோல்வியடைந்தது. இருந்தாலும் சந்தானமும் ஒரு நாயகனாக நடிப்பதற்குரிய அந்தஸ்தை அந்தப் படம் தேடிக் கொடுத்தது.


சந்தானத்திற்கும் ஒரு சக்தியைக் கொடுத்த படம் 'சிவா மனசுல சக்தி'. இன்றும் தொலைக்காட்சியில் இந்தப் படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் ரசிக்கலாம் என்ற அளவிற்கு 'சிவா மனசுல சக்தி' என்பது 'ரசிகர்களின் மனதில் சந்தானம்' என சொல்லும் அளவிற்கு உயர்ந்தது. ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்த அந்தப் படம் தொடர்ந்து ராஜேஷ் - சந்தானம் கூட்டணி மேலும் சில படங்களில் ரசிகர்களை சிரிக்க வைக்கும் கூட்டணி அமைவதற்கு ஆரம்பமாக அமைந்தது.


அதன் பின் வியாபார ரீதியாக சந்தானம் நடித்த சில படங்கள் தோல்வியடைந்தாலும் அந்தப் படங்களில் அவருடைய நகைச்சுவை அதிகம் பேசப்பட்டு சந்தானம் தனக்கென ஒரு தனி இடத்தை தமிழ்த் திரையுலகில் அழுத்தமாக பதிய வைக்க ஆரம்பித்தார். அதற்கு 'பாஸ் என்கிற பாஸ்கரன்' ஒரு அழுத்தமான வெற்றியைக் கொடுத்தது. அதன் பின் சந்தானத்தின் வெற்றிப் பாதை, புதிய பாதையாக அமைந்து அவருக்கு மேலும் உயரத்தைத் தேடிக் கொடுத்தது.


அந்தப் படத்தில் கிடைத்த பெயர், அவரை ரஜினியுடன் 'எந்திரன்' படத்திலும் நடிக்கக் காரணமாக அமைந்தது. அதன் பின் நகைச்சுவை நடிப்பில் சந்தானத்தையும் ஒரு சூப்பர் ஸ்டார் என சொல்ல ஆரம்பித்தார்கள். தொடர்ந்து வெளிவந்த 'சிறுத்தை' சந்தானத்தின் மார்க்கெட்டை சீறிப் பாய வைத்தது. தொடர்ந்து வெளிவந்த “சிங்கம் புலி, வானம், தெய்வத் திருமகள், வேலாயுதம், ஒஸ்தி,” ஆகிய படங்கள் சந்தானத்தின் நகைச்சுவையை அதிகம் பேச வைத்தன.


மீண்டும் ராஜேஷுடன் இணைந்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் சந்தானமும் இரண்டாவது கதாநாயகன்தான் என்று சொல்லும் அளவிற்கு அவருக்காகவே அந்தப் படமும் ஓடியது என்று சொன்னால் அது மிகையில்லை.


எந்த ஒரு நடிகருக்கும் சரியான இயக்குனர் அமையும் போதுதான் அவர்களுக்கு மிகப் பெரிய திருப்புமுனை அமையும். ராஜேஷால் ஏற்பட்ட திருப்பு முனை மீண்டும் சுந்தர்.சி-யாலும் சந்தானத்திற்கு ஏற்பட்டது. 'கலகலப்பு' படத்தில் சந்தானத்தின் நகைச்சுவை படத்தின் டைட்டிலை விடவும் இரண்டு மடங்கு அதிகமாக அமைந்து படத்தையும் வெற்றி பெற வைத்தது.


நாயகனாக தான் நடித்த முதல் படத்தில் வெற்றி பெற முடியாத சூழலில் மீண்டும் அந்தப் பலப் பரீட்சையில் இறங்கினார் சந்தானம். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் மூன்று நாயகர்களில் ஒருவராக நடித்தார். ஆனால், அந்தப் படமோ அவருக்கு தயாரிப்பாளராகவும், நாயகனாகவும் இரண்டு லட்டைக் கொடுத்து வெற்றி பெற வைத்து விட்டது.


ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், சிலம்பரசன், உதய நிதி ஸ்டாலின், சித்தார்த் என தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார். சந்தானம் தங்கள் படத்தில் இருந்தால் வெற்றி விகிதம் இன்னும் அதிகமாக இருக்கும் என இயக்குனர்களும், ஹீரோக்களும் நினைக்க ஆரம்பித்தது சந்தானத்திற்குக் கிடைத்த வெற்றி.


சமீபத்தில் வெளிவந்த 'ஐ, ஆம்பள' ஆகிய இரண்டு படங்களிலும் சந்தானத்தின் நகைச்சுவை அந்த இரண்டு படங்களின் வெற்றிக்கும் உதவியிருக்கிறது என்பது ஒத்துக் கொள்ளக் கூடிய உண்மை. இடையில் மீண்டும் நாயகனாக ஆசைப்பட்டு 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' படத்தில் நடித்தார். இன்னும் நாயகன் அந்தஸ்து மட்டும் அவருக்கு எட்டாக்கனியாக இருக்கிறது. அதையும் சீக்கிரமே எட்டி விடுவார்.


விரைவில் சந்தானம் நடித்துள்ள 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, இது நம்ம ஆளு, நம்பியார், வாலு, நாரதன், நண்பேன்டா, பூலோகம், வாலிப ராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' என பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.


இன்றைய காலகட்டத்தில் டிவிக்களிலேயே எண்ணற்ற நகைச்சுவை நிகழ்ச்சிகள் ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றையும் மீறி சினிமாவில் இடம் பெறும் நகைச்சுவைக் காட்சிகளை ரசிக்க வைப்பது சாதாரண விஷயமல்ல.


அது சந்தானம் போன்ற 'சகல கலை வல்லவன்'களுக்கு கை வந்த கலை.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in